கொடூரமான பிரித்தானிய எரிசக்தி கட்டணங்கள் மில்லியன் கணக்கானவர்களை ஏழைகளாக்கி, பலரின் மரணங்களுக்கு அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு சில மணிநேரங்களுக்குள் இங்கிலாந்தின் சராசரி குடும்ப வருடாந்திர எரிசக்தி கட்டணங்கள் வெள்ளிக்கிழமை 80 சதவீதம் அதிகரித்து ஒரு வருடத்திற்கு 3,549 பவுண்டுகளாக உயர்ந்தது. சுயாதீனமான முன்னறிவிப்பாளர்களின் சமீபத்திய கணிப்பின்படி ஜனவரியில் ஆண்டுக்கு 5,400 பவுண்டுகளாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் 7,200 பவுண்டுகளாகவும் உயரும்.

சமீபத்திய உயர்வு ஏற்கனவே பலருக்கு கட்டணங்களை செலுத்த முடியாததாக ஆக்குகிறது. அக்டோபர் 2020 இல், வருடாந்திர எரிபொருள் விலை வரம்பு 1,042 பவுண்டுகளாக இருந்தது.

ஆகஸ்ட் 26, 2022 அன்று இலண்டனில் பெரும்பாலான வீடுகளுக்கு எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான விலை வரம்பை 80 சதவீதம் வரை உயர்த்திய பிரிட்டிஷ் எரிசக்தி ஒழுங்கமைப்பு நிறுவனமான Ofgem இற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தியிருந்தனர் [AP Photo/Alastair Grant] [AP Photo/Alastair Grant]

விலை வரம்பு, எரிசக்தி கட்டுப்பாட்டாளர் Ofgem ஆல் அமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட மொத்த செலவுகள் வழக்கமான கட்டணத்தின் (மாறக்கூடிய நிலையான கட்டணத்தின்) அடிப்படையில் அமைந்தவை. ஆனால் உண்மையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 24 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உச்ச வரம்பு இல்லை. அவர்கள் பயன்படுத்தப்படும் ஒரு கிலோவாட் மணிநேரத்தின் (kWh) விலையில் மட்டுமே உச்ச வரம்பு உள்ளது. இது இப்போது ஒரு kWhக்கு 28 பென்சில் இருந்து 56 பென்ஸ் ஆக உயர்ந்துள்ளது. பல குடும்பங்களுக்கு, குறிப்பாக கூடுதல் எரிசக்தி தேவைகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கு, அடுத்த ஏப்ரலின் எரிசக்தி வரம்பு அதிகரிப்பினால் அவர்கள் ஆண்டுதோறும் எரிபொருள் பயன்பாட்டிற்கு 10,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் செலுத்துவதைக் காணலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Trades Union Congress ஆய்வின்படி, இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் எரிசக்தி கட்டணங்கள் ஊதியத்தை விட 35 மடங்கு வேகமாகவும் சமூகநல உதவிகளை விட 57 மடங்கு வேகமாகவும் உயரும். சராசரி கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஜனவரியில் மாதக் கட்டணம் சுமார் 500 பவுண்டுகளாக இருக்கும். முக்கியமாக சுமார் 4 மில்லியன் ஏழைக் குடும்பங்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் கட்டணங்கள் இன்னும் வேகமாக உயரும். முன்பணம் செலுத்தும் பயனாளர்களுக்கு, 'ஜனவரியில் மட்டும் வழக்கமான எரிசக்தி கட்டணங்கள் அவர்களின் மாதாந்திர செலவழிப்பிற்கு கையில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் 714 பவுண்டுகளாக இருக்கும்' என்று The Resolution Foundation சிந்தனைக் குழு கணித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகமாக, தங்கள் வருமானத்தில் 46 சதவீதத்தை எரிசக்தி கட்டணத்தில் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறைந்த வருமானம் உள்ள ஒற்றை பெற்றோர் குடும்பத்திற்கு, அவர்களின் வருமானத்தில் 66 சதவீதம் எரிசக்தி செலவாகும். ஒரு ஓய்வூதியம் பெறுபவர், எரிசக்தி கட்டணங்களுக்கு அவர்களின் செலவழிக்கக்கூடிய வருமானத்தில் 40 சதவீதத்தை இழப்பார் மற்றும் குறைந்த வருமானத்தில் ஒரு வயது வந்தவர் கடனில் மூழ்கி, எரிசக்தி கட்டணங்களை செலுத்துவதற்காக அவர்களின் வருமானத்தில் 120 சதவீதத்தை இழக்க நேரிடும். ஒரு உடல் ஊனமுற்ற ஏற்கனவே கடன்பட்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட்ட குடும்பங்களில் 75 சதவீதமானோர் மேலும் கீழ்நிலைக்கு செல்லவேண்டியிருக்கும்.

விலைவாசி உயர்வு பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. பொருட்களை வாங்கவோ, தங்கள் வீடுகளை சூடாக்கவோ அல்லது கழுவவோ கூட இயலாமல் செய்யும்.

கடந்த வாரம், தேசிய சுகாதார சேவைத் தலைவர்கள் ஒரு வழமைக்குமாறான தலையீட்டை செய்து, கட்டுப்படியாகாத எரிசக்தி கட்டணங்களால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்று பழமைவாத அரசாங்கத்தை எச்சரித்தனர். 'எரிபொருள் வறுமை' காரணமாக பிரிட்டனில் ஆண்டுதோறும் குறைந்தது 10,000 பேர் இறக்கின்றனர்.

எரிபொருள் வறுமை தொண்டுநிறுவனமான தேசிய எரிசக்தி நடவடிக்கை (NEA), ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் வறுமையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அக்டோபரில் 8.9 மில்லியனாக இரட்டிப்பாகும் என கூறியது. NEA இன் தலைமை நிர்வாகி ஆடம் ஸ்கோரர் 'இந்த குளிர்காலத்தில் வெப்பமூட்டமுடியாத இன்னும் ஒரு மில்லியன் வீடுகள் எங்களிடம் இருக்கும் ... இது அதிக உடல்நலக்குறைவுக்கு வழிவகுக்கிறது, இது அதிக மரணத்திற்கு வழிவகுக்கிறது' என எச்சரித்தார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நிதி நிபுணர் மார்ட்டின் லூயிஸ் மக்களுக்கு உணவளித்து, சூடேற்ற முடியாவிட்டால், உள்நாட்டு அமைதியின்மை இருக்கும் என்று எச்சரித்தார். மே மாதத்தில் அவரது முன்கணிப்பு 'அக்டோபர் நடுப்பகுதியில் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் 2,600£ ஆக இருக்கும்...' அக்டோபர் மாதம் 3,549 பவுண்டுகளாக உயர்ந்தது, ஏற்கனவே லூயிஸின் மோசமான நிலைமைக்கணிப்பு மற்றும் ஜனவரியில் 5,400 பவுண்டுகள் வரை உயர்வு என்று அறிவித்தது. இது கோடிக்கணக்கான மக்களை முன்கேள்விப்பட்டிராத அளவிலான துன்ப நிலைக்கு கொண்டு வரும்.

வெள்ளிக்கிழமை பிபிசி வானொலியின் Today நிகழ்ச்சியில் பேசிய லூயிஸ், “இந்தச் சூழ்நிலையை பேரழிவுகரமாக காட்டியதாக நான் குற்றம் சாட்டப்பட்டேன். சரி, நான் பேரழிவாக காட்டியதற்குக் காரணம், இது அப்படிப்பட்ட ஒரு பேரழிவு என்பதாலாகும்” என்றார்.

பணவீக்க-விலை சுட்டியின் (RPI) மிகத் துல்லியமான அளவீட்டின்படி கிட்டத்தட்ட 12.5 சதவிகித பணவீக்க அதிகரிப்பில் இக்கட்டணங்களின் உயர்வு குறிப்பிடத்தக்க காரணியாகும். அமெரிக்க நிதியச் சேவைக் குழுவான Citi இன் மதிப்பீடுகளின்படி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 21 சதவிகிதமாக உயரும்.

இதற்கிடையில், விலையேற்றம் என்பது பிரிட்டனின் முக்கிய எரிசக்தி வழங்குநர்கள் இந்த ஆண்டு இதுவரை 15 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டுவதை அர்த்தப்படுத்துகின்றது. எடின்பரோவை தளமாகக் கொண்ட Harbour Energy PLC, பிரித்தானியாவின் மிகப்பெரிய சுயாதீன எண்ணெய் மற்றும் எரிவாயு வணிக நிறுவனம் அதன் இலாபத்தில் 12 மடங்கு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு இலாபம் 1.3 பில்லியன் டாலரை எட்டியிருப்பதாகவும், பங்குதாரர்களுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலரை வழங்குவதாகவும் கடந்த வாரம் அறிவித்தது.

ஒரு Unite தொழிற்சங்க அறிக்கை, “பெருநிறுவன வாழ்க்கைச்செலவு நெருக்கடி” என்று குறிப்பிட்டது. “எரிசக்தி நிறுவனங்களைத் தவிர்த்து, இங்கிலாந்தின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இலாபம் 42% அதிகரித்துள்ளது... 230 எரிசக்தி அல்லாத FTSE 350 நிறுவனங்களின் சராசரி இலாபம், முதலீட்டு அறக்கட்டளைகளை தவிர்த்து, 2021 ஆம் ஆண்டின் முடிவுகளைப் பதிவுசெய்தது. இது 2019 இல் 271 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 2021 இல் 385 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் எரிசக்தி செலவுகள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் பிரித்தானிய நிறுவனங்கள் இன்னும் அவற்றிலிருந்து தனித்துவமானவையாக உள்ளன. Euronews இணைய தளம், “இன்றைய விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இங்கிலாந்து குடும்பங்கள் ஐரோப்பாவில் மிக உயர்ந்த விலைகளில் சிலவற்றை எதிர்கொண்டன. பிரான்ஸை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உள்ளன. செக் குடியரசு மட்டுமே இங்கிலாந்தை விட விலை உயர்ந்ததாக உள்ளது. அதைத் தொடர்ந்து இத்தாலி மற்றும் எஸ்தோனியா உள்ளன.

எரிசக்தி பெருநிறுவனங்கள் ஒரு பைசா கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் நிலையில், பிரித்தானிய ஆளும் உயரடுக்கு துன்பத்தைத் தணிக்க உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என்கிறது. ஆளும் வர்க்கத்திடம் இருந்து வரும் செய்தி என்னவென்றால்: 'ஐரோப்பாவில், பிரித்தானியா கழுத்து வரை மூழ்கியுள்ள போர் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் உக்ரேனுக்கு பில்லியன் கணக்கான இராணுவ உதவிகளை வழங்குகிறோம். அதற்கான செலவை தொழிலாள வர்க்கம் செலுத்த வேண்டும்' என்பதாகும்.

கடந்த புதன் கிழமை கியேவில் இருந்து உக்ரேனிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேட்டோவின் பினாமி போரின் தொடர்ச்சியாக ஈடுபட்டு, வெளியேறும் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் “விளாடிமிர் புட்டினின் தீமைகளுக்கு நமது எரிசக்தி கட்டணங்களை நாங்கள் செலுத்துவோமானால், உக்ரேன் மக்கள் அவர்களின் இரத்தத்தினால் அதற்கு விலை செலுத்துகின்றனர் என்பது எமக்குத் தெரியும்” என அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனின் போரை ஆதரிப்பது என்பது 'உண்மையில் விலைகூடிய குளிர்காலம் எம்முன்னே' உள்ளது மற்றும் 'குறுகிய கால வலி மற்றும் செலவு எதுவாக இருந்தாலும்' இது உழைக்கும் மக்களால் தாங்கப்பட வேண்டும் என்று ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, ஷான்சிலர் நாதிம் ஜஹாவி இருமடங்காக “உண்மை என்னவென்றால், நாம் அனைவரும் நமது எரிபொருள் நுகர்வுகளைப் பார்க்க வேண்டும். இது ஒரு கடினமான நேரம். நம் கண்டத்தில் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்' என அறிவித்தார்.

புதிய டோரி தலைவராக பெயரிடப்பட்டு, ஒரு வாரத்தில் ஜோன்சனுக்குப் பதிலாக பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் தாட்சரின் நகலான லிஸ் ட்ரஸ் இனால் பல்லாயிரக்கணக்கானோரின் ஏழைமையாக்கலின் முன்னே எதையும் வழங்கமுடியவில்லை. கன்சர்வேடிவ்-ஆதரவு Sun செய்தித்தாள் கூட அவரது எரிசக்தி “திட்டத்தை” விமர்சிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அவரின் திட்டம் ஒரு சில பசுமை வரிகளை அகற்றுவதை அடிப்படையாகக் கொண்டு, குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 11 பவுண்டுகள் மட்டுமே சேமிக்கும்! எனக் குறிப்பிட்டது.

வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையில் வெளிப்படும் மில்லியன் கணக்கானவர்களிடையே கோபம் பெருகும்போது அடக்குமுறைக்கான திட்டங்கள் மட்டுமே உள்ளன. ரூபேர்ட் முர்டோக்கின் பரபரப்பு தாள் பின்வருமாறு எழுதியது. “நெருக்கடி சுழல்நிலையில், Sun on Sunday அமைச்சர்கள் வாழ்க்கைச் செலவுக் குற்ற அலை மற்றும் சாத்தியமான கலவரங்களை திட்டமிடுவதை வெளிப்படுத்திக் காட்டலாம்”.

'எரிசக்தி கட்டணங்கள் உயரும் போது வெகுஜன அமைதியின்மையை சமாளிக்க அரசாங்க அதிகாரிகள் திட்டங்களை வகுத்துள்ளனர்.'

சோசலிச சமத்துவக் கட்சியானது பெருநிறுவன இலாபங்களை விட சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையை முன்வைக்கிறது.

  • வீட்டு எரிசக்தி விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும். அதனால் எந்தக் குடும்பமும் அழிவுகரமான கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடாது. எண்ணெய், எரிவாயு மற்றும் பிற எரிசக்தி நிறுவனங்களால் பெறப்பட்ட அதியுயர் இலாபங்கள் பறிக்கப்பட்டு, ஏழைக் குடும்பங்களின் உடனடி நிவாரணத்திற்காக ஒரு பொதுமக்களின் கட்டுப்பாட்டு நிதியில் வைக்கப்பட வேண்டும்.
  • பிரித்தானியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்களும் தொழிலாளர்களும் பரந்த எரிசக்தி நிறுவனங்களின் பேராசையான பசிக்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இவை வீழ்ச்சியடையும் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் போரினால் உலகத்தை அச்சுறுத்துகின்றது. முக்கிய எரிசக்தி நிறுவனங்களை பொதுமக்களுக்குச் சொந்தமான மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளாக மாற்றுவதன் மூலம் இந்த எழுத்துநெரிப்பு உடைக்கப்பட வேண்டும்.
  • நிதிய தன்னலக்குழுவின் செல்வச் செறிவூட்டலுக்கு எதிராக, எரிசக்தி விநியோகங்களின் ஆய்வு, வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஆகியவை ஒரு பகுத்தறிவான சர்வதேச திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். இது தொழிலாளர் வர்க்கத்தால் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்படும். இந்தத் திட்டம் உலக மக்களுக்கு குறைந்த விலையிலானதும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது ஒரு திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் மலிவு விலையில் எரிசக்தி, வீட்டுவசதி, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சத்தான உணவு ஆகியவை அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அடிப்படை உரிமையாக இருக்கும்.
Loading