முன்னோக்கு

“தலையிடவில்லை" என்ற பாசாங்குத்தனத்தைக் கைவிட்டு, அமெரிக்கா ரஷ்யாவுடனான போரை விரிவாக்க முனைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் கிரிமியாவின் கருங்கடல் தீபகற்பத்தின் ரஷ்ய இராணுவத் தளங்களில் நடந்த தொடர்ச்சியான பெரும் வெடிப்புகள், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனிய எல்லையில் தொடுக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியப் போரில் ஒரு புதிய, இன்னும் அதிக ஆபத்தான கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

அந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் கியேவ் இருப்பதை ஏறக்குறைய உக்ரேனிய அதிகாரிகள் அனைவரும் ஆமோதித்துள்ளதுடன், இன்னும் நிறைய வரவிருப்பதாக அவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள். உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக் கூறுகையில், அந்த வெடிப்புகளை ஆரம்ப எதிர் தாக்குதலின் பாகமாக விவரித்தார். “தளவாடங்கள், வினியோக பாதைகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஏனைய இராணுவ உள்கட்டமைப்பு இடங்களை அழிப்பதே எங்கள் உத்தி. இது அவர்களின் சொந்த படைகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.” கிரிமியாவை ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்கும் ரஷ்யாவால் கட்டப்பட்ட கெர்ச் பாலத்தைத் தாக்கும் திட்டங்களைச் சுட்டிக் காட்டிய பொடோலியாக், 'அது மாதிரியான இடங்கள் அழிக்கப்பட வேண்டும்' என்றார்.

Smoke rises over the site of explosion at an ammunition storage of Russian army near the village of Mayskoye, Crimea, Tuesday, Aug. 16, 2022. [AP Photo] [AP Photo]

அந்த வெடிப்புகளுக்கான இரண்டு சூழல்கள் மட்டுமே உள்ளன, அவை இரண்டுமே 'வாஷிங்டனில் தயாரிக்கப்பட்டது' என்ற முத்திரையைக் கொண்டுள்ளன.

உக்ரேனுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படாத அமெரிக்க ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் ரஷ்ய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தந்திரமாகத் தப்பித்து, அந்த வெடிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை ஜேர்மன் Der Spiegel வழங்கி உள்ளது. ரஷ்ய இலக்குகள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னாலும் முடிவெடுக்கும் நடைமுறையில் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ளதை உக்ரேன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வெடிப்புகளுக்கு உக்ரேனிய சிறப்புப் படைகளின் நடவடிக்கையே காரணம் என்று அமெரிக்க பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிப்புகளை ரஷ்யாவுக்கு எதிராக 'அறைகூவல்' விடுக்கும் 'துணிச்சலான' நடவடிக்கையாகப் பாராட்டி இருந்த நியூ யோர்க் டைம்ஸ், இத்தகைய படைகளின் செயல்பாடுகளைக் குறித்தும், நவ-பாசிச அமைப்புகளான Right Sector மற்றும் அசோவ் பட்டாலியன் ஆகியவற்றால் பயிற்றுவிக்கப்பட்ட அந்தப் படை உறுப்பினர்களில் ஒருவரைக் குறித்தும் புதன்கிழமை பூரிப்புடன் குறிப்பிட்டது. டைம்ஸ் தகவல்படி, இந்தப் படைப் பிரிவுகள் ரஷ்ய இராணுவத் தளங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு மட்டும் பொறுப்பாகவில்லை, மாறாக 'ஒத்துழைக்க' கூறி ஆசிரியர்கள் உட்பட உக்ரேனிய தொழிலாளர்களை பயமுறுத்துவதற்கும் பொறுப்பாகின்றன.

இந்த அதிவலது தீவிரவாத படைகளுக்கு ஆயுதமளித்து சிஐஏ பயிற்சி அளித்துள்ளது. உக்ரேனிய சிறப்பு நடவடிக்கை படைகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை 2015 க்குப் பிந்தைய ஒரு கிளர்ச்சிக்குத் தயாரிப்பு செய்ய அவர்களுக்கு சிஐஏ ஒரு விரிவான இரகசிய பயிற்சி திட்டத்தை நடத்தி இருப்பதாக ஜனவரியில் யாஹூ நியூஸ் குறிப்பிட்டது. இந்தத் திட்டம் எவ்வாறு 'ரஷ்யர்களைக் கொல்வது' என்று உக்ரேனியர்களைப் பயிற்றுவித்துள்ளதாக ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரி அப்பட்டமாகத் தெரிவித்தார், அவர் தொடர்ந்து கூறுகையில், “அமெரிக்கா ஒரு கிளர்ச்சிக்குப் பயிற்சி அளித்து வருகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

புட்டின் ஆட்சியின் அரசியல் திவால்நிலை மற்றும் பிற்போக்குத்தன்மை மற்றும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பு என எதுவாக இருந்தாலும், இந்தப் போரானது ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டு, இப்போது நிதி வழங்கப்பட்டு, விரிவாக்கப்படுகிறது என்பதே உண்மை விஷயமாகும்.

உக்ரேனில் பெப்ரவரி 2014 இல் ஏகாதிபத்தியம் முடுக்கி விட்ட ஆட்சிக்கவிழ்ப்புச் சதியில் இருந்து நேட்டோ திட்டமிட்டு ஆயுதமயப்படுத்தி பயிற்சி அளித்துள்ள ஓர் இராணுவம் மற்றும் துணை இராணுவப் பாசிச படைப்பிரிவுகளை ரஷ்ய இராணுவம் எதிர்கொள்கிறது. அவற்றின் செயல்பாடுகள் கியேவில் இருந்து அல்ல, மாறாக வாஷிங்டனில் இருந்து திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

2014 இல் 130,000 ஆக சிதைந்து கிடந்த உக்ரேனிய இராணுவம் 2021 இல் ஏறக்குறைய 250,000 க்குப் பெரிதாக்கப்பட்டு, நேட்டோ மேற்பார்வையில் மற்றும் நிதியுதவியில் மிகப் பெரியளவில் செப்பனிடப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பெப்ரவரியில் இந்தப் போர் தொடங்குவதற்கு முன்னரே கூட, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகள் அங்கே பல நூறாயிரக் கணக்கான துருப்புகளுக்கு நேரடியாகப் பயிற்சி அளித்திருந்தன. இத்தகைய பயிற்சி திட்டங்கள் பெப்ரவரியில் இருந்து பாரியளவில் விரிவாக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் துணை இராணுவப் படைப்பிரிவுகள் உக்ரேனிய துருப்புகளுக்கு நடைமுறைப் பயிற்சியும் அளித்து வருகின்றன.

போருக்கு முன்னர் 40 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு வறிய நாடான உக்ரேனுக்குள் முன்னோடி இல்லாத வகையில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வெள்ளமென பாய்ச்சப்பட்டுள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட் தகவல்படி, ஜனவரி 24 இல் இருந்து ஏகாதிபத்திய சக்திகள் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க உறுதியளித்துள்ளன. அமெரிக்கா இதுவரை 25 பில்லியன் டாலர்களுடன் முன்னிலையில் உள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து ($4 பில்லியன்), போலந்து ($1.8 பில்லியன்) மற்றும் ஜேர்மனி (1.2 பில்லியன் டாலர்) மதிப்பில் வழங்கி உள்ளன.

போரைக் குறித்த ஊடகங்களின் செய்திகள் தேசிய உளவுத்துறை எந்திரத்தால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போதோ, அவற்றுக்கு வெள்ளை மாளிகை அளிக்கும் முடிவுகள் மற்றும் அறிக்கைகளில் இருந்து, அதாவது ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா 'ஈடுபடவில்லை' என்ற எந்தவொரு பாசாங்குத்தனமும் கைவிடப்பட்டுள்ளது. உண்மையில், அமெரிக்க ஊடகங்களில் கிரிமியா மீதான உக்ரேனின் தாக்குதல்கள் பற்றிய ஆரவாரமான செய்திகள் வேண்டுமென்றே ரஷ்யாவுக்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டலின் சுவடுகளைத் தாங்கி உள்ளன.

மூன்றாம் உலகப் போர் ஆபத்து குறித்து பைடென் நிர்வாகம் வெளிப்படையாக எச்சரித்துள்ளது, இருப்பினும் தனக்குத்தானே அது அமைத்துக் கொண்டிருந்த அமெரிக்க ஈடுபாட்டின் வரம்புகள் எனக் கூறப்படும் ஒவ்வொன்றையும் வேண்டுமென்றே மீறி உள்ளது.

கிரிமியா மீதான உக்ரேனின் தாக்குதல்கள் கிரெம்ளினால் உயிர்பிழைப்புக்கான ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டு, ஓர் அணு ஆயுதப் பரிவர்த்தனையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகளும் அத்துடன் மேற்கத்திய இராணுவ வல்லுனர்களும் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர். இருப்பினும், உக்ரேனில் உள்ள அதன் பினாமி படைகளைப் பயன்படுத்தும் அமெரிக்கா துல்லியமாக அது போன்றவொரு விடையிறுப்பைத் தூண்ட எல்லாவற்றையும் செய்து வருகிறது.

கிரெம்ளின், இது வரை, போரை விரிவாக்குவதற்கான வாஷிங்டனின் வெளிப்படையான முயற்சிகளுக்கு அதன் விடையிறுப்பைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ரஷ்ய தன்னலக் குழுக்கள் மற்றும் அதன் அரசு எந்திரத்திற்குள் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து சீரழித்த எதிர்-புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மிதமிஞ்சிய வளர்ச்சியான இந்த ரஷ்ய தன்னலக்குழு, ஏகாதிபத்தியத்துடனான அதன் இரத்தக்களரியான எதிர்தாக்குதலுக்கு முற்போக்கான விதத்தில் இல்லையென்றாலும் ஓர் ஒத்திசைவான விதத்தில் விடையிறுக்கக் கூட இயல்பிலேயே திறனற்றது.

ஆனால் புட்டின் ஆட்சியின் அரசியல் இயலாமை மற்றும் ஸ்திரமற்றத்தன்மை, போர் விரிவாக்க அபாயத்தைக் குறைக்காமல், அதற்கு நேர்முரணாக, மற்றொரு முக்கிய நிலைகுலைக்கும் காரணியாக உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள ஐக்கிய ரஷ்யக் கட்சிக்குள் உள்ள கூறுபாடுகள் 'முக்கிய முடிவெடுக்கும் மையங்கள்' மீது பதிலடி தாக்குதல்கள் நடத்த அழைப்பு விடுத்து வருகின்றன, இவை, அனைவருக்கும் தெரிந்த வகையில், கியேவில் இல்லை மாறாக புரூசெல்ஸ் மற்றும் வாஷிங்டனில் அமைந்துள்ளன.

போரிடும் தரப்புகளின் உள்நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் என்னவாக இருந்தாலும், உக்ரேன் போரைக் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே, நேட்டோ இந்தப் போரில் வடக்கு முனையைத் திறக்க ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்து வருகிறது. ஸ்காண்டிநேவியாவில், சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைய உள்ளன. பால்டிக் நாடுகளில், லித்துவேனியா மற்றும் லாத்வியாவின் அதிவலது அரசாங்கங்கள் ரஷ்யக் குடிமக்களுக்கு நுழைவனுமதி வழங்குவதை நிறுத்தி உள்ளன, அதேவேளையில் எஸ்தோனியா இரண்டாம் உலகப் போர் காலத்திய சோவியத் நினைவுச் சின்னங்களை அழிக்கத் தொடங்கி உள்ளது. அது கிரெம்ளினுக்கு எதிராக மட்டுமல்ல மாறாக உள்ளூரில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்ட ஓர் ஆத்திரமூட்டல் ஆகும், இவர்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தைப் போலவே, ஜேர்மன் பாசிசத்திற்கு எதிராகச் சோவியத் மக்களின் வெற்றிகரமான போராட்டம் மீது பலமாக விசுவாசம் கொண்டுள்ளனர்.

கிரெம்ளின், நேட்டோ உடனான இந்தப் போரின் முகப்பை விரிவாக்க எதிர்நோக்குகிறது என்பதற்கு ஓர் அறிகுறியாக, ரஷ்யா அதன் அண்டை நாடான பெலாருஸில் அதன் துருப்புகள் மற்றும் ஏவுகணைகளைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பெலாருஸ், உக்ரேன் உடனும், நேட்டோ உறுப்பு நாடுகளான போலாந்து, லாத்வியா மற்றும் லித்துவேனியா உடனும் எல்லைகளைப் பகிர்ந்துக் கொள்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதன் அடியாட்களின் தொடர்ச்சியான, பொறுப்பற்ற, முன்பினும் அதிக ஆணவமான ஆத்திரமூட்டல்களில் இருந்து ஒரேயொரு முடிவுக்கு மட்டுந்தான் வர முடியும்: அதாவது, அமெரிக்க ஆளும் வர்க்கம் ரஷ்யா உடனான போரை விரிவாக்க உறுதியாக உள்ளது. எல்லைகளைப் போலவே, இந்தப் போரின் நோக்கங்களும், உக்ரேனைக் கடந்து விரிகின்றன. ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து, உலகின் ஒரு புதிய மறுபங்கீட்டில், உக்ரேன் வெறும் ஒரு தொடக்கப் புள்ளி தான்.

Loading