முன்னோக்கு

போர், பெருந்தொற்று, விண்ணை முட்டும் விலை உயர்வுகளில் இருந்து எண்ணெய் துறைப் பெருநிறுவனங்கள் இலாபங்களைக் குவிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் பெருந்தொற்றால் உந்தப்பட்ட வரலாற்றில் இல்லா பணவீக்கத்திற்கு மத்தியில், தொழிலாள வர்க்க குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்யப் போராடுகின்ற வேளையில், உலகின் மிகப்பெரும் பன்னாட்டு எண்ணெய் துறைப் பெருநிறுவனங்களோ உச்சபட்ச இலாபங்களை அறிவித்து வருகின்றன.

High gas prices are shown as a pedestrian waits to cross the street in Los Angeles, June 16, 2022. Oil companies were swimming in record profits the last few months. (AP Photo/Jae C. Hong, File) [AP Photo/Jae C. Hong, File]

கடந்த வாரத்தில், ஆறு பெரிய பன்னாட்டு எண்ணெய் துறை நிறுவனங்கள் — எக்ஸொன்மொபில், செவ்ரோன், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், டோட்டல்எனேர்ஜி மற்றும் யெனி (Eni) ஆகியவை — இரண்டாம் காலாண்டில் மட்டும் ஒருமித்து 64 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இலாபங்களை அறிவித்தன. இலாபத்திற்கான இந்த வெறியாட்டம் வெறும் இந்த ஆறு பெரிய எண்ணெய் துறை நிறுவனங்களோடு நின்று விடவில்லை. பிலிப்ஸ் 66, வலெரோ (Valero) மற்றும் ஹெஸ் (Hess) எனச் சிறிய அமெரிக்க நிறுவனங்களும் ஒருமித்த காலாண்டு இலாபமாகப் பாரியளவில் 8.62 பில்லியன் டாலர்களை அறிவித்தன.

மொத்தத்தில், இந்த ஒன்பது நிறுவனங்களும் மூன்று மாதங்களில் 72 பில்லியன் டாலர் இலாபங்களை அறிவித்தன. இந்த எண்ணெய் துறை நிறுவனங்கள், பெரும்பாலும், உற்பத்தியை அதிகரிக்க மறுத்துள்ளன, இது இந்த கோடைக் காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் எரிவாயு விலைகள் சராசரியாக ஒரு கேலன் 5 டாலராக உயர்வதற்கும், மற்றும் தொழிலாள வர்க்கக் குடும்பங்களில் இருந்து பில்லியன்களை உறிஞ்சி அவற்றின் கருவூலங்களில் குவித்துக் கொள்ளவும் இட்டுச் சென்றது. கடந்த மாதம் ஒரு கேலன் எரிவாயுவின் விலை நாடு முழுவதும் சராசரியாக 4.19 டாலராகக் குறைந்திருந்தாலும், இப்போதும் இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 3.17 டாலரை விட ஒரு டாலருக்கும் சற்று அதிகமாக உள்ளது.

இந்தக் காலகட்டத்தின் போது ஒவ்வொரு நாளும், எண்ணெய் துறை நிறுவனங்கள் 800 மில்லியன் டாலர், அதாவது ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 33.3 மில்லியன் டாலர் இலாபம் ஈட்டின.

அமெரிக்காவில் உள்ள 15 பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனங்களின் இலாபத்தை கண்காணிக்கும் சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தைக் குழுவான இயற்கை வளப் பாதுகாப்பு கவுன்சிலின் (NRDC) ஒரு பகுப்பாய்வு, 2021 இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் எண்ணெய் துறை நிறுவனத்தின் இலாபங்கள் 'மலைப்பூட்டும் அளவுக்கு 242 சதவீதம்' அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தது.

அமெரிக்காவின் மிகப் பெரிய தனியார் எண்ணெய் துறை நிறுவனமான ExxonMobil இரண்டாம் காலாண்டில் அண்மித்து 17.9 பில்லியன் டாலர் இலாபத்தை அறிவித்தது, NRDC தகவல்படி, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 226 சதவீத அதிகரிப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒட்டுமொத்தமாக, ExxonMobil இந்த ஆண்டு மட்டும் 23.3 பில்லியன் டாலர் இலாபத்தை அறிவித்துள்ளது.

செவ்ரோன் இரண்டாவது காலாண்டில் 11.62 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டியது, இது ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட 277 சதவீதம் அதிகமாகும். ஜூன் மாதம் கலிபோர்னியாவின் ரிச்மண்டில் 500 எண்ணெய் துறைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை ஐக்கிய எஃகுத் துறைத் தொழிலாளர்கள் சங்கம் விற்றுத் தள்ளியது உட்பட, கூலி உயர்வுகள் மற்றும் வேலை நிலைமைகளுக்கான செவ்ரோன் தொழிலாளர்களின் போராட்டங்களை அது தனிமைப்படுத்திக் காட்டிக்கொடுத்ததன் மூலம் அந்த நிறுவனத்தின் மிகப் பெரும் இந்த இலாப அதிகரிப்பில் இந்தச் சங்கம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

பிரிட்டனை மையமாகக் கொண்ட ஷெல் இரண்டாவது காலாண்டில் 17.85 பில்லியன் டாலர் இலாபம் அறிவித்தது, கடந்த ஆண்டை விட 107 சதவீத அதிகரிப்பான இது, இந்த ஆண்டின் அதன் மொத்த லாபத்தை 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கொண்டு வந்துள்ளது.

இத்தாலியை மையமாகக் கொண்ட எண்ணெய் துறை நிறுவனமான யெனி, இரண்டாவது காலாண்டில் சரி செய்யப்பட்ட நிகர இலாபமாக 3.88 பில்லியன் டாலரை அறிவித்தது, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அதிகரித்திருந்தது.

இதே போல பிரான்ஸை மையமாகக் கொண்ட டோட்டல்எனேர்ஜி எப்போதையும் விட அதிகமாக இரண்டாம் காலாண்டில் 9.8 பில்லியன் டாலர் இலாபம் அறிவித்தது, இது கடந்தாண்டை விட அண்மித்து மூன்று மடங்கு அதிகமாகும். இந்த எண்ணிக்கை முன்னர் 2008 இல் அந்த நிறுவனம் எட்டிய எண்ணிக்கையையே விஞ்சியது, அப்போது ஒரு பேரல் எண்ணெய் விலை (கச்சா எண்ணெய்) 147 டாலராக இருந்தது, அதாவது தற்போதைய விலையை விட சுமார் 47 டாலர் அதிகமாக இருந்தது.

இந்த இலாப எண்ணிக்கைகள் வோல் ஸ்ட்ரீட் எதிர்பார்ப்புகளையே விஞ்சிய நிலையில், பங்குகள் வாங்கி விற்பதற்கும் மற்றும் அதிகரித்த பங்கு ஆதாயம் கிடைப்பதற்குமான சாத்தியக்கூறுகள் மீது முதலீட்டாளர்களும் எண்ணெய் துறைப் பில்லியனர்களும் வாயில் எச்சில் ஊற நிற்கின்றனர். சுரண்டிக் கொழுத்த இந்த இலாபங்களை அதிக தொழிலாளர்களை நியமிப்பதற்கும், கூலிகளை அதிகரிப்பதற்கும் அல்லது பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எல்லா எண்ணெய் துறை நிறுவனங்களும் ஒரு புதிய சுற்று பங்கு வாங்கி விற்றலை அறிவித்தன.

டோட்டெல்எனேர்ஜி ஏற்கனவே இரண்டாம் காலாண்டில் 'அதன் 2 பில்லியன் டாலர் பங்குகளை வாங்கி விற்று' இருப்பதாகவும், “மூன்றாவது காலாண்டிலும் மீண்டும் இதையே செய்யும்' என்றும் தொழில்துறைப் பிரசுரம் RigZone.com குறிப்பிடுகிறது. அந்தப் பிரசுரம் தொடர்ந்து குறிப்பிட்டது: “நிறுவனத்தின் பொதுக் குழு இயக்குனர்கள் 2022 இல் இரண்டாவது பங்கு ஆதாய வழங்கலுக்கு ஒப்புதலும் வழங்கி விட்டார்கள், இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5 சதவீதம் அதிகமாகும்.”

இதே போல, பிரிட்டிஷ் பெட்ரோலியம் இந்தாண்டு முதல் பாதியில் 3.9 பில்லியன் டாலரைப் பங்குகள் வாங்கி விற்பதில் செலவிட்டுள்ளது, மூன்றாவது காலாண்டில் மேலும் 3.5 பில்லியன் டாலர் பங்குகள் வாங்கி விற்பதில் செலவிடப்படும் என்று அது அறிவித்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், 'இந்த ஆண்டு அதன் 'உபரி பணப் புழக்கத்தில்' 60 சதவீதத்தைப் பங்குகள் வாங்கி விற்பதில்' அது செலவிடும் என்றும், பங்குகளின் ஆதாயத் தொகை (dividend) 10 சதவீதம் உயர்த்தும் என்றும் குறிப்பிட்டது.

எக்ஸொன்மொபில் ஏற்கனவே இந்த இரண்டாம் காலாண்டு நெடுகிலும் பங்கு ஆதாயத் தொகைகளுக்காகவும் பங்கு கொள்முதல்களுக்காகவும் 7.6 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம், செவ்ரோன், எக்ஸொன்மொபில், ஷெல் மற்றும் டோட்டல்எனேர்ஜி ஆகியவை இந்தாண்டு முதல் பாதியில் அவற்றின் சொந்தப் பங்குகளை வாங்கி விற்பதில் சுமார் 25 பில்லியன் டாலர்கள் செலவிட்டு இருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாய்கிழமைக் குறிப்பிட்டது.

முக்கிய எண்ணெய் நிறுவனப் பங்குதாரர்களின் சொத்து வளங்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளையில், அமெரிக்கக் குடும்பங்களோ அதிகபட்ச வாழ்வாதாரச் செலவு அதிகரிப்புகள் மற்றும் பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு திட்டத்தால் எரியூட்டப்பட்டு அதிகரித்து வரும் வட்டிகளைச் செலுத்த முடியாமல் இன்னும் ஆழமாகக் கடனில் விழுந்து வருகின்றன. அதே நேரத்தில், வேலையின்மையை அதிகரிக்கவும், கூலி உயர்வுகள் மற்றும் நல்லதொரு வேலையிட நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தவும் பெடரல் வங்கி வேண்டுமென்றே பொருளாதார நடவடிக்கையில் ஒரு மெதுவாக்கலை உருவாக்கி வருகிறது.

அமெரிக்கக் குடும்பங்களின் கடன் முதல் முறையாக 16 ட்ரில்லியனைக் கடந்து விட்டதாக நியூ யோர்க் பெடரல் ரிசர்வ் செவ்வாய்கிழமைக் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு கடன் அட்டை இருப்புத் தொகைகள் 46 பில்லியன் டாலராக அதிகரித்திருப்பதை அது குறிப்பிட்டது.

CNN செய்தியின்படி, கடந்தாண்டில் கடன் அட்டை மூலமாக நடந்த மொத்த கடன் '100 பில்லியன் டாலர் அல்லது 13 சதவீதம் அதிகரித்துள்ளது, இந்தச் சதவீதம் 20 க்கும் அதிகமான ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிகரிப்பாகும்.”

இந்தப் பெருந்தொற்றின் பாரிய இறப்புகள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ போர் ஆகியவற்றுக்கு மத்தியில் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை அதிகரித்து, இலாபமீட்டி வருவது, எரிபொருளை மட்டுமல்ல, மாறாக உணவு, மருந்து மற்றும் நவீன வாழ்வின் ஏனைய எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் தனிச்சலுகை கொண்ட ஒரு சில சோம்பேறிகளைச் செழிப்பாக்குவதற்காக அல்ல, மனிதகுலத்தில் அனைவரையும் வளப்படுத்துவதற்காகப் பயன்படுத்த, தொழிலாள வர்க்கம் அவற்றைக் கையகப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்த இலாப நோக்கு அமைப்புமுறைக்கு முடிவு கட்டி, பொருளாதார வாழ்வை சோசலிச அடித்தளங்களில் மறுஒழுங்கமைப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவுபூர்வமான ஒன்றுபட்ட போராட்டம் என்பதே இதன் அர்த்தமாகும்.

Loading