தாட்சரிச போர்வெறியர் லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் பிரதம மந்திரி ஆகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லிஸ் ட்ரஸ் பிரதம மந்திரி பதவிக்கு உயர்ந்திருப்பது, அந்தப் பழமைவாத அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு தீர்க்கமான மோதலை முன்னறிவிக்கிறது.

பிரிட்டனின் இந்த மிக உயர்ந்த பதவியைப் பிடிக்க, டோரி கட்சியின் வயதான 170,000 உறுப்பினர்களில் 80,000 செல்வ செழிப்பான பிற்போக்குவாதிகளால் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவுடனான போர் மற்றும் இங்கிலாந்துக்குள் வர்க்கப் போர் திட்டநிரலைச் செயல்படுத்துவதில் அவர் மிகவும் ஈவிரக்கமற்ற வேட்பாளராக கருதப்படுகிறார்.

செப்டம்பர் 5, 2022 அன்று இலண்டனில் உள்ள இராணி எலிசபெத் II மையத்தில், கன்சர்வேடிவ் கட்சி தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் லிஸ் ட்ரஸ் பேசுகிறார். செப்டம்பர் 6 அன்று இராணி எலிசபெத் II உடனான பார்வையாளர்களை சந்தித்த பின்னர் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராவார்[AP Photo/Alberto Pezzali] [AP Photo/Alberto Pezzali]

போரிஸ் ஜோன்சன் ஜூலையில் கட்டாயத்தின் பேரில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது போல, 'ஏறக்குறைய அரசாங்கமே உருக்குலைய வழிவகுத்த ஒரு தலைமைத்துவ சவாலுக்கு உயிரூட்டிய அந்த அரசியல் பயம் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் வர்க்கத் தாக்குதலின் அடுத்த கட்டத்துக்கோ அல்லது ஐரோப்பாவில் நேட்டோ போரை நடத்துவதிலோ அவரை நம்ப முடியாது என்றளவுக்கு ஜோன்சன் ஒரு முரண்பட்ட மற்றும் மதிப்பிழந்த பிரமுகராகி விட்டார்.

'ஓர் உலகளாவிய முதலாளித்துவ முறிவு, இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பெருந்தொற்று, உலகளாவிய பணவீக்க சுழல், வர்த்தகப் போர், போரின் வெடிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி ஆகியவற்றில் வேரூன்றிய ஓர் அரசியல் நெருக்கடியின் கடும் வேதனையை பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.'

ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடனே, டெய்லி டெலிகிராப் அறிவிக்கையில், 'மார்கரெட் தாட்சருக்குப் பின்னர் முதல்முறையாக, பிரிட்டன் ஒரு கோட்பாட்டு ரீதியான, தொல்சீர் தாராளவாத, சந்தை-சார்ந்த, நன்கு படித்த, பொருளாதார கல்வியறிவு நிறைந்த, கொள்கைப் பிடிப்பான பிரதம மந்திரி ஒருவரைப் பெற உள்ளது,” என்றது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அக்கட்சியின் தாட்சரிசத்தை விடுவிக்கும் முயற்சி குழுவில் (Thatcherite-Free Enterprise Group) இருந்த ஏனையவர்களோடு சேர்ந்து, Britannia Unchained எழுதிய போது தான், டோரி கட்சியில் அவர் இடத்தை அவர் கட்டமைக்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் 'வீங்கி வெடிக்கும் நிலைமை, அதிக வரிவிதிப்புகள் மற்றும் அதிகப்படியான நெறிமுறைகள் குறித்து' அது கண்டனம் செய்ததுடன், பிரிட்டிஷ் தொழிலாளர்களை 'உலகிலேயே மிக மோசமான சோம்பேறிகளில் உள்ளடங்குவார்கள்' என்று விவரித்தது, “சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தென் கொரியா போன்ற பொருளாதாரங்களை' பாராட்டியதுடன், பல சுதந்திர வர்த்தக வலைய மண்டலங்களை உருவாக்க அது வலியுறுத்தியது.

மிக சமீபத்தில், இந்தப் பெருந்தொற்று குறித்து அவர் கூறுகையில், 'என் தலைமையின் கீழ் எந்த சமூக அடைப்பும் இருக்காது' என்று அறிவித்தார், 'கட்டாய முகக்கவசமும்' இருக்காது என்றார்.

இந்த முரட்டுத்தனமான ஆளுமையின் பின்னால், ஆட்சி செலுத்த மக்கள் கட்டளை இல்லாத ஓர் அரசாங்கம், நிதியியல் தன்னலக் குழு கட்டளையிடும் ஓர் அரசியல் திட்டநிரலைச் செயல்படுத்த முயன்று வருகிறது, இது கொடிய வறுமை, சர்வாதிகார ஆட்சி, உலகப் போர் வெடிப்பு மற்றும் அணுஆயுத பேரழிவைக் கொண்டு மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்துகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலைகள் உயர்வுகள், இரயில்வே துறை, தபால் துறை மற்றும் தொலைத்தொடர்பு தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்த அலைக்கு இட்டுச் செல்வதுடன், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் நடவடிக்கையில் இறங்க அச்சுறுத்துகின்ற நிலையில், ட்ரஸ் ஓர் அழிவுகரமான வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் பதவி ஏற்கிறார்.

ரஷ்யாவுக்கு எதிராக போர் நாடுவதில் அவர் இழி பெயரெடுத்துள்ளார். இது, பிரிட்டனின் ட்ரைடென்ட் அணுஆயுதங்கள் 'உலகளாவிய நிர்மூலமாக்கலை அர்த்தப்படுத்தும்' என்றாலும் கூட, அவற்றைப் அவர் பயன்படுத்துவாரா என்று கேட்கப்பட்ட போது, ஆகஸ்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. ட்ரஸ் எந்த உணர்ச்சியும் இல்லாமல், “அதைச் செய்ய நான் தயார்,” என பதிலளித்தார்.

2030 க்குள் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உயர்த்துவதற்கும் ட்ரஸ் உறுதியளித்துள்ளார், இது மிகப் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும். ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) எனும் இராணுவச் சிந்தனைக் குழுவின் தகவல்படி, இது துருப்புகளின் 30 சதவீத அதிகரிப்பை மற்றும் 157 பில்லியன் பவுண்டுகளின் செலவை அர்த்தப்படுத்தும்.

இதற்கு நிதி ஒதுக்குவது என்பது 5 சதவீத வருமான வரி அதிகரிப்பை மற்றும் சமூகச் செலவுகளில் முன்னோடியில்லாத வெட்டுக்களைக் குறிக்கும். 157 பில்லியன் பவுண்டு என்பது, ஒட்டுமொத்த பிரிட்டனுக்குமான தேசிய மருத்துவச் சேவையின் (National Health Service - NHS) வருடாந்தர செலவுக்கு சமம்.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஐரோப்பாவில் போரின் விரிவாக்கம், சீனாவுக்கு எதிரான இராணுவ ஆக்ரோஷம் மற்றும் இந்தப் பெருந்தொற்றின் போது பெருவணிகத்திற்கு வழங்கப்பட்ட நூறு பில்லியன் கணக்கான தொகையைத் தொழிலாளர்களிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான அதன் முனைவு ஆகியவற்றை ஜனநாயக வழிவகைகளில் மேற்கொள்ள முடியாது என்பது ஆளும் வர்க்கத்திற்குத் தெரியும்.

இராணுவச் செலவுகளுக்கான ட்ரஸ்ஸின் உறுதிமொழி மீதான RUSI இன் மதிப்பீடு, அதை 'சமாதான முறையில் பங்கு ஆதாய பட்டுவாடாவின் முடிவு' என்று அழைக்கிறது. அது குறிப்பிடுகிறது, '1950 களின் மத்தியப் பகுதியில் இருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புத் துறைக்காக செலவிடுவதில் வெட்டுக்களைச் செய்ததன் மூலம், பிரிட்டனால் அதன் தேசிய வருவாயில் அதிக பங்கை தேசிய சுகாதாரச் சேவை மற்றும் அரசு ஓய்வூதியங்களுக்கு அர்ப்பணிக்க முடிந்தது.”

பாதுகாப்புத் துறைச் செலவினங்களை அதிகரிப்பது, 'முன்னுரிமைகளில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும்,' இது 'தேவைப்படும் தியாகங்களுக்காக பிரிட்டிஷ் மக்களை தயார்படுத்துவதற்கான சிறிய முயற்சியாக இருக்காது,' என்று குறிப்பிடுகிறது.

சமூக எதிர்ப்பை மூர்க்கமாக ஒடுக்கத் தயாரிப்புகள் நன்கு முன்னேறிய நிலையில் உள்ளன.

குற்றங்களின் அதிகரிப்பு மற்றும் பொது ஒழுங்கு சீர்குலைவை எதிர்நோக்கச் செய்யும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை கையாள பிரிட்டன் பொலிஸ் அதிகாரிகள் சந்தர்ப்பத்திற்கேற்ற திட்டங்களை வகுத்து வருவதைக் குறித்த ஒரு கசிய விடப்பட்ட மூலோபாய ஆவணத்தைப் பற்றி, சண்டே டைம்ஸ், ட்ரஸ்ஸின் வெற்றிக்கு முந்தைய நாள் செய்தி வெளியிட்டது. “நீடித்த மற்றும் வேதனை மிக்க பொருளாதார அழுத்தத்திற்கு விடையிறுப்பாக' பாரிய உள்நாட்டு அமைதியின்மையின் அச்சுறுத்தல், “2011 இலண்டன் கலகங்களுக்கு இட்டுச் சென்ற பதட்டமான நிலைமைகள் திரும்ப ஏற்படலாம் என்று' ஒரு மூத்த அதிகாரி எச்சரிப்பதற்கு இட்டுச் சென்றது.

ஆனால் டோரிகளின் முக்கிய அக்கறை கலகங்கள் பற்றியதல்ல, மாறாக கூட்டாகத் தொழிலாள வர்க்க எதிர்ப்பு பற்றியதாகும்.

இரயில்வே வேலைநிறுத்தங்களுக்கு விடையிறுப்பாக, ஏஜென்சி தொழிலாளர்களைக் கருங்காலிகளாக பயன்படுத்த அரசாங்கம் ஏற்கனவே சட்டம் இயற்றி உள்ளது. ட்ரஸ் இப்போது, கல்வித்துறை மற்றும் பொதுச் சுகாதார சேவை உட்பட அனைத்து இன்றியமையா தொழில்துறைகள் மற்றும் சேவைகளில் வேலைநிறுத்தம் செய்வதை நடைமுறையளவில் சட்டவிரோதமாக்கும் 'குறைந்தபட்ச சேவை' சட்டமசோதாவைக் கொண்டு வருவார்.

இந்த சட்டமசோதாவின் உள்ளடக்கத்தைப் போக்குவரத்துத் துறைச் செயலர் கிரான்ட் ஷாப்ஸ் டெய்லி மெயிலில் வெளியிட்டு, “தாட்சரைப் போலவே … நாங்கள் இந்த லூடிசவாதிகளைக் [Luddites - 19 ஆம் நூற்றாண்டு ஜவுளித்துறைத் தொழிலாளர்கள்] கையாளுவோம்,” என்று ஜம்பமடித்தார். வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்குகளின் வரம்பை அதிகரிப்பது, வேலைநிறுத்த நடவடிக்கைக்கான அறிவிப்புக் காலத்தை இரட்டிப்பாக்குவது, கட்டாய 'மறுபரிசீலனைக்' காலத்தை (“cooling-off” period) அமல்படுத்துவது, ஓர் அனுமதிக்கு ஒரேயொரு வேலைநிறுத்த நடவடிக்கையை அனுமதித்து முடிவின்றி வாக்கெடுப்புகளைக் கோருவது, மறியல் செய்வதற்கான உரிமையை இன்னும் கூடுதலாக வெட்டுவது, வேலைநிறுத்தத் தடைச் சட்டங்களை மீறினால் தொழிற்சங்கங்களுக்கு 1 மில்லியன் பவுண்டு அபராதம் ஆகியவை இந்தச் சட்டமசோதாவில் உள்ளடங்கி உள்ளது.

டோரிக்களால் அத்தகைய ஒரு தாக்குதலை நடத்த முடிகிறது என்றால் அதற்கு தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களுமே அரசியல் பொறுப்பாகின்றன.

டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரௌன் கீழ் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் அன்னியப் படுத்தப்பட்டதால், அனைத்திற்கும் மேலாக, 2003 ஈராக் போர் மற்றும் பின்னர் 2008 இல் 'சிக்கன நடவடிக்கைக் காலத்தை' தொடங்கி வைத்த வங்கிகளுக்கான பிணையெடுப்பு ஆகியவற்றில் இருந்தும் தொழிலாளர்கள் அன்னியப் படுத்தப்பட்ட காரணத்தால், டோரிகள் முதன்முதலில் 2010 இல் தாராளவாத ஜனநாயகவாதிகள் உடனான கூட்டணியுடன் பதவிக்கு வந்தார்கள்.

டோரிகள் மற்றும் பிளேயரிசவாதிகளுக்கு எதிராகத் திருப்பிப் போராட விரும்பும் தொழிலாளர்கள், ஜெர்மி கோர்பினை தொழிற் கட்சி தலைவராக ஆக்க 2015 இல் பாரியளவிலான எண்ணிக்கையில் வாக்களித்தனர், மீண்டும் 2016 இலும் வாக்களித்தார்கள், ஆனால் அவர் அவ்விருவர்கள் முன்னால் சரணடைய மட்டுமே செய்தார்.

இன்றோ, சர் கெய்ர் ஸ்டார்மரின் கீழ் டோரிகளுடன் தொழிற் கட்சி நடைமுறையளவில் ஒரு கூட்டணி வைத்துள்ளது, அது அவர்களின் போர்க் கொள்கையை ஆதரிப்பதுடன், வேலைநிறுத்தங்களை எதிர்ப்பதில் இணைந்துள்ளது. ட்ரஸ் தேர்வானதைத் தொடர்ந்து உடனடியாக, தாராளவாத ஜனநாயகவாதிகளே கூட ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து வருகையில், ஸ்டார்மரோ 'பதவிக்குத் தயாராகி வரும், நம் அடுத்த பிரதம மந்திரி லிஸ் ட்ரஸிற்கு' வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே, தொழிற்சங்க அதிகாரத்துவம் பொலிஸ் வேலை செய்வதுடன் வர்க்கப் போராட்டத்தை நசுக்குகிறது, கோடைகால வேலைநிறுத்த அலைகளை மட்டுப்படுத்தி, தொழில்துறை நடவடிக்கைகளின் ஒரு பரந்த எழுச்சியைத் தடுத்து வருகிறது. பல வேலைநிறுத்தங்கள் பணவீக்கத்திற்குக் குறைவாக சம்பளங்களை வழங்கும் அடிப்படையில் விற்றுத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அவை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன, அதேவேளையில் நீண்டகால வாக்கெடுப்புச் செயல்முறை, தேசிய சுகாதார சேவையிலும், உள்ளாட்சி அரசு நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் உள்ள மிகப்பெரிய தொழிலாளர் படைகளைச் செயல்படுவதில் இருந்து தடுத்து வைத்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மீதான நம்பிக்கையும் தொழிற் கட்சிக்கான ஆதரவும் அவற்றின் பல தசாப்த காலக் காட்டிக்கொடுப்பால் பெரிதும் சிதைந்துள்ளது. குறைந்த சம்பளத்தில் இன்னும் அதிகக் கடுமையாக வேலை செய்யுமாறு தொழிலாளர்களுக்குக் கூறப்படுகின்ற நிலையில், இருந்தும் இன்னமும் அவர்களால் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்ற நிலையில், வர்க்கப் பதட்டங்கள் கூர்மையாகி உள்ளன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி கட்டவிழ்வது என்பது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் இரும்புப் பிடியில் இருந்து முறித்துக் கொள்வதைச் சார்ந்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக வர்க்கப் போராட்டத்தைத் தொடுக்க ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை நிறுவுவதற்குச் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவளிக்கிறது. இத்தகைய குழுக்கள், அரசாங்கத்தைக் கீழிறக்க ஓர் ஒருங்கிணைந்த தொழில்துறை தாக்குதலுக்கும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் போராட வேண்டும். சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்களின் கூட்டணி மூலமாக (IWA-RFC), பிரிட்டிஷ் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளை அணுக வேண்டும். சர்வதேச அளவில் ஒன்றுபட்டால், தொழிலாள வர்க்கம் ஒரு தடுக்க முடியாத சக்தியாக மாறுகிறது.

டோரிகள் மற்றும் தொழிற் கட்சியால் பகிர்ந்து கொள்ளப்படும் திட்டநிரலுக்கு, அதாவது 1) ரஷ்யாவுக்கு எதிராக இடைவிடாது போரை விரிவாக்குவது; 2) முடிவின்றி கோவிட்-19 பரவுவதை, பாரிய நோய்தொற்று மற்றும் மரணத்தை நிறுத்த மறுப்பது; 3) தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்துவது என்ற அவர்களின் திட்டநிரலுக்கு எதிராக அரசியல் ரீதியான எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்க, தொழிலாளர்கள் ஓர் உடனடி பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை முன்னெடுக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலம், வரவிருக்கும் மகத்தான போராட்டங்கள் ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.

Loading