முன்னோக்கு

அமெரிக்காவில் ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டின் எழுச்சி தீவிரமடைந்து வருகையில், பைடென் நிர்வாகம் கோவிட்-19 பற்றிய நிலைமைகளை பெரிதும் மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில், அதிக தொற்றும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு-எதிர்ப்புத் திறனுள்ள ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டினால் தூண்டப்பட்ட சமீபத்திய கோவிட்-19 நோய்தொற்று எழுச்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. ஈஸ்டர் விடுமுறைக்கான பெரும் பயணங்களும் மற்றும் பெரியளவிலான உள்ளரங்க ஒன்றுகூடுதல்களும் நாட்டின் பெரும்பகுதிகளில் ஏற்கனவே பொங்கி எழும் நோய்தொற்று எழுச்சிக்கு எரியூட்டுகின்றன.

நியூ யோர்க் டைம்ஸின் கொரோனா வைரஸ் கண்காணிப்புப் பிரிவின் கூற்றுப்படி, சனிக்கிழமை அன்று, நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ ஏழு நாள் சராசரி 37,810 ஆக இருந்தது, இது கடந்த இரண்டு வாரங்களில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் கூற்றுப்படி, போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததால், அமெரிக்காவில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கை நாளொன்றுக்கு உச்சபட்சமாக சுமார் 270,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

கடற்படை மருத்துவ மையமான சான் டியாகோவின் (NMCSD) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) நியமிக்கப்பட்ட ஒரு உள் மருத்துவக் குடியிருப்பாளரான லெப்டினன்ட் யோங்மி கிம், நவம்பர் 2 அன்று, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு செயல்முறைக்கு முன்னதாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறார். (U.S. Navy/Luke Cunningham)

முப்பத்திரண்டு மாநிலங்கள், புவெர்ட்டோ ரிக்கோ (Puerto Rico), வாஷிங்டன் டி.சி. மற்றும் விர்ஜின் தீவுகள் என அனைத்துப் பகுதிகளும் கடந்த இரண்டு வாரங்களில் உத்தியோகபூர்வ நாளாந்த புதிய நோய்தொற்றுக்களில் கடும் அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளன. BA.2 துணை மாறுபாடு முதன்முதலில் ஆதிக்கம் செலுத்தியதால் வடகிழக்குப் பகுதி இதுவரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் நியூயோர்க் மற்றும் பிற மாநிலங்கள் இப்போது மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண்கின்றன.

அமெரிக்காவில் BA.2 துணை மாறுபாட்டின் எழுச்சியானது, வோல்டோமீட்டர் தரவின்படி, 185,000 அமெரிக்கர்களை கொன்றதும், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை 1 மில்லியனுக்கும் அதிகமாக்கியதுமான நாடு முழுவதும் வெடித்துப் பரவிய BA.1 துணை மாறுபாட்டின் எழுச்சிக்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர் உருவெடுத்தது. ஜனவரி மாதத்தில், அமெரிக்காவில் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றிற்கு மாற்றாக மரணத்திற்கான முன்னணி காரணமாக கோவிட்-19 நோய் மாறியிருந்தது. டைம்ஸின் கூற்றுப்படி, தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 512 அமெரிக்கர்களைக் கொன்று, இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணியாக இது உள்ளது.

BA.1 துணை மாறுபாட்டின் எழுச்சியின்போது, பைடென் நிர்வாகம் ட்ரம்ப் நிர்வாகத்தின் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ மூலோபாயத்தை திறம்பட ஏற்றுக்கொண்டது, இது, மாநிலங்கள் கோவிட்-19 தரவுகளை அறிக்கை செய்யும் முறைகளை அகற்றுவதற்கு ஊக்குவித்தது, மேலும் வைரஸ் பரவலை மெதுவாக்குவதற்கான அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கியது.

பெப்ரவரி ஆரம்பத்தில் தொடங்கி, ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலமும் தற்போது வரை நடைமுறையில் இருந்த முகக்கவச கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தக் கொள்கையை நியாயப்படுத்த, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) புதிய முகக்கவச வழிகாட்டுதல்களை வெளியிட்டன, இது பொது சுகாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளின்படி, “தனிநபர் மற்றும் வீட்டு-அளவிலான தடுப்பு நடத்தைகளை” வலியுறுத்தும் தொற்றுநோய் புள்ளிவிபரங்களை விட மருத்துவமனையின் திறனை எடைபோட்டது.

பல மாநிலங்கள் கோவிட்-19 பரிசோதனை தளங்களை கடுமையாகக் குறைத்துள்ளதால், 2021 கோடையில் இருந்து பரிசோதனை மட்டங்கள் தற்போது மிகக் குறைந்த அளவில் உள்ளது. தொற்றுநோய்க்கான கூட்டாட்சி நிதி மார்ச் மாதத்தில் கரையத் தொடங்கியது, அதாவது காப்பீடு செய்யப்படாதவர்கள் இன்னும் துல்லியமான PCR பரிசோதனைகளுக்கு தற்போது 100 டாலர் செலுத்த வேண்டும் என்பதாகும்.

பெப்ரவரியில், பைடென் நிர்வாகம், ‘கோவிட்-19 உடன்’ மற்றும் ‘கோவிட்-19 ஆல்’ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான செயற்கை வேறுபாட்டைப் பயன்படுத்தி, கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் என தகுதியானவற்றை மறுவகைப்படுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்தியது, இது தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து தீவிர வலதுசாரிகள் குறிப்பிடும் கருத்தாகும்.

ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்புக்களில் குறைந்தது கால் பகுதி நோய்தொற்றுக்குப் பின்னர் 30 நாட்களுக்குள் நிகழ்கின்ற உண்மை ஒருபுறமிருக்க, மார்ச் மாதத்தில் மாசசூசெட்ஸ் அத்தகைய மரணங்களைக் குறைத்துக் காட்டும் கொள்கையை ஏற்றுக்கொண்டது, அதன்படி கிட்டத்தட்ட 4,000 கோவிட்-19 இறப்புக்களை அவர்களின் பதிவுகளிலிருந்து முன்கூட்டியே அது நீக்கியது. ஓமிக்ரோன் எழுச்சியின் காரணமாக குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் மற்றும் இறந்துபோவதும் கடுமையாக அதிகரித்ததற்கு மத்தியில், இதுவரை விவரிக்கப்படாத ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டது, அதாவது மார்ச் 16 அன்று CDC அதன் தரவு கண்காணிப்பு இணையதளத்தில் இருந்து 72,277 இறப்புக்களை நீக்கியது, இதில் கால் பகுதி குழந்தை இறப்புக்களும் அடங்கும். இவ்வாறு தரவுகள் காணாமலாக்கப்படுவது ஒருபுறமிருக்க, கோவிட்-19 ஆல் மரித்துப்போன குழந்தைகளும் பெரியவர்களும் மீண்டும் உயிர்த்தெழப் போவதில்லை.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு வெளியே, இந்தக் கொள்கை மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் சில ஆதாரங்களில் ஒன்றாக சுகாதார நிபுணத்துவம் வாய்ந்த Gregory Travis இணைய தளம் இருந்து வருகிறது, இது அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அறிக்கை செய்யும் கோவிட்-19 தரவுகளை கண்காணிக்கிறது.

கடந்த டிசம்பரில் ஓமிக்ரோன் எழுச்சி தொடங்கியதிலிருந்து, குறைந்தது ஒரு டஜன் மாநிலங்களாவது கோவிட்-19 தரவுகளை தினசரி அடிப்படையில் அறிக்கை செய்வதை நிறுத்திவிட்டதாக Travis ஆவணப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியானா, கான்சாஸ், வாஷிங்டன், வடக்கு கரோலினா ஆகிய அனைத்தும் ‘இருண்டுவிட்டன,’ அதாவது பொது சுகாதார நடவடிக்கைகளை திறம்பட பயனற்றதாக்கும் வகையில், அவர்கள் இப்போது வாரத்திற்கு இரண்டு முறை அல்லது அவ்வப்போது தரவுகளை அறிக்கை செய்கின்றனர். மொத்தத்தில், அண்ணளவாக 100 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மொத்த அமெரிக்க மாநிலங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் இப்போது ‘இருண்டுவிட்டது’.

இந்த பாரிய தரவு மூடிமறைப்பின் ஒட்டுமொத்த தாக்கம், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் முந்தைய நோய்தொற்று எழுச்சியைக் காட்டிலும் BA.2 எழுச்சியின் தீவிரத்தை தீர்மானிப்பது மிகவும் கடினம் என்பதைக் காட்டுகிறது.

எல்லா சாத்தியகூறுகளின்படி பார்த்தால், BA.2 நோயால் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறக்கக்கூடும். ஐரோப்பாவில் BA.2 உடனான அனுபவத்தின் அடிப்படையில், இரண்டு புள்ளிவிபரங்களும் உச்சபட்ச உயர்வை எட்டலாம். இரண்டு மற்றும் மூன்று தடுப்பூசி அளவுகளை மக்களுக்கு வழங்கி அமெரிக்காவை விட மிக அதிக தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் கூட, BA.1 எழுச்சியின் போது இருந்ததை விட படுமோசமான மட்டங்களுக்கு நோய்தொற்றுக்களையும் மருத்துவமனை அனுமதிப்புக்களையும் அதிகரித்து BA.2 அங்கு சமூகத்தை சீரழித்துள்ளது. இங்கிலாந்தில், கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளனர்.

இந்த ஆபத்துக்கள் மற்றும் அமெரிக்காவில் கோவிட்-19 கண்காணிப்பின் பேரழிவுகர நிலை ஆகியவை குறித்து சமூகத்தை எச்சரிப்பதற்கு பதிலாக, இந்த யதார்த்தத்தை அமெரிக்க மக்களிடம் இருந்து மூடிமறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று உரையாடல் நிகழ்ச்சிகளில் தோன்றிய வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆஷிஷ் ஜா, பொதுமக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய ஆபத்துக்களை குறைத்து மதிப்பிட்டார். Meet the Press நிகழ்ச்சியில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் இருந்ததை விடவும், நிச்சயமாக ஜனவரியில் நாம் இருந்ததை விடவும் தற்போது நாம் சிறப்பான இடத்தில் இருக்கிறோம்” என்று ஜா வாதிட்டார். அதேவேளை, “நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன, நாங்கள் அதை கவனமாக கண்காணிக்க விரும்புகிறோம்” என்று மட்டும் அவர் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பொது சுகாதாரத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்துவரும் அதேவேளை, பெருநிறுவன ஊடகங்கள் கடந்த வாரத்தில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஷாங்காய் நகரிலும் மற்றும் சீனா முழுவதும் கோவிட்-19 இன் கொடூரமான வெடிப்பைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பொது சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பதற்கு போதுமான இடத்தையும் ஒளிபரப்பு நேரத்தையும் ஒதுக்கின.

நியூ யோர்க் டைம்ஸூக்காக லி யுவான் எழுதியது பெரும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது, அதாவது சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை பெரும் சீனப் பஞ்சத்திற்கு பங்களித்ததான 1958 ஆம் ஆண்டு மாவோ சேதுங்கின் கீழ் செயல்படுத்தப்பட்ட ‘பூஜ்ஜிய குருவி’ கொள்கையுடன் அபத்தமாக அவர் ஒப்பீடு செய்துள்ளார். உண்மையில், சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது கோவிட்-19 ஐ மீண்டும் மீண்டும் ஒழித்து, நாட்டில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

ஃபாக்ஸ் நியூஸூக்கு பேட்டியளிக்கையில், டாக்டர். ஜா, கோவிட்-19 இன் பரவலை மெதுவாக்க சீனா பூட்டுதல்களைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக எதிர்த்து இவ்வாறு கூறினார்: “மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மாறுபாடு பரவி வரும் இந்த காலகட்டத்தில் வெறும் பூட்டுதல்களின் மூலம் மட்டும் அதைத் தடுப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், நாம் மக்களுக்கு தடுப்பூசியும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கக்கூடிய மற்றும் மக்களுக்கு சிகிச்சைகள் கிடைப்பதை நாம் உறுதி செய்யக்கூடிய ஒரு மூலோபாயத்தை நாம் பரிந்துரைத்துள்ளோம். அது வைரஸூடன் வாழ்வதற்கு ஏற்ற மிகவும் பயனுள்ள, நீண்ட கால, நிலைத்து நிற்கக்கூடிய ஒரு உத்தியாகும்.”

“இந்த வைரஸூடன் வாழ்வதற்கான உத்தியில்” குறிப்பிடப்படவில்லை, ஆனால் அரசாங்க அறிக்கைகளும் மாதிரிகளும் ஒப்புக்கொண்டுள்ளது என்னவென்றால், இன்னும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறப்பார்கள் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதாகும்.

அரசியல் ஆட்சிகள் சிதைவடையும் செயல்பாட்டின் அறிகுறிகளில் ஒன்று, அவை நெருக்கடிகளை புறக்கணிப்பதும், அவற்றை மறைப்பதும், மேலும் அவற்றைப் பற்றி பொய் கூறுவதும் ஆகும். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு காரணமான ஒரு முக்கிய நிகழ்வாக 1986 ஆம் ஆண்டு செர்னோபில் பேரழிவு இருந்தது, இது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தவறான நிர்வாகம், மூடிமறைப்பு மற்றும் சோவியத் மக்களின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் ஆகியவற்றால் நேரடியாக உருவாக்கப்பட்டது.

இதே பாணியில், அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் தொற்றுநோயை பெருமளவில் தவறாகக் கையாண்டுள்ளனர், அது தேவையில்லாமல் 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை கொன்று குவித்துள்ளது, மேலும் பல மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் பலவீனப்படும் வாய்ப்பை உருவாக்கியது. ஒரு சமூக செர்னோபில் அழிவு அவர்கள் கைகளில் இருப்பதால், அவர்களால் பொதுமக்களிடம் அவ்வளவு நேர்மையுடன் பேச இயலாது.

தொற்றுநோயைப் போலவே, உக்ரேன் போர் விரைவில் கட்டுப்பாட்டை மீறக்கூடிய பெரும் ஆபத்து இருப்பதையும் பொதுமக்களிடமிருந்து ஆளும் வர்க்கம் மூடிமறைக்கிறது. ‘தந்திரோபாய’ அணு ஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு பற்றிய மிகுந்த வெளிப்படையான விவாதங்களுக்கு மத்தியில், அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவதானது தவிர்க்க முடியாமல் உலகின் பெரும் அணுசக்தி வல்லரசுகளுக்கு இடையேயான மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் என்ற உண்மையை அதிகாரிகளோ அல்லது ஊடகங்களில் பேசும் தலைவர்களோ வெளிப்படையாகக் கூறவில்லை.

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் மையத்தில் உள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போர் மற்றும் தொற்றுநோய் ஆகிய இரண்டாலும் முன்வைக்கப்படும் பெரும் ஆபத்துக்கள் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசரம். தொற்றுநோய் மற்றும் போர் இரண்டும், ஒவ்வொரு கண்டத்திலும் தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தூண்டியதான பணவீக்கம் மற்றும் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையின் பாரிய அதிகரிப்புக்கு எரியூட்டின.

மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையை எடுத்துச் சொல்லவும், தொற்றுநோய் மற்றும் உலகப் போருக்கான உந்துதலைத் தடுக்கும் ஒரு போராட்டத்திற்கான மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டவும் ஒரு சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை (International Online May Day Rally) நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களும், இளைஞர்களும், மற்றும் தொழில் வல்லுநர்களும் தங்கள் பணியிடங்களிலும், ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் முடிந்தவரை பரவலாக நிகழ்வில் கலந்து கொள்ளவும், அதனைக் கட்டமைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading