முன்னோக்கு

"பேரழிவு" குறித்து பைடென் எச்சரித்ததற்குப் பின்னர், நேட்டோ ரஷ்யா உடனான போரை விரிவாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் போர் 'பேரழிவை' தூண்டி விடும், அதாவது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஓர் அணுஆயுதப் போரைத் தூண்டிவிடும் என்று வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் எச்சரித்திருந்தார்.

ஆனால் பைடென் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்திற்குள், உக்ரேனிய சிறப்புப் படைகள், முன்னதாக அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து வெளிப்படையாகச் சமிக்ஞை பெற்று, ரஷ்யா மற்றும் கிரிமியாவை இணைக்கும் கெர்ச் பாலம் மீது தாக்குதல் நடத்தின, இது இந்தப் போரைத் தீவிரப்படுத்தி, அத்தகைய ஒரு 'பேரழிவு' ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை இன்னும் அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட ஓர் ஆத்திரமூட்டலாக இருந்தது.

இதற்கு விடையிறுப்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திங்கட்கிழமை உக்ரேன் முழுவதும் பொது பயன்பாட்டுக்கு உரிய உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக விமானத் தாக்குதல்கள் நடத்த அனுமதி வழங்கினார். உக்ரேனிய அதிகாரிகள் தகவல்படி, சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர், 97 பேர் காயமடைந்தனர், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள எல்லா தரப்பினரின் செயல்களையும் கண்டிக்கிறது. புட்டின் ஆட்சி ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் போரில் ஈடுபட்டிருக்கவில்லை, மாறாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவத் தன்னலக்குழுவின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு வருகிறது.

ஆனால் முடிவாக இந்தப் போர் விரிவடைவதற்கான பொறுப்பு, அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளையே சாரும். கிரிமியாவை பலவந்தமாக மீட்டெடுப்பதற்கும் மற்றும் நேட்டோவில் இணையவதற்குமான உக்ரேனின் திட்டங்களை ஊக்குவித்ததன் மூலம், ரஷ்ய எல்லைகளில் ஒரு போரைத் தூண்டி விட்டு, முதலில் 'ரஷ்யாவின் வெள்ளை இனத்தவரை இரத்தம் சிந்தச் செய்து' இறுதியில் ஓர் ஆட்சி மாற்ற நடவடிக்கையை நடத்தவும் மற்றும் அந்நாட்டைத் துண்டாடவும் அமெரிக்கா முயன்றது.

இப்போது, உலகின் ஏகாதிபத்திய சக்திகளின் பலத்தால் ஆதரிக்கப்பட்டு சிறப்பாக ஆயுத வினியோகங்கள் பெற்று வரும் உக்ரேனிய இராணுவத்திற்கு முன்னால் ரஷ்யப் படைகள் பின்வாங்கி வருகின்ற நிலையில், அமெரிக்காவும் நேட்டோவும் இந்தப் போரை இன்னும் கூடுதலாக விரிவாக்க முயன்று வருகின்றன. ஒரு போர்நிறுத்தத்திற்கோ அல்லது இந்த மோதலைப் பேசி தீர்க்கவோ, அமெரிக்காவோ அல்லது வேறெந்த நேட்டோ சக்தியோ ஒருபோதும் அழைப்பு விடுத்ததில்லை.

செவ்வாய்கிழமை, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறுகையில், அவர் நேட்டோவின் அணுஆயுதத் திட்டமிடல் குழுவின் கூட்டம் ஒன்றைக் கூட்ட இருப்பதாகவும், அணுஆயுதக் குண்டுகளைப் பயன்படுத்தி நேட்டோ ஒரு பயிற்சி ஒத்திகை நடத்த இருப்பதாகவும் அறிவித்தார்.

கெர்ச் பாலம் மீதான வெள்ளிக்கிழமைத் தாக்குதலை அடுத்து, நியூ யோர்க் டைம்ஸ் அந்தக் குண்டுவெடிப்பை 'உக்ரேனில் ரஷ்ய போர் முயற்சிக்கு ஓர் அடி' என்று பாராட்டியது. முன்னணி அமெரிக்க அதிகாரிகளால் அந்தப் பயங்கரவாதத் தாக்குதல் மீதான அவர்கள் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை, ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் கர்னல் அலெக்சாண்டர் விண்ட்மன், அந்த எரியும் பாலத்தின் புகைப்படத்திற்கு மேலே 'இந்தத் தருணத்தைத் தான் கனவு கொண்டிருந்தேன்,” என்று எழுதி ட்வீட் செய்தார்.

ஆனால் கெர்ச் பாலத்தை உக்ரேன் தாக்கியது மீதான உற்சாகக் குரல்கள், பொது பயன்பாட்டு உள்கட்டமைப்புகளை ரஷ்யா தாக்கியதும், சிறிதும் தாமதிக்காமல், பலமான கண்டனமாக மாறியது.

இந்த தாக்குதல்களைக் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில், “இன்று உக்ரேனுக்கு எதிரான கிரெம்ளின் இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான போரில் பணயமாக இருக்கும் விஷயங்களை மீண்டும் மிகவும் அப்பட்டமாக எடுத்துக் காட்டி உள்ளன. … உக்ரேனுக்கு எதிரான அதன் போர் ஓர் ஆழ்ந்த தார்மீக பிரச்சினையை முன்வைக்கிறது என்பதை ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் நினைவூட்டுகின்றன,' என்று கூறிய அவர், “இந்தப் போரில் ரஷ்யா தான் வலிந்து ஆக்ரோஷமாக சண்டையிடும் நாடாக உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

எப்போதும் போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு திகைப்பூட்டும் அளவில் பாசாங்குத்தனத்தால் குணாம்சப்பட்டுள்ளது. விமானத் தாக்குதல்களில் அமெரிக்கா அளவுக்கு வேறெந்த நாடும் அப்பாவி மக்களைக் கொன்றதில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா ட்ரெஸ்டன் நெருப்புக் குண்டுவீச்சுத் தாக்குதலில் ஏறக்குறைய 25,000 அப்பாவி மக்களைக் கொன்றது, ஹம்பேர்க் குண்டுவீச்சில் ஏறக்குறைய 37,000 மக்களைக் கொன்றது. அதைத் தொடர்ந்து, டோக்கியோ நெருப்புக் குண்டுவீச்சு நடத்தப்பட்டது, 130,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்ற அந்தத் தாக்குதல் மனித வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான ஒரே குண்டுவீச்சாகும். இதற்குப் பின்னர், போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படாத உலகின் முதல் மற்றும் ஒரே அணுகுண்டுகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்டன, அதில் 226,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கொரியப் போரின் போது, அமெரிக்க இராணுவம் வட கொரியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்தையும் முற்றிலுமாக அழித்தது, ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் அல்லது அந்நாட்டின் மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் அதில் கொல்லப்பட்டார்கள். வியட்நாம் போரின் போது பல ஆண்டுகள் நடத்தப்பட்ட மூலோபாய குண்டுவீச்சு நடவடிக்கையான, 'ஆபரேஷன் ரோலிங் தண்டர்' என்பதில் 30,000 முதல் 182,000 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போரின் முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான வியட்நாமியர்கள் கொல்லப்பட்டார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, அமெரிக்காவின் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் புதிய வெளிப்பாட்டை ஊக்குவித்ததுடன், அது மூன்று தசாப்த கால முடிவில்லாத போர்களுக்கு வழிவகுத்தது:

  • 1991 இல், அமெரிக்கா வளைகுடா போரைத் தொடங்கியது, ஈராக்கிய ஆயுதப் படைகளை முற்றிலுமாக அழித்ததுடன், பின்வாங்க முயன்ற துருப்புக்களை படுகொலை செய்தது. அந்தப் போரின் போது அமெரிக்கா செய்த எண்ணற்ற போர்க் குற்றங்களில், பெப்ரவரி 13, 1991 இல் அமிரியா பதுங்குமிடம் மீதான குண்டுவீச்சும் இருந்தது, அந்த நடவடிக்கையில் அமெரிக்கா துல்லியமாக வழிநடத்தப்படும் இரண்டு குண்டுகளைக் கொண்டு அப்பாவி மக்கள் நெரிசலாக பதுங்கி இருந்த அந்த இடத்தை வேண்டுமென்றே இலக்கில் வைத்தது, அதில் 400 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
  • 1998 இல், சூடானின் வடக்கு கார்ட்டூம் பகுதியில் அல்-ஷிஃபா மருந்து தொழிற்சாலை மீது அமெரிக்கா குண்டு வீசியது, இது மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தியதால், சூடானுக்கான ஜேர்மன் தூதர் வார்த்தைகளில் கூறினால், அது அப்பாவி சூடான் மக்கள் 'பல பத்தாயிரக் கணக்கானவர்கள் இறக்க' வழி வகுத்தது.
  • மார்ச் 25, 1999 இல், அமெரிக்காவும் நேட்டோவும் யூகோஸ்லாவியாவுக்கு எதிரான போரைத் தொடங்கின, சேர்பியா மற்றும் அதன் தலைநகரான பெல்கிராட் மீது 78 நாட்கள் தொடர்ந்து குண்டுவீசின. தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அத்துடன் பாலங்கள், சாலைகள் மற்றும் மின் வினியோக வடங்களும் அழிக்கப்பட்டன. சேர்பிய மதிப்பீடுகளின்படி, அந்த வான்வழி தாக்குதல்களில் சுமார் 2,500 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 12,500 பேர் காயமடைந்தனர்.
  • ஈராக் போர் உயிரிழப்புகள் குறித்த ORB கணக்கெடுப்பின்படி, 2003 இல் தொடங்கப்பட்ட இரண்டாவது ஈராக் போர், ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் உயிரிழக்க வழிவகுத்தது. 2001 ல் தொடங்கிய ஆப்கானிஸ்தான் மீதான தசாப்தங்கள் நீண்ட ஆக்கிரமிப்பில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
  • 2011 இல், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் லிபியாவில் குண்டுவீசின, அதில் அந்த நாடு இடிபாடுகளாகவும், குறுங்குழுவாதப் போரிலும் விடப்பட்டது, அதைத் தொடர்ந்து சிரியாவில் சிஐஏ-தூண்டிவிட்ட உள்நாட்டு போர் வந்தது.

அமெரிக்க ஊடகங்கள், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய போர்களைக் குறித்து ஒட்டுமொத்த மறதி நோயின் வடிவில் நகர்ந்து கொண்டிருக்கின்றன, கடந்த காலங்களில் அமெரிக்க இராணுவம் செய்த குற்றங்கள் இருந்தாலும், தற்போதைய இந்த மோதலில் அதன் நோக்கங்கள் முற்றிலும் தன்னலமற்று இருப்பதாக அவை அறிவிக்கின்றன. ஆனால் இந்த போரானது இப்போது அணுஆயுத சக்திகளை உள்ளடக்கி உள்ளது என்பதைத் தவிர, இது முந்தைய மோதல்களின் ஒரு தொடர்ச்சியே ஆகும்.

மத்திய கிழக்கு மக்களின் மரணங்கள் மீது காட்டப்பட்ட அதே ஈவிரக்கமற்ற அலட்சியம் தான், உக்ரேன் மக்களைப் பீரங்கிக்குத் தீனியாகப் பயன்படுத்தி, அந்த ஒட்டுமொத்த நாட்டையும் பரிசோதனைக் களமாக மாற்றி, ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரை விரிவாக்குவதற்கான அமெரிக்க முயற்சிகளை உந்தி வருகிறது. அவர்களால் ரஷ்யாவுக்கு இராணுவத் தோல்வியை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்காவும் நேட்டோவில் உள்ள அதன் நாகரீக சேவகர்களும் நம்புகிறார்கள், இது சீனா உடனான மோதலுக்கு ஒரு வெள்ளோட்டமாக மட்டுமே இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த மக்களை போரின் மூலம் அடிபணியச் செய்து ஆதிக்கம் செலுத்த விரும்புகிறதோ அவர்களின் உயிர்களுக்கு அது துளியும் மதிப்பளிப்பதில்லை என்பதையே அதன் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அமெரிக்க மக்களின் உயிர்களுக்கும் கூட அது எந்த மதிப்பும் அளிப்பதில்லை என்பதை கோவிட் -19 பெருந்தொற்று எடுத்துக் காட்டியுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அந்தப் பெருந்தொற்றைத் தடுக்க பெரும்பிரயத்தனத்துடன் எந்த நடவடிக்கைகளும் எடுக்க போராடவில்லை, இது அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்க இட்டுச் சென்றுள்ளது.

இடைவிடாது போர் விரிவாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் உலகளாவிய பாரிய இயக்கத்தை தொடங்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடத்தின. இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரும் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading