பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், பிரான்சின் டோட்டல்எனேர்ஜி பெருநிறுவனமானது 18 பில்லியன் யூரோக்கள் மாபெரும் இலாபங்களை பதிவு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 28 அன்று, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல்எனேர்ஜி (TotalEnergies) ஆனது 2022 இன் முதல் பாதியில் 17.7 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான இலாபத்தை (18.8 பில்லியன் டாலர்கள்) அறிவித்தது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரினால் தூண்டப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளதை அந்நிறுவனம் மேற்கோள் காட்டி எரிபொருள் விலையில் ஒரு பெரிய உயர்வை நியாயப்படுத்தியது. உண்மையில், அது உக்ரேனிய நெருக்கடியைப் பயன்படுத்தி, பிரான்சிலும் சர்வதேச அளவிலுமுள்ள தொழிலாளர்களின் பைகளிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைப் பெறுகிறது.

பிரான்சின் பாரீஸிலுள்ள ஒரு TotalEnergies நிரப்பு நிலையம் [Photo by Chabe01/CC BY-SA 4.0] [Photo by Chabe01 / CC BY-SA 4.0]

இந்த நிகழ்வு வெறும் டோட்டல் (Total) பெருநிறுவனம் அல்லது பிரான்சுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பல எண்ணெய் மற்றும் எரிசக்தி பெருநிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாதனை இலாபங்களைப் பதிவு செய்தன. மூன்றே மாதங்களில் ExxonMobile 17.9 பில்லியன் டாலர்கள், Chevron 11.6 பில்லியன் டாலர்கள், மற்றும் Shell Oil 11.6 பில்லியன் டாலர்கள் இலாபங்களை ஈட்டியது.

ஜூலை மாத இறுதியில் பிரான்சில் பதிவுசெய்யப்பட்ட 6.1 சதவீத பணவீக்க விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாகும். எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் செலவுகளின் முக்கிய உந்துசக்திகளில் ஒன்றாகும். பெட்ரோல் விலைகளுக்கான தேசிய சராசரிகள் ஜூன் தொடக்கத்தில் லீட்டருக்கு 2.12 யூரோவாக உயர்ந்தன, ஆகஸ்ட் தொடக்கத்தில் லீட்டருக்கு 1.85 யூரோவை அடைவதற்கு முன்பு, இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 0.30 யூரோ அதிகமாகும்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜூன் மாதம் நடந்த G7 கூட்டத்தில் இலாபங்களை அதிகரிக்க உக்ரேனில் போரைப் பயன்படுத்த முற்படும் 'போர் இலாபக்காரர்களை' வாய்ச்சவாடலுடன் கண்டித்த போதிலும், அவரது அரசாங்கம் டோட்டலின் போர் இலாப வேட்டைக்கு அதன் முழு ஆதரவையும் வழங்கி வருகிறது.

ஒரு செனட் விவாதத்தில், டோட்டலின் சாதனை இலாபங்கள் மீது ஒரு பரிதாபகரமான 'விதிவிலக்கான கூட்டொருமை பங்களிப்பு' செலுத்த (“exceptional solidarity contribution”) வைப்பதற்கான ஒரு பிரேரணை நிராகரிக்கப்பட்ட நிலையில், பொருளாதார மற்றும் நிதி மந்திரி புருனோ லு-மேர் டோட்டலை ஆதரித்தார். வணிகங்களும் 'பணவீக்கத்தின் சுமையைச் சுமக்கின்றன' என்று கூறிய அவர், 'ஒரு நிறுவனம் [சமூகத்திற்கு உதவுவதற்கான] சிறந்த வழி வரி விதிக்கப்படக்கூடாது, மாறாக அதன் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகும்' என்று கூறினார்.

இரண்டு கூற்றுக்களும் அபத்தமானவை. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டோட்டலின் ஆண்டிற்கு ஆண்டு இலாப அதிகரிப்பு 300 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது பிரான்சின் 6.1 சதவீத பணவீக்க விகிதத்தை விட 50 மடங்கு அதிகமாகும். இதற்கிடையில், டோட்டல்எனேர்ஜி பெருநிறுவனம் பணவீக்கம் இருந்தபோதிலும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒரு சதவீதம் கூட உயர்த்தவில்லை; 2020ல் இருந்து, இந்நிறுவனம் சர்வதேச அளவில் 6,500 வேலைகளை வெட்டியுள்ளது; இதில் பிரான்சில் 1,100 வேலைகளும் அடங்கும்.

டோட்டலின் 'மாபெரும் இலாபங்கள்' மற்றும் வரி ஏய்ப்பு நடைமுறைகளை பகுப்பாய்வு செய்த பொருளாதார வல்லுநர் Maxime Combes, 'அதன் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் எல்லாக் கட்டங்களிலும் இலாபங்கள் எவ்வாறு அதிகரித்து வருகின்றன, நிறுவனம் அதன் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் எதையும் மாற்றாமல்' எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார். அதாவது, டோட்டலின் சாதனை இலாபங்கள் உலக நிதியச் சந்தைகளில் எண்ணெய் அதிகரிப்பால் தானாகவே உந்தப்படுகின்றன. விலைவாசி உயரும் போது அவற்றின் ஊதிய உயர்வுகளை வழங்க மறுப்பதன் மூலம் அதன் தொழிலாளர்களை அதிகரித்த சுரண்டலைத் தவிர, இந்த திடீர் இலாபங்களை பெறுவதற்கு அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டோட்டலின் சாதனையான 2022 இலாபங்கள் அதன் 'வரி உகப்பாக்கம்' (“tax optimization”) கொள்கையைப் பின்பற்றுகின்றன, இது பிரான்சில் செயல்படும் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் பிரபலமாக உள்ளது, அங்கு அவை பிரான்சில் வடிவமைக்கப்பட்ட இழப்புக்களை அறிவிக்கின்றன, அதே நேரத்தில் குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் பில்லியன் கணக்கான இலாபத்தை அனுபவிக்கின்றன. இதன் விளைவாக, டோட்டல் கடந்த 24 மாதங்களில் பிரெஞ்சு பெருநிறுவன வரியில் ஒரு யூரோவைக் கூட செலுத்தவில்லை, ஏனெனில் 2020 இல் ஏற்பட்ட இழப்புகள் (அந்த ஆண்டில் அதன் பங்குதாரர்களுக்கு அது இன்னும் 7.6 பில்லியன் யூரோக்களை செலுத்தியது).

மக்களின் அப்பட்டமான விலை உயர்வு குறித்து அதிகரித்து வரும் மக்களின் சீற்றத்தை தணிக்க, டோட்டல் நிர்வாகிகள் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 1 வரை எரிபொருள் விலைகளில் அவமதிப்பான 20 சென்டிம் குறைப்பிற்கு உறுதியளித்தனர். தங்கள் பாக்கெட்டுகளில் ஏற்கனவே மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பில்லியன் கணக்கான பணம் நிரம்பியுள்ள நிலையில், டோட்டலின் நிர்வாகிகளும் பங்குதாரர்களும் இந்த ஏளனமான நடவடிக்கை இருந்தபோதிலும் பாரியளவில் செல்வமாக்கப்பட்ட நிலையில் அவைகளை அள்ளிச் செல்வார்கள்.

நுகர்வோர் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் அல்லது டோட்டலின் சாதனை இலாபங்கள் எந்த நேரத்திலும் விரைவில் வீழ்ச்சியடையும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) இன் கூற்றுப்படி, எரிசக்தி பன்னாட்டு நிறுவனங்கள் '2022 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 200 பில்லியன் யூரோக்கள் வரை அதிகப்படியான இலாபங்களை' காணக்கூடும். Combes கருத்தின்படி, இது டோட்டலின் சொந்த இலாபங்கள் அந்த ஆண்டிற்கு 35 பில்லியன் யூரோக்களை எட்டுவதைக் காணலாம்.

பெருந்தொற்று நோய், அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரின் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றிற்கு மத்தியில் மக்களில் பெரும் திரளானவர்கள் துன்புறும் அதேவேளையில், பங்குதாரர்களுக்கு பில்லியன் கணக்கான இலாபங்களை வாரி வழங்கும் ஒரே நிறுவனம் டோட்டல் மட்டும் அல்ல.

கடந்த வாரம், CAC-40 பாரிஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெருநிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் 174 பில்லியன் யூரோக்கள் இலாபத்தை அறிவித்தன, இது கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு முன்னர் 2019 இல் பதிவு செய்யப்பட்ட 80 பில்லியன் யூரோக்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது 2008 நிதியக் கரைப்புக்கு முன்னதாக, 2007ல் பதிவுசெய்யப்பட்ட 100 பில்லியன் யூரோவின் சாதனை இலாபங்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.

டோட்டலுடன் சேர்ந்து, மிகவும் இலாபகரமான பெருநிறுவனங்கள் விவேண்டி (Vivendi) ஊடகக் குழுவாகும், இது 24.6 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சம்பாதித்தது; மற்றும் LVMH என்ற ஆடம்பரப் பொருள் நிறுவனம், பிரான்சின் மிகப்பெரும் செல்வந்தரான Bernard Arnault க்கு சொந்தமானது, அது 12.7 பில்லியன் யூரோக்களை ஈட்டியது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாகனத் தொழில்துறை ஒரு அரை-கடத்தி (semi-conductor) பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், பிரான்சில் பல தொழிற்சாலைகளை நடத்தி வரும் வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், 2021ல் 18 பில்லியன் யூரோக்கள் இலாபத்தைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டை விட 34 சதவிகிதம் அதிகமாகும்.

டோட்டலுடன் சேர்ந்து, பெருநிறுவன இலாபங்கள் 2022ல் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன, வரலாறு காணாத பணவீக்கம், உக்ரேன் போரின் பொருளாதார தாக்கங்கள், மற்றும் பிரான்சிலும் யூரோப்பகுதி முழுவதிலும் வரவிருக்கும் மந்தநிலை பற்றிய எச்சரிக்கைகள் இருந்தபோதிலும். முதல் காலாண்டில், LVMH 2022 முதல் காலாண்டில் 6.5 பில்லியன் யூரோ இலாபத்தை அறிவித்தது, இது 2021 இல் 23 சதவீத அதிகரிப்பு ஆகும். ஸ்டெல்லாண்டிஸ் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 8 பில்லியன் யூரோக்கள் இலாபங்களை ஈட்டுவதாக அறிவித்தது.

உலகெங்கிலும், ஆளும் வர்க்கம், 'ஒரு நல்ல நெருக்கடியை ஒருபோதும் வீணடிக்க விடாதீர்கள்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. கோவிட்-19 க்கு எதிரான முதல் மற்றும் இன்றுவரை முறையான பூட்டுதலைத் (lockdown) தொடர்ந்து, மே 2020 இல் ஐரோப்பிய பெருநிறுவனங்கள் CGT மற்றும் பிற பிராங்கோ-ஜேர்மன் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களுக்கு பிணையெடுக்கப்பட்டன.

மில்லியன் கணக்கான இறப்புக்கள் மற்றும் வைரஸின் பல அலைகளுக்கு வழிவகுத்த ஒரு மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கையை செயல்படுத்துவதுடன், இது பங்குச் சந்தையில் ஒரு பாரிய எழுச்சி, பெருநிறுவன இலாபங்களை பதிவு செய்தல் மற்றும் பெரும் செல்வந்தர்களின் செல்வத்தில் முன்னோடியில்லாத அதிகரிப்பு ஆகியவற்றிற்கான நிலைமைகளை உருவாக்கின. அதிகரித்து வரும் பணவீக்கம், உக்ரேனில் போர் மற்றும் வரவிருக்கும் மந்தநிலை ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த நிகழ்ச்சிப்போக்கு முடுக்கிவிடப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவிலும் பிரான்சிலும், ஆளும் வர்க்கம் ஒருபோதும் இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. ஒரே ஒரு உதாரணத்தை பார்த்தோமானால், பெருந்தொற்று நோய் மற்றும் அதனுடன் இணைந்த பொருளாதார நெருக்கடியின் போது, பிரான்சின் மிகப்பெரிய பணக்காரரான பேர்னார்ட் ஆர்னோ, 2020 ஆம் ஆண்டில் 76 பில்லியன் டாலர்களில் இருந்து, ஆகஸ்ட் 1, 2022 அன்று 166 பில்லியன் டாலர்களாக தனது செல்வத்தை இருமடங்காக்கி இருப்பதை காணமுடியும்.

மறுபுறத்தில், தொழிலாள வர்க்கம் அதிகரித்துவரும் செலவினங்களை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது, அத்துடன் ஏற்கனவே முற்றிலும் பற்றாக்குறையாக இருக்கும் சமூக ஆதரவுக்கான வெட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளது. பணவீக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், மக்ரோன் அரசாங்கம் ஓய்வூகால ஓய்வூதியங்கள் மற்றும் குடும்ப கொடுப்பனவுகளில் 4 வீத அதிகரிப்பை நிறைவேற்றியது, இது 6.1 வீத பணவீக்க வீதத்தைக் கருத்தில் கொண்டால் ஒரு பயனுள்ள வெட்டு ஆகும்.

டோட்டலின் இலாபங்கள் பரந்தளவில் சீற்றத்துடனும் வெறுப்புடனும் பார்க்கப்பட்டாலும், எந்த ஒரு பெரிய கட்சியும் பெருநிறுவன நிர்வாகிகளின் பில்லியன் கணக்கான பணத்தை குவித்துத் திரட்டும் திறனை அச்சுறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், கேள்விக்குள்ளாக்கும் எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. இறந்து போன 'கூட்டொருமை பங்களிப்பு' செலுத்துதலை தேசிய சட்டமன்றத்திலும் செனட்டிலும் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட, அது ஒவ்வொரு ஆண்டும் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன்களின் வாளியில் ஒரு துளியைத் தவிர வேறொன்றுமாக இருந்திருக்காது.

உலகெங்கிலுமுள்ள எண்ணெய் பெரு நிறுவனங்களின் பெரும் இலாபங்களைப் போலவே, டோட்டலின் திறனும் முழு மக்களையும் எரிபொருளுக்காகப் பணயம் வைப்பதற்கும், பில்லியன் கணக்கான பணத்துடன் சுருட்டிக் கொண்டு போக வைப்பதற்குமான திறனை, பிரான்சில் வர்க்க ஆட்சியின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்கள் பெரும் செல்வந்தர்களின் கற்பனைக்கு எட்டாத செல்வத்தை ஈவிரக்கமின்றி பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் மத்தியில் சமூக அவலம் வளர்கிறது. தொழிலாளர்களின் அதிகாரத்தையும் சோசலிசத்தையும் ஸ்தாபிப்பதன் மூலமும், அராஜக இலாப அமைப்புமுறைக்கு முடிவு கட்டுவதன் மூலம் மட்டுமே இந்த ஊழல் நிறைந்த ஆட்சியை தூக்கியெறிய முடியும்.

Loading