எபோலா நோய்தொற்று பரவி வருவதால், உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனைக்காக அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உகாண்டாவில் எபோலா நோய்தொற்று தீவிரமாக பரவி வருவதால், கடந்த 21 நாட்களில் ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்த அனைத்து பயணிகளும் நியூயோர்க், நெவார்க், அட்லாண்டா, சிகாகோ அல்லது வாஷிங்டனில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படுவார்கள், அங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை அவர்களுக்கு எபோலா நோய்தொற்று பாதிப்பு உள்ளதா என தீர்மானிக்க பரிசோதனை செய்யும் என்று பைடென் நிர்வாகம் வியாழனன்று அறிவித்தது.

பொலிடிகோ சமீபத்தில் குறிப்பிட்டபடி, “உகாண்டாவில் இருந்து அமெரிக்காவிற்கு தினமும் பயணிக்கும் விமானங்களின் நாள் வாரியான பட்டியலை FAA ஆல் உடனடியாக வழங்க முடியவில்லை, ஆனால் KLM மற்றும் எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பல அமெரிக்க பகுதிகளுக்கு விமான சேவைகளை வழங்குகின்றன.”

இடர் மதிப்பீடு, தோற்ற அறிகுறிகள் மற்றும் வெப்பநிலை பரிசோதனை தவிர, பயணிகளின் தொடர்புத் தகவல்களும் உள்ளூர் மற்றும் மாநில சுகாதாரத் துறைகளுடன் பகிரப்படும். எவ்வாறாயினும், இந்த கொடிய வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும், உகாண்டாவிற்கு தேவையான மருத்துவ நிபுணத்துவ உதவியை அல்லது உலக சுகாதார அமைப்பு (WHO) கோரிய நிதியை வழங்குவதற்கு பதிலாக, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலர் சேவியர் பெசெரா உகாண்டா சுகாதார அமைச்சர் டாக்டர் ஜேன் அசெங் ஓசெரோவுக்கு ‘இந்த சவாலான காலகட்டத்தில் உகாண்டாவை ஆதரிக்க நிர்வாகம் தயாராக உள்ளது’ என்ற செயலூக்கமான ஒரு நற்செய்தியை வழங்கினார்.

அவசரகால உதவிகள் மற்றும் கூடுதல் நிபுணர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் ஆதாரங்களை வழங்குவதற்காக WHO அதன் தற்செயல் நிதியில் இருந்து 2 மில்லியன் டாலரை விடுவித்துள்ளது. ஆனால் இந்த சொற்ப தொகையானது, உகாண்டாவின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தலைநகர் கம்பாலாவில் பரவ அச்சுறுத்தும் எபோலா நோய்தொற்று வெடிப்பைத் தடுக்க தேவைப்படும் பெரிய அளவிலான பொது சுகாதாரத் தலையீட்டிற்கான செலவை ஈடுசெய்யாது. சர்வதேச நிறுவனம் 18 மில்லியன் டாலர் நிதி உதவிக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளத்தை ஈடுகட்ட இன்னும் அதிக நிதி தேவைப்படும் என்று உகாண்டா சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 20, 2022 அன்று உகாண்டா சுகாதார அதிகாரிகளால் எபோலா நோய்தொற்று வெடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரிதான சூடான் வைரஸால் பரவும் எபோலா நோய்தொற்றுகள் அதிகரித்து இப்போது 43 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் 20 சாத்தியமான நோய்தொற்றுக்கள் என மொத்தம் 63 எபோலா நோய்தொற்றுக்கள் அங்கு உள்ளன. தற்போது, எபோலா வைரஸின் இந்த விகாரத்திற்கு எதிராக பயனுள்ள தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் அங்கு இல்லை. உகாண்டாவில் சூடான் வைரஸின் கடைசி நோய்தொற்று பரவல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

WHO தலைமை விஞ்ஞானி டாக்டர். சௌமியா சுவாமிநாதன், ஆறு வெவ்வேறு தடுப்பூசிகள் அபிவிருத்தியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன, மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அல்லது சபின் தடுப்பூசி நிறுவனம் வரும் வாரங்களில் தடுப்பூசிகளின் மாதிரி பரிசோதனைகளைச் செய்யும் என நம்புகிறோம் என்று விளக்கினார்.

கடந்த வாரம் நடந்த WHO சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தார், “அனா மரியா ஹெனாவ் தலைமையிலான எங்கள் R&D புளூபிரிண்ட் குழு, உகாண்டா சுகாதார அமைச்சகத்துடனும், நிரந்தர தொற்று தயார்நிலை புதுமுறைகளுக்கான கூட்டணி (Coalition for Epidemic Preparedness Innovations-CEPI) உட்பட ஏனைய பங்காளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடனும் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. சூடான் எபோலா வைரஸூக்கு சுமார் ஆறு தடுப்பூசி வகைகள் கிடைக்கக்கூடும், அவை பெரும்பாலும் அபிவிருத்தியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, ஆனால் அவற்றில் மூன்று சில மனித தரவு, சில நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு தரவு அடிப்படையிலானவை, எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (Democratic Republic of Congo-DRC) எபோலா நோய் வெடித்தபோது செய்யப்பட்டது போல, அவை உண்மையில் சுற்று தடுப்பூசி பிரச்சார களத்தில் பயன்படுத்தப்படலாம்.”

இரண்டு முன்னணி தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, “துரதிர்ஷ்டவசமாக, அவை இரண்டுமே மிகக் குறைந்த அளவு இருப்புக்களில் உள்ளன. அவற்றிற்கான மூலப்பொருட்கள் இருப்பில் உள்ள நிலையில் தடுப்பூசிகளை தயார் செய்து கொள்ள வேண்டும், மற்றும் அதே நேரத்தில், நிச்சயமாக, ஒரு நெறிமுறை உருவாக்கப்பட வேண்டும், மேலும் நெறிமுறைகள் மறுஆய்வுக் குழுவிடம் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு முதன்மை ஆய்வாளர் அடையாளம் காணப்பட்டு, நிதி திரட்டப்பட்டு வருகிறது, மேலும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.

அக்டோபர் 5 நிலவரப்படி அங்கு 29 இறப்புகள் நிகழ்ந்துள்ளன, அதில் 9 பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் Fort Portal பரிந்துரை மருத்துவமனையில் சேர்ந்து 17 நாட்கள் நோயுடன் போராடி பின்னர் அக்டோபர் 4 அன்று இறந்த 58 வயது மயக்க மருந்து அதிகாரி, நபிசுபி மார்கரெட் உட்பட, நான்கு சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் அடங்குவர். இருப்பினும், மேலும் ஆறு சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நோய்தொற்று வெடிப்பு இப்போது உகாண்டாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள முபெண்டே மற்றும் கசாண்டா மாவட்டங்களும், மேற்கு பிராந்தியத்தில் உள்ள புன்யாங்காபு, ககாடி மற்றும் கியேகெக்வா மாவட்டங்களும் உட்பட குறைந்தது ஐந்து துணை மாகாணங்களில் பரவியுள்ளது, இரண்டும் கம்பாலாவை காங்கோ ஜனநாயகக் குடியரசுடன் இணைக்கும் பரபரப்பான வணிகப் பாதையில் உள்ளன. எவ்வாறாயினும், Monitor இன் ஒரு சமீபத்திய அறிக்கை, வடக்கு மாவட்டமான நெப்பியில் தற்போதைய நோய்தொற்றுக்கு அப்பால், எபோலா நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய ஒரு நபர் இறந்ததாகக் குறிப்பிட்டது.

உகாண்டா மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வரைபடம். சிவப்பு நிறம் சூடான் வைரஸ் பரவலை உறுதிப்படுத்துகிறது. கருப்பு நிறம் சாத்தியமான எபோலா வெடிப்பைக் குறிக்கிறது.

அக்டோபர் 5, 2022 அன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் ஆல்பர்ட் ஏரியின் எல்லையில் அமைந்துள்ள நெப்பி மாவட்டத்தில் உள்ள ஒருசி சுகாதார மையம் III இல் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணிநேரத்திற்குப் பின்னர் 57 வயது நபர் ஒருவர் இறந்தார். மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர். ஜஸ்டின் வென்ட்வொர்த் இது தொடர்பாக செய்தியாளர்களிடம், “இறந்த நோயாளிகள் குறிப்பாக காய்ச்சல், இரத்தக்களரியான வயிற்றுப்போக்கு மற்றும் இரத்த வாந்தி போன்ற கடுமையான நோயறிகுறிகளைக் கொண்டிருந்தனர். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

இறந்தவர் DRC க்கு அருகே ஒரு உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார், அங்கு அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. துக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான மரணத்திற்குப் பிந்தைய சடங்குகள் மற்றும் அடக்கம் செய்யும் மரபுகளில் ஒன்று இறந்தவரின் உடலை சுத்தம் செய்து ஆடை அணிவதாகும், இறந்தவர்களின் மரணத்திற்கு எபோலா காரணமாக இருந்தால் அது பிறருக்கு தொற்றை பரப்பும் ஆபத்தை விளைவிக்கும்.

உகாண்டா முதியவரைப் பொறுத்தவரை, இந்த வைரஸ் சூடான் வகையைச் சேர்ந்ததா மற்றும் தற்போதைய வெடிப்பின் ஒரு பகுதியா என்பதைப் பார்க்க வேண்டும், இந்த பரவல் மிகவும் பரந்த அளவில் நிகழ்வதையே இது குறிக்கிறது. மேலும் இந்த பிராந்தியத்தில் ஜைர் விகாரம் அறிமுகமாவது ஒரே நேரத்தில் இரண்டு நோய்தொற்று வெடிப்புகளை ஏற்படுத்தும். இந்த பிராந்தியத்திலும் அண்டை நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எபோலா அச்சுறுத்தலுடன் கூட மேலதிக அச்சுறுத்தலை இதுவும் ஏற்படுத்துகின்றது.

90 களின் நடுப்பகுதியில் இருந்து, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா முழுவதும் சுமார் இரண்டு டஜன் நோய்தொற்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன. டிசம்பர் 2013 மற்றும் ஜூன் 2016 காலகட்டத்திற்கு இடையில் ஏற்பட்ட மிகப்பெரிய நோய்தொற்று, நைஜீரியா, மாலி, செனகல் ஆகிய நாடுகளில் உள்ளூர் நோய்தொற்றாக வெடித்தது உட்பட, லைபீரியா, சியரா லியோன் மற்றும் கினியா நாடுகள் முழுவதும் நோய்தொற்று பரவியதுடன், அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கும் ஏற்றுமதியானது. மொத்தத்தில், கிட்டத்தட்ட 29,000 பேர் எபோலா ஜைர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர், மேலும் 11,310 பேர் அதனால் இறந்தனர். இறப்பு விகிதம் 57 முதல் 71 சதவிகிதம் வரை இருந்தது.

சூடான் வைரஸ் காரணமான தற்போதைய இறப்பு விகிதம் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது இந்த நோய்தொற்றுக்களின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதுபோன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்தொற்று வெடிப்பு உலகம் முழுவதும் பரந்த அளவில் வெளிப்படுவது ஒரு விஷயம் அல்ல. இந்த நோய்க்கிருமிகளின் வெடிப்பை எதிர்கொள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் தயாராக இல்லை என்பதோடு, தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் அவர்களது முனைப்பில் எந்த இடையூறும் ஏற்படாமல் தடுக்க பொது சுகாதார அமைப்புக்களை முற்றிலும் அழிக்கவும் அவர்கள் முற்பட்டனர்.

உகாண்டாவின் வாழ்நாள் ஜனாதிபதி யோவேரி முசெவேனி, சமீபத்தில் இவ்வாறு தெரிவித்தார், “நாம் முன்பு செய்ததைப் போலவே, இந்த நோய்தொற்று வெடிப்பையும் அரசாங்கம் விரைவாக கட்டுப்படுத்தும் என்று உகாண்டாக்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கு நான் மீளுறுதி அளிக்க விரும்புகிறேன். எனவே, கவலையோ, பீதியோ அடைவதற்கோ, நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கோ, அல்லது பள்ளிகள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற பொது இடங்களை மூடுவதற்கோ அவசியமில்லை.“

இதற்கிடையில், அசெங் குறிப்பிட்டுள்ளபடி, முபெண்டே மாவட்டத்தில் வெடிப்பு மையத்தில் உள்ள பொதுமக்களின் தவறான தகவல் மற்றும் அவநம்பிக்கையை சுகாதார அதிகாரிகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர், “அங்கு மக்கள் மாந்திரீகத்தால் இறக்கவில்லை, எபோலா நோயால் இறக்கிறார்கள். இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும், முன்னணி சுகாதார ஊழியர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பு குறித்து கவலையடைகின்றனர். லான்செட் இதழ் சனிக்கிழமை குறிப்பிட்டது போல், “முன்னணி சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான சவாலும் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள், காப்பீட்டுறுதி, மற்றும் இடர் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு போதுமான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் தங்கள் உயிரை அரசாங்கம் பணயம் வைக்கிறது என்று குற்றம் சாட்டி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.”

கால்வெஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவக் கிளையின் வைராலஜிஸ்ட் மற்றும் எபோலா நிபுணரான டாக்டர். கேரி கோபிங்கர், தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் தாமாகவே நோய்தொற்று வெடிப்பை நிறுத்தாது என்று Nature இதழிடம் கூறினார். பரவலின் புவியியல் எல்லைகள் அதிகரித்து வளங்களும் அதிகமாக இருப்பதால், வைரஸால் “புதிய காலடித் தடங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்” என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடவடிக்கைகள் நோய்தொற்று வெடிப்பை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அது ‘உண்மையில் கட்டுக்கடங்காமல் பரவக்கூடும்’ என்றே அவர் கவலைப்படுகிறார்.

Loading