பாலஸ்தீனிய ஜனாதிபதி அப்பாஸின் யூத இனப்படுகொலை தொடர்பான கருத்தும் ஜேர்மனியின் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பாசாங்குத்தனமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய படுகொலைகளை யூத இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு அதன் உச்சகட்டத்தை மீறுவது கடினமாக இருக்கும் என்ற பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அறிக்கைக்கு ஜேர்மன் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கோபத்தின் சீற்றத்துடன் பதிலளித்துள்ளனர்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் [AP Photo/Ludovic Marin] [AP Photo/Ludovic Marin]

செவ்வாயன்று கூட்டாட்சி சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸுடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், மூஆனிச்சில் இஸ்ரேலிய ஒலிம்பிக் அணி மீதான பயங்கரவாத தாக்குதலின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளில் இஸ்ரேலிடம் மன்னிப்பு கேட்பீர்களா என்று அப்பாஸிடம் கேட்கப்பட்டது. அப்பாஸ் ஒரு நேரடி பதிலைக் கொடுக்கவில்லை, ஆனால், 'இஸ்ரேல் 1947 முதல் இன்றுவரை 50 பாலஸ்தீனிய குடியிருப்புகளில் 50 படுகொலைகளைச் செய்துள்ளது' என்றார். அவர் மேலும், 'ஐம்பது படுகொலைகள், 50 யூத இனப்படுகொலைகள் போன்றதை” என்றார்.

ஷோல்ஸ் வெளிப்படையாக தெரியும் விதத்தில் கோபமடைந்தார், ஆனால் எதிர்வினையாற்றவில்லை. அப்பாஸின் அறிக்கையை அடுத்து செய்தியாளர் சந்திப்பு உடனடியாக முடிந்தது. பின்னர், ஜேர்மன் சான்சிலர் தனது விருந்தினரை ட்விட்டர் மூலம் கண்டித்தார். 'பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அர்த்தமற்ற அறிக்கைகளால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன்' என்று ஷோல்ஸ் எழுதினார். “குறிப்பாக ஜேர்மனியர்களான எங்களுக்கு, யூத இனப்படுகொலைகளை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவது சகிக்க முடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. யூத இனப்படுகொலை குற்றங்களை மறுக்கும் எந்த முயற்சியையும் நான் கண்டிக்கிறேன்.”

சான்சலரிக்கு விஜயம் செய்தபோது யூத இனப்படுகொலைகளின் தனித்துவமான தன்மையை கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வாஃபாவுக்கு அப்பாஸ் உறுதியளித்தார். இது நவீன மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமான குற்றம், என்றார். மாறாக, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் செய்த குற்றங்கள் குறித்து அவர் கவனத்தை ஈர்க்க விரும்பினார்.

ஆயினும்கூட, காதை செவிடாக்கும் அலறல் எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏராளமான உயர்மட்ட நாஜிக்களுக்கு புதிய வாழ்க்கையை தொடர்வதற்கு உதவிய கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU) இதில் முன்னிலை வகித்தனர்:

'சான்சலர் அலுவலகத்தில் ஒரு நம்பமுடியாத நிகழ்வு' (CDU தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்); 'இத்தகைய கேவலத்திற்குப் பின்னர் அமைதியாக இருப்பது மன்னிக்க முடியாதது' (CDU நாடாளுமன்ற அங்கத்தவர் மத்தியாஸ் ஹவுர்); 'சான்சலர் அலுவலகத்தில் இதுவரை கேள்விப்படாத மிக மோசமான பேச்சு' (முன்னாள் CDU தலைவர் ஆர்மின் லாஷெட்); 'அப்பாஸ் ஒரு மோசமான யூத இனப்படுகொலைகளை அற்பமானதாக்குபவர்). அவர் பாலஸ்தீனிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தி நிதியளிக்கிறார்' (வோல்கர் பெக், பசுமைவாதி); 'ஒரு தார்மீக அவமானம்' (இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாப்பிட்) போன்ற குரல்கள் எழுந்தன.

ஊடகங்களும் இதேபோல் பதிலளித்தன: 'அநேகமாக பேர்லின் சான்சலர் அலுவலகத்தில் ஒரு ஜனாதிபதி இதுவரை செய்த மிகப்பெரிய கணக்கிடப்பட்ட தடுக்கப்பட்ட விடயத்தை மீறியதில் ஒன்று' (பொது ஒளிபரப்பு நிறுவனம் ARD);' சான்சிலர் அவர் எங்கு நிற்கிறார் என்பதைக் காட்ட வேண்டும் '(Frankfurter Allgemeine Zeitung); 'அப்பாஸ் இறுதியாக தன்னை ஒரு யூத-விரோத கிளர்ச்சியாளர் என்று அம்பலப்படுத்தியுள்ளார்' (Augsburger Allgemeine); 'அப்பாஸ் யூத இனப்படுகொலைகளை அற்பமானதாக்குகின்றார் ... ஷோல்ஸ் அமைதியாக இருக்கிறார்' (Bild).

இதைவிட இழிவானதாக இருப்பது கடினம். ஜேர்மனியில் கருத்து தயாரிப்பாளர்கள் உண்மையில் யூத இனப்படுகொலை அவமதிப்பு மற்றும் யூத-விரோதத்திற்கு எதிராக போராட விரும்பினால், அவர்கள் தங்கள் சொந்த வீட்டு வாசலில் தொடங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவ வல்லரசாக வேண்டும் என்ற தனது இலக்கை ஜேர்மன் அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்ததிலிருந்து, ஜேர்மனியில் நாஜி ஆட்சியின் குற்றங்கள் திட்டமிட்டு சிறுமைப்படுத்திக் காட்டப்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தலைவரான கிறிஸ்தோப் வாண்ட்ரீயர் தனது 2018 நூலில் இந்த சிக்கலை விரிவாக ஆய்வு செய்தார், முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் பொருத்தமான அவர்கள் ஏன் திரும்பி வருகிறார்கள்? என்ற புத்தகத்தைப் படிக்க எமது வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.

பேர்லின் வரலாற்றாசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி பிப்ரவரி 2014 இல் Der Spiegel சஞ்சிகையில், ஹிட்லர் 'ஒரு மனநோயாளி அல்ல' என்றும் 'தீயவர் அல்ல' என்றும் ஏனெனில் அவர் 'யூதர்களை அழிப்பதைப் பற்றி தனது மேசையில் பேச விரும்பவில்லை' என்றும் அறிவித்தபோது ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை மற்றும் ஜேர்மனி முழுவதும் உள்ள ஏராளமான கல்விச் சகாக்கள் அவரை ஆதரித்து பாதுகாத்தனர். ஊடகங்கள் பாபெரோவ்ஸ்கியை தாக்கவில்லை, மாறாக சோசலிச சமத்துவக் கட்சியை (SGP) கண்டித்தன. அது அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது, ஏனெனில் ஹிட்லரின் குற்றங்களை பாபெரோவ்ஸ்கி சிறுமைப்படுத்தியதை கட்சி கண்டனம் செய்தது.

ஏர்ன்ஸ்ட் நோல்ட க்கு மறுவாழ்வு அளிக்கும் பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகளான 'நோல்டவிற்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அவர் சொல்வது சரிதான்' என்பவை ஊடகங்களிலும் அரசியல்வாதிகளிடையேயும் பரந்த ஆதரவை பெற்றது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டிலேயே, நோல்ட நாஜி ஆட்சியை நியாயப்படுத்த முயன்றார், இது வரலாற்றாசிரியர்களின் சர்ச்சையைத் தூண்டியது, இதில் ஜூர்கன் ஹேபர்மாஸ் உட்பட பல நன்கு அறியப்பட்ட கல்வியாளர்கள் அவரை எதிர்த்தனர். இப்போது, சோசலிச சமத்துவக் கட்சியையும் ஏராளமான மாணவர் பிரதிநிதிகளைத் தவிர, நோல்ட க்கு இனி எந்த எதிர்ப்பும் இல்லை.

பாபெரோவ்ஸ்கி யூத இனப்படுகொலையை ரஷ்ய உள்நாட்டுப் போரில் மரணதண்டனைக்கு இணையாக்கி 'அடிப்படையில் இது ஒரே விஷயமாகும்: தொழில்துறை கொலை' என்று கூறியபோதும், இது அப்பாஸின் கருத்தைப் போலல்லாமல், யூத இனப்படுகொலையை சிறுமைப்படுத்துவதாகக் கருதப்படவில்லை.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் பாபெரோவ்ஸ்கியின் சகாவான அரசியல் விஞ்ஞானி ஹெர்ஃப்ரிட் முங்க்லர், ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையைத் தொடர நாஜி குற்றங்களின் இத்தகைய சிறுமைப்படுத்துதல் அவசியம் என்று அந்த நேரத்தில் வெளிப்படையாக விளக்கினார். 'எல்லாவற்றிற்கும் நாங்கள் தான் காரணம் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் ஐரோப்பாவில் ஒரு பொறுப்பான கொள்கையைத் தொடர்வது கடினம்' என்று அவர் Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கூறினார்.

இந்த சூழ்நிலையில், ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சி செழித்து வளர்ந்தது. நாஜி ஆட்சியை AfD சிறுமைப்படுத்தியது இழிவானது. நாஜி ஆட்சியை 'பறவை எச்சம்' என்று ஒப்பிட்ட அலெக்சாண்டர் கவுலாண்டின் கருத்து மற்றும் யூத இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் மீதான பிஜோர்ன் ஹாக்கின் தாக்குதல்களை நினைத்துப் பாருங்கள். AfD நாஜிகளுக்கு வக்காலத்து வாங்கியபோதிலும், கட்சி அரசியல்ரீதியாக விரும்பப்பட்டதுடன், ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டது மற்றும் முக்கியமான பாராளுமன்ற குழுக்களின் தலைமை ஒப்படைக்கப்பட்டது.

உக்ரேனில் நடந்த போருடன், நாஜி குற்றங்களை சிறுமைப்படுத்தல் புதிய பரிமாணங்களை எடுத்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் இப்போது இந்த குற்றங்களை குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி அவற்றை மகிமைப்படுத்தும் அரசியல் சக்திகளுடன் வெளிப்படையாக ஒத்துழைக்கிறது.

எடுத்துக்காட்டாக, நாஜி ஒத்துழைப்பாளரும் வெகுஜன கொலைகாரருமான ஸ்டீபன் பண்டேராவை ஒரு 'மாவீரர்' என்று மதிக்கும் உக்ரேனிய தூதர் ஆண்ட்ரிஜ் மெல்னிக், ஜேர்மனியில் நீண்ட காலமாக ஊடகங்களால் ஒரு நட்சத்திரத்தைப் போல நடத்தப்பட்டார். பண்டேராவின் OUN ஆல் நூறாயிரக்கணக்கான யூதர்கள், போலந்துமக்கள் மற்றும் ரஷ்யர்கள் கொல்லப்பட்டதை பகிரங்கமாக மறுத்ததால், மெல்னிக் இந்த கோடையில் பேர்லினில் தனது பதவியை விட்டு வெளியேற நேரிட்டபோதும், முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள் அவர் வெளியேறியதற்கு இரங்கல் தெரிவித்தனர்.

பண்டேராவை வணங்குவது மெல்னிக்கின் தனிப்பட்ட பண்பு அல்ல, உக்ரேனிய அரசின் உத்தியோகபூர்வ சித்தாந்தம் என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் இப்போது நாஜி ஒத்துழைப்பாளர், முசோலினி அபிமானி மற்றும் கடுமையான யூத-எதிர்ப்பாளர்களுக்கு 40 நினைவுச் சின்னங்கள் உள்ளன. லிவிவ் (Lviv) நகரில் உள்ளது மிகப்பெரியது, ஏழு மீட்டர் (23 அடி) உயரம் மற்றும் 30-மீட்டர் (98-அடி) வளைவின் முன் நிற்கிறது. இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் (Ivano-Frankivsk) இல் உள்ள நினைவுச்சின்னம் ஆறு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பகுதியை உள்ளடக்கியது.

உக்ரேனிய இராணுவத்தின் உயரடுக்கு பிரிவுகள், உலகெங்கிலும் உள்ள வன்முறை பாசிஸ்டுகளுடன் இணைப்புகள் கொண்ட அசோவ் பட்டாலியன் போன்ற வெறித்தனமான நவ-நாஜிகளிடமிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றன.

ஆனால் இது அப்பாஸின் யூத-விரோதத்தைக் குறித்து சீற்றம் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் எழுத்தாளர்களை தொந்தரவு செய்யவில்லை. அவர்களின் தார்மீக தரநிலைகள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கை நலன்களை அடிப்படையாகக் கொண்டவையும் மற்றும் அது ஒரு கூட்டாளியா அல்லது எதிர்ப்பாளரா என்பதைப் பொறுத்து அதற்கேற்ப நெகிழ்வானவை.

நாஜிகளுடன் ஒரு கூட்டாளியை ஒப்பிடுவது யூத இனப்படுகொலையை சிறுமைப்படுத்துகிறது மற்றும் யூத-விரோதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கருதப்பட்டாலும், ஒருவரையும் பிரச்சனைக்குட்படுத்தாது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்ற எதிர்ப்பாளர்கள் ஹிட்லருடன் தொடர்ந்து ஒப்பிடப்படுகின்றனர். ஜேர்மன் ஊடகங்களில் இந்த வகையான அறிக்கைகள் கிட்டத்தட்ட தினசரி வெளிவருகின்றன. புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஹென்ரிச் ஆகுஸ்ட் விங்க்லர் கூட Die Zeit க்கு 'எது ஹிட்லருடன் புட்டினை தொடர்புபடுத்துகின்றது' என்ற தலைப்பில் ஒரு விருந்தினர் கட்டுரையை எழுதியுள்ளார்.

அப்பாஸுக்கு எதிரான கூச்சல், ஜேர்மன் இராணுவவாதத்திற்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் எதிராக வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு திசை திருப்பும் சூழ்ச்சி ஆகும். உக்ரேனிய மக்களின் முதுகின் பின்னே, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நேட்டோ உக்ரேனில் ஒரு பினாமிப் போரை நடத்துகின்றன என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது.

நேட்டோ, உக்ரேனிய துருப்புகளுக்கு பயிற்சி அளிக்கிறது, ஆயுதங்களை வழங்குகிறது, இலக்குகளைத் தேர்ந்தெடுக்கிறது மற்றும் நீண்ட காலமாக அதன் சொந்த நிபுணர்களுடன் தளத்தில் உள்ளது. அதன் குறிக்கோள் ஒரு ஜனநாயக உக்ரேன் அல்ல, ஆனால் ரஷ்யாவை அடிபணியச் செய்வது மற்றும் சிதைப்பது, இது உலகின் மிக மதிப்புமிக்க வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் சீனாவின் சாத்தியமான கூட்டாளியாக அகற்றப்பட வேண்டி உள்ளது.

அப்பாஸ் பாலஸ்தீன அரபு முதலாளித்துவத்தின் பிரதிநிதி. மேற்குக் கரையில், இஸ்ரேலுக்கும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளுக்கும் சிறைக் காவலர் என்ற பாத்திரத்தை வகிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தால் பெரும்பாலும் நிதியளிக்கப்படும் அவரது ஊழல் நிறைந்த பாலஸ்தீனிய அதிகாரம், கிளர்ச்சி செய்யும் இளைஞர்களுக்கு எதிராக அதன் காவல்துறையை அனுப்பி, மக்களால் மிகவும் வெறுக்கப்படுகிறது, அப்பாஸ் பாராளுமன்றத் தேர்தல்களை 16 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.

87 வயதானவர் எப்போதாவது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்றால், அவர் தனது சேவைகளுக்கு இஸ்ரேலிடமிருந்து எந்த நன்றியையும் பெறவில்லை என்பதால்தான். வாக்குறுதியளிக்கப்பட்ட இரு-அரசு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2014 முதல் முடங்கியுள்ளன. இஸ்ரேலிய அரசாங்கத்தின் முன் அப்பாஸ் தன்னை எந்தளவுக்கு சிரம் தாழ்த்துகிறாரோ, அந்தளவுக்கு மிருகத்தனமாக அது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக, ஐ.நா மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி செயல்படுகிறது.

இஸ்ரேலிய அரசாங்கமே உலகெங்கிலும் உள்ள தீவிர வலதுசாரிகள் மற்றும் யூத-விரோத சக்திகளுடன் எந்த மனக்கசப்புமின்றி செயல்படுகிறது. பிரதம மந்திரி பெஞ்சமின் நெதனியாகுவின் கீழ், பல வலதுசாரி மற்றும் தேசியவாத அரசியல்வாதிகள் யாட் வாஷெம் (Yad Vashem) யூத இனப்படுகொலை நினைவகத்திற்குச் சென்று, 'சலவை இயந்திரம்' (washing machine) என்ற செல்லப்பெயர் பெற்றனர்.

இப்படிக் கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரசியல்வாதிகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனும் ஒருவர்; தீவிர வலதுசாரி இத்தாலிய லெகாவின் தலைவர் மத்தேயோ சால்வீனி; அத்தோடு தன்னை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கொண்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரெற்ற மற்றும் பலர் உள்ளனர்.

ஜேர்மனியுடன் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் நெருங்கிய நட்புறவு கொண்ட இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மிருகத்தனமான மற்றும் சட்டவிரோதமான கொள்கையை விமர்சிக்கும் அனைவருக்கும் எதிராக நீண்டகாலமாக யூத-விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. ஜேர்மன் இராணுவவாதத்தின் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

Loading