முன்னோக்கு

ட்ரம்ப் பண்ணையில் பெடரல் புலனாய்வுத் துறை சோதனைக்கான காரணங்களை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்

ட்ரம்பின் ஜனநாயக அச்சுறுத்தலை வெள்ளை மாளிகை விவாதிக்க மறுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Mar-a-Lago வளாகத்தில் பெடரல் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையானது, அமெரிக்க வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு சம்பவமாகும். இந்தச் சோதனை, நீதித்துறை உத்தரவாணை அடிப்படையில் இருந்தது, இத்தகைய ஒரு உத்தரவாணையை ஒரு பெடரல் நீதிபதி ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, ஆவணம் கையாளுதல் சம்பந்தமான ஏதோ சில தொழில்நுட்ப விதிமீறல்களுக்காக அல்ல, ஒரு மிகப் பெரிய குற்றம் சம்பந்தமாக மிகவும் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்குவார்.

2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான ஒரு வன்முறையான முயற்சியில் தலைமைச் செயலகம் மீது ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச ஆதரவாளர்களின் ஜனவரி 6, 2021 தாக்குதலுக்கும் மற்றும் Mar-a-Lago சோதனைக்கும் இடையிலான தொடர்பை அமெரிக்க மக்களுக்கு விளங்கப்படுத்தும் கடமை பைடென் நிர்வாகத்திற்கு இருக்கிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் தொடர்ச்சியான திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் புதிய தாக்குதல்களைத் தயாரிப்பதற்கும் நடத்துவதற்கும் நடந்து வரும் முயற்சிகள் சம்பந்தமான ஆதாரங்களால் இந்தச் சோதனை நடத்துவதற்கான முடிவு தூண்டப்பட்டது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

வெள்ளை மாளிகையும் நீதித்துறையும் ஆதாரங்கள் மற்றும் விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதானது, அமெரிக்க அரசியலமைப்பைத் தூக்கியெறிந்து ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளில் அவற்றை உடந்தை ஆக்குகிறது. அத்தகைய ஓர் எதேச்சதிகார ஆட்சி பாசிச கும்பலின் வன்முறை அடிப்படையிலும், இராணுவம், குடியேற்ற பொலிஸ், பிற பொலிஸ் முகமைகள் மற்றும் பெடரல் புலனாய்வுத் துறை உட்பட, அரசு எந்திரத்தினுள் ட்ரம்புக்கு இன்னமும் இருக்கும் கணிசமான ஆதரவை அணித் திரட்டுவதன் அடிப்படையிலும் இருக்கும்.

அந்தச் சோதனைக் குறித்து பைடென் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி செவ்வாய்கிழமை இரண்டு வெள்ளை மாளிகை நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அமெரிக்க இராணுவம் தைவான் மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சிப்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அமெரிக்க செமிக்கண்டக்டர் தொழில்துறைக்கு நூறு பில்லியன் கணக்கான டாலர்கள் வரிச்சலுகையாக வழங்கும், மின்னணு சிப்கள் மற்றும் விஞ்ஞான சட்டத்தில் காலையில் அவர் கையெழுத்திட்டார். மதியம் அவர் சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒரு கருவியாக விளங்கும் ஒன்றில் கையெழுத்திட்டார்.

ஜனநாயகக் கட்சியின் இந்த ஜனாதிபதி அவ்விரு நிகழ்வுகளிலுமே கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். செவ்வாய்கிழமைப் பிற்பகலில், வெள்ளை மாளிகைப் பத்திரிகையாளர் செயலர் கரீன் ஜோன்-பியர் பைடெனுக்கு முன்கூட்டியே தகவல் தெரியாது என்றும் அது குறித்து அவருக்குக் கூறப்படவில்லை என்றும் கூறியதைத் தவிர, அந்தச் சோதனைக் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூற மறுத்துவிட்டார்.

நீதித்துறையின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பதில்லை ஏனென்றால் அதன் சட்ட வழிமுறை முடிவுகள் 'சுதந்திரமானவை' மற்றும் 'அரசியல் சாராதவை' என்ற வெள்ளை மாளிகையின் கூற்று முற்றிலும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. புளோரிடாவில் ட்ரம்ப் பண்ணையில் சோதனை இடுவது என்ற முடிவானது, வாஷிங்டனில் ஓர் அரசியல் புயலைத் தொடங்கி வைக்கும் என்பது நன்கு தெரிந்தே செய்யப்பட்டது. சொல்லப் போனால், பைடென் தனிப்பட்ட ரீதியில் இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றால், அது நம்பத்தகுந்த மறுப்பை அவர் வழங்கும் வகையில் அந்த முடிவு இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவ்வாறு நடந்திருக்கும்.

அவ்விரு வெள்ளை மாளிகைச் சம்பவங்களிலுமே, ரஷ்யா மற்றும் சீனாவுடனான கடுமையான அமெரிக்க மோதல் கொள்கைக்கு இரு கட்சிகளின் ஒரு மனதான ஆதரவைப் பைடென் பாராட்டினார், அந்த எதிர்க்கட்சியுடன் இன்னும் அதிக 'நல்லிணக்கத்திற்கு' முறையிட்டார். ஆனால் குடியரசுக் கட்சியோ அதற்குப் பதிலாக அந்தச் சோதனையைக் கண்டித்து, ட்ரம்ப் பின்னால் அணி வகுத்துள்ளது, காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் சிலர் இது பைடென் மீது பதவி நீக்கக் குற்றவிசாரணைக் கொண்டு வர அடித்தளம் வழங்குவதாக அறிவித்தனர்.

பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை அணி தலைவர் கெவின் மெக்கார்த்தி உட்பட கிட்டத்தட்ட ஒட்டுமொத்த குடியரசுக் கட்சித் தலைமையும் அந்தச் சோதனைக் குறித்த ட்ரம்பின் கண்டனத்தை எதிரொலித்துள்ளது, நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் மீண்டும் பிரதிநிதிகள் சபையில் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால் நீதித்துறை மற்றும் அட்டார்னி ஜெனரல் கார்லாந்து மீது விசாரணைகள் தொடங்க சூளுரைத்து மெக்கார்த்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தப் பாசிச சதிகாரர்கள் தாக்குதலில் இறங்க முற்படுகின்றனர்.

Proud Boys, Oath Keepers மற்றும் இது போன்ற குழுக்களில் உள்ள ட்ரம்பின் குடிப்படை ஆதரவாளர்கள் நாடெங்கிலுமான நகரங்களில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து ட்வீட் சேதிகளைப் பதிவிட்டு, ஆயுதமேந்திய வன்முறைக்கு அச்சுறுத்தினர்.

குடியரசுக் கட்சியினரும் அவர்களின் ஊடக ஆதரவாளர்களும் அந்த 'முன்னோடியில்லாத' சோதனையைப் பற்றி அலறி கூச்சலிடுகிறார்கள். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் அறிவித்தது, 'முன்னாள் ஜனாதிபதி ஒருவரை வழக்கில் இழுக்கும் வரம்பு ஒருமுறை மீறிவிட்டால் —அதுவும் குறிப்பாகக் கூறப்பட்டக் குற்றமும் ஆதாரமும் பலவீனமாக இருக்கையில்— எதிர்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதியும் இலக்கில் வைக்கப்படுவார்.”

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ட்ரம்ப் முயற்சியில் முன்னெப்போதும் இல்லாதது என்னவென்றால், ஜனநாயக நாடு என்று கூறப்படும் ஒன்றில் முன்வைக்கப்படும் மிகவும் 'உறுதியான' குற்றச்சாட்டாகும். ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த மறுப்பதன் மூலம், பைடெனும் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டும் இருவருமே இந்த அரசியல் நெருக்கடியின் தீவிரத்தையும் ஆழத்தையும் அமெரிக்க மக்களிடம் இருந்து வேண்டுமென்றே மறைத்து வருகிறார்கள்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் மொழி தெள்ளத் தெளிவாக உள்ளது. “ரூபிகனைக் கடப்பது' என்ற மேற்கோள், ரோமன் குடியரசைத் தூக்கியெறிந்து, அவருடைய சர்வாதிகார அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, ஜூலியஸ் சீசர் ரூபிகன் ஆற்றைக் கடந்து அவர் படைகளை அனுப்ப முடிவெடுத்தது குறித்த ஒரு குறிப்பாகும். இந்த உருவகம் அமெரிக்க வரலாற்றில் வேறெந்த சம்பவத்தையும் விட ஜனவரி 6, 2021 இல் மற்றும் அதற்குப் பின்னரும் ட்ரம்ப் நடவடிக்கைகளுக்கு மிகவும் நேரடியாக பொருந்துகிறது.

பட்டவர்த்தனமாக உள்ள இந்த சதியின் அளவைப் பொது மக்களுக்கு விளங்கப்படுத்தி அம்பலப்படுத்தும் பொறுப்பு பைடென் நிர்வாகத்திற்கு உள்ளது. அந்த முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சோதனையிடும் முடிவைத் தூண்டிவிட்ட என்ன தகவல் அதற்கு கிடைத்திருந்தது? அரசாங்கத்தை நிலைகுலைய செய்து கவிழ்க்க அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் திட்டங்களைக் குறித்து அதற்கு என்ன தெரிய வந்தது? ட்ரம்பும் அவரது பாசிச ஆதரவாளர்களும் அமெரிக்க மக்களுக்கு எதிராக என்ன வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட தயாரிப்பு செய்து வருகிறார்கள்?

ட்ரம்பிடம் வெள்ளை மாளிகை ஆவணங்களைக் கொண்ட டஜன் கணக்கான பெட்டிகள் இருந்ததாலும், அவற்றில் சில இரகசிய நிர்வாக ஆவணங்கள் உள்ளடங்கி இருக்கலாம் என்பதாலும் தான், Mar-a-Lago இல் நாள் முழுவதும் சோதனை நடத்துவதற்காக சுமார் 30 பெடரல் புலனாய்வுத் துறை முகவர்கள் அணி திரட்டப்பட்டார்கள் என்பதை யாரும் நம்ப முடியாது. பெயர் வெளியிடாத 'ஆதார நபர்களின்' இந்தக் கூற்று, அமெரிக்க மக்களை வெள்ளை மாளிகை முட்டாள்களாக கருதுகிறது என்பதையும் — அது முன்னாள் ஜனாதிபதியின் பாசிச சதிகளை விட இந்த சோதனைக்கான நிஜமான காரணங்களை வெளியிடுவதால் ஏற்படும் பொது மக்களின் எதிர்வினையைக் குறித்தே அதிகமாக கவலைப் படுகிறது என்பதையும் மட்டுமே காட்டுகிறது. இந்த சோதனைக்கான உள்நோக்கங்களை வெளியிடாமல் இருப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் ஜனவரி 6 கிளர்ச்சியை மூடிமறைக்க உதவி வருகிறது.

ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டங்களை ஆராய்ந்து அம்பலப்படுத்துவதற்கோ அல்லது அமெரிக்காவின் அரசியலமைப்பு வடிவங்களில் எஞ்சி உள்ளவை மீதான மற்றொரு முன்னணி தாக்குதலில் இந்தத் திட்டங்கள் வெற்றி அடையும் போது பாசிச வலதை எதிர்த்துப் போராடுவதற்கோ, தொழிலாள வர்க்கம் இந்த அரசாங்கத்தை நம்ப முடியாது. இதன் ஒட்டுமொத்த முன்வரலாறும் மூடிமறைப்பு மற்றும் கோழைத்தனத்தில் உள்ளது.

முயற்சிக்கப்பட்ட அந்த சதிக்கு முன்னர் — மிச்சிகனின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மரையும் குறைந்தபட்ச கோவிட்-19 கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்த பிற ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்களையும் கடத்திக் கொல்வதற்கான அதிவலது திட்டங்களை ஆதரித்த ட்ரம்ப், அமைதியாக அதிகாரம் கைமாற்ற மறுத்ததுடன், அவர் தேர்தலில் தோல்வி அடைந்தால் Proud Boys அமைப்பு 'ஆதரவாக துணை நிற்க வேண்டும்' என்று கூறிய நிலையில் — பைடெனோ ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அபாயத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

ஜனவரி 6 சம்பவங்களின் போது, ஜனநாயகக் கட்சி சட்டமன்ற பிரதிநிதிகள் அவர்களின் மேசைக்குக் கீழே ஒளிந்து கொண்ட அதேவேளையில், ட்ரம்ப் தொலைக்காட்சியில் தோன்றி அவரின் சொந்த கிளர்ச்சியை கைவிட அழைப்பு கொடுக்குமாறு அவரிடம் கெஞ்சியதைத் தவிர பைடென் வேறொன்றும் கூறவில்லை.

விதிவிலக்காக ஒரு சிலர் (“விசித்திரமானவர்கள்') தவிர, குடியரசு கட்சி ட்ரம்பின் சதியை எதிர்த்தது என்று இந்தக் கட்டுக்கதையை ஊக்குவித்த ஜனநாயகக் கட்சியினர், அதேவேளையில் அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை ஆதரித்ததில் இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்தில் இருந்த சக்தி வாய்ந்த கூறுபாடுகள் வகித்த பாத்திரத்தை மூடிமறைக்க அவர்கள் பிரதிநிதி சபையின் ஜனவரி 6 கமிட்டியைப் பயன்படுத்தி உள்ளனர்.

குடியரசுக் கட்சியைப் போலவே ஜனநாயகக் கட்சியும் பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது இந்த பெருந்தொற்றின் போது பெடரல் ரிசர்வ் வழங்கிய இலவச பணம், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல், அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட விலை ஏற்றம் ஆகிய வழிவகைகள் மூலம் அதன் செல்வ வளங்களைப் பரந்தளவில் அதிகரித்துக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் இந்தப் பொறிவு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் நீடித்த ஒரு நிகழ்வுபோக்கின் விளைவாகும். அதன் இரண்டு அடிப்படைக் காரணங்கள் — முடிவில்லா ஏகாதிபத்தியப் போர் மற்றும் இன்னும் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை — அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியில் வேரூன்றி உள்ளன.

தொழிலாள வர்க்கம் இந்த இரண்டு பெருவணிக கட்சிகள் மற்றும் அவற்றின் முகவர்களான தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து சுயாதீனமாக அதன் அளப்பரிய சமூக சக்தியை அணித்திரட்டி, இந்த அரசியல் நெருக்கடியில் தலையீடு செய்ய வேண்டும்.

போர், வறுமை மற்றும் சர்வாதிகாரத்திற்கான முனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி, ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக போராடுவதன் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சக்தியைக் கட்டவிழ்த்து விடுவதாகும்.

Loading