பணவீக்கத்திற்கும் போருக்கும் எதிரான தொழிலாளர்களின் சர்வதேச அணிதிரட்டலுக்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள் 29ம் தேதி பாரிஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலையிட்டு, தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களிடையே நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம், பணவீக்கம் மற்றும் போருக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுத்தனர். இந்த அறிக்கையை கீழே காணலாம்.

அவர்கள் WSWS துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர், பணவீக்கம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாளர்களை சர்வதேச அணிதிரட்டுவதற்காக! உக்ரேனில் போரை ஆதரிக்கும் மற்றும் முதலாளித்துவ அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்க தலைமைகள் மற்றும் போலி-இடது கட்சிகளில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

29 செப்டம்பர் பாரிஸ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஒரு பகுதியினர் [படம்: WSWS]

போரையும் தொழிலாளர்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியையும் எதிர்கொள்ளும் நிலையில், ஒரு ஆழமான சமூக கோபம் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்று, CGT, FSU, Solidaires மற்றும் இளைஞர் அமைப்புகள் பிரான்சில் ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றன. 200 பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன, இதில் ஆசிரியர்கள், கனரக லாரி ஓட்டுநர்கள், இரசாயன, மருந்துத் துறையினர், எக்ஸான் மொபில் மற்றும் டோட்டால் இல் வேலைநிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்களும் கலந்து கொள்வார்கள்.

தொழிலாளர்கள் தங்கள் அணிதிரட்டல்கள் மற்றும் போராட்டங்களின் கட்டுப்பாட்டை தேசிய தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது கூட்டாளிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. ஐரோப்பாவில் இராணுவ விரிவாக்கத்திற்கும், மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் செல்வத்தை நிதிய பிரபுத்துவத்திற்கு மாற்றுவதற்கும் எதிராக போராடாமல் உயரும் விலைகளை நிறுத்த முடியாது. ஆனால் அதற்காக, தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைமைகளில் இருந்தும், தொழிலாளர்களுக்கு 'ஆடம்பரவாழ்வின் முடிவு' என்று அறிவிக்கும் மக்ரோனுடனான அவர்களின் ஊழல் நிறைந்த 'சமூக உரையாடலில்' இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

தொழிற்சங்க இயக்குநரகங்களில் இருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களில் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான மாற்றாகும். இது, சர்வதேச அளவிலும், விரைவில் பிரான்சிலும் அதிகரித்து வரும் தொழிலாளர்கள், தங்கள் போராட்டங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவும், மக்ரோனுடனான பேச்சுவார்த்தைகளில் திசைதிருப்புவதன் மூலம் இயக்கத்தை நிறுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களின் முயற்சிகளை முறியடிக்கவும் அனுமதிக்கிறது.

ஏன் இந்த மூலோபாயம்? முதலாவதாக, தொழிலாளர்களின் முன்னே வைக்கப்படும் அனைத்துக் கேள்விகளும் சர்வதேச அளவில் இருப்பதால்: தேசிய தொழிற்சங்க எந்திரங்களுக்கு அப்பால், ஒரு சர்வதேச அமைப்பால் மட்டுமே, உலகில் வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் பிரான்சில் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும்.

போராட்டங்களின் சர்வதேச எழுச்சி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க இரயில்வே தொழிலாளர்கள், 70 மணி நேரத்திற்கும் மேலான வேலை வாரங்களுக்கு எதிராகவும் சம்பள அதிகரிப்பிற்காகவும் போராடுகிறார்கள். ஐக்கிய இராச்சியம் மற்றும் துருக்கியில் வேலைநிறுத்தங்கள் ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. ஸ்பெயினில், சுகாதார மற்றும் வாகனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிராக் நகரில், பல்லாயிரக்கணக்கானோர் விலைவாசி உயர்வுக்கு எதிராக பேரணி நடத்தினர் மற்றும் செக் பிரதம மந்திரி பீட்ர் ஃபியலாவை இராஜினாமா செய்யுமாறு கோரினர். ஜேர்மனியில், உத்தியோகபூர்வ பத்திரிகைகள் பசி மற்றும் கடுங்குளிரை எதிர்கொண்டு ஒரு, 'கோபத்தின் குளிர்காலம்' ஏற்படும் வாய்ப்பைப் பற்றி கவலைப்படுகின்றன.

தேவையான உணவு மற்றும் உஷ்ணமாக்கலை வாங்க முடியாத நிலை, மே 68 நாட்களில் இருந்து காணப்படாத அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களின் ஐரோப்பிய மற்றும் உலகளாவிய வெடிப்பைத் தயாரிக்கிறது அல்லது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு களம் அமைக்கிறது.

தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் போராட்டங்களின் ஒருங்கிணைப்புக்கும் பிரான்சிலும் பிற இடங்களிலும் உள்ள தேசிய தொழிற்சங்க எந்திரங்களால் திணிக்கப்பட்ட குறுகிய தேசிய கட்டமைப்பை உடைக்க வேண்டும். உலக முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடியின் விளைபொருளான பணவீக்கப் பிரச்சனையை பிரெஞ்சு எல்லைகளுக்குள் தீர்க்கப்பட முடியாது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர், வங்கிகள் மற்றும் பொருளாதாரத்தின் மீது டிரில்லியன் கணக்கான யூரோக்களை பொது நிதியில் இருந்து இறைக்கும் ஊக்கப் பொதிகளுக்கு தூண்டுகோலாக உள்ளன.

இருப்பினும், தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாள வர்க்கத்தின் இந்த பேரழிவுகரமான சமூக நிலைமைக்கு உடந்தையாக உள்ளனர். தொற்றுநோயின் தொடக்கத்தில், பங்குகளின் மதிப்பை உயர்த்த டிரில்லியன் கணக்கான யூரோக்களுடன் வங்கிகளை மூழ்கடிக்கும் ஊக்கப் பொதி திட்டங்களுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்தனர், அதே நேரத்தில் தொழிலாளர்களை வைரஸிலிருந்து பாதுகாக்க மறுப்பதன் மூலம் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தனர். இப்போது அவர்கள் பணவீக்க விகிதங்களை விட மிகக் குறைவான ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், இதன் மூலம் உண்மையான ஊதியக் குறைப்புகளுக்கு கட்டாயப்படுத்துகின்றனர்.

தொழிற்சங்கத் தலைமைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் தோல்விகள் மற்றும் காட்டிக்கொடுப்புகளால் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்ததன் தாக்கத்தை இன்று இத்தாலியில் மிகத் தெளிவாகக் காணலாம். அங்கு பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் அரசியல் வாரிசான ஜியோர்ஜியா மெலோனி ஞாயிறு மாலை தேர்தலில் வெற்றி பெற்று, ரஷ்யாவிற்கு எதிரான போரையும் ஐரோப்பாவின் இராணுவமயமாக்கலையும் தீவிரப்படுத்துவதாக உறுதியளித்தார்.

தொழிற்சங்க எந்திரங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது அரசியல் கூட்டாளிகளின் கட்டளைக்கு எதிராக, தொழிலாளர்களின் எழுச்சியை ஏற்பாடு செய்வதே முன்னோக்கி செல்லும் வழி.

2022 ஜனாதிபதித் தேர்தலின் போது, பணவீக்கம், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் அல்லது தொற்றுநோய்க்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கவும் அணிதிரட்டவும் மெலோன்சோன் எதுவும் செய்யவில்லை. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்று வலுவாக இருந்தார். ஆனால் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தனது வாக்கைப் பெருக்க முற்படுவதை விட, மக்ரோனின் பிரதமராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அறிவித்ததன் மூலம் இந்த வாக்குகளால் பெறப்பட்ட பலத்தை அவர் சிதறடித்தார்.

பின்னர், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை மொத்தமாக கைவிடும் கொள்கை மற்றும் வங்கிகள் மற்றும் அதி பணக்காரர்களுக்கு நிரந்தர ஊக்கப் பொதி மூலம், ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் போரில் பங்கேற்பதற்கு ஆதரவாக பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் ஒருமித்த தீவிர வலதுசாரி கருத்தை மெலோன்சோன் பகிர்ந்து கொள்கிறார்,

தொழிலாள வர்க்கம் மீண்டும் எதிர்த்துப் போராடுவதற்கு, ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிராக பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்கள் மற்றும் நாடுகளில் அதன் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு வழி வகுக்க வேண்டியது அவசியம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச கூட்டணியை அமைக்க அழைப்பு விடுக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் பிற இடங்களிலும் பல தொழில்களிலும் நடவடிக்கை குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. முதலாளித்துவ அமைப்பின் கொடிய நெருக்கடிக்கு எதிராக ஐக்கியப்பட்டு போராட முயலும் வாகன தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அது ஒன்றிணைக்கிறது.

சாமானிய தொழிலாளர் குழுவின் தொழிலாளி வில் லெஹ்மன் அமெரிக்க வாகன தொழிற்சங்கமான UAW இன் தலைவராக போட்டியிடுகிறார், தொழிற்சங்க எந்திரத்தை கலைக்க வேண்டும் என்றும், தொழிற்சங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை வழிநடத்த வேண்டும் என்றும் கோருகிறார்.

ஜனநாயக, போர்க்குணமிக்க மற்றும் சாமானிய தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், முதலாளித்துவ அல்லது தொழிற்சங்க எந்திரங்களுடனான ஒப்பந்தங்களுக்கு நனவுபூர்வமாக விரோதமாக இருப்பதன் மூலமும் தான், தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சமூக செல்வத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற முடியும். வாங்கும் சக்தியின் அரிப்பு மற்றும் ஒரு புதிய உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்திய சுழல் ஆகியவற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி இதுதான். இந்த இயக்கத்திற்குள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவது மற்றும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கிற்காக போராடும்.

Loading