பிராக் உரையில் ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பாவின் இராணுவமயமாக்கலை அதிபர் ஷோல்ஸ் ஊக்குவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பாவை அதன் மேலாதிக்கத்தின் கீழ் ஒன்றாக இணைக்கவும், கண்டத்தை இராணுவமயமாக்குவதன் மூலம் தன்னை ஒரு உலக வல்லரசாக்கவும் ஜேர்மனி வேண்டுமென்றே உக்ரேனில் போரை தீவிரப்படுத்துகிறது. இதுதான் திங்களன்று பிராக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாப் ஷோல்ஸ் ஆற்றிய முக்கிய உரையில் உள்ள முக்கிய செய்தியாகும்.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஆகஸ்ட் 29, 2022 திங்கட்கிழமை, செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்தார் [AP Photo/Petr David Josek] [AP Photo/Petr David Josek]

1348 இல் நிறுவப்பட்ட மதிப்பிற்குரிய செக் பல்கலைக்கழத்தின் பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடக்கியதாகக் கூறப்படும் அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பற்றிய வழக்கமான சொற்றொடர்களுடன் ஷோல்ஸ் சிறிது நேரத்தை வீணடித்தார். அதன் பின்னர் அவர் தனது கருத்துக்கு வந்தார்.

'சமீபத்திய ஆண்டுகளில், பலர் வலுவான, அதிக இறையாண்மை கொண்ட, புவிசார் அரசியல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சரியாகவே அழைப்பு விடுத்துள்ளனர்' என்று அவர் கூறினார். அதாவது 'கண்டத்தின் வரலாறு மற்றும் புவியியலில் அதன் இடத்தை அறிந்த மற்றும் உலகில் வலுவாகவும் ஐக்கியமாகவும் செயல்படும் ஒரு ஒன்றியத்திற்கான அழைப்பாகும். கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள், இந்த இலக்கிற்கு எம்மை நெருக்கமாக கொண்டுவந்துவிட்டன.

ஷோல்ஸ் குறிப்பிடும் 'வரலாற்று முடிவுகள்' என்பதன் மூலம் 'உறுதி மற்றும் வேகத்துடன்' ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மற்றும் நேட்டோவின் தலையீட்டின் மூலம் உக்ரேனில் போரை தீவிரப்படுத்தியது. ஜேர்மன் அரசாங்கமோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ ஒரு போர்நிறுத்தத்திற்கோ அல்லது மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டலாம் என்ற கருத்தை பற்றி ஒருதடைவை கூட அவர் சுட்டிக்காட்டவில்லை.

மாறாக, 'சமீப மாதங்களில் ஜேர்மனியின் போக்கை அடிப்படையாக மாற்றிவிட்ட பொருளாதார, நிதி, அரசியல் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவ ஆதரவு' உக்ரேனுக்கு வழங்கப்படுவதைப் பற்றி அவர் பெருமிதம் கொண்டார். 'இந்த ஆதரவை நாங்கள் நம்பகத்தன்மையுடன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவைப்படும் வரை பராமரிப்போம்!' என்றார். எதிர்வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், உக்ரேன் ஜேர்மனியில் இருந்து 'புதிய, நவீன ஆயுதங்கள் - வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள், எடுத்துக்காட்டாக உளவு ட்ரோன்களை' பெறும் என்று சான்சிலர் கூறினார். ஆயுத விநியோகத்தின் கடைசிப் பொதியின் மதிப்பு மட்டும் €600 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. 'எங்கள் இலக்கு ஒரு நவீன உக்ரேனிய ஆயுதப்படையாகும். அது அவர்களின் நாட்டை நிரந்தரமாக பாதுகாக்க முடியும்' என்று அவர் அறிவித்தார். 'உக்ரேனிய பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பை உருவாக்குவதற்கு ஜேர்மனி சிறப்புப் பொறுப்பை ஏற்கும்' என்று தான் கற்பனை செய்ய கூடியதாக இருந்தது என்றார்.

மத்திய வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் (பசுமைக் கட்சி) ஞாயிறன்று உக்ரேனுக்கு கனரக ஆயுதங்களுடன் காலவரையின்றி ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். 'இந்தப் போர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும்' என்று அவர் Bild am Sonntag பத்திரிகையிடம் கூறினார். ஷோல்ஸை போலவே பெயபொக் கிரிமிய தீபகற்பத்தை இராணுவ பலத்தால் மீண்டும் கைப்பற்றும் இலக்கிற்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்து, அதன் மூலம் அணுஆயுத சக்தியான ரஷ்யாவின் மீது முழுமையான இராணுவ தோல்வியை ஏற்படுத்துவதாகும்.

ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே 2014 இல் உக்ரேனில் வலதுசாரி சதியை ஆதரித்தது. இது மேற்கத்திய சார்பு பொம்மை ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்து தற்போதைய போருக்கு விதைகளை விதைத்தது. ஆனால் சோவியத் காலத்திலிருந்தே ஜேர்மனிக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான எரிசக்தியை வழங்கி வந்த ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை முற்றிலுமாக முறித்துக் கொள்ள நீண்ட காலமாக அது தயங்கியது.

கணிசமான அழுத்தம் இருந்தபோதிலும், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தனது பதவியில் இருந்த காலம் முழுவதும் Nord Stream 2 எரிவாயு குழாய் அமைப்பதை நிறுத்த மறுத்துவிட்டார். இது தற்போதுள்ள குழாய்களின் திறனை இரட்டிப்பாக்கும். ஷோல்ஸ் அரசாங்கம் போர் வெடித்த பின்னரே இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போதும் கூட, அவரது அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் செயல்பட்டதாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயுத விநியோகத்தை தாமதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது இப்போது அடியோடு மாறிவிட்டது. அமெரிக்காவுக்குப் பின்னர், ரஷ்யாவுடனான பினாமி போரில் உந்து சக்தியாக ஜேர்மனி உள்ளது. ரஷ்யாவை துண்டாடுவதற்கும், அதன் வளமான இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும், ஜேர்மன் அரசாங்கம் அதன் சொந்த மக்களை குளிரில் உறைய விட்டு, பணவீக்கத்தை தடையின்றி அதிகரிக்கத் தயாராக உள்ளது. மேலும் அணு ஆயுதங்களால் மோதிக்கொள்ளும் உலகப் போரின் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

போர் வெடித்த மூன்று நாட்களுக்குப் பின்னர், ஷோல்ஸ் நாடாளுமன்றத்தில் ஒரு 'புதிய சகாப்தம்' என்று அறிவித்தார். உக்ரேனுக்கு பாரிய ஆயுத விநியோகத்திற்கும், ஜேர்மனியை மீண்டும் ஐரோப்பாவில் முன்னணி இராணுவ சக்தியாக மாற்றுவதற்காக பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தியது. அவரது பிராக் பேச்சு அவரது “புதிய சகாப்த” பேச்சுடன் நேரடியாக இணைக்கப்பட்டது. 'உலக அரசியலில் திறன் கொண்ட புவிசார் அரசியல் ஐரோப்பா' என்ற கோரிக்கை 'உலகளவில் அதன் மதிப்புகள் மற்றும் நலன்களை வலியுறுத்த முடியும்' என்பது ஒரு மணிநேர உரை முழுவதும் நிலையான கருப்பொருளாக இருந்தது.

'எதிர்காலத்தில் 8 அல்லது அநேகமாக 10 பில்லியன் மக்களைக் கொண்டிருக்கும் உலகில், நமது ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் அதன் நலன்களையும் மதிப்புகளையும் மட்டும் வலியுறுத்த முடியாத அளவுக்கு மிகச் சிறியவையாக உள்ளன. இது ஒரு ஐக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது,' என்று ஷோல்ஸ் வலியுறுத்தினார்.

அவர் அமெரிக்காவைப் பற்றி ஒரு விமர்சன வார்த்தையும் கூறாமல் கவனமாக இருந்தார் மற்றும் 'அட்லாண்டிக் கூட்டாளியின் தவிர்க்க முடியாத மதிப்பை' பாராட்டினார். இருந்தபோதிலும், ஜேர்மனியின் புவிசார் அரசியல் அபிலாஷைகளும் அமெரிக்காவிற்கு எதிரானவை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

'இன்று, ஜனாதிபதி பைடெனுடன் நம்பிக்கைக்குரிய அட்லாந்திற்கு இடையிலான உறவிற்கு சார்பானவர் வெள்ளை மாளிகையில் அமர்ந்திருப்பது 'நம் அனைவருக்கும் அதிர்ஷ்டம்' என்று அவர் கூறினார். ஆனால் கூட்டாண்மைக்காக பைடென் செய்த அனைத்தையும் மீறி, “அதே நேரத்தில் வாஷிங்டனின் பார்வை சீனா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடனான போட்டியில் அதிக கவனம் செலுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது எதிர்கால அமெரிக்க அரசாங்கங்களுக்கும் பொருந்தும். ஒருவேளை இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்.

ஷோல்ஸின் கூற்றுப்படி, 21 ஆம் நூற்றாண்டின் பல துருவ உலகில், 'எனவே, தற்போதுள்ள கூட்டாண்மைகளை அவற்றின் மதிப்புமிக்கதாக வளர்த்துவருவது மட்டும் போதாது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் புதிய கூட்டாண்மைகளில் முதலீடு செய்வோம். ஐக்கியப்பட்ட ஐரோப்பாவும் 'சீனாவை விட அதன் எடையை இன்னும் அதிகமாக வலியுறுத்த வேண்டும்' என்றார்.

அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்தை வலுப்படுத்த, ஷோல்ஸ் கிழக்கு நோக்கி அதன் மேலும் விரிவாக்கத்தை பரிந்துரைக்கிறார்: 'ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி தொடர்ந்து வளர்ந்து வருவது நம் அனைவருக்கும் ஒரு இருதரப்பு வெற்றியான நிலைமை!' என்று அவர் அறிவித்தார். மேற்கு பால்கன், உக்ரேன் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுடன், அவர் ஜோர்ஜியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் 'எதிர்காலத்தில்' வரவேற்க விரும்புகிறார். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் தற்போதைய 27ல் இருந்து 36 ஆக வளரும்.

இது ஐரோப்பாவில் ஜேர்மனியின் நிலையை பலப்படுத்தும் என்றும் ஷோல்ஸ் நம்புகிறார். 'ஜேர்மனி, கண்டத்தின் நடுவில் உள்ள ஒரு நாடாக, ஐரோப்பாவில் கிழக்கு மற்றும் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கை ஒன்றிணைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்,' என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மிகவும் திறம்படச் செய்வதற்கும், ஜேர்மனியின் தலைமைப் பாத்திரத்தை வலுப்படுத்துவதற்கும், ஷோல்ஸ் அதன் நிறுவனங்களை மையப்படுத்தவும், சிறிய உறுப்பினர்களை பெரிதும் பலவீனப்படுத்தவும் விரும்புகிறது. பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பான அரசாங்கத் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவில், ஒருமித்து வாக்களிக்கும் கொள்கையானது பெரும்பான்மைக் கொள்கையால் மாற்றப்பட வேண்டும் எனப்படுகின்றது. இதனால் தனிப்பட்ட உறுப்பினர்கள் முன்மொழிவுகளில் தடுப்பதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

'ஒவ்வொரு வாக்குக்கும் ஏறக்குறைய ஒரே பலத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டிற்கு இணங்க,' ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அளவைக் குறைக்க ஷோல்ஸ் விரும்புகிறார். இதுவரை, மற்ற நாடுகளைக் காட்டிலும் அவற்றின் மக்கள் தொகையின் விகிதாசாரத்திற்கு கூடுதலான பிரதிநிதிகளை கொண்டிருப்பதால், சிறிய நாடுகளுக்கு முன்னுரிமை இருந்தது.

ஒரு ஊக்கம்மிக்க தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துடன், ஐரோப்பா 'உலகின் உச்சிக்கு மீண்டும் போராட வேண்டும்' மற்றும் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரில் இணைய வேண்டும். கணனிசில்லுகள் மற்றும் குறைக்கடத்திகளின் உற்பத்தி, எதிர்காலத்தின் இயங்கும்தன்மை மற்றும் 'நமது பொருளாதாரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இலத்திரனியல் மாற்றம்' ஆகியவற்றை முக்கிய துறைகளாக ஷோல்ஸ் மேற்கோள் காட்டினார்.

ஷோல்ஸ் மேலும் விண்வெளியை சேர்க்க திட்டமிட்டுள்ளார்: 'விண்வெளி, நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் மெகா விண்மீன்களுக்கு சுதந்திரமான அணுகல் நமது பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம் மற்றும், கடைசியாக, இலத்திரனியல் மயமாக்கலுக்கும் முக்கியமானது' என்றார்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற, ஷோல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு இராணுவ உலக சக்தியாக ஆயுதமயமாக்க விரும்புகிறார். எனவே அது உலகம் முழுவதும் போரை நடத்தும் திறன் கொண்டதாகும்.

'ஐரோப்பிய படைகளிலும், பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்களிலும் கடந்தகால ஒருங்கிணைக்கப்படாத குறைப்பானது இப்போது ஐரோப்பிய திறன்களின் ஒருங்கிணைந்த அதிகரிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்' என்று அவர் கூறினார்.

கூட்டு ஆயுத திட்டங்கள், ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஒன்றிணைத்தல் மற்றும் நன்கு ஆயுதமயமாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய இராணுவ தலைமையகம் ஆகியவற்றைத் தவிர, அவர் முடிவெடுக்கும் செயல்முறைகளை துரிதப்படுத்தவும், இராணுவ நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட அங்கத்தவ நாடுகளிலிருந்து 'உறுதியானவர்களின் கூட்டணிகளை' உருவாக்கவும் விரும்புகிறார்.

ஜேர்மனி 'திட்டமிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய விரைவு எதிர்த்தாக்குதல்படை 2025 இல் செயல்படுவதை உறுதி செய்யும், பின்னர் அதன் மையமாக இருக்கும்' என்று ஷோல்ஸ் உறுதியளித்தார். ஜேர்மனி லித்துவேனியாவை விரைவாகப் பயன்படுத்தக்கூடிய படையணியுடனும் மற்றும் ஸ்லோவாக்கியாவை வான் பாதுகாப்பில் ஆதரிப்பதுடன், செக் குடியரசும் பிற நாடுகளும் உக்ரேனுக்கு வழங்கும் சோவியத் டாங்கிகளுக்கு பதிலாக ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்ட டாங்கிகளை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

வான் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஐரோப்பா கணிசமான அளவு முன்னேற வேண்டும் என்று அவர் தொடர்ந்தார். எனவே, ஜேர்மனி வான் பாதுகாப்பு அமைப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்து ஐரோப்பிய அண்டை நாடுகளும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கும். ஐரோப்பாவில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு 'முழு ஐரோப்பாவிற்கும் ஒரு பாதுகாப்பு சொத்து' என்று அவர் கூறினார்.

உக்ரேனில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கும் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை அழித்து, அணுவாயுதப் போராக அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நீண்ட போரிற்கான சாத்தியத்தை ஜேர்மன் அரசாங்கம் தனது ஐரோப்பிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது அதன் பிற்போக்கு தன்மையை காட்டுகின்றது. மத்திய அரசாங்கம் இவ்வாறு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மிக மோசமான மரபுகளுக்குத் திரும்புவதுடன், இது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகம் ஏற்கனவே அதன் முதலாளித்துவ போட்டியாளர்களிடையே பிளவுபட்டிருந்த நேரத்தில் முதலாளித்துவ ஜேர்மனி ஐரோப்பாவில் மிகவும் மேம்பட்ட தொழிற்துறையை உருவாக்கியது. முதலாம் உலகப் போருடன், உலகை மறுபகிர்வு செய்வதன் மூலம் அதை ஜேர்மன் மாற்ற முயற்சித்தது. கிழக்கு ஐரோப்பாவின் கட்டுப்பாடு அல்லது உக்ரேன் உட்பட 'மத்திய ஐரோப்பா' (Mitteleuropa) என்று அழைக்கப்பட்டது ஜேர்மன் போரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.

முதலாம் உலகப் போரில் தோல்வியடைந்த, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக உலகை மீண்டும் பிரிக்க ஹிட்லர் மற்றொரு முயற்சியை மேற்கொண்டார். 'ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கான ஒரு தளமாக ஐக்கிய ஜேர்மனியை மாற்றுவதற்கு; ஐக்கிய ஐரோப்பாவை உலக மேலாதிக்கத்திற்கான போராட்டத்திற்கான தளமாக மாற்றுவதற்கும், அதன் விளைவாக அமெரிக்காவை கட்டுப்படுத்தும், பலவீனப்படுத்துவதும் என்ற இந்த பணி ஹிட்லருக்கும் மாறாமல் இருந்தது' என்று 1939 டிசம்பரில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்.

ஷோல்ஸின் ஐரோப்பிய மூலோபாயம் அதே பாதையை பின்பற்றுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மன் நலன்களுக்கு அடிபணிய வைப்பதற்கும், உலக மேலாதிக்கத்திற்கான போராட்டத்திற்கான அடிப்படையாக அதை மாற்றுவதற்குமான அவரது முயற்சி தவிர்க்க முடியாமல் ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும். இது ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே வன்முறை மோதல்களுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாது, வர்க்கப் போராட்டத்தையும் தீவிரப்படுத்தும்.

இது போரின் ஆபத்துக்கு எதிரான பிரதிபலிப்பின் வளர்ச்சிக்கான திறவுகோலை கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கம் அதன் சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். அது ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கருவியான ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரித்து, முதலாளிகளின் இலாப நலன்கள் அல்லாது சமூக நலன்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச ஐரோப்பாவுக்கான ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

Loading