ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு எவ்வாறு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இராணுவவாதத்தை ஆக்கிரோஷமாக புத்துயிர்ப்பிக்க ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நேட்டோவின் போரைப் பயன்படுத்துகிறது. பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின்லாம்ப்ரெக்ட் இனதும் சான்சிலர் ஓலாவ் ஷோல்ஸ் இனதும் (சமூக ஜனநாயக கட்சி - SPD) சமீபத்திய உரைகள் இதைப் பற்றி எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை.

பிப்ரவரி 14 அன்று முன்ஸ்டர் நகரில் உள்ள இராணுவத்தளத்தில் லித்துவேனியாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் ஜேர்மன் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் 2000. பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின் லம்பிரெக்ட் (SPD) உக்ரேனுக்கு நான்கு கூடுதல் சுய-இயக்க ஹோவிட்சர்கள் மற்றும் வெடிமருந்துகளை செப்டம்பர் அன்று வழங்குவதாக உறுதியளித்தார். [AP Photo/Martin Meissner]

செப்டம்பர் 12 அன்று வெளியுறவுக் கொள்கை முக்கிய உரையில், லம்பிரெக்ட் ஜேர்மனி பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஒரு முன்னணி பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று கூறினார்: 'ஜேர்மனியின் அளவு, அதன் புவியியல் இடம், அதன் பொருளாதார சக்தியினால் சுருக்கமாக, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் பலம் நம்மை முன்னணி சக்தி ஆக்குகிறது. இது இராணுவ ரீதியாகவும் தான்' என்றார்.

ஹிட்லரின் மூன்றாம் குடியரசின் வீழ்ச்சி மற்றும் இரண்டாம் உலகப் போரில் வேர்மாஹ்ட் (நாஜி ஆயுதப்படை) செய்த கொடூரமான குற்றங்களுக்கு எழுபத்தேழு ஆண்டுகளுக்கு பின்னர், ஜேர்மனி மீண்டும் ஒரு போர் சக்தியாக செயல்பட முடியும், மேலும் ஜேர்மன் இராணுவம் விரிவான போர்களை நடத்தகூடியதாக இருக்கும். 'நமக்கே வலிமையான, போருக்குத் தயாராக இருக்கும் ஆயுதப் படைகள் தேவை. அதனால் தேவை ஏற்பட்டால் நம்மையும் நமது கூட்டணியையும் தற்காத்துக் கொள்ள முடியும்' என்று லம்பிரெக்ட் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை, சான்சிலர் இதனையே பின்தொடர்ந்தார். பேர்லினில் நடந்த ஆயுதப் படைகள் மாநாட்டில் ஒரு உரையில், ஷோல்ஸ் கூடியிருந்த இராணுவத் தலைமையிடம் கூறினார்: 'மிகப்பெரும் பொருளாதார சக்தியையும், மக்கள்தொகையும் கொண்ட நாடாகவும், கண்டத்தின் நடுவில் உள்ள நாடாகவும் இருப்பதால் நமது இராணுவம் ஐரோப்பாவின் மரபுவழி பாதுகாப்பின் மூலக்கல்லாகவும், ஐரோப்பாவில் சிறந்த ஆயுதம் கொண்ட படையாக மாற வேண்டும்' என்றார்.

லம்பிரைக்ட்டும் ஷோல்ஸும் ஜேர்மன் சமூகமும் அரசியலும் முழுமையாக இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது எனக் கூறுகின்றனர். 'குறிப்பாக ஆயுதப்படைகள் எதிர்காலத்தில் நமது அரசியல் சிந்தனை மற்றும் செயல்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும்' என்று லம்பிரைக்ட் அறிவித்தார்.

ஜேர்மன் ஆயுதப் படைகள் 'பிரத்தியேகமாக வெளிநாட்டில், நெருக்கடி நடவடிக்கைகளில் ஒரு காவலர்களாகவோ அல்லது பொது நிர்வாகத்திற்கு உதவுவதாகவோ' உணரப்பட்ட காலம் முடிந்துவிட்டது என்று அவர் கூறினார். 'ஆயுதப்படைகள் மீண்டும் ஒருமுறை நமது பொது சேவைகளை வழங்குவதற்கான ஒரு மைய அதிகாரமாக பார்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் அவ்வாறு செய்யவேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஆயுதப்படைகளுக்காக 100 பில்லியன் யூரோக்கள் கொண்ட சிறப்பு நிதியை உருவாக்கியதை ஷோல்ஸ் பாராட்டினார். அதை அவர் பெப்ரவரி இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதே நேரத்தில், அவர் இந்த பிரமாண்டமான தொகை ஆரம்பம் மட்டுமே என்றும், அவர் அறிவித்த புதிய 'வெளிநாட்டு கொள்கை சகாப்தம்' என ஜேர்மன் இராணுவவாதம் உலக அரங்கிற்கு திரும்புவதற்கான இந்த உரையானது இன்னும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“சிறப்பு நிதி என்பது உண்மைதான். பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்துவோம் என்ற எனது கூற்றும் பொருந்தும்! நீங்கள் அதை பயன்படுத்தி திட்டமிடலாம்” என்று அவர் இராணுவத்திற்கு உறுதியளித்தார். 'ஆயுதப்படைகளின் திறன்களில் உள்ள இடைவெளிகள் பெரியவை'. ஆனால் அவர்கள் 'அவற்றில் மிகவும் முக்கியமானவற்றை விரைவாக மூடவேண்டும்' என்று அவர் கூறினார். அதற்காக 'போர் விமானங்கள், கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், யூரோஃபைட்டர்கள், மார்டர் (Marder) காலாட்படை சண்டை வாகனத்தின் அடுத்த தலைமுறை, 130 போர்க்கப்பல்களுக்கும், 126 பன்திறனுள்ள கப்பல்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஜேர்மனிக்கு 'பறக்கக்கூடிய விமானங்கள், பயணம் செய்யக்கூடிய கப்பல்கள், அவர்களின் ஆபத்தான பணிகளுக்கு உகந்ததாக இருக்கும் ஆயுதம் ஏந்திய படையினர்கள்' தேவை என்று ஷோல்ஸ் உறுமினார். 'ஐரோப்பாவில் சிறப்புப் பொறுப்பை வகிக்கும் எங்கள் அளவிலான ஒரு நாடு இவை அனைத்தையும் வழங்க முடியும்.' ஜேர்மனியும் இதற்கு 'நேட்டோவில் உள்ள நட்பு நாடுகளுக்கு' கடன்பட்டுள்ளது.

உலக அதிகாரத்திற்கான மூன்றாவது முயற்சியில் ஆளும் வர்க்கம் பின்பற்றும் மூலோபாயம் ஷோல்ஸால் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டது. ஜேர்மனி அதன் ஏகாதிபத்திய நலன்களை உலகளவில் தொடர அதன் தலைமையின் கீழ் ஐரோப்பாவை இராணுவ ரீதியாக ஒழுங்கமைக்க முயல்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் (இன்னும்) வெளிப்படையாக அமெரிக்காவை எதிர்க்க முடியாத வரை, இந்த மறுஆயுதமாக்கல் நேட்டோவின் கட்டமைப்பிற்குள் நடைபெறும்.

ஏனையவற்றுடன், சான்சிலர் 'நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் ஒரு ஐரோப்பிய தலைமையகம் தேவை என்றார் [...].' ஒருவேளை 'ஐரோப்பாவில் மிக முக்கியமான பிரச்சனை', 'ஆயுத அமைப்புகளும் மற்றும் ஆயுதங்களும் முற்றிலும் குழப்பமான பல எண்ணிக்கையில் இருப்பதாகும்'. 'ஐரோப்பிய திறன்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' மட்டுமே 'செயல் திறன் கொண்ட ஐரோப்பாவிற்கு வழிவகுக்கும். இந்த உள்ளடக்கத்தில், 'வான் பாதுகாப்புப் பகுதி குறிப்பாக முக்கியமானது. இது ஐரோப்பிய மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் நேட்டோவின் ஐரோப்பிய தூணை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாக இருக்கும்' என்றார்.

ஷோல்ஸ் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் தாக்குதலில் ஜேர்மனியின் 'முன்னணி பங்கு' பற்றி பெருமையாக கூறினார். 'துல்லியமாக 30,000 படையினர்கள், 85 விமானங்கள் மற்றும் கப்பல்களின் கணிசமான ஜேர்மன் பங்களிப்பின் காரணமாக, நேட்டோவின் பதிலளிக்கும் திறன் மற்றும் தடுக்கும் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது' என்று அவர் கூறினார். ஜேர்மனி, 'ஆரம்பத்திலிருந்தே இவை அனைத்திலும் ஒரு முன்னணி பாத்திரத்தை வகித்தது, அது எனக்கு முக்கியமானது' என்றார்.

இதன் விளைவாக, “நூற்றுக்கணக்கான ஜேர்மன் படையினர் பால்டிக் நாடுகளிலும், ருமேனியாவில், சுலோவாக்கியாவில் உள்ளனர். எங்கள் கடற்படை மற்றும் விமானப்படை பால்டிக் கடல் மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் அதிக அளவில் ரோந்து வருகிறது. இது, 'எங்கள் கிழக்கு கூட்டாளிகளுக்கு வழங்கிய உறுதியை விட அதிகமானதாகும்' என்று அவர் கூறினார். ஜேர்மனி, 'எங்கள் கண்டத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பில் ஒரு முன்னணி பாத்திரத்தை ஏற்க தயாராக உள்ளது' என்று அவர் கூறினார்.

பின்னர் அவர் தனது பார்வையாளர்களுக்கு 'பெண்களே, பெரியோர்களே, ஒரு புதிய சகாப்தம் என்பது பழைய உறுதிப்பாடுகளில் இருந்து விடைபெற வேண்டியுள்ளது. இது மூலோபாயரீதியாக மறுபரிசீலனை செய்வதையும் குறிக்கிறது. நேட்டோவிற்குள்ளும், மாட்ரிட் உச்சிமாநாட்டிலும் இந்த புதிய மூலோபாயக் கருத்தாக்கத்திலும் இதையே செய்தோம். எங்களின் போரிடும் சக்தியும் செயல்பாட்டுக்கான தயார்நிலையும் கணிசமாக அதிகரிக்கப்படும்” என்றார்.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான அணுசக்தி மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகிறது என்ற நேட்டோவின் புதிய மூலோபாயக் கருத்தாக்கம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை ஷோல்ஸ் இன்னும் விரிவாக விளக்க விரும்பவில்லை.

மாட்ரிட் ஆவணம் கூறுகிறது: “நாங்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் அணு ஆயுதம் ஏந்திய சக-போட்டியாளர்களுக்கு எதிரான மிகத்தீவிரமான, பல துறையிலான போர் உள்ளிட்ட தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான முழு அளவிலான படைகள், திறன்கள், திட்டங்கள், வளங்கள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்குதலை செய்வோம்” என்கிறது.

இந்த பைத்தியக்காரத்தனத்தின் விலை, போரில் பீரங்கித் தீவனமாகவும், ஆயுதக் குவிப்புக்கு நிதியளிப்பதற்காக பில்லியன் கணக்கான சமூகத் தாக்குதல்களின் வடிவத்திலும் தொழிலாள வர்க்கத்தினால் சுமக்கப்படும். வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் பணவீக்கம் ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், சமூக ஜனநாயகவாதிகள், தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைக் கட்சிகளின் போக்குவரத்து விளக்கு கூட்டணி அரசாங்கம் 2023 க்கான தற்போதைய வரவு-வரவு செலவுத் திட்டத்தில் அப்பட்டமான வெட்டுக்களைத் திட்டமிடுகிறது. சுகாதாரத்துறைக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மட்டும் €64 பில்லியனில் இருந்து €22 பில்லியனாக குறைக்கப்பட உள்ளது. இது ஜேர்மனியில் மட்டும் ஏற்கனவே சுமார் 150,000 இறப்புகளுக்கு வழிவகுத்துள்ள நடந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நிகழ்கின்றது.

நேட்டோ வெறுமனே, 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு' பதிலளிப்பதாகவும் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகவும் கூறும் உத்தியோகபூர்வ பிரச்சாரம் ஒரு வெட்கக்கேடான பொய்யாகும்.

உண்மையில், நேட்டோ சக்திகள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து ரஷ்யாவை முறையாக சுற்றி வளைத்து, மூலவளங்கள் நிறைந்த நாட்டை அடிபணியவைத்து, பிரித்து, ஏகாதிபத்திய சக்திகளால் சுரண்ட முற்படுகின்றன. பெப்ரவரி 24, 2022 அன்று புட்டினின் படையெடுப்பு, நேட்டோவின் தாக்குதலுக்கான ஒரு பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியின் அவநம்பிக்கையான பதிலளிப்பாகும்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையானது மக்களின் முதுகுக்குப் பின்னால் நீண்ட காலமாகத் தயாரிக்கப்பட்டதுடன் மற்றும் 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் வெளியுறவு மந்திரியாக இருந்த ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD), ஜேர்மனி, 'உலக அரசியலில் பக்கவாட்டில் இருந்து மட்டுமே கருத்து தெரிவிக்க முடியாத அளவுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் பெரியது மற்றும் மிகவும் வலிமையானது' என்று அறிவித்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர், உக்ரேனில் மேற்கத்திய சார்பு ஆட்சிக்கவிழ்ப்புடன் இந்த பேராசைமிக்க கூற்று முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. அப்போதும் கூட, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) போர்க் கொள்கையின் பின்னணியில் உள்ள வரலாற்று மற்றும் அரசியல் உந்து சக்திகளை பகுப்பாய்வு செய்து, ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதன் பாரிய தாக்கங்கள் குறித்து பின்வருமாறு எச்சரித்தது:

வரலாறு பழிவாங்கலுடன் திரும்பி வருகிறது. நாஜிகளின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் கைசர் பேரரசினதும், ஹிட்லரினதும் ஏகாதிபத்திய பெரும் சக்தி அரசியலை கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரச்சாரத்தின் வேகம் முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரை நினைவுபடுத்துகிறது. உக்ரேனில், ஜேர்மன் அரசாங்கம் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஒத்துழைப்பாளர்களின் பாரம்பரியத்தில் நிற்கின்ற ஸ்வோபோடா மற்றும் வலது பிரிவு பாசிசவாதிகளுடன் ஒத்துழைக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் ஜேர்மனி ஆக்கிரமித்திருந்த நாட்டை மீண்டும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு உந்துகளமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

தற்போது இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜேர்மனியும் நேட்டோவும் அணுசக்திகொண்ட ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் ஒரு போரை நடத்தி வருகின்றன. அவை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதுடன் வடக்கு உக்ரேனில் ரஷ்ய இராணுவம் எதிர்கொள்ளும் தோல்வியைத் தொடர்ந்து கியேவுக்கு இன்னும் கனரக ஆயுதங்களை வழங்குகின்றன. சமீபத்திய நாட்களில், ஜேர்மனி பல ராக்கெட் லாஞ்சர்கள், கவச வாகனங்கள் மற்றும் இராணுவத்தின் கையிருப்பிலிருந்து இருந்து மேலும் நான்கு ஹோவிட்சர்களை கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.

மேலும், ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உக்ரேனுக்கு Leopard 2 கனரக போர் டாங்கிகள் வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்காவில், உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பிரதேசத்தை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழங்குவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. அணுசக்தி மூன்றாம் உலகப் போரின் ஆபத்து தீவிரமாக இருந்தாலும், சாத்தியமான விளைவுகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

மாறாக, போர்க் கொள்கையும் சமூகச் செலவினக் குறைப்புக் கொள்கையும் நாடாளுமன்றத்தில் பெயரளவிலான 'இடது' கட்சிகளால் முதன்மையாக முன்னோக்கி தள்ளப்படுகிறது. சமூக ஜனநாயகக் கட்சி சான்சிலருக்கு ஷோல்ஸுயும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு லம்பிரெக்ட்டையும் வழங்கியது. பசுமைவாதிகள் வெளியுறவு மற்றும் பொருளாதார அமைச்சகங்களுக்கு தலைமை தாங்குவதுடன் உக்ரேனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்குள் அழுத்தம் கொடுப்பதில் தீவிரமானவர்களாக இருக்கின்றனர்.

இடது கட்சியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இது ஜேர்மன் அரசாங்கம் மற்றும் நேட்டோவின் போர்க் கொள்கைகளை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது. இது சாஹ்ரா வாகன்க்னெக்ட்டை சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சையால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியைப் போல் (AfD) அகதிகளுக்கு எதிரான அவரது ஆத்திரமூட்டல்களால் அல்லாது மாறாக அவர் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் போக்கை ஜேர்மன் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து விமர்சிப்பதால், இடது கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் இந்த முன்னாள் தலைவர் தாக்கப்பட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த போர்க் கொள்கையையும், ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதையும் இடதுபுறத்தில் இருந்து எதிர்க்கும் ஒரே கட்சியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து, அது ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், உலகெங்கிலும் கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்குள் நுழையும் மற்றும் ஆளும் வர்க்கம் உலகை ஒரு பேரழிவு தரும் மூன்றாம் உலகப் போரில் மூழ்கடிக்க அனுமதிக்காத தொழிலாள வர்க்கத்தின் மகத்தான எதிர்ப்பை அது தன்னை நோக்கி ஈர்க்கிறது.

Loading