மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டொனால்ட் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ வளாகத்தில் ஆகஸ்ட் 8 இல் மத்திய புலனாய்வு துறை சோதனை நடத்திய நிலையில், அமெரிக்க அரசியல் அமைப்பின் நெருக்கடி ஒரு முன்னோடி இல்லாத கட்டத்தை எட்டி உள்ளது. 2015 இல் ட்ரம்ப் ஒரு தேசிய அரசியல் பிரமுகராக உருவெடுத்ததில் இருந்து அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான அரசியல் நடவடிக்கை இதுவாகும்.
தேசிய இடைக்கால தேர்தலுக்கு பத்து வாரங்களே உள்ள நிலையில், இதில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலை அதிகரிப்பதை மையமாகக் கொண்ட பைடென் நிர்வாகத்தின் உலகளாவிய மாபெரும் மூலோபாய நலன்களுக்கு, ஜனவரி 6, 2021 இல் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்ற அவர் செய்த முயற்சிக்குப் பைடென் நிர்வாகம் காட்டிய உறுதியற்ற மற்றும் பயத்துடன் கூடிய விடையிறுப்பை விட அதிக அளவில் ட்ரம்புக்கு எதிரான நடவடிக்கை தேவைப்படுவதாக நீதித்துறைத் தீர்மானித்துள்ளது.
மார்-ஏ-லாகோவிற்கு ட்ரம்ப் எடுத்துச் சென்றுள்ள ஆவணங்கள், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் வசம் உள்ள சில முக்கியமான தகவல்களைப் பற்றியதாக கருதப்படுகிறது. ஈவிரக்கமின்றி அமலாக்கப்பட்ட அத்தகைய அரசு இரகசியங்களைப் பாதுகாப்பதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் விரிவான நடைமுறைகளை உருவாக்கி உள்ளது.
அந்த ஆவணங்களில் 'அணுசக்தி சம்பந்தமான ஆவணங்கள்' உள்ளடங்கி இருப்பதாகவும், அதாவது அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்கள், அது அமெரிக்காவினது, அதன் கூட்டாளிகள், அல்லது சில வெளிநாட்டு எதிரிகள் அல்லது இலக்குகள் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும், இந்தத் தகவல்கள் மிகவும் இரகசியமானவை, அவை சிறப்புச் சட்டங்களின் கீழ் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன், அதிமுக்கியமாக அவசியப்பட்டால் ஒழிய, அவற்றை ஜனாதிபதியே கூட வெளியிட முடியாது என்றும் வாஷிங்டன் போஸ்ட் வியாழக்கிழமை குறிப்பிட்டது.
ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை ஜனவரியில் ட்ரம்ப் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு திரும்ப வழங்கிய போது, அதிகாரிகள் “திரும்ப வழங்கப்பட்ட அந்த ஆவணங்களில் சில இரகசிய ஆவணங்களாகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டவை என்பதையும், வெளிநாட்டு தலைவர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற ஒட்டுக் கேட்கப்பட்ட மின்னணு தகவல்தொடர்புகளான மிகவும் முக்கியமான சமிக்ஞை உளவுச் செய்திகளை உள்ளடக்கியவை என்பதையும் அறிந்தனர்' என்று போஸ்ட் சனிக்கிழமை அறிவித்தது.
Mar-a-Lago இல் மத்திய புலனாய்வுத் துறைக் கைப்பற்றிய ஆவணங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலைப் புளோரிடா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட போது, “பிரெஞ்சு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தகவல்' (“Info re: President of France”) என்ற பெயரில் ஒரு கோப்பும் உள்ளடங்கி இருந்தது. அமெரிக்க மின்னணு உளவுத்துறை மற்றும்/அல்லது பிரெஞ்சு அரசாங்கத்தின் உயர்மட்ட உளவாளிகளிடம் இருந்து பெறப்பட்ட இமானுவல் மக்ரோனின் இரகசியங்களில், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து விளாடிமீர் புட்டின் உடனான நிதி சம்பந்தப்பட்ட பின்புல தகவல் தொடர்புகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பிரான்சின் இரகசிய நடவடிக்கைகள் வரையில் அனைத்தும் உள்ளடங்கி இருக்கலாம்.
மத்திய புலனாய்வுத் துறை சோதனையை அனுமதித்த அந்த உத்தரவாணை வெள்ளிக்கிழமை பகிரங்கமாக வெளியிடப்பட்டது, ஆளும் வர்க்கத்தின் அதிமுக்கிய விவகாரங்களைக் கையாள்வதில் தசாப்தங்களாக அனுபவம் வாய்ந்த அரசின் ஆள் மெரிக் கார்லாண்ட் அதற்குத் தனிப்பட்ட ரீதியில் ஒப்புதல் வழங்கி இருந்தார். Timothy McVeigh, அட்லாண்டா ஒலிம்பிக்கில் குண்டுவீசிய Ted Kaczynski மற்றும் முன்னாள் வாஷிங்டன் டி.சி. நகரச்சபைத் தலைவர் மரியன் பேரி ஆகியோர் மீதான வழக்குகளை இவர் மேற்பார்வை இட்டவர். தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பெரும்பாலான வழக்குகளை விசாரிக்கும் மிக முக்கிய பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றமான டி.சி. சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், 1995 இல் இருந்து 2021 வரை, கார்லாண்ட் நீதிபதியாக இருந்தார். 2013 இல் அவர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார்.
உளவுத்துறைச் சட்டத்தை மீறிய நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்புவதற்குப் பெடரல் வழக்குரைஞர்களுக்குப் போதிய காரணம் இருப்பதாகக் கார்லாண்ட் அந்த உத்தரவாணையில் அறிவித்தார். ரஷ்யப் புரட்சி நடந்த மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் முதலாம் உலகப் போரில் இறங்கிய ஆண்டான 1917 இல் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அரசு பாதுகாப்புக்கு பிரத்யேக முக்கியத்துவம் கொண்ட விஷயங்களில் அமெரிக்க ஆளும் வர்க்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. முதலாம் உலகப் போரை எதிர்த்ததற்காக சோசலிசவாதி ஒய்கன் வி. டெப்ஸைச் (Eugene V. Debs) சிறையில் அடைக்க இது பயன்படுத்தப்பட்டது. 1953 இல் அது ஜூலியஸ் மற்றும் எதெல் ரொசென்பேர்க்குக்கு மரண தண்டனை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கப் போர் குற்றங்களை அம்பலப்படுத்திய டானியல் எல்ஸ்பேர்க், செல்சியா மானிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிராகவும், மிகச் சமீபத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கோருவதற்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் அந்த முன்னாள் 'தலைமைத் தளபதி'க்கு எதிராக அது கையாளப்பட்டு இருப்பது ஒன்றும் சிறிய விஷயமல்ல. “அரசு, அது நான் தான்,” (l’état, c’est moi) என்ற மந்திரத்தின் கீழ் அரசுக்குள் ஓர் அரசைத் தொடர்ந்து செயல்படுத்தி உள்ளார் என்பதற்கு அது ஒரு ஒப்புதல் ஆகும். 2016 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப், “நான் மட்டுமே இதைச் சரி செய்ய முடியும்,” என்றார்.
ட்ரம்ப் ஒரு ஜனநாயக விரோதச் சதிக்குப் பலி ஆனவர் இல்லை. ஜனாதிபதி, அரசின் ஓர் அதிகாரியாக அவர் பதவிக் காலத்தில் சேவையாற்றுகிறார், அரசின் இரகசியங்கள் மற்றும் அதன் குற்றங்களின் முன்வரலாறை அவரின் சொந்தத் தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ட்ரம்ப் இந்தத் தகவலை ஏன் வைத்திருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய கற்பனை எதுவும் தேவையில்லை: மிரட்டல் மற்றும் பிற வழிவகைகள் மூலமாக அவரின் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பாசிச அரசியல் சதியைப் பின்தொடர்வதில் அவற்றைப் பயன்படுத்துவதற்காக அதை வைத்திருந்தார்.
அதே நேரத்தில், ஜனவரி 6 மீதான விசாரணையில் மேலெழுந்து வரும் பிரச்சினைகளைப் போல இல்லாமல், இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் இல்லை. அமெரிக்க வரலாற்றிலேயே அரசாங்கத்தைக் கவிழ்த்து ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முதல் முயற்சியில் விசாரணை நடத்தி அம்பலப்படுத்துவதில் அதன் தட்டுத்தடுமாறும், குளறுபடியான அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில், இந்தப் பிரச்சினையில் பைடென் நிர்வாகமும் நீதித்துறையும் காட்டி உள்ள அதிரடித்தன்மையில் ஒரு தனித்துவமான வித்தியாசம் உள்ளது. அரசு இரகசியங்களை அடிப்படையாக வைத்து ட்ரம்பைத் துறத்துவதன் மூலம், ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 6 விவகாரத்தில் மேலெழுந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்காமல் மூடிமறைத்து விடுவார்கள்.
ஆனால் இந்த நிகழ்வுகள் ஆளும் வர்க்கத்தின் உண்மையான முன்னுரிமைகள் என்ன என்பதை அம்பலப்படுத்துகின்றன. அரசின் போர் முயற்சியை ட்ரம்ப் தொந்தரவூட்டுவதை அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே செய்து வந்துள்ளதைப் போலவே, ஜனநாயகக் கட்சியினர் இராணுவ மற்றும் ஒடுக்குமுறை அரசு எந்திரத்திற்கு முறையீடு செய்கின்றனர். ஏகாதிபத்தியப் போர்குணம் மற்றும் 'இருகட்சிகளின் ஒருமனதான சம்மதத்தின்' அடிப்படையில் ஒரு கூட்டணி அமைப்பதன் மூலம் குடியரசுக் கட்சியில் உள்ள அவரின் 'சகாக்களை' “காப்பாற்ற' இராணுவ உயர் அதிகாரிகளுக்கு முறையீடு செய்வதே எப்போதும் பைடெனின் மூலோபாயமாக இருந்துள்ளது.
Mar-a-Lago சோதனைக்கான உத்தரவாணை மற்றும் அரசு இரகசியங்களைக் குறித்து வெளியிடுவதால் குடியரசுக் கட்சி ட்ரம்பிடம் இருந்து பின்வாங்கும் என்று ஜனநாயகக் கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது. அந்தச் சோதனைகள் நடத்தப்படும் வரை அது குறித்து ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்ட பைடெனின் பத்திரிகையாளர் துறைச் செயலரின் வாதங்கள், பாசிசத்தை எதிர்ப்பதன் மீது உடன்பாடு எட்டுவதற்காக அல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய செயல்பாட்டைப் பாதுகாக்க, பைடென் திரைக்குப் பின்னால் குடியரசுக் கட்சியினருடன் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.
அந்த ஆணையத்திற்கு 'நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி' “மூடி விடுமாறு' வலியுறுத்திய பிரதிநிதி மர்ஜோரி டெய்லர் கிரீன் மற்றும் பிரதிநிதி பௌல் கோசார் போன்ற பாசிசவாத பிரமுகர்கள் மத்திய புலனாய்வுத் துறை மீது நடத்திய தாக்குதல்களை மூத்த குடியரசுக் கட்சியினர் மறுத்துள்ளனர், ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளில் பேசுகையில், உயர்மட்ட குடியரசுக் கட்சி நிர்வாகிகள் Mar-a-Lago சோதனை மீதான அவர்களின் தாக்குதல்களைக் குறைத்துக் கொண்டு, மத்திய புலனாய்வுத் துறையை நியாயப்படுத்தியதுடன், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் சம்பந்தமான விஷயங்கள் குறித்து கார்லாண்டிடம் இருந்து இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படுவதாகக் கூறினர்.
ட்ரம்ப், அவர் பேசத் தயாராக இருப்பதாகச் சமிக்ஞை செய்து விடையிறுத்தார், இது இந்தப் பிரச்சினைகள் மீதான மோதல் குறித்து அவர் பதட்டமடைந்து இருப்பதற்கான ஓர் அறிகுறியாகும். திங்கட்கிழமை Fox News உடனான ஒரு பேட்டியில் ட்ரம்ப் அரைவாசி அச்சுறுத்தல் ஒன்றை வெளியிட்டார்: “நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எல்லா மோசடிகள் மீதும், நான் இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு, கோபம் உள்ளது, இது புதிய ஒன்று — ஆண்டுக் கணக்கான மோசடிகள் மற்றும் இரகசிய வேட்டையாடல்கள் இருந்துள்ளன, இப்போது இது. எங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், நானும், என் ஆட்களும், நிச்சயமாக அதைச் செய்யத் தயாராக உள்ளோம்,” என்றார்.
நீதித்துறை மற்றும் நீதி அமைப்புமுறையின் சக்தி வாய்ந்த பிரிவுகள் ட்ரம்ப் மற்றும் அவரின் மிக நெருக்கமான வட்டாரங்களுக்கு எதிராக விசாரணைகள் மற்றும் வழக்குகளை முன்நகர்த்தி வருகின்றன. Mar-a-Lago சோதனை ஆகஸ்ட் 8 இல் நடந்தது. ஆகஸ்ட் 10 இல், அந்த முன்னாள் ஜனாதிபதி மன்ஹாட்டன் உயர் நீதிபதிகள் அமர்வுக்கு முன் நிறுத்தப்பட்டார், அங்கே அவர் ட்ரம்ப் அமைப்பின் நிதிகள் மீதான நியூ யோர்க் மாநில விசாரணைக்கான வாக்குமூலங்களின் போது ஐந்தாவது அரசியலமைப்பு தீர்ப்பை 440 முறை எடுத்தார். ஆகஸ்ட் 11-12 இல் கார்லாண்ட் பத்திரிகையாளர் சந்திப்பும் மற்றும் அந்த சோதனைக்கான உத்தரவாணையின் வெளியீடும் நடந்தது.
2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு அரசு அதிகாரிகளுக்கு அழுத்தமளித்த ட்ரம்ப் முயற்சிகளை விசாரிக்கும் ஓர் உள்ளாட்சி உயர்மட்ட நீதிக் குழுவின் முன்னால், தீவிர ட்ரம்ப் ஆதரவாளரான செனட்டர் லிண்டெ கிரஹாம் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ஜோர்ஜியாவின் கூட்டாட்சி நீதிபதி ஒருவர் ஆகஸ்ட் 15 இல் தீர்ப்பளித்தார். ட்ரம்ப் ஆலோசகர் ரூடி கிலானி ஜோர்ஜியா உயர் நீதியரசர் குழுவின் முன்னால் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதே நாளில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வழக்குரைஞர்களுக்கு அறிவித்தனர்.
ஜனவரி 6, 2021 சம்பவங்களையும் இந்தச் சோதனை நடவடிக்கையையும் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் அவற்றின் பாதையை விட்டே விலகிக் சென்றுள்ளன. மக்கள் அதிருப்தியைத் தூண்டும் எந்தவொரு பிரச்சினையைத் தொடுவதாலும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க மக்களின் பார்வைக்கு வெளியே, பெரும் பிரயத்தனத்துடன் ட்ரம்ப் உடனான கன்னை மோதலை திரைக்குப் பின்னால் கையாள முயன்றுள்ளனர். உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்தியதற்காக ட்ரம்ப் மீதான அவர்களின் 2019 பதவிநீக்கக் குற்றவிசாரணையில் எடுத்துக் காட்டப்பட்டவாறு, ஜனநாயகக் கட்சியின் எப்போதுமே ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைப் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் மீதே ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பை ஒருமுனைப்படுத்தி உள்ளனர்.
இன்று பைடென் நிர்வாகம் மிகக் குறைவான பொது ஆதரவையே பெற்றுள்ளது. அது நவம்பரில் தேர்தல் தோல்வியை முகங்கொடுக்கிறது, இந்தத் தேர்தல்கள் பிரதிநிதிகள் சபை அல்லது ஒட்டுமொத்த காங்கிரஸ் சபையிலும் ட்ரம்ப் ஆதரவாளர்களைப் பொறுப்பில் வைக்கக்கூடும். உக்ரேனில் அதன் போர் திக்குமுக்காடி நிற்கிறது, அதன் ரஷ்ய-விரோத மற்றும் சீன-விரோத பிரச்சாரங்களுக்கும் எந்தக் குறிப்பிடத்தக்க வெகுஜன ஆதரவும் கிடைக்கவில்லை. மிக முக்கியமாக, பணவீக்கம் மற்றும் கொடூரமாக எப்போதும் அதிகரித்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று மரண எண்ணிக்கையால் வாழ்க்கை நிலைமைகள் சரிந்து வருவதன் மீது அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தி பைடென் நிர்வாகத்தின் மீது அதிகரித்து வருகிறது. போர் நடத்துவதற்கும் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கும், முன்னுக்குப்பின் முரண்பாடான ட்ரம்பிடம் இருந்து எந்த ஆச்சரியங்களும் வராத வகையில், ஆளும் வர்க்கத்தை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதே அதன் பிரதான நோக்கமாக உள்ளது.
ட்ரம்பை அரசியல் காட்சியில் இருந்து அகற்றுவதால், இந்த முதலாளித்துவ இரு கட்சி அமைப்புக்குள் அதிகரித்து வரும் அதிவலது போக்குகளின் பலத்தைத் தடுத்து விட முடியாது, அது ஒரு தனிநபரின் விளைவல்ல மாறாக பாரியளவிலான சமத்துவமின்மை மட்டங்கள் மற்றும் நிரந்தரப் போரின் அடிப்படையில் ஓர் அழுகிய அரசியல் அமைப்பு முறையின் விளைவாகும். என்ன அவசியம் என்றால் ட்ரம்புக்கு அரசியல் ரீதியில் முடிவு கட்டுவது மட்டுமல்ல, மாறாக அவரை உருவாக்கிய இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் முடிவு கட்டுவதாகும். இது தொழிலாள வர்க்கத்தின் பாரிய நடவடிக்கை மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
