ஜேர்மன் மறுஇணைப்பின் ஆண்டு தினத்தில் போர்வெறிப் பிரச்சாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மூன்று தசாப்தங்களாக, ஜேர்மன் மறுஇணைப்பின் ஆண்டு தினங்கள் இராணுவ மறுஆயுதமயமாக்கலுக்கான ஆதரவை திரட்டுவதற்கும், ஜேர்மன் பெரும் சக்தி கற்பனைகளைப் பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வர்க்க உணர்வுள்ள தொழிலாளிக்கும், தேசியவாதக் காட்சியானது, 32 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஒன்றிணைந்ததன் மூலம் எவ்வாறான ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்வு தொடங்கப்பட்டது என்பதையும், இராணுவவாதத்தினையும் போரையும் நோக்கி திரும்புவதற்கு எதிராகப் போராடுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் நினைவூட்டுகிறது.

இன்று, ஆளும் வர்க்கம் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அதன் பினாமி போரை முன்னோக்கித் தள்ளி, உலகளாவிய அணுவாயதப் பேரழிவின் ஆபத்தை ஏற்றுக்கொள்கிறது. இரண்டாம் உலகப் போரின் பயங்கரங்களுக்கு எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் ரஷ்யாவிற்கு எதிராக அதிக ஜேர்மன் டாங்கிகளை அனுப்புவதிலும், முழுமையான இராணுவ வெற்றிக்காக போரை தீவிரப்படுத்துவதிலும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன.

இடது கட்சியின் துரிங்கியா மாநில தலைவரான போடோ ராமலோ (Bodo Ramelow), ஏர்ஃபேர்ட் நகரில் உத்தியோகபூர்வ மறுஇணைப்பு விழாவில் தனது உரையில் இதைத் தெளிவாக்கினார். துரிங்கியா மாநிலப் பிரதமர் ரஷ்யாவின் 'ஏகாதிபத்தியப் போர்' மற்றும் ரஷ்ய போர்க்குற்றங்கள் பற்றி வரையறுப்பதற்கான 'சொற்களைக் கண்டுபிடிக்க விரும்புவது ஏறக்குறைய தற்பெருமையாகத் தோன்றும்' அளவில் பேசினார்.

இது பழக்கமான அட்டூழிய பிரச்சாரமாகும், இதில் மறுக்கமுடியாத போர்க்குற்றங்கள் எதிரியுடனான பேச்சுவார்த்தை பயனற்றதாகத் தோன்றும் அளவிற்கு மிகைப்படுத்தப்படுகின்றன. ரஷ்ய படையெடுப்பு பிற்போக்குத்தனமானதும் மிருகத்தனமானதும் தான், ஆனால் அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ சக்திகள் நடத்திய படுகொலைகளுக்கு கிட்டவும் நெருங்கவில்லை.

நேட்டோ பாரியளவில் போரை தீவிரப்படுத்தலையும், குறிப்பாக அதில் ஜேர்மனியின் பங்கேற்பையும் நியாயப்படுத்த ராமலோ இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 'ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீறப்பட முடியாத தன்மை பற்றி நாம் தீவிரமாக இருந்தால், நம்மால் முடிந்த இடத்தில் நாம் உதவ வேண்டும்,' என்று அவர் கூறி, விரிவான ஆயுத விநியோகத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் தலைவரான பெயர்பெல் பாஸ் (Bärbel Bas - SPD) விழாவில் தனது முக்கிய உரையில், போரில் 'எங்கள் இயலுமானவரை உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்' என அறிவித்தார். புட்டின், ஐரோப்பாவின் அமைதியான கட்டமைப்பை தாக்கியதுடன் மற்றும் வறுமை மற்றும் துயரத்தை அதிகரிக்க காரணமாக இருந்தார், என அப்பெண்மணி அறிவித்தார்.

இந்தப் பிரச்சாரம் அணு ஆயுதப் போராக விரிவடைவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை முன்னாள் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌக் தெளிவுபடுத்தினார். கொண்டாட்டங்களுக்கு முன்னதாக ZDF தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜேர்மனியர்கள் அணு ஆயுதப் போரைப் பற்றிய பயத்தை கடந்துவர வேண்டும் என்று அவர் ஏற்கனவே கோரினார். இந்த பயமானது புட்டினால் பயன்படுத்தப்பட்டு, மேலும் வலுவான தாக்குதல்களை நடத்த அவரை ஊக்குவித்தது.

மார்ச் 17, 2017 அன்று தனது பிரியாவிடைக்காக இராணுவ தீப்பந்த மரியாதையின்போது ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌக் (AP Photo/Michael Sohn)

கௌக் கூறினார், “எங்களுடன் இங்கே காணப்படும் பயம், பல சந்தர்ப்பங்களில் புட்டினின் அச்சுறுத்தல்களால் அம்பலப்படுத்தப்படுகின்றது. ஜேர்மனியில் இருப்பதைப் போல அண்டை நாடுகளில் நாங்கள் அதைப் பார்க்கவில்லை. புட்டின் இந்த ஜேர்மன் அச்சங்களை தனது திட்டமிடலில் இணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது. இது அவரது போரின் ஒரு அங்கமாகும். அதனால்தான் அவருடைய அச்சுறுத்தல்களைப் பற்றிய நிதானமான மதிப்பீடும், பயம் ஒருவரை கண்ணை மூடிக்கொண்டு தப்பி ஓடச் செய்கிறது என்ற மிகத் தெளிவான அறிந்துகொள்ளலும் நமக்குத் தேவை. மேலும் இந்த தப்பியோடுதல் எங்களால் இனிமேல் செய்யமுடியாதது”.

ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தன்மையை சுருக்கமாகச் சொல்ல இதைவிட தெளிவான வழி இல்லை. அணுசக்தி உலகப் போரை நடத்த அது தயாராக உள்ளது. அதன் ஏகாதிபத்திய இலக்கை அடைவதற்காக, ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும், நசுக்குவதற்கும் அனைத்து மனிதகுலத்தினதும் அணு ஆயுத அழிப்புக்கு முன் அச்சமின்மையைப் பற்றி போதிக்கின்றது.

இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட விரிவாக்கத்தின் விளைவாகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே, கௌக் நாட்டின் ஜனாதிபதி என்ற நிலையில், 'ஜேர்மனி இராணுவரீதியாகக் கட்டுப்பட்டிருப்பதன் முடிவை' அறிவிக்க, ஜேர்மன் மறுஇணைப்பின் ஆண்டு தினத்தைப் பயன்படுத்தினார். அதன் பொருளாதார சக்தியாலும், ஐரோப்பாவின் மையத்தில் இருக்கும் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, உலக அரசியலில் ஜேர்மனி ஒரு சிறப்புப் பொறுப்பை ஏற்கிறது என்று அவர் அறிவித்தார்.

எதிர்காலத்தில், ஜேர்மனி ஒரு உலகளாவிய தலைமையாக செயல்பட வேண்டும், மேலும் போர் பணிகளில் முன்பை விட அதிக அளவில் பங்கேற்க வேண்டும். 'எங்கள் மிக முக்கியமான ஆர்வம்,' அரசியல் மற்றும் இராணுவ ஒழுங்கை, குறிப்பாக குழப்பமான காலங்களில் பாதுகாத்து, எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவது' என்று கௌக் கூறினார்.

சில மாதங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு உக்ரேனின் கியேவில் நடந்த மைதான் சதியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பாசிச சக்திகளின் ஆதரவுடன் வீழ்த்தி மேற்கத்திய சார்பு கைப்பாவை ஆட்சியை நிறுவியது. அப்போதிருந்து, நேட்டோ சக்திகள் உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதம் அளித்து வருவதுடன், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மூலம் எந்த ஒரு தீர்வையும் தடுத்து வருகின்றன.

இந்தவிதத்தில், முன்னணி நேட்டோ சக்திகள் உக்ரேனில் புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தூண்டின.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் இப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரை அதன் நீண்டகால பெரும் சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கும், ஐரோப்பாவின் வலிமையான இராணுவமாக தனது படையை மறுசீரமைப்பதற்கும் ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. ஆயினும் ரஷ்யாவிற்கு எதிரான போர் என்பது, சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பும் மற்றும் உலகின் முழுமையான ஏகாதிபத்திய மறுபங்கீட்டிற்கும் மட்டுமே இட்டுச்செல்லும்.

இந்த பைத்தியக்காரத்தனத்தின் முன்னே பயத்தை வெல்வது பற்றி கௌக் பேசும்போது, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் பயத்தையும் அவர் மனதில் கொண்டுள்ளார். முன்னாள் போதகர் தனது பிரசங்கங்களால் உற்சாகப்படுத்திய ஜேர்மனின் மறுஐக்கியமானது சுதந்திரத்திற்கும் செழுமைக்கும் வழிவகுக்கவில்லை. மாறாக துயரத்திற்கும் சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகளை வலுப்படுத்துவதற்கும் வழிவகுத்தது. ஒரு சமூக வெடிமருந்து கிடங்கின் மீது அமர்ந்திருப்பது அரசுக்குத் தெரியும்.

ரஷ்யாவிற்கு எதிரான போரினால் இது மேலும் தீவிரமடைந்துள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வறுமைக்குள் சென்றுகொண்டிருப்பதுடன், அவர்களது வாடகை, வெப்பமூட்டல் மற்றும் உணவு கட்டணங்களை எவ்வாறு செலுத்துவது என அவர்களுக்குத் தெரியவில்லை. நெடுங்காலமாக திட்டமிடப்பட்ட வேலைக்குறைப்பு, மறுசீரமைப்பு மூலம் இந்த நெருக்கடியை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதால், நூறாயிரக்கணக்கானோர் குறுகிய நேர வேலையாலும், பணிநீக்கங்களாலும் அச்சுறுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மீண்டும் பில்லியன் கணக்கான அரசு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த முதலாளித்துவ வர்க்க அரசியலும் இராணுவவாதம் மற்றும் பெரும் அதிகார அரசியலைப் போலவே வெறுக்கத்தக்கது. இரண்டு உலகப் போர்கள் மற்றும் யூத இனப்படுகொலைகளின் பயங்கரமான அனுபவங்களுக்குப் பின்னர், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தையும், இராணுவவாதத்தையும் நிராகரிப்பது வெகுஜனங்களின் நனவில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

அதனால்தான் அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் பொதுமக்களின் கருத்தை தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கின்றன. ரஷ்ய போர்க்குற்றங்கள் அட்டூழிய பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு மிகைப்படுத்தப்பட்டாலும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்று குற்றங்கள் திட்டமிட்டு குறைத்து மதிப்பிடப்பட்டு, நியாயப்படுத்தப்படுகின்றன.

முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் ஜேர்மன் குற்றங்களை ஹெர்பிரைட் முங்க்லர், ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற வலதுசாரி பேராசிரியர்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுகின்ற போதிலும், இது இப்போது ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக உள்ளது.

'ஜேர்மன் ஏகாதிபத்தியம் புதிய குற்றங்களைத் தயாரிப்பதற்கு, அதன் வரலாற்றுக் குற்றங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் மேலும் மறைக்கப்பட வேண்டும்' என்று 2015 இல் நாங்கள் கருத்து தெரிவித்தோம். இப்போது, ஆட்சியாளர்கள் மீண்டும் ஜேர்மன் மண்ணில் இருந்து ரஷ்யாவிற்கு எதிராக போரை பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, அவர்கள் மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு அணு ஆயுத மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்திற்கு எதிராக கிளர்ந்தெழுகின்றனர்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையை அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளும் ஆதரிக்கின்றன என்ற உண்மை, போருக்கான பரவலான எதிர்ப்பை ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றினால் மட்டுமே அத்தகைய பேரழிவைத் தடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் மட்டுமே இந்தப் பைத்தியக்காரத்தனத்தை தடுத்து, ஒரு சோசலிச முன்னோக்கை கொண்டு முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க முடியும்.

இதற்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் போராடுகின்றன. 'உக்ரைனில் போரை நிறுத்துங்கள்!' என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கையை படித்துப் பகிருங்கள்! ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு, போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க இப்போதே பதிவு செய்யுங்கள்.

Loading