பவுண்டின் பெறுமதி வீழ்ச்சிக்கு பின்னர் பிரிட்டன் ஒரு சமூக வெடிப்பின் விளிம்பில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பவுண்டின் மதிப்பில் முன்னோடியில்லாத வீழ்ச்சி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான சிக்கனத் தாக்குதலை முடுக்கி, வர்க்கப் போராட்டத்தின் பாரிய வெடிப்புக்கு வழி வகுக்கும். ட்ரஸ் அரசாங்கத்தையும் நடைமுறையில் அதன் தொழிற் கட்சி கூட்டாளிகளையும் தோற்கடிக்க ஒரு மூலோபாயத்தை தொழிலாளர்கள் வகுக்க வேண்டிய தேவையை இது அவசரமாக முன்வைக்கிறது.

பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் ரஷ்யாவுடனான அணுவாயுத போரில் 'உலகளாவிய அழிவை' தூண்டுவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்த பின்னர் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பதிலாக இங்கிலாந்து பொருளாதாரத்தில் அணுசக்தி பொத்தானை அழுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உருக்குலைவுக்கு அனுப்பியுள்ளார்.

பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் (இடது) மற்றும் நிதியமைச்சர் குவாசி குவார்டெங் ஆகியோர் செப்டம்பர் 23 அன்று நாடாளமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக அவர்களின் வளர்ச்சித் திட்டத்தை பற்றி விவாதித்தனர். 10 டவுனிங் ஸ்ட்ரீட், செப்டம்பர் 22, 2022 [Photo by Rory Arnold/No 10 Downing Street/Flickr / CC BY-NC-ND 4.0]

பெருநிறுவனங்களுக்கும், நகரத்தில் உள்ள டோரிகளின் நண்பர்களுக்கு 45 பில்லியன் பவுண்டுகள் 'உடைத்து பிடிக்கும்' வரிச் சலுகைகளை வழங்குவதற்காக 72 பில்லியன் பவுண்டுகள் அரசாங்கக் கடனைப் பெற்றதன் மூலம், நிதியமைச்சர் குவாசி குவார்டெங் சர்வதேச நிதியத்தின் நம்பிக்கையை இழந்தார். உலகளாவிய முதலீட்டாளர்களின் கவலை என்னவென்றால், ட்ரஸ் பெருவணிகத்திற்கு இன்னுமொரு மகத்தான கையளிப்பைச் செய்துள்ளார் என்பது அல்ல, ஆனால் சமூக சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்கள் மீதான ஆழமான தாக்குதல்களின் மூலம் அவர் இதைத் தயாரிக்கவில்லை என்பதாகும். முன்னாள் கன்சர்வேடிவ் அரசாங்க அதிபரும், பிரிட்டனின் 2008 க்கு பிந்தைய சிக்கன நிகழ்ச்சி நிரலின் தலைமை வடிவமைப்பாளருமான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் விளக்கியது போல், 'சிறு-நாடுகளின் வரி விகிதத்தையும் பெரிய-நாடுகளினது போன்ற செலவுகளையும் நீங்கள் கொண்டிருக்க முடியாது.'

ஸ்டேர்லிங்கின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், நிதிச் சரிவைத் தடுக்க 'எந்த அளவு தேவையோ' நீண்டகால பிரிட்டிஷ் அரசாங்கப் பத்திரங்களை வாங்கத் தொடங்குவதாக இங்கிலாந்து வங்கி அறிவித்தது. இதற்கு உறுதியளிக்கப்பட்ட 65 பில்லியன் பவுண்டுகள் இப்போது தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்பட வேண்டிய பெரும் தொகையுடன் சேர்க்கப்படும். தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு வாழக்கூடிய ஊதியம் கோரும் வேலைநிறுத்தங்களின் பெருகிவரும் அலைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் வட்டி விகிதங்களில் விரைவான உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் முதலீட்டாளர்கள் தெளிவுபடுத்தினர்.

ட்ரஸ் ஒரு சமூக வெடிமருந்த கிடங்கின் மேல் இந்த தீயை மூட்டியுள்ளார். பலவீனமான பவுண்டு, இறக்குமதி, குறிப்பாக எரிவாயு, எண்ணெய் மற்றும் உணவு ஆகியவற்றின் விலையை உயர்த்துவதால், ஏற்கனவே இங்கிலாந்தில் தத்தளித்து வரும் எரிபொருளினதும் உணவினதும் வறுமையினால் குளிர்காலம் மோசமாகிவிடும். வீட்டுக்கடன்கள் உயரும் போது உண்மையான ஊதியங்கள் சுருங்குவதால், மற்றும் ஓய்வூதியங்களில் ஒரு சாத்தியமான சரிவு போன்றவை வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருப்பதான ஒரு குளிர்காலமாக இது அச்சுறுத்துகிறது.

முன்னாள் Bank of England ஆளுனர் மார்க் கார்னி, 'அமைப்புமுறை செயல்படாத நிலையில் அவருக்குப் பின் அப்பதவிக்கு வந்தவர் சரியாக அவ்விடத்தில் நுழைந்தார்' என்றார். அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகளை 'குறுகிய காலக் கொடுப்பனவுகளை ஈடுசெய்ய இயலாமல்... நிதிச் சந்தைகள் வழியாகச் செல்லுத்துவதற்கு' பாதுகாப்பதே அவர் அடையாளம் கண்ட முக்கிய அச்சுறுத்தலாகும்”.

இந்த கோடையில் தொடங்கிய ஆயிரக்கணக்கானோரை உள்ளடக்கிய ஒரு விரைவாக தீவிரமடையும் வேலைநிறுத்த அலையை உடைக்காமல் அரசாங்கத்தின் சொந்த நிகழ்ச்சி நிரலையோ அல்லது அதன் விமர்சகர்களின் கோரிக்கைகளையோ நிறைவேற்ற முடியாது. ட்ரஸ் இதுவரை சிறிய வரவு-செலவுத்திட்டத்தைப் பாதுகாத்து, பின்வாங்க அல்லது குவார்டெங்கை பதவிவிலக்கவோ மறுத்துவிட்டார். பணக்காரர்களுக்கான வரிகளைக் குறைப்பது 'அவசியம் பிரபலமானது அல்ல' ஆனால் 'அனைவருக்கும் உதவுகிறது, ஏனெனில் இது பொருளாதாரத்தை வளர்க்க உதவுகிறது என்று ட்ரஸ் கூறினார். நீண்டகாலமாக, இந்த நாட்டில் விவாதம் விநியோகம் பற்றியது எனக் கூறிய பிரதமர் இல்லத்தில் உள்ள அவரது செய்தித் தொடர்பாளர், 'பிரதமரும் நிதியமைச்சரும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்குத் தேவையான விநியோக பக்க சீர்திருத்தங்களில் பணியாற்றி வருகின்றனர். இது வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்' என்றார்.

ஆனால் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் முடுக்கிவிடப்படும் என்று அவரது அரசாங்கம் தெளிவுபடுத்தியது. கருவூலத்தின் தலைமைச் செயலர் கிறிஸ் பிலிப், டாலருக்கு எதிராக பவுண்டுகள் சரிந்ததற்கு 'மன்னிப்புக் கேட்கப் போவதில்லை' என்று கூறினார். ஆனால், கடந்த ஆண்டு 3 விகிதமே உயர்த்தப்பட்ட பின்னர் 10 சதவிகிதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள சமூகநலத்திட்ட உதவிகள் பற்றி இப்போது 'மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினார். அவர் 'செயல்திறன்களை [வெட்டுகளை] எங்கெல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ அங்கெல்லாம் தேடுவார்.'

வெட்டுக்களுடன் மட்டும் விஷயங்கள் நிற்காது. இங்கிலாந்து வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் சேர் சார்லி பீன் பின்வருமாறு எச்சரித்தார். “வெளிப்படையாக கூறினால், நாட்டின் எல்லைகளை மிக அடிப்படையான மறுபரிசீலனை செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் சமாளிக்க முடியும்... இப்போது இலவசமாக வழங்கப்படும் சுகாதார சேவையை, சமூக காப்பீடு மூலம் நிதியளிக்கப்படும் திட்டத்திற்கு மாற்றப்பட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

ட்ரஸின் கடுமையான நிலைப்பாடு அரசாங்கம் வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியத்தை மட்டுமே எழுப்புகிறது. டோரி கட்சியில் ஆழமான பிளவுகள் உள்ளன. இது போரிஸ் ஜோன்சனை அகற்ற வழிவகுத்த குழு மோதல்களிலிருந்து உண்மையாக மீளவில்லை. இந்த வாரம் ட்ரஸுக்கு எதிராக எழுப்பப்பட்ட பெரும்பாலான விமர்சனங்கள் அவரது முக்கிய தலைமைப் போட்டியாளரும் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக்கின் நிலைப்பாட்டை எதிரொலிக்கின்றன. ஒரு டோரி எம்.பி செய்தியாளர்களிடம் ட்ரஸ் மற்றும் குவார்டெங் 'பொருளாதாரத்தை அழிவிற்கு இட்டுச்சென்றுவிட்டனர். அவர்கள் இப்போது எப்படித் தொடரப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. டோரி பின்வாங்கு 1922 குழுவிற்கு நம்பிக்கையில்லா தீர்மான கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாத மூன்று நாள் வேலைநிறுத்தத்தின் போது இங்கிலாந்தின் சவுத் யோர்க்ஷயரில் உள்ள டான்காஸ்டர் மார்ஷ்கேட் டிப்போவில் மறியல் பாதையில் வேலைநிறுத்தம் செய்யும் இரயில் தொழிலாளர்கள்

எவ்வாறாயினும், இந்த முறை டோரிகளை காப்பாற்ற ஒரு 'அரண்மனை சதி' போதுமானதாக இருக்காது. கோடை முழுவதும், 1980 களுக்குப் பின்னர் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழில்துறை நடவடிக்கைகளின் பரந்த அலையை இங்கிலாந்து கண்டுள்ளது. இந்த போராட்டங்களை கண்காணித்து நசுக்குவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை, இரயில் போன்ற ஒரே தொழிலில் உள்ள தொழிலாளர்களின் வெவ்வேறு குழுக்களின் வேலைநிறுத்தங்களை வேண்டுமென்றே பிரிப்பதன் மூலமும், மிகப்பெரிய குழுக்களான கல்வி மற்றும் தேசிய சுகாதார சேவையில் உள்ள தொழிலாளர்களின் ஒரு முடிவில்லாத வாக்குப்பதிவின் மூலமும் மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தாக்குதலாக இது வளர்வதைத் தடுத்துள்ளனர்.

ஆனால் வேலைநிறுத்தம் இன்னும் தீவிரமடைந்து வருகிறது. மூன்று இரயில் தொழிற்சங்கங்களும் கூடுதல் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதேபோல் அக்டோபர் மற்றும் நவம்பரில் தகவல் தொடர்பு ஊழியர் சங்கம் மேலும் 21 நாட்கள் நடவடிக்கையை அறிவிக்கும். பிரித்தானியாவின் இரண்டு பெரிய கொள்கலன் துறைமுகங்களான பெலிக்ஸ்டோவ் மற்றும் லிவர்பூல் ஆகியவற்றிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. மேலும் அமசனில் உள்ள தொழிற்சங்கமயப்படுத்தப்படாத மற்றும் எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலைகள், துளையிடும் மேடைகள் ஆகியவற்றில் தொழிற்சங்கத்தை நேரடியாக மீறும் வகையில் தன்னியல்பான நடவடிக்கை வெடித்துள்ளது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மீட்க தொழிற் கட்சி முன்வந்துள்ளது

ஆட்சியின் ஒரு அசாதாரண நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை காப்பாற்ற தொழிற் கட்சி அரசாங்கத்தில் ஒரு பங்குவகிக்க தயாராகி வருகிறது. இந்த மாத தொழிற் கட்சி மாநாட்டின் அபத்தமான காட்சிகளுக்கும் மற்றும் சேர் கீர் ஸ்டார்மர் ஒரு சாத்தியமான பிரதம மந்திரியாக ஊடகங்களால் உயர்த்தப்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.

வணிகம், சிக்கனம், போருக்கான ஒரு வலதுசாரி தேசியவாதக் கட்சியாக தொழிற் கட்சியின் அரசியல் நற்சான்றிதழ்களை ஊதிப்பெருப்பிப்பதற்காக ஸ்டார்மர் வருடாந்த கட்சி மாநாட்டை மிகக்கவனமான ஒழுங்கமைத்திருந்தார்.

இராணிக்காக ஒரு நிமிட மௌனத்துடன் மாநாடு தொடங்கப்பட்டு, ஒரு மாபெரும் பிரித்தானியக் கொடி மற்றும் இராணியின் இன்னும் பெரிய உருவப்படத்தின் கீழ் 'இராணியை கடவுள் காப்பற்றவேண்டும்' என்ற பாடல் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு பாடப்பட்டது. தனது முக்கிய உரையில், ஸ்டார்மர் ரஷ்யாவிற்கு எதிராக போர்முழக்கமிடப்பட்டதற்காக மிகப்பெரிய கரவொலியை பெற்றார். தொழிற் கட்சி 'புட்டினின் அச்சுறுத்தல்களையும் ஏகாதிபத்தியத்தையும் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்காது' என்று உறுதியளித்தார் மற்றும் பாசிசத்தால் தூண்டப்பட்ட 'ஸ்லாவா உக்ரேனி' என்ற முழக்கத்தை அறிவிக்க காங்கிரஸை அழைத்தார். - உக்ரேனுக்கு மகிமை.

செப்டம்பர் 27, 2022 அன்று இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கீர் ஸ்டார்மர் தனது உரையை நிகழ்த்துகிறார் [AP Photo/Jon Super]

முதலாளித்துவ வர்க்கத்திற்கு, ஸ்டார்மர் தொழிற் கட்சியை 'பொருளாதாரத்திற்கு தாம் வழங்கும் ஒரு பங்காகக் கடனைக் குறைக்க' உறுதியளித்தார். அது 'பொதுச் செலவுகள் தேசிய நலனைக் குறிவைப்பதை உறுதிசெய்யும்'.

மேலும், டோரிகளைப் போலல்லாமல், அவர் தொழிற் கட்சியின் சேவைகளை மட்டும் வழங்காமல், வர்க்கப் போராட்டத்தை நசுக்க “அரசாங்கம், வணிகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான உண்மையான கூட்டு” மூலம் தொழிற்சங்கங்களின் சேவைகளை அதற்கு வழங்குவதன் மூலம் அவ்வாறு செய்ய முடியும்.

'நாடு முதல், கட்சி இரண்டாவது' என்பது அவரது முக்கிய வார்த்தையாக இருக்கும்.

டோரிகள் வீழ்ச்சியடைந்தால் தொழிற் கட்சி அரசாங்கத்தின் அரசியல் பணியை மட்டும் ஸ்டார்மர் விளக்கவில்லை. ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நெருக்கடியான நிலையை எதிர்த்து போராட தேசிய ஐக்கியத்திற்கான ஒரு அரசாங்கத்தில் சேருவதற்கு தொழிற் கட்சியின் தயார்நிலையை அவர் மீண்டும் கூறினார்.

ஏப்ரல் 2020 இல் தொழிற் கட்சித் தலைவராகிய உடனேயே ஸ்டார்மர் அத்தகைய உறுதிமொழியை அளித்தார், தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தைப் பயன்படுத்தி, “ஒரு தேசமாக இப்படி ஒன்றிணைவதற்கான எங்கள் விருப்பம் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் உள்ளது… எனது தலைமையின் கீழ் நாங்கள் எதிர்க் கட்சிக்கான விருப்பத்திற்காக இல்லாமல் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுவோம். கட்சி அரசியல் நோக்கத்திற்காக அல்லது சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்காது இருப்போம். எங்கே சரியானது என்பதை கண்டு அங்கு தைரியத்துடன் ஆதரிப்போம்” என்றார். அவர் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனை அழைத்து, 'அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக பணியாற்ற' முன்வந்தார்.

மே 2022 இல் இராணியின் உரையைக் கேட்க தொழிற் கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரும் போரிஸ் ஜோன்சனும் மேல் சபைக்கு செல்கின்றனர் [Photo by Jessica Taylor/UK Parliament/Flickr / CC BY-NC 4.0]

முந்தைய நாளில் ஸ்டார்மருக்கு நெருக்கமான பல நபர்கள் பைனான்சியல் டைம்ஸிடம் டோரிகளுடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியிருந்தன. சேர் கெய்ரின் 'அரசாங்கத்தில் உள்ளவர் போன்ற' உள்ளுணர்வால் ஐக்கித்திற்கான அரசாங்கத்தில் சேருவதற்கான வாய்ப்பை வழங்கினால் அது 'இல்லை என்று சொல்வது கடினம்' என்று வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டது. 'ஒரு நெருக்கடி மற்றும் மக்கள் இறக்கும் போது நீங்கள் பிரித்தானிய பொதுமக்களின் முன்னே மகிழ்ச்சியாக காட்சியளிக்க முடியாது' என்று அவர்கள் கூறினார்.

மற்றொருவர், “உடல்கள் தீவிரமான முறையில் குவியத் தொடங்கி மற்றும் பூட்டுதல் தொடருமானால் நாங்கள் உள்நாட்டு அமைதியின்மையைக் காண வேண்டியிருக்கும்… ‘நீங்கள் ஏன் உள்ளே வந்து எங்களுக்கு உதவக்கூடாது?’ என்று ஜோன்சன் கூறக்கூடும்” என்றார்.

1931 தேசிய அரசாங்கத்தின் படிப்பினைகள்

அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையை, இப்போது பிரிட்டிஷ் மற்றும் உலக முதலாளித்துவம் சூழ்ந்துள்ள நெருக்கடி சக்திவாய்ந்த முறையில் எதிரொலிக்கின்றது. அப்போது, வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சி பெரும் மந்தநிலையின் தொடக்கத்தை அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ராம்சே மெக்டொனால்டின் சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கம், பவுண்டின் மதிப்பிழப்பிற்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதல்களைச் சுமத்தியது. கட்சியில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினரும் தொழிற்சங்கங்களும் இது பாரிய அரசியல் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என அஞ்சியதால், மெக்டொனால்ட் தனது இராஜினாமாவை ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரிடம் வழங்கச் சென்றார். மன்னர் கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும்படி அவரை வலியுறுத்தினார். மன்னரின் தூண்டுதலின் பேரில் அவர்கள் ஒரு கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொண்டனர். டோரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பகுதியை அதற்கு வழங்கினர். மெக்டொனால்டும், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து பிரிந்த 14 பேரும் தேசிய தொழிற் கட்சியை உருவாக்கினர்.

முன்னாள் தொழிற் கட்சி தலைவர் ராம்சே மெக்டொனால்ட் [Photo: Library of Congress's Prints and Photographs division/Unknown date]

லியோன் ட்ரொட்ஸ்கி இதுபற்றி பின்வருமாறு கடுமையாகக் கருத்துத்தெரிவித்தார். 'முதலாளித்துவ அமைப்பின் சரிவு மற்றும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைதல் ஆகியவை அதிகாரத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தையும் பிரிட்டனுக்கான உண்மையான மற்றும் உயிருள்ள கேள்வியாக மாற்றியபோது, மக்டொனால்ட் கன்சர்வேடிவ் முதலாளித்துவ வர்க்கத்திற்காக ஒரு பயணி புகைபிடிக்கும் பெட்டியில் இருந்து புகைபிடிக்காத இடத்திற்கு மாறும்போது சிறிது கவலைப்படுவது போல தொழிற் கட்சி முகாமை விட்டு வெளியேறினார்..'

தேசிய அரசாங்கம் இத்தகைய தண்டனைக்குரிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அவற்றில் பல தொழிற் கட்சி நிர்வாகத்திடம் இருந்து செயல்படுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்குள் கிளாஸ்கோ மற்றும் சால்ஃபோர்ட் தெருக்களிலும், ல கிளாஸ்கோ கிரீன் மற்றும் பெக்ஸ்லி சதுக்கத்திலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் போலிசாருக்கும் இடையே சண்டைகள் நடந்தன. இன்வர்கார்டனில் சுமார் 1,000 மாலுமிகள் கடற்படை ஊதியக் குறைப்புக்காக கலகம் செய்தனர்.

ஆனால் தொழிலாள வர்க்கம் தொழிற் கட்சியால் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கப்பட்டது. அதன் செலவினக் குறைப்புக்கள் மற்றும் வேலையின்மையை நிவர்த்தி செய்யத் தவறியதால், கட்சி அக்டோபரில் நடந்த தேர்தலில் மெக்டொனால்டின் கூட்டணியால் நசுக்கப்பட்டது. 1930கள் முழுவதும், பிரிட்டன் டோரிகளின் தலைமையிலான தேசிய அரசாங்கங்களால் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான படுகொலைகளுக்குள் இழுக்கப்படுவதற்கு முன்னர் 'முப்பதுகளின் பட்டினியின்' பயங்கரமான இழப்பை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.

ஒரு பொதுத் தேர்தலுக்கும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்குமாக

மெக்டொனால்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஸ்டார்மர் இன்று யாருடன் முறித்துக் கொள்ள வேண்டும்? தொழிற் கட்சியின் கோர்பின்வாத 'இடதுகள்' என்பது பிளேயரிசவாதிகளுக்கு அதன் அடிமைத்தனமான விசுவாசத்தை காட்டுவதால் மிகவும் சிறிய பிரிவாக சுருங்கிப்போயுள்ளது. ஸ்டார்மரின் கட்டளைக்குட்பட்டு நேட்டோ மீதான எந்த விமர்சனத்தையும் கூறுவதைக் கைவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு எதிரான சூனிய வேட்டையை எதிர்த்துப் போராட மறுத்ததால், 200,000 தொழிற் கட்சி உறுப்பினர்கள் வெறுப்புடன் வெளியேறுவதைக் இது கண்டது. அத்துடன் தொற்றுநோய்களின் போது ஜோன்சன் அரசாங்கத்தின் சமூக படுகொலை கொள்கைக்கு ஆதரவளித்தது.

1930களைப் போலவே, அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட அளவில் ஒரு தசாப்த கால சமூக அவலமும் போரும் சர்வதேச அளவில் அச்சுறுத்துகின்றது.

தொழிற் கட்சியும் டோரிகளும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் ஆழ்த்துவதையும், சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி மற்றும் நலன்புரி அமைப்புகளில் எஞ்சியிருப்பதை அழித்து, உலகை அணு ஆயுத அழிவிற்கு நெருக்கமாகக் கொண்டுவருவதைத் தடுக்க தொழிலாள வர்க்கம் செயல்பட வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய மறுஎழுச்சியுடன் போக்குவரத்து மற்றும் கப்பல் போன்ற முக்கியமான துறைகள் உட்பட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பிரித்தானிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக அதன் மகத்தான சமூக சக்தியை இயக்கக்கூடிய ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவை.

தொழிலாளர்கள் ஒவ்வொரு பணியிடத்திலும், குடியிருப்புகளிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டுவதன் மூலம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தங்கள் போராட்டங்களை நாசப்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் அதிகாரத்தை உடைப்பதற்கும், பெரும் நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், தனியார் இலாபத்திற்கு அல்லாமல் சமூகத் தேவைக்கேற்ப பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு தொழிற்துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இது உதவும். உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் அத்தகைய போராட்டம் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த தொழிற்துறை தாக்குதல் உடனடியாக பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணியானது, நிதிய தன்னலக்குழுவின் சவாலற்ற அரசியல் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டுவருவதையும், உண்மையான சோசலிச, சர்வதேசிய மற்றும் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டு, டோரிகளுக்கும் தொழிற் கட்சிக்கும் இடையிலான வெஸ்ட்மின்ஸ்டர் சதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

Loading