இத்தாலியில் போருக்கும் சமூக வெட்டுக்களுக்கும் எதிராக ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 20 அன்று உள்ளூர் மட்ட தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் இத்தாலியின் பெரும் பகுதிகள் முடங்கின. இந்த வேலைநிறுத்தம் நேட்டோவின் போர்க் கொள்கை மற்றும் மாரியோ திராகியின் அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் போரின் சமூக தாக்கங்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்டது.

மிலோன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள TNT/FEDEX நிறுவனத்தின் தொழிலாளர்கள் 176 பணிநீக்கங்கள் மற்றும் CGIL, CISL மற்றும் UIL தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர். [Photo by S.I. Cobas Peschiera Borromeo]. [Photo by S.I. Cobas Peschiera Borromeo]

வேலைநிறுத்தக்காரர்கள் அதிக ஊதியங்கள், பணவீக்கத்தை ஈடுகட்ட சரியும் ஊதிய அளவுகள் (Scala mobile), மேம்படுத்தப்பட்ட சமூகச் செலவுகள் மற்றும் பாதுகாப்பான வேலைகள் ஆகியவற்றைக் கோரினர். “இப்போது இல்லையென்றால், எப்போது” மற்றும் “போரில் இருந்து வெளியேறு!” போன்றவை அவர்களது முக்கிய கோஷங்களாக இருந்தன.

மே 20, வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் நாடு முழுவதுமாக இரயில் சேவைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. மிலான், ரோம் மற்றும் பிற இடங்களில் உள்ள பொது போக்குவரத்து, நெருக்கடி மிகுந்த நேரங்களில் அவசர சேவை மட்டுமே பராமரிக்கப்பட்டது. மேலும், தீவுகளுக்கு படகு சேவைகளை செய்யும் தொழிலாளர்களும், பல விமானங்கள் மற்றும் மோட்டார் சாலை சுங்கச்சாவடிகளில் உள்ள தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Lidl போன்ற பல்பொருள் அங்காடிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையின் பெரும் பகுதிகளைப் போலவே பல அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன. தொழில்துறையிலும் வேலைநிறுத்தங்கள் நடந்தன, உதாரணமாக தூரினில் உள்ள வணிக வாகன உற்பத்தி நிறுவனமான Iveco இல் நடந்தது. மிலானில் உள்ள டெலிவரி ஓட்டுனர்களும் மற்றும் புளோரன்ஸ் அருகே பிராட்டோவில் உள்ள ஜவுளி தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். ரோம், போலோக்னா, ஜெனோவா, மிலான், தூரின், வெனிஸ், புளோரன்ஸ், நேபிள்ஸ், பலேர்மோ, டாரன்டோ மற்றும் பல நகரங்களில் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

S.I., Cobas, Sgb, Unicobas, Cub மற்றும் பிற இத்தாலிய உள்ளூர் மட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இவை பல ஆண்டுகளாக செல்வாக்கு பெற்று வருகின்றன, காரணம் CGIL, CISL மற்றும் UIL போன்ற பாரம்பரிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் தங்களின் அரசு சார்பு மற்றும் வணிக சார்பு கொள்கைகளால் உறுப்பினர்களை இழந்து வருகின்றன.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் பல தொழிற்சாலைகள், பிராட்டோவில் உள்ள ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் பார்சல் டெலிவரி தொழிலாளர்கள் மற்றும் DHL, TNT மற்றும் FEDEX ஆகிய நிறுவனங்களின் ஓட்டுனர்கள் போன்றவர்கள் பல ஆண்டுகளாக இரக்கமற்ற அளவில் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றன. உதாரணமாக, மிலான் விமான நிலையம் அமைந்துள்ள Peschiera Borromeo இல் உள்ள FEDEX ஓட்டுனர்கள், 176 பணிநீக்கங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ள தொழிற்சங்க கூட்டமைப்புகளின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர் மற்றும் பாரிய சமூக வெட்டுக்களுக்கு எதிரான இந்த வேலைநிறுத்தங்கள், வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகள் மற்றும் அரசாங்க போர்க் கொள்கைகளின் சமூக விளைவுகளுக்கு எதிராகப் போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போர்க்குணத்தின் வெளிப்பாடாகும்.

மேலும், தொற்றுநோய் எந்த வகையிலும் முடிவுக்கு வரவில்லை. சமீபத்திய பொது வேலைநிறுத்த நாளில் 26,500 க்கும் அதிகமான புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களும் 89 இறப்புக்களும் இத்தாலியில் பதிவாகியிருந்தன.

இதனுடன் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மே 2022 இல் வெப்பமூட்டும் எரிவாயுவின் சராசரி விலை தொற்றுநோய்க்கு முன்பிருந்ததை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமாகும். பாணின் விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது, மேலும் எண்ணெய் மற்றும் பாஸ்தாவின் விலையும் உயர்ந்து வருகிறது. 2022 இன் முதல் காலாண்டில், பொருட்கள் வாங்கும் திறன் குறைந்தது 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஏற்கனவே வேலையின்மை, ஆபத்தான வேலை மற்றும் முதியவர்கள் மத்தியிலான வறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிய தொழிலாள வர்க்கத்தை இந்த நெருக்கடி கடுமையாக தாக்குகிறது. அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன், பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் குறுகிய கால வேலையின் நீட்டிக்கப்பட்ட காலங்கள் ஆகிய வடிவங்களில் தொழிலாளர்களின் முதுகில் செலவுகளைக் குவிக்க தொற்றுநோயை பயன்படுத்தின. Istat புள்ளியியல் அலுவலகத்தின்படி, 3.5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தற்போது அபாயகரமான வேலையில் உள்ளனர்; 2021 இல் மட்டும் 430,000 பேர் சேர்க்கப்பட்டனர். உத்தியோகபூர்வமாக, இளைஞர்களின் வேலையின்மை 24.5 சதவிகிதமாக உள்ளது ஆனால் உண்மையான அடிப்படையில் குறிப்பாக தெற்கில் இது மிகவும் அதிகமாக உள்ளது.

அரசு ஊழியர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களும் அதிக அழுத்தத்திற்குள்ளாகி வருகின்றனர். உக்ரேன் போரை இத்தாலி ஆதரிக்கிறது –ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போர்– அதற்கு ஆயுதங்களை வழங்கி, இத்தாலிய ஆயுதப் படைகளுக்கான செலவை அதிகரிக்கிறது. இந்தச் சூழலில், திராகி அரசாங்கம் புதிய சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மற்றவற்றுடன், மாநில கல்வி வரவு-செலவுத் திட்டத்தை குறைக்கவும், 9,600 ஆசிரியர் பதவிகளை அகற்றவும் இது திட்டமிட்டுள்ளது.

மே 20, பொது வேலைநிறுத்தம் சமீப காலங்களில் நடந்த முதல் வேலைநிறுத்தம் அல்ல. ஏப்ரல் 22 அன்று, “ஊதியங்களை உயர்த்து, ஆயுதங்களைக் குறை!” என்ற முழக்கத்துடன் இத்தாலி முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர்.

மார்ச் 14 அன்று, பீசா விமான நிலையத்தின் சரக்கு ஏற்றும் பணியாளர்கள் ‘மனிதாபிமான உதவி’ என்ற பாசாங்கில் உக்ரேனுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்ற மறுத்தனர். மார்ச் மாத இறுதியில், ஜெனோவா துறைமுகம் வழியாக யேமனுக்குச் செல்லவிருந்த ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டது. ஜெனோவா கப்பல்துறை பணியாளர்களின் புறக்கணிப்பில் லிவோர்னோ துறைமுகத்தின் சக ஊழியர்களும் இணைந்தனர்.

இந்த வேலைநிறுத்தங்கள் உள்ளூர் மட்ட தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்படுகின்றன, அவை சமீபத்திய ஆண்டுகளில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளன, அதற்கு முக்கிய காரணம் ஸ்தாபகக் கட்சிகளுடன் இணைந்த CGL, CISL, UIL போன்ற பாரம்பரிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் வெட்கமின்றி அரசாங்கத்தை ஆதரிப்பது தான். மீண்டும் மீண்டும் அவர்கள் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துள்ளார்கள்.

வேலைநிறுத்தங்களும் புறக்கணிப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை தேடுவதற்காக, ரோமில் உள்ள உள்ளூர்மட்ட தொழிற்சங்கமான USB (Unione sindacale di base) வளாகத்தில் ஏப்ரல் 6 அன்று திடீர் பொலிஸ் சோதனைக்கு அரசாங்கம் வெளிப்படையாக ஏற்பாடு செய்தது. இது ஒரு ஆத்திரமூட்டல் என்பதுடன், வளர்ந்து வரும் எதிர்ப்பை அச்சுறுத்தும் வெளிப்படையான முயற்சியாகும்.

இவை அனைத்தும் ஏப்ரல் 22 மற்றும் மே 20 பொது வேலைநிறுத்தங்களில் இன்னும் கூடுதலான தொழிலாளர்கள் பங்கேற்க உதவியது.

போராடுவதற்கு வளர்ந்து வரும் தயார்நிலை, ஒரு சுயாதீனமான முன்னோக்கு மற்றும் நோக்குநிலைக்கான கேள்வியை மேலும் மேலும் அவசரமாக எழுப்புகிறது. தொழிலாளர்கள் போர், சமூக வெட்டுக்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட விரும்பும் அதேவேளை, உள்ளூர்மட்ட தொழிற்சங்கங்கள் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், பாதிபில்லாத வழிகளில் அதை வழிநடத்தவும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன.

USB மற்றும் Cobas போன்ற நிறுவனங்கள் தேசியளவில் வரையறுக்கப்பட்ட, சிண்டிகலிச முன்னோக்கைப் பின்பற்றுகின்றன, அது ஒவ்வொரு நாட்டிலும் தோல்வியடைந்து இறுதியில் அரசாங்கம் மற்றும் அதன் முதலாளித்துவக் கொள்கைகளை பின்னணியாகக் கொண்டுள்ளது. அவை பெயரளவிலான அடிப்படை நோக்குநிலை மற்றும் கூட்டாட்சி அமைப்பை கொண்டுள்ள போதிலும், அவை வெறுக்கப்படும் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகளிலிருந்து அரசியல் நோக்குநிலையில் அடிப்படையில் வேறுபட்டவை அல்ல.

அதே நேரத்தில், உள்ளூர்மட்ட தொழிற்சங்கங்கள், இத்தாலியின் பழைய போலி-இடது மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளான Rifondazione Comunista (PRC, Communist Refoundation), இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி (Partito Comunista Italiano-PCI) மற்றும் மக்களுக்கான சக்தி கட்சி (Potere al popolo-PaP,) ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மே 20 வேலைநிறுத்த அழைப்பை ஆதரித்தன. உதாரணமாக, USB தலைவர் Pierpaolo Leonardi 2016 இல் புதிதாக உருவாக்கப்பட்ட PCI இன் உறுப்பினராக உள்ளார். Cobas இன் தலைவரான Piero Bernocchi, Rifondazione Comunista கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார், இது 2006 மற்றும் 2008 க்கு இடையில் ரோமானோ ப்ரோடியின் (Romano Prodi) அரசாங்கத்தின் வெட்டுக்கள் மற்றும் போர்க் கொள்கைகளை ஆதரித்தது.

ஸ்ராலினிச பாரம்பரியத்தில், மே 20 அன்று நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கையில், உள்ளூர்மட்ட தொழிற்சங்கங்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ‘இராஜதந்திரத்திற்கு’ அழைப்புவிட்டனர். “உக்ரேனிய மக்கள், சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு உதவும் திட்டத்தை வகுக்க ஐக்கிய நாடுகள் சபையை நாம் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்” என்று ஒரு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் ஐ.நா.வின் கைகளில் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் போரை ஏற்பாடு செய்யும் அதே முதலாளித்துவ சக்திகளிடம் முறையிடுகின்றனர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

போர் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம், கொரோனா வைரஸை பாரியளவில் வெடித்துப் பரவ வேண்டுமென்றே அனுமதித்த கொள்கைக்கு எதிரான போராட்டத்தைப் போல, அது தொழிற்சங்கங்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கைக்கு எதிராகவும் சர்தேச சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். இதற்கு, இத்தாலியில், சுயாதீனமான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களையும், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஒரு பிரிவையும் கட்டமைப்பது அவசியமாகும்.

Loading