முன்னோக்கு

வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இரயில்வே தொழிற்சங்கங்கள் பைடெனைச் சந்திக்கும் நிலையில், 500 இரயில்வே தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர் எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் ஒரு தேசிய இரயில்வே வேலைநிறுத்த ஆபத்து அதிகரித்து வரும் நிலையில், புதன்கிழமை இரவு இரண்டு கூட்டங்கள் நடந்தன. முதலாவது கூட்டம், வாஷிங்டன் மாநாட்டு அறையில் இரகசியமாக மூடிய கதவுகளுக்குப் பின்னால், இரயில்வே தொழிற்சங்கங்கள், இரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பைடெனுக்கு இடையே நடந்தது. 20 மணி நேரம் நீடித்து வியாழக்கிழமை அதிகாலை முடிவடைந்த அந்த தொடர் விவாதத்தின் நோக்கம், ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை உருவாக்கி வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இருந்தது.

நேற்று எட்டப்பட்ட உடன்பாடு, கடந்த மாதம் பைடெனின் ஜனாதிபதி அவசரகால வாரியத்தால் (Presidential Emergency Board - PEB) முன்மொழியப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் சிறிதளவு வார்த்தை மாற்றப்பட்ட ஒன்றாகும், இதை தொழிலாளர்கள் பெருமளவில் எதிர்க்கின்றனர் என்பதுடன், அதற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராக இருந்தனர். அதில் சம்பளத்துடன் கூடிய ஒரேயொரு மருத்துவ விடுப்பும் சம்பளம் இல்லாமல் மூன்று மருத்துவ விடுப்புகளும் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக, வாஷிங்டன் சதிகாரர்களின் நிலைப்பாட்டில் இருந்து, வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக அதில் 'பரிசீலனைக் காலகட்டத்தின்' (cooling off period) கால அளவு நீடிக்கப்பட்டிருந்தது.

A worker rides a rail car at a BNSF rail crossing in Saginaw, Texas, [AP Photo/LM Otero]

முக்கிய இடைக்காலத் தேர்தல்களுக்கு வெறும் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கான முயற்சியாக, காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் சட்டமசோதா நிறைவேற்றும் பரிசீலனைக்குச் செல்லும் கால வரம்புக்கு முன்னரே ஓர் உடன்படிக்கையை எட்டி விட வெள்ளை மாளிகை தீர்மானமாக இருந்தது. தன்னை ஒரு 'ஜனநாயக சோசலிசவாதியாக' காட்டிக் கொள்ளும் பேர்ணி சாண்டர்ஸ், பைடெனின் ஜனாதிபதி அவசரகால ஆணையத்தை (PEB) அமலாக்குவதற்காகக் குடியரசுக் கட்சியினர் கொண்டு வந்த சட்டமசோதாவை முடக்கி, செனட் தளத்தில் இருந்து, இந்தச் சதித் திட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகித்தார். கடந்த தேசிய இரயில்வே வேலைநிறுத்தத்தை முறியடிக்க 1991 இல் இரண்டு கட்சிகளின் பெரும் பெரும்பான்மைக்கு வாக்களித்த சாண்டர்ஸ், கால அவகாசம் பெறுவதற்காக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார், அதேவேளையில் அவர் பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீது நம்பகத்தன்மையைப் பலப்படுத்தி வருவதுடன், இரயில்வே துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டிருப்பதை மூடி மறைக்கிறார்.

சாண்டர்ஸ், இந்த விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள 'நிஜமான முன்னேற்றத்தை' அறிவிக்க உடனடியாக விரைந்தார். இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, வேலைநிறுத்தம் தொடங்கினால் அதைச் சட்டவிரோதமாக்க ஏற்கனவே முன்தயாரிப்பாக ஜனநாயகக் கட்சியினர் சட்டமசோதா தயாரித்து வைத்திருப்பதை வியாழக்கிழமை ஒப்புக் கொண்டார்.

இந்தப் புதிய தற்காலிக உடன்படிக்கை, வார்த்தைகளில் வெளிப்படவில்லை என்றாலும், யதார்த்தத்தில், தொழிற்சங்கங்களின் திரை மூலம் அமலாக்கப்படும் ஒரு அதிகார ஆணையாகும்.

வாஷிங்டன் வெளிநாட்டில் நடத்தும் அதன் அனைத்துப் போர்களையும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் நடத்துவதாகக் கூற அது ஒருபோதும் சோர்வதில்லை. ஆனால் அமெரிக்காவிலோ, அதைப் பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கு இருக்கும் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, மிகவும் அடிப்படை உரிமை கூட இருப்பதில்லை. இது அவர்களிடம் எல்லா சர்வாதிகாரங்களுக்கும் பொதுவான ஒன்றாக அமைந்துள்ளது. உண்மையில் சொல்லப் போனால், பைடென் வியாழக்கிழமை ட்விட்டரில் 'இரயில்கள் சரியான நேரத்தில் இயங்குவதாக' தம்பட்டம் அடித்தார், இந்த சொற்றொடர் பொதுவாக முசோலினியின் பாசிச இத்தாலி உடனும் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்க எதிர்ப்பு மீது அதன் கொடூரமான மற்றும் இரத்தக்களரியான ஒடுக்குமுறை உடனும் தொடர்புடைய ஒரு சொற்றொடர் ஆகும்.

காங்கிரஸ் சபைக்குக் கூடுதலாக, பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் பிரயோகமும், பிரதான வழிவகைகளில் ஒன்றாக உள்ளது, இவற்றைக் கொண்டு தொழிற்சங்க அதிகாரத்துவம் மூலமாக வேலைநிறுத்த உரிமை மறுக்கப்படுகிறது. நிர்வாகம் மற்றும் அரசுடன் முழுமையாக ஒருங்கிணைந்துள்ள தொழிற்சங்கங்கள், பல தசாப்தங்களாக வேலைநிறுத்தங்களைத் தடுக்கவும் அல்லது தனிமைப்படுத்தவும், ஒன்றன் பின் ஒன்றாக விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் திணிக்கவும் செயல்பட்டு வந்துள்ளன. 'அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர் சார்பு ஜனாதிபதி' என்று தன்னை கூறிக் கொள்ளும் பைடென், ஏற்கனவே இருக்கும் இந்த ஊழல் உறவுகளைச் சார்ந்திருக்கவும் மற்றும் பெரிதும் விரிவாக்கவும் முயன்று வருகிறார். வெள்ளை மாளிகை மத்தியஸ்தம் செய்து இரயில்வே தொழிலாளர்களிடம் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் விற்றுத் தள்ளப்படுவதற்கு முன்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் துறைமுகத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இதேபோன்ற சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

ஆனால் இவை அனைத்தும் சவால் செய்யப்படாமல் இருந்த காலகட்டம் முடிந்து விட்டது. உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கம் போராட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றும், தொழிற்சங்க எந்திரம் மற்றும் முதலாளித்துவ அரசு இரண்டுக்கும் எதிராக ஒரு கிளர்ச்சியாக வளர்ச்சியடைய தொடங்கி உள்ளன. இதன் ஒழுங்கமைக்கப்பட்ட மிக உயர்ந்த மூலோபாய வெளிப்பாடு, உலகெங்கிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்கள் வேகமாக அதிகரித்து வருவதில் வெளிப்படுகிறது.

இந்த வளர்ந்து வரும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் எதிர்ப்பில் ஒரு மிகப் பெரிய மைல்கல்லாக இரண்டாவது கூட்டம் நடந்தது. இது ஓர் இணையவழி கூட்டமாக நடத்தப்பட்டது, சாமானிய இரயில்வே தொழிலாளர்களின் குழு (RWRFC), உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச கூட்டணி ஆகியவை முன்னெடுத்த இதில் 500 க்கும் மேற்பட்ட இரயில்வே துறை தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள். இது ஜனநாயக முறையில் ஒரு வெளிப்படையான விவாதமாக இருந்தது, இதில் அனைத்து முக்கிய கைவினைத் தொழில்களின் தொழிலாளர்களில் இருந்து தேசியளவில் அனைத்து இரயில்வே தொழிலாளர்களும் பரந்தளவில் பிராந்திய ரீதியில் பிரதிநிதித்துவம் செய்தனர்.

தொழிலாளர்கள் அவர்கள் மீதான சுரண்டல் நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீது உணரும் உள்ளார்ந்த வெறுப்பை அக்கூட்டத்தின் கருத்துக்கள் வெளிப்படுத்தின. இயந்திரவியல் துறை தொழிலாளரும், RWRFC இன் ஸ்தாபக உறுப்பினருமான மார்க் கூறுகையில், “ஒன்று மாற்றி ஒன்றாக ஒப்பந்தங்களில், நம்மிடம் இருந்து சம்பள மற்றும் சலுகை விட்டுக்கொடுப்புகள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் நாம் நம் ஆரோக்கியத்தையும் உயிரையும் பணயம் வைக்கிறோம். விடுமுறைகள், பிறந்தநாட்கள், குடும்ப ஒன்றுகூடல்கள், இறுதி சடங்குகள், இன்னும் எத்தனையோ விஷயங்களுக்கு நாட்களை மாற்றி அமைத்து நம்முடைய பெரும்பாலான குடும்பங்கள் தாங்கொணா தியாங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

'நான் சாமானியத் தொழிலாளர் குழுவில் இணைய இதெல்லாம் தான் காரணங்கள். ஒழுங்கமைத்துக் கொள்ளவும், நம் ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தவும் — என்ன விலை கொடுத்தாவது அத்தகைய உரிமைகளைப் பறிப்பதற்காக செனட்டில் உள்ள 60 பேர் தீர்மானிப்பதாக அல்ல, அந்த வாக்குகள் கௌரவிக்கப்படவும் — நம் வேலைநிறுத்த உரிமையை முடக்கும் இரயில்வே தொழிலாளர் சட்டத்தை ஒழிக்கவும், அதிகாரத்துவம் மற்றும் தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து விடுபடவும், அதிகாரத்தை மீண்டும் சாமானியத் தொழிலாளர்களிடம் கொண்டு வருவதற்குமே நான் இதில் இணைந்தேன்.'

'அரசாங்கம், இரயில்வே சேவை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க உயர் நிர்வாகிகளுக்கு இடையே நிலவும் ஊழல் உறவுகளுக்கு' எதிராக ஓர் 'ஐக்கிய முன்னணி' அமைப்பதற்காக இக்குழுவில் சேருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து அவர் தன் பேச்சை நிறைவு செய்தார். அவர் முடிவாக கூறினார், 'இது, நடவடிக்கை எடுக்கக் கோரும் முன்னோடியில்லாத நேரம்.”

சிகாகோ பொறியாளர் ரவுல் கூறினார், 'நான் ஒரு விவசாயியைப் போல நடத்தப்படுவது எனக்கு சோர்வளிக்கிறது.' ஒரு வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து இரயில்வே சேவை நிறுவனங்கள் எரிச்சலூட்டும் வகையில் எச்சரித்தன, அதேவேளையில் ரவுல் கூறுகையில், “பத்தாயிரக் கணக்கான வேலைகளை அகற்றியதன் மூலம் இரயில்வே சேவை நிறுவனங்கள் 'தான் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தி' இருக்கின்றன என்று விடையிறுத்தார். அமெரிக்க இரயில்வே சேவை வலையமைப்பு தொழிலாளர்களின் உழைப்பால் கட்டமைக்கப்பட்டது, அதில் 'புலம்பெயர்ந்தவர்கள், அடிமைகள் மற்றும் சீனர்களும்' உள்ளடங்குவார்கள் '…இந்த நாட்டின் வெற்றிக்கும் மற்றும் செழிப்புக்கும் தொழிலாளர்கள் பங்களித்தனர், ஆனால் அதற்குரிய கௌரவம் நமக்குத் வழங்கப்படவில்லை,” என்றார்.

இரயில்வே தொழிலாளர் ஒருவரின் மனைவி பேசுகையில், அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டுக்குக் குழிபறிப்பதிலும், சாமானியத் தொழிலாளர்களைப் பலப்படுத்துவதிலும் இணையம் வகிக்கும் பாத்திரம் குறித்து பேசினார். “உடனுக்குடன் தகவல் பரிமாறப்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம். … இப்போது என்ன நடந்து வருகிறதோ அதில் உள்ள ஒரு முக்கிய வித்தியாசமாக இதை நான் கருதுகிறேன்,” என்றார். 'ஜனாதிபதி அவசரகால ஆணையம் அதன் பரிந்துரைகளை வெளியிட்ட போது, நம் அனைவருக்கும் உடனடியாக அது கிடைத்தது, தொழிற்சங்கங்கள் முன்னோக்கி நகர்ந்து ஓர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னரே நமக்கு அது வாசிக்கக் கிடைத்தது... இது நமக்கு முன்னர் இருந்ததை விட அதிக பலத்தைக் கொடுக்கிறது. இணையம், அவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஓர் அசுரன். அவர்கள் முன்னர் வைத்திருந்த கட்டுப்பாட்டை போல இனி அவர்களால் கட்டுப்படுத்த முடியாது,” என்றார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், சாமானியத் தொழிலாளர் கட்டுப்பாட்டைப் பெற போராடுவதற்கும் ஒரு தளமாக, ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மாக் ட்ரக் ஆலை தொழிலாளி வில் லெஹ்மனும் அக்கூட்டத்தில் உரையாற்றினார். ஒரு சோசலிசவாதியான லெஹ்மன், தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார், 'நாம் உருவாக்கும் செல்வ வளத்தை ஏதோ ஒரு சிலர் தனக்கெனக் குவித்துக் கொள்ளாமல், சமத்துவ உணர்வோடு, நாம் உருவாக்கும் செல்வத்தை நாமே எவ்வாறு வினியோகிக்கிறோம் என்பதற்காக, தொழிலாளர்களின் கரங்களில் அதிகாரம் வேண்டும்.” 2021 இல் வொல்வோ ட்ரக்ஸ் ஆலை வேலைநிறுத்தத்தை ஆதரிக்க மாக் ட்ரக்ஸ் ஆலையில் ஒரு சாமானியத் தொழிலாளர் குழுவை நிறுவிய அவரின் சொந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அக்கூட்டத்தின் முடிவில், அதில் கலந்து கொண்டவர்கள் இரயில்வே தொழிலாளர்களின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற பெருவாரியாக வாக்களித்தனர், அது பின்வருமாறு குறிப்பிட்டது:

ஜனநாயக ரீதியில் ஒன்றுகூடிய சாமானிய இரயில்வே துறை தொழிலாளர்களின் இந்தக் கூட்டம் பின்வரும் தீர்மானம் எடுக்கிறது:

1. வேலைநிறுத்தம் செய்வதற்கான நம் ஜனநாயக உரிமையை மீறுகின்ற மற்றும் நாம் ஏற்றுக் கொள்ளாத மற்றும் சாமானியத் தொழிலாளர் குழு ஒப்புதல் வழங்காத ஓர் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கின்ற காங்கிரஸின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

2. பல ஆண்டுகளாக சரிந்து வரும் சம்பளங்களை ஈடு செய்ய பெரியளவிலான ஒரு சம்பள உயர்வு; அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்கும் வகையில் வாழ்க்கைச் செலவுகளை மறுசீரமைப்பது; மூர்க்கமான வருகைப் பதிவேட்டு கொள்கைகளை நிறுத்துவது; உத்தரவாதமான ஓய்வு நேரம் மற்றும் மருத்துவ விடுப்புகள்; ஒரு நபர் வேலைமுறையை முன்நகர்த்துவதை நிறுத்துவது உட்பட நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் ஒப்பந்தத்தை நாம் கோருகிறோம்.

3. நாங்கள் ஏற்காத மற்றும் வாக்களிக்காத ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாக திணிக்கும் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் எங்களை வேலை செய்ய வைக்கும் எந்தவொரு முயற்சியும், சாமானியத் தொழிலாளர் குழுவின் தெளிவான அறிவுறுத்தல்களை மீறுவதாக இருக்கும் என்பதை நாங்கள் தொழிற்சங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த், அவர்களின் அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளர்களிடம் பேசினார்.

“இங்கே பேசிய ஒவ்வொருவரும், இந்த அமைப்புகள் உங்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற உண்மையை ஏதோ விதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் உங்கள் கட்டுப்பாடு இல்லை,” என்று கூறிய அவர், 'ஆகவே, நாம் சாமானியத் தொழிலாளர் குழுக்கள் என்று பேசும் போது, உண்மையில் நாம் என்ன பேசுகிறோம் என்றால், தொழிலாளர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்த எவ்வாறு வழிவகைகளை உருவாக்குகிறார்கள் என்று பேசுகிறோம்?' என்றார்.

அமெரிக்கப் புரட்சியில் காலனிகளால் நிறுவப்பட்ட தகவல்தொடர்பு குழுக்களுடன் இந்தச் சாமானியத் தொழிலாளர் குழுக்களை அவர் ஒப்பிட்டார். 'பரந்த நிலப்பரப்பின் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் அவர்களின் சொந்தக் கொள்கையை நெறிப்படுத்தவும், அரச அதிகாரத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், அந்த மக்களை ஒருங்கிணைக்கவும், ஒரு புதிய அமைப்பாக, அதில் இருந்து தான் கான்டினென்டல் காங்கிரஸ் (Continental Congress) உருவானது.”

'இதை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், உங்களிடம் மிகப் பெரிய அதிகாரம் இருக்கும்,” 'ஆனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு வேலையிடத்திலும், ஒரு மாற்று கட்டமைப்பை அமைக்க வேண்டும், அவ்விதத்தில் தான் நீங்கள் விற்கப்பட்டு விட்டீர்கள் என்ற வார்த்தையைக் கேட்கும் போது, அதுவே கதையின் முடிவாக இருக்காது,” என்றார். “உங்கள் எதிரிகளுக்குச் சேவையாற்றி வரும் எந்திர நிர்வாகிகளின் முடிவை மாற்றவும், எதிர்வினையாற்றவும், எதிர் கட்டளை விதிக்கவும்' நீங்களே வழிவகைகளை உருவாக்க வேண்டும்.

அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, தொழிற்சங்கங்களும், பெருநிறுவனங்களும் மற்றும் அரசும் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுத்து, நிறுவன சார்பு ஒப்பந்தத்தைத் திணிக்க சதி செய்து கொண்டிருந்ததைக் குறித்து நோர்த் எச்சரித்தார். பைடெனின் தரகு வேலையில் முடிக்கப்பட்ட அவரின் ஓர் ஒப்பந்தத்தை அவர் அறிவித்த போது, ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த எச்சரிக்கைகள் ஊர்ஜிதமாயின.

அந்தக் கூட்டமும், அது நிறைவேற்றிய தீர்மானமும், மாற்றுத் தலைமைக்கான இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு பலமான அடித்தளத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு தளங்களிலும் மற்றும் முனையங்களிலும் இந்தக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், பைடென் தரகு செய்து முடித்த விற்றுத்தள்ளலை நிராகரிக்க கூட்டங்கள் நடத்துவதன் மூலமும், முடிவெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் பொறுப்புக்களை ஏற்க சாமானியத் தொழிலாளர் குழுக்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இரயில்வே தொழிலாளர்களே இதை இப்போது முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

Loading