பிரான்சின் குரோன்ட்புய் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் பணவீக்கத்திற்கு எதிராக பேசுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் நாடு தழுவிய பிரெஞ்சு எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 10 சதவீத உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த குரோன்ட்புய் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் சந்தித்தனர். தொழிலாளர்கள், பணவீக்கத்தின் மீதான தங்கள் கோபத்தையும், போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில், போராட்டங்களுக்கான பரந்த பேரணியைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் விருப்பத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

டோட்டல் (Total) ஊழியரான ஃப்ளோரியான், “பிரான்சில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் போலவே நாமும் பணவீக்கத்தின் தாக்கத்தை உணர்கிறோம். பல்பொருள் அங்காடிகளில், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் விலைகள் அதிகரித்து வருகின்றன, அதை மாத இறுதியில் உணர்கிறோம். நாம் சாப்பிடும் விதத்தில், குறைவாக பயணிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். எல்லாவற்றிலும் செலவைக் குறைப்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்; இந்த நேரத்தில் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கிறது.'

குரோன்ட்புய் தளத்தில் பணிபுரியும் டோட்டல் துணை ஒப்பந்ததாரரின் பணியாளரான ஃபிராங்க் மேலும் கூறினார், “வாழ்க்கை கடினமானது. டீசல் விலை, எரிபொருள் எண்ணெய் விலை எல்லாம் ஏறிக்கொண்டே போகிறது. இப்போதைக்கு, எங்கள் வேலையில் தாக்கத்தை நாங்கள் உணரவில்லை, ஆனால் டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் விலைகளில் ஏற்படும் பாதிப்பை நாம் ஏற்கனவே பார்க்க முடியும். கடைகளுக்கு செல்லும்போது நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம், நாங்கள் அத்தியாவசிய பொருட்களையே மிகக் குறைவாக வாங்குகிறோம், தேவையானவை மட்டுமே, மாத இறுதிக்கு வருவதற்கு என்ன தேவை என்பது மட்டுமே.

ஒரு டோட்டல் ஊழியரான அலெக்சி, பல ஆண்டுகளாக மற்றும் பல தசாப்தங்களாக தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது என சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது: பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது, நாங்கள் சம்பளத்தை உயர்த்த விரும்புகிறோம். ஊதியங்கள் அதற்கேற்ப பின்பற்றப்படுவதில்லை... ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு ஒரு சிறிய உயர்வு உள்ளது, ஆனால் உண்மையில் பணவீக்கம் என்ன என்பதுடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை.'

குரோன்ட்புய் தொழிலாளர்கள், நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களின் ஏகபோகமாக இருக்கும் பெரும் இலாபங்களுக்கும், தொழிலாளர்கள் மீதான கடுமையான பொருளாதார அழுத்தங்களுக்கும் இடையே உள்ள வெளிப்படையான சமத்துவமின்மை பற்றி கேள்வி எழுப்பினர்.

ஃப்ளோரியான், குரோன்ட்புய் டோட்டல் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளி

'நாங்கள் டோட்டலில் வேலை செய்கிறோம், இது இந்த நேரத்தில் பெரும் இலாபம் ஈட்டுகிறது,' என்று ஃப்ளோரியான் கூறினார், 'இது எங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று, கடந்த ஆண்டு கோவிட் காலத்தில் அவர்கள் பங்குதாரர்களுக்கு 8 பில்லியன் ஈவுத்தொகையை வழங்கினர் என்று நான் நினைக்கிறேன், மேலும் ஆண்டு ஊதியத்தில் ஒரு சிறிய சதவீதத்தை பெற நாங்கள் போராட வேண்டியிருந்தது. எங்களுக்குப் புரிந்துகொள்வது கடினம், ஏனென்றால் எல்லா இலாபமும் பங்குதாரர்களுக்கு போகிறது என்று நாங்கள் உணர்கிறோம், மேலும் நாங்கள், தொழிலாளர்கள் வண்டியின் ஐந்தாவது சக்கரம் போலவே நடத்தப்படுகிறோம்.

உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் மீது பணவீக்கத்தை குற்றம் சாட்டுவதற்கான உத்தியோகபூர்வ முயற்சிகளை தொழிலாளர்கள் நிராகரித்தனர், இது அமெரிக்க-நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் மிகவும் ஆபத்தான, முழுமையான போருக்கு வழிவகுத்தது. அலெக்சி கூறினார், “உக்ரேன், பணவீக்கத்திற்கு ஒரு வசதியான சாக்குப்போக்கு. பிரான்சில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் கூட பல்பொருள் அங்காடிகளில் உயர்வதை நாங்கள் காண்கிறோம், எனவே உக்ரேனில் நடக்கும் போருடனான தொடர்பை நான் காணவில்லை. அரசாங்கம் தான் இதை செய்து வருகிறது” என்றார்.

தொடரும் கோவிட்-19 தொற்றுநோயை மோசமாக கையாண்டதன் காரணமாக பொருளாதார மற்றும் சமூக சீர்குலைவுகளின் பங்கையும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர், இது ஐரோப்பாவில் 2 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது.

ஃப்ளோரியன் கூறினார், 'இது ஒரு பேரழிவு என்பது எனது தாழ்மையான கருத்து. சுகாதாரப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. மருத்துவமனைகள் மிக விரைவாக நிரம்பி வழிந்ததை கண்டோம். பல ஆண்டுகளாக எல்லாம் மோசமாக நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. ‘முகக்கவசங்கள் பயனற்றவை’ என்று அவர்கள் சொன்ன கதைதான் இன்னும் என் தொண்டையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது முகக்கவசம் எப்போதும் உதவுகிறது என்பதை அறிய ஒருவர் மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை; அதனால் முகக்கவசங்கள் பயனற்றவை என்று தொலைக்காட்சியில் சொல்வதில் அர்த்தமில்லை. நான் அதை அபத்தமானதாக கண்டேன்.'

குரோன்ட்புய் தளத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர் என்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அசையா தன்மையால் ஏற்படும் சிரமங்களை தொழிலாளர்கள் வலியுறுத்திக் காட்டினர்: பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் யூரோக்கள் பெரும் வரவு-செலவுத் திட்டங்களைக் கொண்டிருந்தாலும், இந்தத் தொகைகள் அதிகாரத்துவத்தால் விழுங்கப்படுகின்ற அதேவேளையில் வேலைநிறுத்தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. தொழிற்சங்கத் தலைமைகள் 'செல்வந்தர்களின் ஜனாதிபதியான' மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துகையில், அவர்கள் தொழிலாளர்களின் கோபத்தை அடக்குகின்றனர்.

'தொழிலாளர்கள் வெளியே சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், அவர்கள் ஊதியத்தை இழக்கிறார்கள், அதனால் அது சிக்கலானது,' என்று அலெக்சி கூறினார், அதே நேரத்தில் ஃப்ளோரியன் தற்போதைய வேலைநிறுத்தம் பற்றிக் கூறினார்: 'ஒவ்வொருவரும் தங்களுடைய இடத்தில் கொஞ்சம் போராடுகிறார்கள். ... ஒரு இயக்கம் இருக்கும்போது, அது ஒரு தனிப்பட்ட பணியிடம் அல்லது நிறுவன அளவில் இருக்கும் என்பது உண்மைதான். எங்களுடன் லாரி ஓட்டுனர்களும் விவசாயிகளும் இணைந்து நடத்திய பெரிய போராட்டங்கள் இனி நடக்காது.”

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது ஏன் கடினம் என்று ஃபிராங்க் விளக்கினார். 'நிச்சயமாக, நாம் அனைவரும் சம்பள உயர்வு பெற விரும்புகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையில் நாம் அனைவரும் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியாது. அதை வாங்கக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள், மற்றவர்களால் முடியாது. நான் செலுத்தவேண்டிய கடன்களுடன், மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை செய்யவில்லை என்றால், அவ்வளவுதான், நான் நிதி ரீதியாக மூழ்கிவிடுவேன்.

பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளால் பகிர்ந்து கொள்ளப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மீதான அவநம்பிக்கையை ஃபிராங்க் அடிக்கோடிட்டுக் காட்டினார்: “இப்போதைய தொழிற்சங்கங்கள் முன்பு இருந்த தொழிற்சங்கங்கள் அல்ல. இப்போது முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் ஒருவரையொருவர் காண்கிறார்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன கதைக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. பின்னர் நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள், நாங்கள் திரும்பிச் செல்கிறோம். .… அப்படித்தான், தொழிலாளிகளை காக்க போராடிய நம் தாத்தா பாட்டி காலத்து தொழிற்சங்கங்கள் இப்போது இல்லை, அவர்கள் தங்கள் நலனையே பார்க்கிறார்கள். உணவகத்தில் அவர்கள் முதலாளிகளிடமிருந்து ஒரு சிறிய உறையைப் பெறுகிறார்கள். அப்படித்தான் நடக்கிறது” என்றார்.

வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது முதலாளிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை ஃப்ளோரியன் இவ்வாறு விவரித்தார்: “முதலாளிகளால் அத்தகையவர்களுக்கு ஒரு சிறு துண்டு கொடுக்க முடிகிறது, அதனால் அவர் இயக்கத்தை கைவிட்டுவிடுகிறார். அவர்களில் பலருடன் நீங்கள் இதைச் செய்யும்போது, சிறிது நேரத்திற்குப் பின்னர் இயக்கம் சிதைந்துவிடும், பின்னர் எப்போதும் தனிமைப்படிருக்கும் ஒருவர் வேலைநிறுத்தத்தை நிறுத்த வேண்டியிருக்கும். … இன்று முதலாளியின் மீது அதிகாரம் வைத்திருக்கும் நம்மை விட முதலாளியிடம்தான் அதிகாரம் உள்ளது.”

குரோன்ட்புய்யில் உள்ள டோட்டல் சுத்திகரிப்பு நிலையம்

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், முதலாளித்துவ அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராக, தேசிய எல்லைகளைத் தாண்டி, தொழிலாளர்களை ஒன்றிணைக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம், போராட்டங்களில் தேசிய தொழிற்சங்க எந்திரங்களின் பிடியை உடைக்க முடியும் என்று முன்மொழிந்தனர். டோட்டல் தொழிலாளர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பதிலளித்தனர்.

ஃபுளோரியான் கூறினார்: 'முழு அமைப்பையும் நாங்கள் மாற்ற வேண்டும். நீங்கள் சொல்வது போல், டோட்டல் சர்வதேசரீதியானது. ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாட்டிற்கும் ஐரோப்பிய நாடு அல்லது ஆசியாவில் உள்ள ஒரு நாட்டிற்கும் இடையில், எங்களுக்கு ஒரே மாதிரியான கோரிக்கைகள் இருக்காது, அதே தேவைகள் இருக்காது. ஆனால் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் முழு அமைப்பையும் மாற்ற வேண்டும். அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்... அதுவே சிறந்த, பெரிய பொது வேலைநிறுத்தமாக இருக்கும்.”

அலெக்சி கூறினார்: 'ஒரு நாள், அது வர வேண்டும். தொழிலாளர்களை நோக்கி அரசாங்கம் ஒரு படி எடுக்கும் வரை நாங்கள் இன்னும் காத்திருந்தால், நாங்கள் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டோம். இப்போது நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றிலும், ஓய்வூதியம் வெட்டப்படுகிறது, நகர்வது நம் கையில்தான் உள்ளது.

Loading