இத்தாலியின் திராஹி அரசாங்கம் முடிவுக்கு வந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இத்தாலி பிரதமர் மாரியோ திராஹி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை இராஜினாமா செய்தார். இந்த முறை ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம், ஒரு செயல்படும் அரசாங்கம் இல்லாமல் உள்ளது.

செனட் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் திராஹி பேசுகிறார் [Photo by governo.it / CC-BY-NC-SA 3.0 IT] [Photo by governo.it / CC-BY-NC-SA 3.0 IT]

புதன்கிழமை மாலை செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், நாடாளுமன்ற இரண்டாம் சபையின் 321 உறுப்பினர்களில் 95 பேர் மட்டுமே திராஹிக்கு ஆதரவாக வாக்களித்தனர், 39 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். திராஹியின் 'தேசிய நல்லிணக்க' அரசாங்கத்தைச் சேர்ந்த Lega, Forza Italia மற்றும் Five Star இயக்கம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததன் மூலம் அவர் மீதான நம்பிக்கையை மறுத்தன. பிரதிநிதிகள் சபையில் திட்டமிடப்பட்டு இருந்த ஒரு வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

எண்பது வயதான ஜனாதிபதி மத்தரெல்லா அதே நாளில் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். செப்டம்பர் 25 இல் முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என்பதே இதன் அர்த்தம். அதுவரை திராஹி பதவியில் நீடிப்பார். வழக்கமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருந்தது.

திராஹியின் தலைவிதி, இத்தாலியில் நிலவும் கூர்மையான வர்க்கப் பதட்டங்கள் மற்றும் சமூக முரண்பாடுகளின் விளைவாகும். பெப்ரவரி 2021 இல் ஐரோப்பிய மத்திய வங்கியின் இந்த முன்னாள் தலைவரை மத்தரெல்லா அரசாங்கத் தலைவராக நியமித்தார், அப்போது இத்தாலியில் ஏற்பட்டிருந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையில் பத்தாயிரக் கணக்கானவர்கள் இறந்தார்கள், பொருளாதாரமோ 8.9 சதவீத வீழ்ச்சியுடன் தறிகெட்டுச் சரிந்திருந்தது.

வலதுசாரி லேகா, பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா (Forza Italia), ஃபைவ் ஸ்டார்ஸ் (Five Star) எதிர்ப்பு இயக்கம் முதல் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் பல்வேறு பிரிவுகள் வரை எல்லாக் கட்சிகளும், திராஹிக்குப் பின்னால் தஞ்சமடைந்தன, சர்வதேச நிதி மூலதனத்தின் நம்பகமான பிரதிநிதியாக இருந்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா வைரஸ் நிதியில் இருந்து இத்தாலிக்குச் சேர வேண்டிய 206 பில்லியன் யூரோ நிதி அதற்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த இருந்தார்.

ஐரோப்பிய ஆணையம் இந்த நிதிகளின் ஒதுக்கீட்டை மொத்தமாக 42 'சீர்திருத்தங்களை' செயல்படுத்துவதோடு இணைத்திருந்தது, அவை 'இத்தாலிய பொருளாதாரத்தை வளர்ச்சிக்கான தடைகளில் இருந்து விடுவித்து' அதை மிகவும் 'போட்டித்தன்மையுடன்', அரசுக்குச் சில காலம் 'ஆசுவாசம்' அளித்து, சமூக அமைப்புகளை 'மிகவும் திறம்பட' உருவாக்குமாம் — இவை அனைத்தும் தொழிலாள வர்க்கம் மற்றும் கீழ்நிலை நடுத்தர வர்க்கங்கள் மீதான பாரிய தாக்குதல்களுக்கான கோஷங்களாக இருந்தன.

திராஹி அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்ந்தார். அவர், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மற்றும் வோடாபோன் முதலாளி விட்டோரியோ கோலாவ் (Vittorio Colao) போன்ற வெளியில் இருந்த வல்லுனர்களைக் கொண்டும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலை அறிவுறுத்திய லெகாவின் ஜியான்கார்லோ ஜியோர்ஜெட்டி (Giancarlo Giorgetti) போன்றவர்களைக் கொண்டும் முக்கியப் பொருளாதாரப் பதவிகளை நிரப்பினார், Giancarlo Giorgetti ஐ அவர் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் ஆக்கினார்.

ஓர் உயர்மட்ட ஜெனரல் தலைமையில் ஒரு பாரிய தடுப்பூசி பிரச்சாரம் நடத்தி கொரோனா வைரஸ் நெருக்கடியைத் திராஹி 'தீர்த்தார்'. ஐரோப்பாவில் 170,000 இறப்புகளுடன், உயிரிழப்புகளில் பிரிட்டனுக்கு அடுத்து இத்தாலி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், பெருந்தொற்றுப் பரவலை அது நிறுத்தி விடவில்லை என்பதோடு, அதிக விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்ததால் அது சமூக அடைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அகற்றி, தொழில்துறை உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையை பேணுவதற்கு சாக்குப்போக்கை வழங்கியது.

சமூகச் செலவினங்களை மறுசீரமைத்து, திராஹி தொழிலாளர்களின் செலவில் பெருநிறுவனங்களை விடுவித்தார். சில நிபந்தனைகளின் கீழ் ஓய்வு பெறும் வயதைக் குறைத்திருந்த முந்தைய அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை அவர் இரத்து செய்தார். சமூக உதவிக்குப் பதிலாக ஃபைவ் ஸ்டார்ஸ் இயக்கம் அறிமுகப்படுத்திய 'குடிமக்கள் உதவித்தொகை' 'தோல்வி' அடையும் என்று அறிவித்த அவர், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் அதைக் கட்டுப்படுத்தினார்.

திராஹியின் வரிச் சீர்திருத்தங்களும் தாராளமயமாக்கல் நடவடிக்கைகளும் மிகப் பெரும் பெருநிறுவனங்களை பிணையெடுத்தன, அதேவேளையில் லேகா மற்றும் ஃபைவ் ஸ்டார்ஸ் இயக்கத்தின் முக்கிய வாடிக்கையாளர்களான அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் சிறிய சுயதொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இந்த மாதத் தொடக்கத்தில், இத்தாலி முழுவதும், அதிகக் கட்டணங்கள் செலுத்தும் டாக்ஸி ஒட்டுனர்கள், திராஹியின் தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் இப்போது அழிவுக்குத் தள்ளப்பட்டு வரும் இவர்கள், வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் போல்கெஸ்டைன் பரிந்துரை (Bolkestein Directive) என்று அழைக்கப்படுவதை அமலாக்கத் திராஹி 'போட்டி உத்தரவாணை' (Competition Decree) என்பதை பயன்படுத்த விரும்பினார், அதுவும் ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்தது. இது தனிநபர்கள் நடத்தும் பொதுச் சொத்து செயல்பாடுகள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், மற்ற விஷயங்களோடு சேர்ந்து, பெரும்பாலும் குடும்பங்களால் நடத்தப்படும் 14,000 திறந்தவெளி நீச்சல் தடாகங்கள், உல்லாசத் ஓய்வு விடுதிகளை இப்போது பெரிய முதலீட்டாளர்கள் கையகப்படுத்திக் கொள்ள முடியும்.

லெகா மற்றும் ஃபோர்ஸா இத்தாலியா உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிரகாரிக்கின்ற போதிலும், வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போருக்குத் திராஹி இத்தாலியின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

சர்வதேச நிதி உலகில் திராஹியின் அரசியல் உற்சாகத்தைச் சந்தித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் Süddeutsche Zeitung ஆரவாரமாக எழுதியது, “இதுவரை, விஷயங்கள் அற்புதமாக நடந்து வருகின்ற என்று நாம் சொல்ல வேண்டும். … அசாதாரண இயக்கவியலுக்கான இந்த உற்சாகம் இத்தாலியை அதிக உத்வேகத்தில் நிறுத்துகிறது.” OECD இன் தலைமைப் பொருளாதார நிபுணரான லாரன்ஸ் பூனின் கூற்றுப்படி, இத்தாலி 'பல தசாப்தங்களில் முதல் முறையாக அதன் பொருளாதாரத்தை முழுமையாக மீளசமநிலைப்படுத்தும் நிலையில் உள்ளது.' இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை.'

இத்தாலிய தொழிலாள வர்க்கம் இந்த உயர்ந்த உத்வேகங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. திராஹியின் கீழ், நாட்டின் துருவமுனைப்பாடு கூடுதலாகத் தீவிரமடைந்துள்ளது. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 8.4 சதவீதம், அதேவேளையில் இளைஞர்களின் வேலையின்மையோ 24 சதவீதம்; 3.4 மில்லியன் தொழிலாளர்கள் நிலையற்ற வேலையில் உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது, ஏழைகளின் எண்ணிக்கை 5.6 மில்லியனாக உயர்ந்துள்ளது, உத்தியோகபூர்வ பணவீக்கம் 8 சதவீதமாக உள்ளது. வேலை இழப்புகள், குறைந்த கூலிகள் மற்றும் தாங்கொணா வேலையிட நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன.

இந்த நிலைமைகளின் கீழ் தான் திராஹியின் 'தேசிய நல்லிணக்க' அரசாங்கம், இடதுசாரி கட்சிகள் என்று கூறிக் கொள்பவைகளால் அல்ல, ஃபைவ் ஸ்டார்ஸ் மற்றும் வலதுசாரி கட்சிகளால் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான ஓர் எதிர்ப்பு இயக்கமாக உருவான ஃபைவ் ஸ்டார்ஸ், முதலில் அதிவலது லெகா உடனும், பின்னர் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்தும் ஆட்சி செய்தது, இறுதியில் திராஹியை ஆதரித்தது, வீழ்ச்சியில் உள்ள அது பிளவுபட்டுள்ளது. 2018 நாடாளுமன்ற தேர்தலின் போது, கருத்துக் கணிப்புகளில், 33 சதவீதத்தில் இருந்த அவர்கள், 11 சதவீதத்திற்குச் சரிந்துள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் Luigi di Maio அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி, திராஹி ஆதரிக்கும் 'Together for the Future' (எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்) என்ற அவரின் சொந்த கட்சியை நிறுவினார். திராஹிக்கு முன்னர் பிரதம மந்திரியாகவும் ஃபைவ் ஸ்டார்ஸ் இயக்கத்தின் தலைவராகவும் இருந்த ஜியுசெப்ப கொந்தே அவரை எதிர்த்துள்ளார்.

ஃபைவ் ஸ்டார்ஸ் அளவுக்கு இல்லை என்றாலும், கருத்துக் கணிப்புகளில் லெகா மற்றும் ஃபோர்ஸா இத்தாலியாவும் ஆதரவை இழந்துள்ளன. இந்த தேர்தல்களுக்குப் பின்னர் அவர்கள் பாசிசவாத Fratelli d’Italia (இத்தாலியின் சகோதரர்கள்) உடன் ஒரு வலதுசாரி அரசாங்கம் அமைக்க கருதுகிறார்கள். Fratelli ஒருபோதும் திராஹி அரசாங்கத்தில் இணைந்ததில்லை என்பதோடு, கருத்துக் கணிப்புகளில் 23 சதவீதத்துடன் மிகவும் பலமான கட்சியாக மாறி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் வெறும் 4.4 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார்கள்.

Fratelli கட்சியின் தலைவர் Giorgia Meloni, முசோலினிக்குத் துதிபாடுவதுடன், ஸ்பானிய வோக்ஸ் கட்சியுடன் நெருக்கமாக செயல்படுகிறார், அடுத்த இத்தாலிய பிரதம மந்திரியாக இவர் ஆகக்கூடும். மெலோனி, சல்வினி மற்றும் பெர்லுஸ்கோனியின் வலதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து கருத்துக் கணிப்புகளில் 46 சதவீதம் பெற்றுள்ளன.

ஜனநாயகக் கட்சியினரும், அவர்களின் போலி-இடது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளே இந்த வலதுசாரிகளின் வளர்ச்சிக்குக் காரணமாவார்கள். இவர்கள், தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியைக் குறித்து அல்ல, முதலாளித்துவ ஒழுங்கின் ஸ்திரத்தன்மை குறித்து கவலைக் கொண்டுள்ளனர். தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கும் அவர்கள், திராஹியை மொத்தத்தில் மிகவும் உறுதியாக ஆதரிக்கிறார்கள், அவருடைய கொள்கைகளின் தொழிலாளர் விரோதத் தன்மையும் அந்தளவுக்கு மிகவும் வெளிப்படையாக ஆகி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை திராஹி முதல்முறையாக அவரது இராஜினாமாவை அறிவித்த பின்னர், அவரை பதவியில் வைத்திருக்க அவர்கள் ஒரு பிரச்சாரத்தை ஒழுங்கமைத்தார்கள். இரண்டாயிரம் நகரசபைத் தலைவர்கள் ஒரு முறையீட்டை பிரசுரித்தனர்; தொழிற்சங்கங்களும், தொழில்முனைவோரும் மற்றும் தேவாலயமும் கூட திராஹியைப் பதவியில் நீடிக்குமாறு அழைப்பு விடுத்தன.

இத்தாலிய ஊடகச் செய்திகளின்படி, இமானுவல் மக்ரோன், ஓலஃப் ஷோல்ஸ் மற்றும் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரும் திராஹியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் போர் முகப்பு உடைந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், நிதி மூலதனத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி இத்தாலிய அரசாங்க ஆசனத்தில் இருந்து விலகினால் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் மந்தநிலைமையும் பணவீக்கமும் சேர்ந்து ஒரு புதிய யூரோ நெருக்கடியை உண்டாக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

திராஹி மற்றும் அவரின் தொழிலாளர்-விரோத கொள்கைகளின் கீழ் தொழிற்சங்கங்கள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் போலி-இடதுகள் அடிமைத்தனமாக சரணடைவது, என்ன நிலைமைகளை ஏற்படுத்தி உள்ளதோ, அந்த நிலைமைகளின் கீழ், குட்டி-முதலாளித்துவ அடுக்குகள் மற்றும், சில விஷயங்களில், தொழிலாளர்களின் கோபத்தையும் விரக்தியையும் அதிதீவிர வலதும் பாசிசவாதிகளும் சுரண்டிக் கொள்ள முடியும்.

கூலிகள், வேலைகள் மற்றும் சமூக உரிமைகளுக்கான பாதுகாப்பை போருக்கு எதிரான போராட்டத்துடனும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்துடனும் இணைத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தாக்குதல் மூலமாக மட்டுமே இந்த வலதுசாரி அபாயத்தை எதிர்க்க முடியும்.

Loading