முன்னோக்கு

கார்கிவில் ரஷ்யாவின் தோல்வி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அனைத்து அறிகுறிகளின்படியும், நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் அருகே ரஷ்யா ஒரு பேரழிவுகரமான இராணுவ தோல்வியை சந்தித்துள்ளது.

ஆகஸ்ட் 24, 2022 புதன்கிழமை தொடக்கத்தில் உக்ரேனின் கார்கிவ் பகுதியில் விமான எதிர்ப்பு பீரங்கியிலிருந்து உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய நிலைகளை நோக்கி சுட்டனர் [AP Photo/Andrii Marienko]

ஆறு நாட்களில், அமெரிக்காவாலும் நேட்டோவாலும் ஆயுதம் மற்றும் நிதியளிக்கப்பட்ட உக்ரேனிய இராணுவம், டஜன் கணக்கான மைல் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளது. போர் ஆய்வுக்கான நிறுவனம் இவ்வாறு தெரிவிக்கிறது: 'உக்ரேனிய படைகள் சில இடங்களில் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி, செப்டம்பர் 6 முதல் கடந்த ஐந்து நாட்களில் 3,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளன — இது ஏப்ரல் முதல் அனைத்து நடவடிக்கைகளிலும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியதை விட இது அதிகமான பிரதேசமாகும்.”

ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவத்தின் வழிமுறைகளை எடுத்துக் கொண்டு, கிரெம்ளின் இந்த பேரழிவிற்கு பொய்கள் மற்றும் ஏய்ப்புகளுடன் பதிலளித்தது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், படைகள் 'மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகின்றன' என்று கூறியது, இது வெளிப்படையாக தவறான அறிக்கை. நடப்பது ஒரு படுதோல்வி மற்றும் பாரிய இராணுவ மற்றும் அரசியல் தோல்வி என்பதை மறுக்க முடியாது.

கார்கிவில் ஏற்பட்ட பேரழிவு, திறமையற்ற இராணுவத் தலைமையின் விளைபொருள் மட்டுமல்ல, மேலும் அடிப்படையில், புட்டின் தனது “சிறப்பு நடவடிக்கையை” அடிப்படையாகக் கொண்ட திவாலான அரசியல் மூலோபாயத்தின் விளைவாகும்.

கடந்த வார தோல்விகளின் குறுகிய கால முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நிகழ்வுகள், சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு மற்றும் முதலாளித்துவ புனருத்தாரணம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட முடிவற்ற பேரழிவுகளின் போக்கை தொடர்கின்றன.

இது ரஷ்ய ஆட்சியின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும், ஒரு பொறுப்பற்ற விரிவாக்கத்திற்காக வாதிடும் பிரிவுகளாலும், அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுப்பவர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கான புட்டின் அரசாங்கத்தின் முடிவு, ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தீவிரமான அழுத்தத்திற்கு ஒரு அவநம்பிக்கையான மற்றும் பிற்போக்குத்தனமான பதிலிறுப்பாகும். புட்டினின் மூலோபாயம், அப்படி ஒன்று இருந்த அளவிற்கு, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் நிபந்தனைகள் பற்றிய சாதகமான பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதாக இருந்தது.

போரை நடத்துவதில் புட்டினின் முழு மூலோபாயமும் ரஷ்ய தன்னலக்குழு முதலாளித்துவத்தின் சமூகக் கண்ணோட்டத்துடன் பிணைந்துள்ளது, அதன் முதன்மையான அக்கறை, ஏகாதிபத்தியவாதிகள் கொள்ளையடிக்க விரும்பும் கனிம மற்றும் எரிசக்தி வளங்களின் மீது தங்கள் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதாகும்.

புட்டின், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ரஷ்ய தன்னலக்குழு வாழக்கூடிய ஒரு உடன்பாட்டைச் செய்ய முயல்கிறார். ரஷ்ய முதலாளித்துவ தன்னலக்குழு சார்பாக பேசும் புட்டின், உள்நாட்டு சமூக எதிர்ப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவும் நேட்டோவும் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காட்டியுள்ளன. அவர்கள் ரஷ்யாவை முழுமையாக அடிபணியச் செய்வதையும், அதை பல மாநிலங்களாக உருவாக்கப்படுவதையும் ஒரு முக்கியமான மூலோபாய இலக்காகக் கருதுகின்றனர். மீண்டும் மீண்டும், கிரெம்ளின் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளின் உறுதியை குறைத்து மதிப்பிட்டுள்ளது.

உக்ரேனிய படைகளின் விரைவான முன்னேற்றம், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் மோதலின் பாரிய விரிவாக்கத்தின் விளைவாகும். அமெரிக்க துணை இராணுவப் படைகள் தரையில் இருந்து, தாக்குதலை நேரடியாக ஒருங்கிணைக்கின்றன. உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் இயக்கப்படுகின்றன, அவை இலக்குகளை நிர்ணயிக்கின்றன.

பெருகிய முறையில், உக்ரேனிய துருப்புக்கள் பயன்பபடுத்தும் ஆயுதங்கள், அவர்கள் அணியும் கவசம் மற்றும் அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நேட்டோ-தர உபகரணங்கள், அவற்றிற்கு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் பணம் செலுத்தப்படுகின்றன. மிக முக்கியமாக, HIMARS வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு மற்றும் M777 நீண்ட தூர ஹோவிட்சர், அத்துடன் HARM ரேடார் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போன்ற வடிவங்களில் ஆயுதங்களும் ரஷ்ய எல்லைகளுக்குப் பின்னால் டஜன் கணக்கான மைல்களைத் தாக்க படைகளும் உக்ரேனுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரேனிய துருப்புக்கள் NASAMS விமான எதிர்ப்பு அமைப்பால் ஆதரிக்கப்படுகின்றன, அதே அமைப்புத்தான் வெள்ளை மாளிகையையும் பாதுகாக்கிறது.

இந்தப் போரில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டின் அளவை அமெரிக்க ஊடகங்கள் மறைக்க முற்படுவதில்லை. ஹில் பத்திரிகையின் வார்த்தைகளில், அமெரிக்கா போரில் தலையிடுவதில் 'வெட்கமின்றி' மாறிவிட்டது. 'காலப்போக்கில், உக்ரேனியர்களுக்கு பெரிய, அதிக திறன் கொண்ட, நீண்ட தூர, கனமான ஆயுதங்களை வழங்க முடியும் என்பதை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது மற்றும் ரஷ்யர்கள் எதிர்வினையாற்றவில்லை' என்று உக்ரேனுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் வில்லியம் டெய்லர் செய்தித்தாளிடம் கூறினார்.

உக்ரேனிய முன்னேற்றத்தால் பரவசமடைந்த நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது: “மூத்த உக்ரேனிய அதிகாரிகள் கோடையில் தங்கள் அமெரிக்க சகாக்களுடன் உளவுத்துறைப் பகிர்வை தீவிரப்படுத்தினர், இது சமீபத்திய நாட்களில் வடகிழக்கில் பாரிய வெற்றிகளைப் பெற அனுமதித்துள்ளது, இது ரஷ்யாவின் பலவீனங்கள் குறித்து மிகவும் பொருத்தமான மற்றும் சிறந்த தகவல்களை வழங்க அமெரிக்காவை அனுமதித்தது.”

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கான உயர்மட்ட பென்டகன் அதிகாரி ஈவ்லின் ஃபர்காஸ் கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது, “இவர்கள் எட்டு வருடங்களாக [அமெரிக்க] சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். ஒழுங்கற்ற போர் பற்றி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுதல் மற்றும் உளவியல் செயல்பாடுகள் பற்றி எங்கள் உளவுத்துறை செயற்பாட்டார்களால் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

மோதலை 'பினாமிப் போர்' என்று குறிப்பிடுவது ஒரு ஒரு குறைமதிப்பீட்டுரை ஆக உள்ளது. உக்ரேனிய இராணுவம், அமெரிக்க இராணுவத்தின் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமாக மாறியுள்ளது, இது அமெரிக்க ஆயுதப்படைகளின் தரத்திற்கு ஆயுதம், நிதியுதவி மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான தாக்குதல், உக்ரேனியப் படைகளுக்கும், ரஷ்யாவிற்கும் பேரழிவுகரமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்திய சண்டைகளில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்கள் ரஷ்யாவை அடிபணிய வைக்கும் தங்கள் இலக்கை அடைவதில் முற்றிலும் உறுதியாக உள்ளன. இதன் விளைவுகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மீதான பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்துடன், உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் வாழ்க்கையை பொறுத்தவரை, ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் தேவைகளுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை.

கிரெம்ளின், இந்த இராணுவப் பேரழிவில் இருந்து ஒரு பாரிய இராணுவ விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று முடிவெடுக்கும் என்பது விலக்கப்படவில்லை, அது நேட்டோவின் விரிவாக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். சுயமுரண்பாடாக, ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கத்தை அடைவதற்கான கிரெம்ளினின் அவநம்பிக்கையான முயற்சிகள் ஒரு தேர்மோநியூக்ளியர் போரைத் தூண்டக்கூடிய தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் விலக்கவில்லை.

ஏப்ரல் 2 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ரஷ்ய சோசலிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்தில் டேவிட் நோர்த் எழுதினார்:

ஆச்சரியம் என்னவென்றால், புட்டினும் அவரது இராணுவ கட்டளையகமும் நேட்டோ உக்ரேனின் இராணுவத்திற்கு எந்த அளவிற்கு ஆயுதம் ஏந்தி பயிற்சி அளித்திருந்தது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் அவர்களது உளவுத்துறை சேவைகளின் இந்த தோல்வியானது, ஏகாதிபத்திய அமைப்பு பற்றிய பெருமளவில் யதார்த்தமற்ற, கிட்டத்தட்ட குழந்தைத்தனமான, அப்பாவித்தனமான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்தில் வேரூன்றி உள்ளது. மார்க்சிசத்துடனான அனைத்து தொடர்பையும் நிராகரிக்கும் அதே வேளையில், கிரெம்ளின் அதன் மேற்கத்திய கூட்டாளிகளுடன் 'சமாதான சகவாழ்வு' என்பதின் சாத்தியத்தில் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. புட்டின், படையெடுப்பிற்கு உத்தரவிடுவதற்கு சற்று முன்பு, ரஷ்யா மேற்கு நாடுகளால் “ஏமாற்றப்பட்டுவிட்டது” என்று பரிதாபமாக குற்றம்சாட்டினார்.

நோர்த் முடிவுக்கு வந்தார்:

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்ய வெகுஜனங்களின் பாதுகாப்பை முதலாளித்துவ தேசிய-அரசு புவிசார் அரசியலின் அடிப்படையில் மேற்கொள்ள முடியாது. மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக சோசலிசப் புரட்சியின் பாட்டாளி வர்க்க மூலோபாயத்தின் மறுமலர்ச்சியைக் கோருகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கம், பேரழிவிற்கு வழிவகுத்த முதலாளித்துவ மறுசீரமைப்பின் முழு குற்றவியல் நிறுவனத்தையும் நிராகரிக்க வேண்டும். மேலும் அதனது மாபெரும் புரட்சிகர லெனினிச-ட்ரொட்ஸ்கிச பாரம்பரியத்துடன் அதன் அரசியல், சமூக மற்றும் புத்திஜீவித தொடர்பை மீண்டும் நிறுவ வேண்டும்.

விளாடிமிர் லெனின் மீதான கண்டனத்துடன் உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலை புட்டின் தொடக்கினார். ஆனால், புட்டினின் கொச்சைகளுக்கு, இன்று நாம் வாழும் உலகம், லெனின் தனது 1916 ஆம் ஆண்டு படைப்பான ஏகாதிபத்தியத்தில் விவரித்த உலகம், இது போரும் காலனி ஆதிக்கமும் முதலாளித்துவ அமைப்பின் இன்றியமையாத பண்புகளின் வெளிப்பாடு என்பதை நிரூபித்தது.

ஏகாதிபத்தியம் என்பது வெறும் லெனினின் கண்டுபிடிப்பு, மேலும் ஒரு முதலாளித்துவ ரஷ்யா ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நடைமுறை சமரசத்தை அடைய முடியும் என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்தது. எவ்வாறாயினும், இது ஒரு மாபெரும் மாயை என்பதை அடுத்த மூன்று தசாப்தங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே மையப் பணியாகும். இதற்கு அமெரிக்க/நேட்டோ போர் பிரச்சாரத்தை பாதுகாக்கும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது சக்திகள் அனைத்துடனும் மட்டுமல்லாமல், சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததன் மூலம் உருவாக்கப்பட்ட பேரழிவிற்கு, ரஷ்ய தேசியவாதம் ஒரு தீர்வை வழங்குகிறது என்று கூறுபவர்களுடனும் ஒரு உடைவை கோருகிறது.

ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம்: ரஷ்ய இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்வியானது, போரின் மேலும் மேலும் இரத்தம் தோய்ந்த விரிவாக்கத்தை மட்டுமே முன்னறிவிக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள் மோசமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன, மேலும் அவர்கள் ரஷ்யாவைக் கைப்பற்றி அடிபணியச் செய்வதற்கான தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்கள்.

ரஷ்ய தோல்வி உக்ரேனிய சமுதாயத்தில் உள்ள மிகவும் பிற்போக்கு சக்திகளை மேலும் தைரியப்படுத்தும், அத்தோடு தைவான் மீது சீனாவுடன் ஒரு போரைத் தூண்டுவதன் மூலம் இந்த வெற்றியை மீண்டும் உருவாக்க முடியும் என்று நம்புவதற்கு அமெரிக்க போர் திட்டமிடுபவர்களை ஊக்குவிக்கும்.

ஆனால் இந்த விரிவாக்கம் அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வெகுஜனங்கள் மீதான போரையும் தீவிரப்படுத்தும். அவர்கள் போருக்கான செலவை உயர்வான விலைகள் மற்றும் வீழ்ச்சியடைந்த வாழ்க்கைத் தரங்களின் வடிவத்தில் செலுத்துவார்கள். ஏற்கனவே, இராணுவ வரவு-செலவுத் திட்டங்களின் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்புக்கு மத்தியில், இயற்கை எரிவாயுவின் விலைகள் ஐரோப்பாவில் 10 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் போர் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆம் நூற்றாண்டு மனித வரலாற்றில் மிகவும் அழிவுகரமான போர்களைக் கண்டது. 21 ஆம் நூற்றாண்டில், முதலாளித்துவம் இப்போது இன்னும் பெரிய அளவில் பேரழிவுகளுக்கு அச்சுறுத்துகிறது.

ஏகாதிபத்திய போர் உந்துதலை தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. அது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான அதன் பொருளாதாரக் கோரிக்கைகளை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும், மேலும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

Loading