உக்ரேனில் ரஷ்யாவின் தோல்விக்குப் பின்னர், அமெரிக்கா ரஷ்யாவுடனும் சீனாவுடனும் மோதலை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆறு மாத ஆக்கிரமிப்பில் மாஸ்கோவின் வடக்கு முன்னணி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரிலும், தைவான் மீது சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளிலும் அமெரிக்கா தனது ஈடுபாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஒரு வார இடைவெளியில், உக்ரேனிய படைகள் டஜன் கணக்கான மைல்கள் முன்னேறி, பாரிய அளவிலான ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதோடு உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்களையும் கைப்பற்றினர்.

வியாழக்கிழமை, பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்தது, மேலும் இது நாள் வரை ஒதுக்கப்பட்ட 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளுடன் சேர்கிறது.

இந்த புதிய ஆயுத விநியோகம், போர் தொடங்கியதிலிருந்து 21 வது 'கொடுப்பனவு' ஆகும், ஹிமார்ஸ் (HIMARS) ஏவுகணை அமைப்பிற்கான வெடிமருந்துகள், 105 மிமீ பீரங்கிகளின் 36,000 தோட்டாக்கள், எதிர்-பேட்டரி ரேடார் (counter-battery radar) மற்றும் ஆயிரம் துல்லியமாக வழிகாட்டப்பட்ட 155 மிமீ பீரங்கி தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

இது இன்றுவரை, பல்லாயிரக்கணக்கான டாங்கி-எதிர்ப்பு ஏவுகணைகள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், 15 ஹிமார்ஸ் ஏவுகணை ஏவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் அமெரிக்காவின் அதிநவீன கப்பல்-எதிர்ப்பு மற்றும் விமான-எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது.

அமெரிக்க செனட்டர்கள் உக்ரேனுக்கு இன்னும் அதிகமான ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர், அமெரிக்க செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல், ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ATACMS ஏவுகணையை உக்ரேனுக்கு வெள்ளை மாளிகை வழங்க வேண்டும் என்று கோரினார்.

“உக்ரேனியர்களுக்கு நாம் கொடுப்பதை விட அதிகமான ஆயுதங்கள் தேவை. அவர்கள் அவற்றை விரைவாகப் பெறத் தொடங்க வேண்டும், மேலும் அவர்களுக்கு நீண்ட தூர ATACMS ஏவுகணைகள், பெரிய ட்ரோன்கள் மற்றும் டாங்கிகள் போன்ற புதிய திறன்கள் தேவை” என மெக்கானெல் கூறினார்.

செனட்டர் மார்க்கோ ரூபியோ மேலும் கூறுகையில், “நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் உள்ளே ஆழமாக குறிவைத்து ஒரு பரந்த மோதலைத் தூண்டக்கூடும் என்பதே சிலர் சொல்லும் கவலை என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் மிகவும் சிரமப்படுகிறேன் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது.”

உக்ரேனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான இந்தக் கோரிக்கைகள், மோதலில் அமெரிக்க குறிக்கோள்கள் பற்றிய மிகத் தெளிவான அறிவிப்புடன் இணைந்திருந்தன.

'உத்வேகம் உண்மையில் உக்ரேனுக்கு சாதகமாக மாறியுள்ளது, அவர்கள்தான் உண்மையில் சூழ்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கிறார்கள்' என்று ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் தளபதி பென் ஹோட்ஜஸ் அறிவித்தார்.

அவர் மேலும் கூறினார், 'ரஷ்ய கூட்டமைப்பின் சரிவின் தொடக்கத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” மேலும் “மக்கள்தொகை உண்மையில் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்ல, அதாவது 120 வெவ்வேறு இனக் குழுக்கள் அங்கே உள்ளன…

'துவா, சைபீரியா மற்றும் செச்சினியாவில் உள்ளவர்கள் மற்றும் பிறர்... பிரிந்து செல்வதற்கான வாய்ப்பைப் பார்க்கலாம்… நான் நினைக்கிறேன் நாங்கள்...
ஒட்டுமொத்தமாக மேற்குலகமும் கூட்டாக இருக்க வேண்டும்... சிந்திக்க வேண்டும்... இதன் தாக்கங்கள் என்ன என்பது பற்றி?”

கியேவிலிருந்து ரஷ்யா பின்வாங்கியதற்கும், புச்சாவில் ரஷ்ய அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கும் பின்னர், அமெரிக்காவின் நோக்கம் 'ரஷ்யாவிற்கு வெளியே அதிகாரத்தை முன்னிறுத்தும் ரஷ்யாவின் திறனின் முதுகை உடைப்பதே' என்ற தனது பிரகடனத்தை ஏப்ரல் மாதம் ஹோட்ஜஸ் வெளியிட்டார்.

ஏப்ரல் மாதத்தைப் போலவே, போரில் அமெரிக்க ஈடுபாட்டின் புதுப்பிக்கப்பட்ட விரிவாக்கம், இம்முறை இஸூம் (Izum) புறநகர்ப் பகுதியில், ரஷ்யா பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளுடன் சேர்ந்துள்ளது.

இந்த இராணுவ நகர்வுகள், அமெரிக்க-நேட்டோ பொருளாதாரப் போரின் விரிவாக்கத்துடன் சேர்ந்துள்ளன. வெள்ளியன்று, ஜேர்மன் அரசாங்கம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான Rosneft க்கு சொந்தமான மூன்று சுத்திகரிப்பு நிலையங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. 'இது நமது நாட்டைப் பாதுகாப்பதற்கான தொலைநோக்கு எரிசக்தி கொள்கை முடிவு' என்று ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறினார்.

ரஷ்யாவுடனான போரின் விரிவாக்கத்துடன், ரஷ்யாவின் சரிவை அடுத்து அமெரிக்கா சீனாவுடனான அதன் மோதலை அதிகரித்துள்ளது.

புதன்கிழமை, செனட் வெளியுறவுக் குழு தைவான் கொள்கைச் சட்டத்தை முன்னோக்கி நகர்த்த வாக்களித்தது, இது தைவானுக்கு 6.5 பில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்பும் மற்றும் அமெரிக்காவின் ஒரே சீனக் கொள்கையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவரும் மசோதா.

இந்த மசோதா, 'தைவான் ஒரு முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாக நியமிக்கப்பட்டதைப் போலவே கருதப்படும்' என்று கூறுகிறது, இது தைவானுடன் ஒரு இராணுவ ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்தி, தைவானுடன் எந்த இராஜதந்திர உறவுகளும் இல்லை என்ற அமெரிக்காவின் முறையான நிலைப்பாட்டை அழிக்கிறது.

முக்கியமான வகையில், தைவானுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் 'தற்காப்பு முறையில்' பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகளுக்குப் பதிலாக, 'மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆக்கிரமிப்புச் செயல்களைத் தடுக்க உதவும் ஆயுதங்களை' அமெரிக்கா வழங்கும் என்ற அறிவிப்புடன் மாற்றுகிறது, இந்த ஆயுதங்களை 'முன்கூட்டிய' மோதலில் பயன்படுத்த முடியும் என்ற வாய்ப்பை எழுப்புகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஈடுபடும், சீனாவுடனான அதன் மோதலில் தனது ஈடுபாட்டை அதிகரித்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் போர் தொடங்கிய பின்னர் நேருக்கு நேர் சந்திப்பை நடத்தினர். ரஷ்யாவின் இராணுவ தோல்வியால் தூண்டப்பட்ட நெருக்கடி காட்சிப்படுத்தப்பட்டது.

'உக்ரேனிய நெருக்கடி தொடர்பாக எங்கள் சீன நண்பர்களின் சமநிலையான நிலைப்பாட்டை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்' என்று கூட்டத்தின் தொடக்கத்தில் புட்டின் கூறினார். 'இது தொடர்பாக உங்கள் கேள்விகளையும் கவலைகளையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.”

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான புட்டினின் கலந்துரையாடலிலும் இதே போன்ற பதட்டங்கள் காணப்பட்டன. 'இன்றைய காலகட்டம் போர்க்காலம் அல்ல என்பதை நான் அறிவேன், இது குறித்து உங்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்' என புட்டினிடம் மோடி கூறினார். 'உக்ரேனில் மோதல் குறித்த உங்கள் நிலைப்பாடு, நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தும் கவலைகள் எனக்குத் தெரியும்' என்று புட்டின் கூறினார். “இதை விரைவில் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.”

ரஷ்ய இராணுவ தோல்வியால் தூண்டப்பட்ட நெருக்கடி இருந்தபோதிலும், ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க போர் உந்துதலால் புறநிலை ரீதியாக நெருக்கமாக இணைக்கப்படுகின்றன.

பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினரான அலெக்சாண்டர் காபூவேவ் கருத்துத் தெரிவிக்கையில், 'புட்டின் உக்ரேன் மீது வெறி கொண்டவராக இருந்தால், [Xi] யதார்த்தமாக என்ன செய்ய முடியும்?' காபூவேவ் கூறினார்… 'புட்டின் ஆட்சியின் வெளியேற்றமும் ரஷ்யாவில் மேற்கத்திய சார்பு அரசாங்கத்தின் சாத்தியமற்ற வாய்ப்பும் சீனாவிற்கு ஒரு கெட்ட கனவு.'

வடக்கு உக்ரேனில் ரஷ்ய தோல்வியால் உற்சாகமடைந்த அமெரிக்கா, மனிதகுலம் அனைத்தையும் அச்சுறுத்தும் ஒரு உலகளாவிய இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளை மட்டுமே அதிகரித்து வருகிறது.

Loading