முன்னோக்கு

“பாரிய உயிரிழப்புகளுக்கு" மத்தியில், கடைசி உக்ரேனியர் வரை சண்டையிட வாஷிங்டன் சூளுரைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடைசி உக்ரேனியர் உள்ள வரை ரஷ்யாவை எதிர்த்துச் சண்டையிடப் போவதாக சூளுரைக்க, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கெனும் பாதுகாப்புத் துறைச் செயலர் லாயிட் ஆஸ்டினும் வியாழக்கிழமை உக்ரேனுக்குப் பயணம் செய்தனர், 'பாரிய உயிரிழப்புகளுக்கு' வழிவகுக்கும் என அமெரிக்கப் படைகள் சத்தமில்லாமல் எச்சரிக்கும் ஒரு தாக்குதலை அவர்கள் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

போருக்குள் இறங்கி 'ஆறு மாதங்களுக்கும் அதிகமான' பின்னர், 'இப்போதும் நடத்தப்பட்டு வரும் உங்கள் எதிர்த்தாக்குதல், பயனுள்ளதாக நிரூபணமாகி வருகிறது,' என்று பிளிங்கென் புகழ் பாடினார்.

ரஷ்ய-ஆக்கிரமிப்பு பிரதேசத்தின் சில பகுதிகளை மீட்பதற்காக அமெரிக்கா தூண்டிவிட்ட இந்தத் தாக்குதலைத் தான் பிளிங்கென் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார், இது ஏற்கனவே ஒரு பயங்கரமான இரத்தக்களரியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டு வருவதாக உக்ரேனியப் படைகள் கூறுகின்றன, அதேவேளையில் ரஷ்ய இராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், 'நிகோலேவோ-கிரிவோய் ரோக் (Nikolaevo-Krivoy Rog) மற்றும் பிற திசைகளில் நடந்த தோல்வியுற்ற இரண்டு நாட்கள் தாக்குதல்களின் போது, உக்ரேனிய துருப்புக்கள் 1700 க்கும் அதிகமான… உக்ரேனிய இராணுவச் சிப்பாய்களை இழந்ததாகத் தெரிவித்தார்.

மே 13, 2022, வெள்ளிக்கிழமை, உக்ரேனின் கியேவில் உள்ள குளிர்சாதன இரயில் வண்டியில் ரஷ்ய சிப்பாய்களின் உடல்களை உக்ரேனிய சிப்பாய்கள் ஏற்றுகின்றனர் (AP Photo/Efrem Lukatsky, File) [AP Photo/Efrem Lukatsky]

'மொசார்ட் குழு' (“Mozart group”) படைப்பிரிவின் பாகமாக உக்ரேன் போரில் தரைப்படை முயற்சியை ஒருங்கிணைக்கும் அமெரிக்கர்களில் ஒருவர், Newsweek உடன் பெயர் வெளியிடாமல் பேசுகையில், உக்ரேனின் திட்டமிட்ட தாக்குதல் 'மிகவும் இரத்தக்களரியாக' இருக்கும் என்றார்.

'எவ்வளவு தான் பயிற்சி பெற்றிருந்தாலும், அங்கே நிறைய பேர் உயிரிழப்பார்கள்,” என்ற அவர், “மக்களும் துருப்புகளும் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிப்பு செய்யப்பட்டிருந்தாலும், அது விஷயமில்லை, இந்தப் பாரியளவிலான உயிரிழப்புகளுக்கு இதுவரை யாரும் தயார் நிலையில் இல்லை,” என்றார்.

இந்த தாக்குதலுக்கு முன்னரே கூட, உக்ரேன் போர் ரஷ்ய மக்களுக்கும் சரி உக்ரேனிய மக்களுக்கும் சரி பேரழிவாக இருந்துள்ளது. உக்ரேனிய அதிகாரிகளின் தகவல்படி, 9,000 க்கும் அதிகமான உக்ரேனிய துருப்புக்களும் 25,000 ரஷ்ய சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளனர். வேறு சில மதிப்பீடுகள் இந்தப் புள்ளிவிபரங்களை இன்னும் அதிகமாகக் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, சுமார் 6.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், அதேவேளையில் 5,500 உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மனித வாழ்க்கை என்பது, வாஷிங்டனில் உள்ள போர்வெறியர்களுக்கோ அல்லது கியேவில் உள்ள அவர்களின் கைக்கூலிகளுக்கோ ஒன்றுமில்லை. உக்ரேன் நெருப்பில் குளிர் காயும் இதே நபர்கள் தான், 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றுள்ளதும் மற்றும் அண்மித்து மூன்றாண்டுகளில் அமெரிக்க ஆயுள் காலத்தைக் குறைத்து விட்டிருக்கும் கோவிட்-19 கொள்கையை முன்னெடுக்கிறார்கள். உக்ரேனிய இளைஞர்களில் பலர் கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிர் வெறும் பீரங்கிகளுக்குத் தீவனமாக, அல்லது லியோ டால்ஸ்டாய் விரும்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து கூறினால், “பீரங்கி இறைச்சியாக' வீணடிக்கப்பட்டு வருகிறது.

'உக்ரேன் ஆதரவுடன் அமெரிக்கா ஏன் அதிக ஆணவமாக மாறி வருகிறது?” என்று இம்மாத தொடக்கத்தில் The Hill இல் வெளியான ஒரு கட்டுரை, போரை விரிவாக்குவதில் அமெரிக்காவின் பொறுப்பற்றத் தன்மையைத் தொகுத்தளித்தது. அது பின்வருமாறு நிறைவு செய்திருந்தது: “பைடென் நிர்வாகம், ரஷ்யப் படைகளுக்குக் கடும் சேதம் ஏற்படுத்தும் ஆயுதங்களுடன் உக்ரேனை ஆயுதமயப்படுத்தி வருகிறது, போரின் ஆரம்பத்தில் போல் இல்லாமல், மாஸ்கோவின் எதிர்வினையைக் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.”

ஜூலையில், உக்ரேனிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) அறிக்கையில், அந்த நாடு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுக்கான 'சோதனைக் களமாக' பார்க்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். 'ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் புதிய தயாரிப்புகளை இங்கே பரிசோதிக்க அழைப்பு விடுக்கிறோம்,' என்றார்.

உண்மையில் சொல்லப் போனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தக்காரர்கள் உக்ரேனில் அவர்களின் தயாரிப்புகளை 'பரிசோதனை' மட்டும் செய்யவில்லை, அவர்கள் படுவேகமாக பணத்தையும் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்தாண்டு அமெரிக்கப் பங்குச் சந்தை 8 சதவீதம் சரிந்த போதும், மிகப் பெரிய பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் பங்குகள் இதே காலக்கட்டத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளன, அதேபோல ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும் நார்த்ரோப் க்ரெம்மன் நிறுவனங்களின் பங்கு விலைகளும் அதிகரித்துள்ளன.

அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களில் இருந்து நேரடியாகப் பணம் குவித்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக அதிகபட்ச மட்டங்களுக்கு இராணுவச் செலவுகளை விரிவாக்க சூளுரைத்துள்ள அனைத்து நேட்டோ கூட்டாளிகளின் பாரியளவிலான மீள்ஆயுதமயமாக்கலில் இருந்து பணம் குவித்து வருகிறார்கள்.

மேலும் சாதனை அளவுக்கு இலாபத்தை அனுபவித்து வருவது இந்த அமெரிக்கப் நிறுவனங்கள் மட்டுமல்ல. போரின் விளைவாக ரஷ்யா ஐரோப்பாவுக்கான அதன் எரிவாயு விநியோகத்தை வியத்தகு முறையில் குறைத்துள்ளதால், ஐரோப்பாவிற்கான அமெரிக்க இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, அதேவேளையில் ஐரோப்பிய நுகர்வோர் செலுத்தும் விலைகள் கடந்த ஆண்டில் பத்து மடங்கு உயர்ந்துள்ளன.

காலாண்டு இலாபமாக எக்ஸான்மொபில் அதிகபட்சமாக 17.85 பில்லியன் டாலரையும், செவ்ரான் அதிகபட்சமாக 11.62 பில்லியன் டாலரையும் பதிவு செய்துள்ள நிலையில், அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாதளவில் அவற்றின் அதிகபட்ச இலாபங்களைக் கடந்த மாதம் அறிவித்தன.

அமெரிக்கப் பொருளாதாரம் முழுவதும், பெருநிறுவன இலாபங்கள் 15.5 சதவீதம் உயர்ந்துள்ளன, இது 1950 க்குப் பிந்தைய மிக அதிகபட்ச உயர்வு என்பதோடு, மிக வேகமான பெருநிறுவன விலையேற்றங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஒரு பொறிவு ஆகியவற்றுக்கு மத்தியில், இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

கியேவில் அமெரிக்கா தூண்டிவிட்ட 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் இருந்து மேலெழுந்த நேட்டோ-சார்பு உக்ரேனிய அரசாங்கமும் வாஷிங்டனும் வேண்டுமென்றே தூண்டிவிட்ட ஒரு போரில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் ஆதாயமடைந்து வருகின்றன. 'ஜனநாயகம்' மற்றும் 'தேசிய இறையாண்மை' என்ற காற்றில் பறக்கவிடப்பட்ட எல்லா வார்த்தைகளைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளுக்கு உக்ரேன் என்பதன் நிஜமான அர்த்தம், உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதர் மேரி யோவனோவிச்சால் அப்பட்டமாக உச்சரிக்கப்பட்டது, அவர் அந்நாட்டை 'வல்லரசு போட்டிக்கான போர்க்களம்' என்று குறிப்பிட்டார்.

ஜேர்மனியின் ரம்ஸ்டைன் விமானப்படை தளத்தில் இருந்து பேசிய அமெரிக்க அதிகாரிகள், 'ரஷ்யர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க' சூளுரைத்தனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஸ்டின், உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய பல்வேறு ஆயுத அமைப்புகளைப் பற்றி பெருமை பீற்றினார்.

கடந்த மூன்று மாதங்களில், அமெரிக்கா 126 M77 ரக ஹோவிட்சர்களை அனுப்பியுள்ளது என்று கூறிய ஆஸ்டின், 'உக்ரேனிய பாதுகாவலர்களுக்காக ஹோவிட்சர் அமைப்புகளின் எண்ணிக்கையை 18 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளோம்' என்பதையும் சேர்த்துக் கொண்டார். HIMARS உட்பட 25 நீண்ட தூர ஏவுகணை ஏவுக்களங்கள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 'HIMARS கொண்டு உக்ரேனியர்கள் 400 க்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியுள்ளனர்' என்று அமெரிக்க முப்படை தளபதிகளின் மூத்தத் தலைவர் மார்க் மில்லி தற்பெருமை பீற்றினார்.

முக்கியமாக, இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே, கடந்த மாதம் கிரிமியா மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் 'வெற்றிகரமான ஏவுகணைத் தாக்குதல்களாக' இருந்ததை உக்ரேனிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர், இதில் அமெரிக்கா வினியோகித்த HIMARS ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதை இது வெளிப்படையாக ஆக்குகிறது.

இந்தப் போரை சாத்தியமானளவுக்கு நீண்ட காலத்திற்கு இழுத்துக் கொண்டே செல்வதே அமெரிக்காவின் நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, ஆஸ்டின் கூறுகையில், அமெரிக்காவின் நோக்கம் 'மாறிக் கொண்டிருக்கிறது,” என்றார். “நீண்ட காலத்திற்கு' ஏற்ப — இந்த வார்த்தையைத் திரும்ப திரும்ப அவர் ஐந்து முறை கூறினார் — 'நம் பாதுகாப்புத் துறைசார் தொழில்துறை அடித்தளங்களை மேம்படுத்த' அவர் உறுதியளித்தார்.

இதில் அவர் நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்கின் வார்த்தைகளை எதிரொலித்தார், இவர் இந்த வார தொடக்கத்தில், நேட்டோ 'பனிப்போருக்குப் பின்னர் நேட்டோவின் தடுப்புமுறை மற்றும் பாதுகாப்பு முறையில் மிகவும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது' என்று எழுதியிருந்தார், ஆனால் இது 'அதிகரிக்கும் எரிபொருள் விலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள்” உடன் வரும் என்பதுடன், “எரிசக்தி வெட்டுக்கள், இடையூறுகள் மற்றும் அனேகமாக உள்நாட்டு அமைதியின்மையின் அச்சுறுத்தல் கூட” ஏற்படலாம்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், ஒரே நேரத்தில் உக்ரேனிய, ரஷ்ய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராகவும் உள்ளது. 'புட்டினுக்கு எதிரான போர்' என்ற பெயரில், ஏகாதிபத்திய சக்திகள் உலகின் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகின்றன, அவர்கள் கட்டுப்பாடான எரிபொருள் பங்கீடு, சம்பள வீழ்ச்சி மற்றும் பட்டினியைக் கூட ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவை அறிவிக்கின்றன.

ஆனால் தொழிலாளர் வர்க்கம் இவ்விஷயத்தில் அதன் சொந்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கைத் தரங்களைக் குறைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியானது, இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ், அமெரிக்கா, இலங்கை மற்றும் ஆபிரிக்கா வரை வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய மேலெழுச்சிக்கு வழி வகுத்துள்ளது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைந்து வருகையில், அவர்கள் இந்தப் போரை நிறுத்துவதற்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும். உலகப் போருக்கான ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கு, தொழிலாளர்கள், வர்க்கப் போர் மூலோபாயத்தையும் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தையும் எதிர் நிறுத்த வேண்டும்.

Loading