ஜப்பானும் கோவிட் தொற்றுநோய் நிலையும்: BA.5 எழுச்சியிலிருந்து கிடைத்த படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகின் அனைத்து முக்கிய தொழில்துறை நாடுகளாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட் கொள்கையின் பார்வையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கடந்த வார சுருக்க செய்திக் கூட்டத்தில் அவர் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, “நாம் அனைவரும் இந்த வைரஸால் சோர்வடைந்து இருக்கிறோம், மற்றும் தொற்றுநோயால் சோர்வடைந்து இருக்கிறோம், ஆனால் வைரஸ் நம்மால் சோர்வடையவில்லை” என்று கூறினார்.

நிதிய தன்னலக்குழுக்களும் அவர்களின் அரசியல் அடியாட்களும் கோவிட் தொற்றுநோய் தொடர்ந்து பரவுவதற்கு எதிரான அனைத்துத் தணிப்பு நடவடிக்கைகளையும் அடிப்படையில் இரத்து செய்துள்ளனர். SARS-CoV-2 வைரஸை அன்றாட வாழ்வின் நிரந்தர அங்கமாக ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் தங்கள் மக்களை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

கோவிட் தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டு முடிவுக்கு வருகையில், கிட்டத்தட்ட 6.5 மில்லியன் இறப்புக்கள் உட்பட, இதுவரை 600 மில்லியனுக்கு நெருக்கமாக நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், உலகளாவிய அதிகப்படியான இறப்புக்கள் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட 3.6 மடங்கு அதிகமாக 23 மில்லியனை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உலகளாவிய நோய்தொற்று விகிதங்கள் ஒரு நாளைக்கு சுமார் 650,000 என உத்தியோகபூர்வமாக கணிக்கப்பட்டுள்ளது என்றாலும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) தற்போதைய மதிப்பீடுகளின்படி, அது 13.3 மில்லியனுக்கு நெருக்கமாக உள்ளது, இது 20 மடங்குகள் அதிகமாகும், இது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கிடைக்கும் அனைத்து தொடர்புடைய அளவீடுகளை –மற்றும் ஆபத்துகளையும்– மறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மாறியுள்ள பரிசோதனை மற்றும் அறிக்கையிடல் பற்றாக்குறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

படம் 1: ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 22, 2022 வரையிலான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகள் வாரியான ஏழு நாள் சராசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகள். (Source Our World in Data)

கடந்த மாதத்தில் வாராந்திர கோவிட் இறப்புக்கள் 15,000 ஐ எட்டிவிட்டன, இந்த எண்ணிக்கை 'தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் எங்களிடம் அனைத்து கருவிகளும் இருக்கும்போது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் மேலும் கூறினார். அறிக்கையிடல் அளவுகோல்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மற்றும் தரவுத்தளத்தை அகற்றுவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், எக்னாமிஸ்ட் பத்திரிகை மாதிரியின்படி, அதிகப்படியான இறப்புக்கள் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

ஆயினும்கூட, இந்த பழமைவாத உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், ஆண்டுக்கு முக்கால் மில்லியன் மக்கள் இந்த கோவிட் நோய்க்கு பலியாக நேரிடும். இந்த எண்ணிக்கையை HIV நோயின் சூழலுடன் ஒப்பிடுகையில், HIV நோய் காரணமான உலகளவிலான வருடாந்திர இறப்புக்கள் தற்போது சுமார் 680,000 ஆக உள்ளது, மேலும் கடந்த நான்கு தசாப்தங்களில் இது 40.1 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது. மற்றொரு கொடிய சமகால நோய்க்கிருமிக்கு எதிராக ஒப்பிடும்போது, கோவிட் எந்த அளவுகோலின் அடிப்படையிலும் குறைந்த தாக்கம் உள்ளதாக இருக்காது.

ஜப்பானின் நோய்தொற்று புள்ளிவிபரங்கள், எந்தவொரு பொது சுகாதார கவலைகளை முன்னிட்டும் தேசிய பொருளாதாரங்கள் தடையின்றி முன்னேறுவதை உறுதிசெய்ய ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கொடிய கொள்கைகளால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்க எடுத்துக்காட்டாக உள்ளன.

கிட்டத்தட்ட 125 மில்லியன் மக்களைக் கொண்ட ஜப்பான் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து பிரதான பத்திரிகைகளால் பாராட்டப்பட்டது. இருப்பினும், ஜப்பானில் 80 சதவிகித மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தும், மேலும் அதன் மூன்றில் இரண்டு பங்கு குடிமக்களுக்கு (கிட்டத்தட்ட 90 சதவிகித முதியவர்களுக்கு) பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தும், மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட ஓமிக்ரோனின் BA.5 துணைமாறுபாட்டின் கடுமையான நோய்தொற்றுக்களின் மற்றும் இறப்புக்களின் அலைகளை ஜப்பான் எதிர்கொள்கிறது. இந்நிலையில், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தற்போது கோவிட் தொற்றுநோயின் மையமாக சந்தேகத்திற்குரிய வேறுபாட்டை இது கொண்டுள்ளது.

டோக்கியோவில், மே 25, 2021, செவ்வாய்க்கிழமை அன்று, ஜப்பானுக்கு மக்கள் செல்வதற்கு எதிரான அமெரிக்க எச்சரிக்கை பற்றிய செய்தியைக் காட்டும் திரையின் முன் கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்க உதவும் முகக்கவசங்களை அணிந்தவர்கள் நடந்து செல்கிறார்கள். (AP Photo/Eugene Hoshiko)

ஜப்பானில் 17 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, ஜனவரி 1, 2022 நிலவரப்படி வெறும் 1.7 மில்லியனாக இருந்தது. இன்றுவரை 37,000 க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புகளுடன், அந்த இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தொற்றுநோயின் ஓமிக்ரோன் காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன. இந்நாட்டில், இறப்புக்களின் ஏழு நாள் சராசரி தொற்றுநோய் காலத்தில் உச்சமாக தற்போது நாளொன்றுக்கு 266 ஆக உள்ளது, கோவிட் இறப்பு விகிதம் தற்போது ஒரு நாளைக்கு 500 ஆக இருக்கும் அமெரிக்காவின் அளவுடன் ஒப்பிடும்போது இது ஒரு நாளைக்கு 700 க்கும் அதிகமாகும். எவ்வாறாயினும், 2020-21 ஆம் ஆண்டிற்கான அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகள், பதிவான கோவிட் இறப்புக்களை விட இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் என கணக்கிடுவதானது, தற்போதைய புள்ளிவிபரங்கள் மொத்தமாகக் குறைத்து மதிப்பிடப்பட்டவை என்பதைக் குறிக்கிறது.

ஆகஸ்ட் 19, 2022 அன்று, இந்நாடு அதன் உச்சபட்ச ஒருநாள் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 261,000 ஐ பதிவு செய்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து, ஏழு நாள் சராசரி நோய்தொற்றுக்கள் ஒரு நாளைக்கு 200,000 க்கும் அதிகமாக தொடர்ந்து நீடித்தது, அதாவது, பெப்ரவரி தொடக்கத்தில் ஓமிக்ரோனின் அசல் துணைமாறுபாடான BA.1 இன் அலை நாட்டை கடுமையாக பாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாளைக்கு அண்ணளவாக 100,000 ஆக இருந்த முந்தைய உச்சத்தை இது தாண்டிச் செல்கிறது.

மற்ற நாடுகளைப் போலவே, தொற்றுநோய்களின் வெள்ளத்தை எதிர்கொள்கையில், நோயாளிகளை சுகாதார வசதிகளுக்கு கொண்டு செல்லும் அவசர மருத்துவ வண்டிகள் அவர்களை அனுமதிக்கக்கூடிய மருத்துவமனைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகின்றன என்று ஜப்பானிய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இதையொட்டி, மருத்துவ உதவிக்கான அவசர அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதற்கிடையில், சமூகத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒட்டுமொத்த சுகாதார விநியோகத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், பணியாளர்கள் மற்றும் சுகாதார விநியோக பற்றாக்குறையை அவர்கள் கையாள்வதால், சுகாதார அமைப்புகள் அழுத்தத்திற்குள்ளாகி இந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் திண்டாடுகின்றன. ஜப்பான் டைம்ஸின் கூற்றுப்படி, 47 மாகாணங்களில் 15 இன் கோவிட் நோயாளிகளின் ஆக்கிரமிப்பு விகிதங்கள் 50 சதவிகிதத்தை எட்டியுள்ளது. டோக்கியோவிற்கு தெற்கே அதிக நகரமயமாக்கப்பட்ட மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கனகாவா மாகாணம் உச்சபட்சமாக 71 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

ஜப்பான் டைம்ஸ் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறது, “கோவிட்-19 நோயாளிகளுக்காக படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டிருந்தாலும் கூட, ஏழாவது அலை பொதுவாக சுகாதார அமைப்பை கடுமையாக பாதிக்கிறது, காரணம் ஊழியர்கள் நோயிலிருந்து தற்போது மீண்டு வரும் அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழலால் உருவான பணியாளர்கள் பற்றாக்குறையால் இது நிகழ்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திங்கட்கிழமை நிலவரப்படி, ஃபுகுவோகா பல்கலைக்கழக மருத்துவமனை அதன் இரண்டு வார்டுகளை மூடியுள்ளது, ஏனெனில் அங்கு 1,900 மருத்துவ ஊழியர்களில் 120 பேர் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் அல்லது அவர்கள் கோவிட் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக கருதப்படுகின்றனர்.

ஜப்பான் சமூக சுகாதார அமைப்பின் தலைவரும், அரசாங்கத்தின் கோவிட்-19 நிபுணர் குழுவின் தலைவருமான ஷிகெரு ஓமி, டோக்கியோவில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார், “மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தங்குவதற்கு இடமளிக்க முடியாததால், காய்ச்சல் மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கக்கூடிய மக்கள் கூட இப்போது அவசர மருத்துவ வண்டிகளை அழைக்கிறார்கள்.” மேலும், ஜப்பான் முதன்மை பராமரிப்பு அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹிரோகி ஓஹாஷி, “காய்ச்சல் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில், ஓமிக்ரோன் மாறுபாட்டின் பெரும்பாலான நோய்தொற்றுக்கள் காய்ச்சல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு குடிமகனும், ஆரம்பத்திலேயே வீட்டில் இருந்தவாறு உடல்நலத்தை தேற்றி, மருத்துவ அமைப்பின் இந்த நெருக்கடியைச் சமாளிக்க உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

இதற்கிடையில், வயோதிபர் இல்லங்களிலோ அல்லது விஸ்தரிக்கப்பட்ட பராமரிப்பு வசதிகளிலோ பாதிக்கப்பட்ட வயதான நோயாளிகளை நெரிசல் மிகுந்த மருத்துவமனைகளுக்கு மாற்ற முடியாது. டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களை பராமரிக்கும் டஜன் கணக்கான மருத்துவமனைகளையும் நிலையங்களையும் நடத்தும் Seizankai நிறுவனத்தின் மனநல மருத்துவரும் இயக்குநருமான டாக்டர். ஹைடெகி யாமாஷாகி, நோயாளிகள் ‘சிக்கி’யுள்ளார்கள் என்று டைம்ஸிடம் கூறினார். மேலும் அவர், “ஒவ்வொரு மருத்துவ பராமரிப்பு இல்லமும் தொற்றுநோயை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் கடுமையாக உழைக்கிறது, ஆனால் அனைத்து நோயாளிகளையும் மருத்துவ வசதிக்குள் நுழைய விடாமல் தடுப்பது சாத்தியமில்லை. தொற்றுநோய்க்கு ஆளான வயோதிபர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியாக வேண்டும்... ஆனால் தற்போது இதுபோன்ற மருத்துவ வசதிகள் பாதிக்கப்பட்ட வயோதிபர்களை தங்கவைக்க முடியாத அளவிற்கு நெரிசல் மிக்கதாக உள்ளன. எனவே, இப்போது அவர்களை நாம் தொடர்ந்து கவனித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்.

ஆயினும்கூட, வணிகம் அல்லது மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. உண்மையில், தற்போதைய தொற்று அலையின் உச்சத்தில், பயணிகளுக்கான அதன் பதிவுத் தேவைகளை இரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தபோது அது காயத்தை மேலும் ஆழப்படுத்துவதாக இருந்தது. இதற்கிடையில், பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, அவரது சமதரப்பாளர் ஜனாதிபதி ஜோ பைடெனைப் போல, ஒரு வார கால விடுமுறையின்போது கோவிட் நோயால் பாதிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்கிறார்.

டாரோ கோனோவுக்கு எதிராக இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, கடந்த செப்டம்பரில் யோஷிஹிட் சுகா பிரதம மந்திரியாக பதவியேற்றதன் பின்னர், கோவிட் நோயை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று கிஷிடா சபதம் செய்தார். அதற்கு பதிலாக, அவரது அரசாங்கம் மார்ச் மாதத்தில் தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத்தான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. புளூம்பேர்க் சமீபத்தில் கூறியபடி, “உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் அதன் தொற்றுநோய்க்கு முந்தைய அளவை மீட்டுள்ளது, காரணம் வணிகங்கள் மீதான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நுகர்வோர் செலவுகள் அதிகரித்தன.” ஆயினும்கூட, பணவீக்க அழுத்தங்கள் கிஷிடாவின் தலைமையைத் தொடர்ந்து வேட்டையாடுகின்றன, இதனால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவரது அங்கீகார மதிப்பீடு சரிவைக் கண்டது.

படம் 2: ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 22, 2022 வரையிலான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகள் வாரியான ஏழு நாள் சராசரி கோவிட் இறப்புக்கள். (Source Our World in Data)

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, ஜப்பானும் சமீபத்திய ஈரிணைத் திறம் உடைய கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை ஊக்குவிப்பதன் மூலம் தடுப்பூசி மட்டும் மூலோபாயத்திற்கு மாறுகிறது. கடந்த வாரம் இங்கிலாந்து மொடேர்னாவின் ஈரிணைத் திறம் உடைய கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்தது, இருப்பினும் இது அசல் மற்றும் BA.1 மாறுபாடுகளின் கூட்டுக்கு சமமாக ஸ்பைக் புரதத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவைத் தெரிவிக்க மருத்துவத் தரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், BA.5 துணைமாறுபாட்டிற்கு ஏற்றவாறு ஈரிணைத் திறம் உடைய கோவிட் தடுப்பூசிகளை உருவாக்குமாறு ஃபைசர் மற்றும் மொடேர்னா போன்ற மிகப்பெரிய mRNA கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை அமெரிக்கா கேட்டுள்ளது.

ஜூன் 28, 2022 அன்று நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசிகளைப் புதுப்பித்தல் பற்றிய FDA ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பின்னர், குழந்தை தொற்றுநோய் நிபுணரும் பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையின் தடுப்பூசி கல்வி மையத்தின் இயக்குநருமான டாக்டர். போல் ஆஃபிட் இவ்வாறு அவதானித்தார், “ஓமிக்ரோனின் BA.1 தடுப்பூசிக்காக உருவாக்கப்பட்ட தரவுகளை BA.4, BA.5 மாறுபாடுகளுக்கு எளிதாகப் பிரித்தெடுக்க முடியும் என்று கருதுவது நியாயமானதல்ல. ஓமிக்ரோனின் இந்த புதிய வகை துணைமாறுபாடுகள் மிகுந்த பரவும் தன்மை கொண்டவை. எனவே, அறிகுறியுள்ள நோய்தொற்றைத் தடுக்க நோய்க்கு ஆளாகும் நேரத்தில் மிக உயர்ந்த மட்டத்திலான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் நோயாளிகளுக்குத் தேவைப்படும்.” மேலும், தடுப்பூசியின் BA.1 கூறு, ஆன்டிபாடிகளை நடுநிலைப்படுத்துவதில் ஒரு மிதமான உயர்வை மட்டுமே வழங்கும் என்பதால், “BA.4, BA.5 மாறுபாடுகளுக்குப் பயன்படுத்துவது வித்தியாசமாக இருக்கும் என்று நாம் ஏன் நினைக்கிறோம்?” என்றும் கேட்டார்.

தடுப்பூசிக்காக பலரும் பரபரப்புடன் காத்திருக்கையில், BA.4, BA.5 என்பவை கடைசி துணைமாறுபாடுகள் அல்ல. எவ்வாறாயினும், இந்த புதிய வகை மாறுபாடுகளின் வரிசைமுறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் தொற்றுநோயின் நான்காவது ஆண்டில் நுழைகிறார்கள், கொரோனா வைரஸ் உடனான முன்னேற்றங்களில் கண்மூடித்தனமாக உள்ளனர்.

ஜப்பானில் எதிர்கொள்ளப்பட்ட அனுபவம், முந்தைய நோய் எதிர்ப்பு சக்தி, அதிக அளவிலான தடுப்பூசிகள், மற்றும் ஈரிணைத் திறம் உடைய தடுப்பூசிகளை நம்பியிருப்பது ஆகியவை உலகம் எதிர்கொள்ளும் நோய்தொற்றுக்களையும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்களையும் குறைப்பதற்கு சிறிதளவே வேலை செய்கின்றன என்பதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் எச்சரிக்கை விடுக்கையில் பொது இயக்குநர் குறிப்பிட்டது போல், “வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் நெருங்கி வருவதாலும், மற்றும் மக்கள் அதிக நேரத்தை வீட்டிற்குள்ளேயே செலவிடுவதாலும், கோவிட்-19 நோய் மட்டுமல்ல, சளிக்காச்சல் உள்ளிட்ட பிற நோய்களும், இன்னும் தீவிரமாக பரவக்கூடிய மற்றும் மருத்துவமனை அனுமதிப்புக்களை அதிகரிக்கக்கூடிய அபாயங்கள் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும்.” அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அத்துடன் வடகிழக்கு ஆசியப் பகுதியும் இலையுதிர் மற்றும் குளிர் கால மாதங்களில் நுழைவதாலும், மற்றும் பள்ளிகள் மீண்டும் நேரடி கற்பித்தலுக்கு திரும்புவதாலும், இது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.

Loading