ரஷ்யா மீது "முன்கூட்டிய தாக்குதல்களுக்கு" செலென்ஸ்கி அழைப்பு விடுக்கையில், அணுசக்தி "பேரழிவு" பற்றி பைடென் எச்சரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வியாழனன்று, உலகம் அணுஆயுத 'பேரழிவின்' ஆபத்தில் உள்ளது என்று கூறினார். இது உக்ரேனில் போர் வேகமாக தீவிரமடைவதுடன், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தி போருக்கு வழிவகுக்கும் என்பதையே குறிக்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பேசுவது நகைச்சுவையானதல்ல' என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

1962 ஆம் ஆண்டு Frigate Birdஎனப்படும் 600 கிலோ டன் பரிசோதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையிலிருந்து ஏவப்பட்டபோது, அது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பெரிஸ்கோப்பில் இருந்து பார்க்கப்பட்டது

'கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் நாங்கள் பேரழிவின் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ளவில்லை' என்று பைடென் கூறினார். 'அவரது இராணுவம் முக்கியமாக செயற்படவில்லை' என்பதால் புட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தினார் என்று கூறினார்.

'ஒரு தந்திரோபாய அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்துவது பேரழிவு இல்லாமல் முடிவடையாது' என்று தான் நினைப்பதாக பைடென் மேலும் கூறினார்.

பெப்ரவரியில், பைடென் போர் அணுவாயுத மோதலாக அதிகரிக்கக்கூடும் என்பதை மறுத்தார். 'நல்லது, புட்டின் வெகுதொலைவில் கூட அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிந்திக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன்'. மார்ச் மாதம், பைடென் அமெரிக்கா உக்ரேனுக்கு 'தாக்குதல் ஆயுதங்களை அனுப்பாது' ஏனெனில் அது 'மூன்றாம் உலகப் போருக்கு' வழிவகுக்கும் என்றும் கூறினார்.

ஆனால் இந்த அறிக்கைகளை வெளியிட்டதில் இருந்து, பைடென் போரில் அமெரிக்க ஈடுபாட்டை பெருமளவில் விரிவுபடுத்தி, அமெரிக்க ஆயுதக் களஞ்சியங்கள் குறையுமளவிற்கு உக்ரேனுக்கு பல மேம்பட்ட ஆயுதங்களை அனுப்பினார். அமெரிக்க ஜெனரல்கள் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல்களை வழிநடத்தியுள்ளனர். இதில் ரஷ்ய பிரதேசத்தின் மீதான தாக்குதல்கள், ரஷ்ய தளபதிகளின் படுகொலைகள் மற்றும் ரஷ்ய கருங்கடல் கடற்படையின் முதன்மை கப்பலான மொஸ்க்வா மீதான தாக்குதல் ஆகியவை அடங்கும். மேலும் அமெரிக்க துணை இராணுவப் படைகள் உக்ரேனில் நேரடியாக செயல்படுகின்றன.

அமெரிக்கா உக்ரேனுக்கு நூற்றுக்கணக்கான கவச வாகனங்களையும், நாட்டின் அதிநவீன விமான எதிர்ப்பு அமைப்பு, கப்பல் எதிர்ப்பு அமைப்பு மற்றும் நடுத்தரதூர தரையிலிருந்து ஏவும் ஏவுகணையான HIMARS ஆகியவற்றை அனுப்பியுள்ளது.

செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் “அமெரிக்கா அதன் உக்ரேன் ஆதரவுடன் ஏன் மூர்க்கமானதாக மாறுகிறது” என எழுதிய The Hill பின்வருமாறு முடித்தது: “பைடென் நிர்வாகம் ரஷ்ய படைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களால் உக்ரேனை ஆயுதமயமாக்குகின்றது. மேலும் போரின் ஆரம்பம் போலல்லாமல், அமெரிக்க அதிகாரிகள் மாஸ்கோவின் எதிர்வினை பற்றி கவலைப்படவில்லை”.

கடந்த வாரத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பாதுகாப்பு சபையின் தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் செச்செனிய குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் ஆகியோர் ரஷ்யா மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில்,The Times of London அணு ஆயுதங்களைக் கையாளும் ரஷ்ய இராணுவப் பிரிவினால் இயக்கப்படும் இரயில் போர்முனையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தது.

இந்த அறிக்கை குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, “அந்தப் பத்திரிகைச் செய்திகளை நான் அறிவேன். அதுபற்றி என்னிடம் எதுவும் இல்லை' என்றார்.

ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் அல்லது கருங்கடலுக்கு அருகில் அணு ஆயுத சோதனையை நடத்த புட்டின் உத்தேசித்துள்ளதாக நேட்டோ உறுப்பினர்களுக்கு இரகசியமாக அறிவுறுத்தப்பட்டதாகவும் The Times of London தெரிவித்துள்ளது.

வியாழனன்று, பைடெனின் கருத்துக்களுக்கு முன்னதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஆஸ்திரேலிய சிந்தனைக் குழுவின் கூட்டத்தில், 'ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை' தடுக்க ரஷ்யா மீது முன்கூட்டியே தாக்குதல்களை நடத்த நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார்.

'நேட்டோ என்ன செய்ய வேண்டும்? ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அழிக்கவேண்டும்' என்று செலென்ஸ்கி கூறினார். 'எங்களுக்கு முன்கூட்டிய தாக்கதல்கள் தடுப்பு தேவை. எனவே அவர்கள் அணுகுண்டுகளைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும், வேறு வழியில் அல்ல' என்றார்.

எந்த நேரத்திலும் நேட்டோவுடன் இணைந்த ஒரு தலைவர் திரைக்குப் பின்னால் விவாதிக்கப்படுவதை வெளிப்படுத்துவது ஒரு வழமையான நடைமுறையாக இருப்பதால், உக்ரேனிய ஜனாதிபதி 'முன்கூட்டிய தடைகளை' குறிப்பிடுவதாகவும், ஜனாதிபதியின் வாயிலிருந்து வந்த உண்மையான வார்த்தைகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் செலென்ஸ்கியின் அலுவலகம் கூறியது.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில், போரில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டின் அளவு தெளிவாகிறது.

புதனன்று, Intercept இல் மூத்த தேசிய பாதுகாப்பு பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ரைசன் எழுதிய கட்டுரையில், உக்ரேனுக்குள் இரகசிய சிஐஏ நடவடிக்கைகளை பைடென் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தது. அதாவது அமெரிக்க சிறப்புப் படைகள் உண்மையில் அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என அர்த்தப்படுகின்றது.

'உக்ரேனுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் போரின் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது மிகவும் விரிவானவை' என்று ரைசன் தெரிவிக்கின்றார். 'பெப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பின் போது இருந்ததை விட, உக்ரேனில் சிஐஏ மற்றும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை பணியாளர்கள் மற்றும் வளங்கள் அதிக அளவில் உள்ளன.

'உக்ரேனுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் முடிவின்படி நடத்தப்படுகின்றன என தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டிற்குள் இரகசிய நடவடிக்கைகளின் பரந்த திட்டத்தை நடத்துவதற்கான நிர்வாகத்தின் முடிவு குறித்து ஜனாதிபதி சில காங்கிரஸ் தலைவர்களுக்கு பொதுவாக அறிவித்துள்ளார் என்பதை கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுகிறது”.

இதற்கிடையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள் இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான அமெரிக்கத் தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கின்றன. அவை ரஷ்யாவின் பிராந்தியத்தின் மத்திய பகுதிகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குகின்றன.

'ATACMS [இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகள்] ரஷ்ய கருங்கடல் கடற்படைக்கும், ரஷ்ய விமானப்படைக்கும் கிரிமியாவில் உள்ள போக்குவரத்திற்கு அனுமதிக்க முடியாததாக கிரிமியாவை மாற்றும் திறனை உக்ரேனியர்களுக்கு வழங்கும்.' ஐரோப்பாவின்அமெரிக்க இராணுவ முன்னாள் தளபதியான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பென் ஹோட்ஜஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறினார். 'கிரிமியாவின் இறுதி விடுதலைக்கு கூட இது ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்... ATACMS ரஷ்ய படைகளின் சரிவை துரிதப்படுத்தும்' என்றார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில், Gray Eagle (Predator இன் அடுத்த தலைமுறை) மற்றும் Reaper ட்ரோன்கள் உட்பட ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை உக்ரேனுக்கு வழங்குமாறு அமெரிக்காவிற்கு புதன்கிழமை அழைப்புவிடுத்தார்.

'உக்ரேனுக்கு மிகவும் அதிநவீன, ஆபத்தான அமெரிக்க ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), ட்ரோன்கள் என்றழைக்கப்படுபவற்றை வழங்குவது உடனடி கட்டாயமாகும். இது ரஷ்யர்களை கடுமையாகத் தாக்கும் உக்ரேனின் பலத்தை பெருக்குவதாக இருக்கும்' என்று வில் கூறினார்.

உக்ரேன் நேட்டோவின் நடைமுறை உறுப்பினர் என்று வில் திறம்பட அறிவித்து, “உக்ரேன் 'முறையாக அல்லது இல்லாவிட்டாலும்' ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், அதன் எதிர்கால நிலைக்கு ஏற்ப போர்க்கள முடிவுகளை உருவாக்க உதவும் ஆயுதங்கள் உக்ரேனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.”

மாஸ்கோ மற்றும் வாஷிங்டனைப் பற்றிக் கொண்டிருக்கும் விரக்தி மற்றும் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படும் பெரும் ஆபத்துகள் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கைகளை போரின் விரைவான விரிவாக்கம் உறுதிப்படுத்துகிறது. இந்த வாரம் நாங்கள் எழுதியது போல்,

உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் அரசாங்கங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

இந்த பிற்போக்குத்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தொழிலாள வர்க்கம் கோர வேண்டும். இதற்கு தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்துவது அவசியம்.

சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவெறியையும் நிராகரித்து ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராட வேண்டும்.

Loading