முன்னோக்கு

நோர்த் ஸ்ட்ரீம் குழாய் குண்டுவெடிப்பு: யாருக்கு இலாபம்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, நீருக்கடியில் சக்திவாய்ந்த வெடிப்புகள் பால்டிக் கடலின் கீழ் ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஜேர்மனிக்கு கொண்டு செல்கின்ற நோர்த் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களில் துளைகளை உண்டாக்கின. டென்மார்க்கின் கடற்பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிலிருந்து ஒரு கிலோமீட்டர் விட்டம் கொண்ட எரிவாயுக்கள் கடல்மட்டத்தின் மேற்பரப்புக்கு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு நிதியளிப்பதற்கும், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், மேலும் வெப்பமூட்டுவதற்கும் இன்றியமையாத பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் உள்கட்டமைப்புகள் அழிவுற்று கிடக்கின்றன.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் போர் தொடுத்துள்ள நிலையில், இந்த நிகழ்வு ஐரோப்பாவில் நடந்து கொண்டிருக்கும் பொறுப்பற்ற இராணுவ விரிவாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. டென்மார்க் பிரதம மந்திரி மற்றே பிரடெரிக்சன் (Mette Frederiksen), இந்த குண்டுவெடிப்புகள் அறியப்படாத தரப்பினரின் 'வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கையின்' விளைவு என்று கூறினார். அதே நேரத்தில் சுவீடனின் நில அதிர்வு நிபுணர் பிஜோர்ன் லண்ட், 'இதில் எந்த சந்தேகமும் இல்லை, இது பூகம்பம் அல்ல' என்று கூறினார்.

ஐரோப்பிய ஊடகங்கள் உடனடியாக நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை குண்டுவீசித் தாக்கியதாக ரஷ்யாவை குற்றம் சாட்டிய போதிலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் விரைவாக மதிப்பிழந்து வருகின்றன.

பொதுவாக ஆக்ரோஷமான ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆதாரமாக இருக்கும் நியூ யோர்க் டைம்ஸ் கூட, குண்டுவெடிப்புக்கு மாஸ்கோ மீது குற்றம் சாட்டுவதை தவிர்த்தது. 'முதல் பார்வையில், கிரெம்ளின் அதன் சொந்த பல பில்லியன் டாலர் சொத்துக்களை சேதப்படுத்தும் என்பது பொதுப்பார்வைக்கு எதிர்மறையாகத் தெரிகிறது' என்று அது ஒப்புக்கொண்டது. 'ரஷ்ய தலையீடு பற்றி சில ஐரோப்பிய அதிகாரிகள் விரைவாக ஊகித்தாலும், அமெரிக்க அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். அதற்காக கிடைக்கக்கூடிய ஆதாரங்களின்மையைக் குறிப்பிட்டு, அது தொடர்ந்தது, 'வாஷிங்டனும், அதன் பெரும்பாலான ஐரோப்பிய கூட்டாளிகளும் சந்தேக நபர்களை பெயர் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டனர்' என எழுதியது.

பல நேட்டோ சிந்தனைக் குழுவின் உறுப்பினரும், முக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வர்ணனையாளருமான அன்னே ஆப்பிள்பாமை மணந்த முன்னாள் போலந்து வெளியுறவு மந்திரி ராடெக் சிகோர்ஸ்கி, குண்டுவெடிப்பின் பின்னணியில் வாஷிங்டன் இருப்பதாக வெளிப்படையாக பரிந்துரைத்தார். 'நன்றி, அமெரிக்கா' என்ற தலைப்புடன் இயற்கை எரிவாயுவின் குமிழிகளின் படத்தை அவர் ட்வீட் செய்தார். 'இப்போது 20 பில்லியன் டாலர் பெறுமதியான இடிவுற்ற உருக்கு கடலுக்கு அடியில் கிடக்கிறது. உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கான அதன் குற்றவியல் முடிவால் ரஷ்யாவிற்கு மற்றொரு இழப்பு' என்று அவர் மேலும் கூறினார்.

குண்டுவெடிப்புகளில் ரஷ்ய தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்து நம்பகத்தன்மையையும் கொண்டிருக்காததுடன் மற்றும் இதற்கான அதிக வாய்ப்புள்ள குற்றவாளியான அமெரிக்காவிலிருந்து திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பைப் பற்றி கேட்க வேண்டிய முதல் கேள்வி: இதனால் யாருக்கு இலாபம்?, அதை செயல்படுத்தும் நோக்கம் யாருக்கு இருந்தது? என்பதாகும்.

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை அழிப்பதற்கு ரஷ்யாவிற்கு எந்த நோக்கமும் இருக்காது. ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் டச்சு பங்குதாரர்களுடன் சேர்ந்து ரஷ்யாவின் காஸ்ப்ரோம் குழுமமானது குழாயுகளின் பாதியை தனது உடமையாக வைத்திருந்தது. மேலும் உக்ரேனில் நேட்டோவுடனான போர் முடிவடைந்தால், ஐரோப்பாவுடன் பொருளாதார உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மாஸ்கோவின் திட்டங்களின் மையத்தில் இந்த குழாய் இருந்தது. இதனால் அதன் சொந்த குழாய்களை வெடிக்கவைக்க எந்த காரணமும் இல்லை.

வாஷிங்டனுக்கு, இக்குண்டுவெடிப்பு இரண்டு நன்மைகளை அளித்தது. முதலாவதாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ இராணுவம் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது இன்னும் ரஷ்ய-எதிர்ப்பு போர் பிரச்சாரத்தை எரியூட்ட உதவும். இரண்டாவதாக, ரஷ்ய எரிவாயுவை பிரதியீடு செய்வதற்கு ஐரோப்பாவை அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க செய்வதன் மூலம், ஆரம்பத்தில் இருந்தே உக்ரேன் போரில் அமெரிக்காவின் முக்கிய நோக்கத்துடன் ஐரோப்பாவை இன்னும் உறுதியாக அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவவதுடன் இது ஒத்துப்போகின்றது. இந்த நோக்கங்கள் சமீப ஆண்டுகளில் பெருகிய முறையில் பகிரங்கப்பட்டு வந்துள்ளன.

2018 ஆம் ஆண்டில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் பேர்லினுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. ட்ரம்ப் அமெரிக்காவிற்கு ஜேர்மன் வாகன ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகளை விதித்து, பேர்லினிடம் நோர்த் ஸ்ட்ரீம் 2 ஐ மூடுமாறு கோரினார்.

பெப்ரவரி 7, 2022 அன்று, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு கிரெம்ளினுக்கு எதிரான பொருளாதார மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முடுக்கிவிட்டதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஜேர்மன் அதிபர் ஓலாவ் ஷோல்ஸை பேச்சுவார்த்தைக்கு வாஷிங்டனுக்கு அழைத்தார். ஷோல்ஸ் உடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது, பைடென் நோர்த் ஸ்ட்ரீம் 2 குழாய்களை அழிப்பதாக உறுதியளித்தார். 'ரஷ்யா படையெடுத்தால், இனி நோர்ட் ஸ்ட்ரீம் 2 இருக்காது. நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டு வருவோம்' என்று பைடென் கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நோர்த் ஸ்ட்ரீம் 2 குழாய்கள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் கூட்டாகச் சொந்தமானது என்பதால், இதை எப்படிச் செய்வார் என்று கேட்டதற்கு பைடென் பதிலளிக்க மறுத்துவிட்டார்: 'நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்களால் அதை செய்ய முடியும்' என சாதாரணமாக பதிலளித்தார்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தை கலைத்தமை, ஈராக் மற்றும் யூகோஸ்லாவியாவிலிருந்து ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரை இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய போர்களை நடத்துவதற்கு மட்டும் நேட்டோவிற்கு வழியமைக்கவில்லை. கூட்டணியை ஐக்கியப்படுத்த உதவிய நேட்டோவின் முக்கிய எதிரியை அது இல்லாதொழித்ததுடன், மேலும் யூரேசியாவை பெரிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு திறந்து விட்டது. உலகப் பொருளாதாரத்தின் கொள்ளையடித்த பொருட்களை பிரிப்பதற்காக போட்டியிட்டதால் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான பதட்டங்கள் வெடித்தன.

பேர்லின் நேட்டோவில் இருந்து சுயாதீனமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கு அழைப்பு விடுத்த பின்னர், நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார். அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மனிக்கு 'நம் சொந்த எதிர்காலத்திற்காக நாமே போராட வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ரஷ்யா, சீனா அல்லது அமெரிக்காவை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ நிறுத்துமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்புகளை நிராகரித்தனர். இது போன்ற கருத்துக்களைப்பற்றி ஜேர்மன் சட்டமியற்றுபவர் றொல்வ் முட்செனிச் பின்வருமாறு கூறினார். 'இவ்வாறான கோரிக்கைகள், ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை பாதிப்பதுடன், எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் ட்ரம்பிற்கு நட்புடைய பங்காளிகள் அல்ல, ஆனால் அடிமைப்பட்ட கீழ்ப்பட்டவராக தெரிகின்றன...'

இது 'ஐரோப்பா தொடர்பான அமெரிக்கக் கொள்கையானது, அமெரிக்காவின் மேலாதிக்கம், செழுமைக் காலத்தைக் காட்டிலும் நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையாகவும், வெளிப்படையாகவும் இரக்கமின்றி செயல்படும்' என்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையை நினைவுபடுத்துகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவிற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விவரித்தார்:

இது சந்தைகளை துண்டாக்கும்; இது ஐரோப்பிய நிதியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன விரும்புகிறது என்ற கேள்விக்கு நாம் தெளிவான மற்றும் துல்லியமான பதிலைக் கொடுக்க விரும்பினால், நாம் கூற வேண்டும்: அது முதலாளித்துவ ஐரோப்பாவை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது.

இது இன்றைய வாஷிங்டனின் கொள்கையை சுருக்கமாக விவரிக்கிறது. இந்த ஆண்டு, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்தவும், அது நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கும் ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி வர்த்தகத்தை வெட்டுவதை திணிக்கவும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. ஐரோப்பாவின் மீதான இதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகிறது.

மில்லியன்கணக்கான ஐரோப்பிய தொழிலாளர்கள் இந்த குளிர்காலத்தில் உறைந்து போகும் அபாயத்தில் உள்ளனர். குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் மலிவான ரஷ்ய எரிவாயு, அமெரிக்காவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் மாற்றப்படுவதால் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலைகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், அமெரிக்க டாலருக்கு நிகரான ஐரோப்பிய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், விலை உயர்வு மேலும் அதிகரிக்கின்றது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகிறது,ஐரோப்பிய எஃகு, இரசாயன மற்றும் பிற நிறுவனங்கள் அதிக நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பலமான அரசாங்க ஆதரவால் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவிற்கு செயல்பாடுகளை மாற்றுகின்றன'.

போர் என்பது பில்லியன் கணக்கான யூரோக்களை மறுஆயுதமாக்கலுக்குத் திருப்பிவிடுவதற்கான ஒரு சாக்குப்போக்காக இருக்கும்வரை ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்தியவாதிகள் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக ஜேர்மன் முதலாளித்துவம், இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்த பின்னர், ஐரோப்பாவின் முன்னணி இராணுவ சக்தியாக மீண்டும் வெளிப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாதம் ஷோல்ஸ் ஜேர்மனியை 'ஐரோப்பாவில் பாரம்பரிய பாதுகாப்பின் மூலக்கல்லாக, ஐரோப்பாவில் சிறந்த ஆயுதம் கொண்ட சக்தியாக மாற வேண்டும்' என்று அழைப்பு விடுத்துடன் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஜேர்மனிக்கு ஒரு இடத்தையும் கோரினார்.

ரஷ்யப் படையெடுப்பிற்குப் பின்னர், நோர்த் ஸ்ட்ரீம் 2 க்கான அதன் ஆதரவை பேர்லின் உத்தியோகபூர்வமாக முடித்துக்கொண்டாலும், அது ரஷ்யாவுடன் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி உறவுகள் பற்றிய விடயங்களை எழுப்புகிறது. இந்த வாரம், 'இதற்கு அடுத்த நாள்' என்பது தொடர்பான பார்வையை ஒருவர் ஒருபோதும் இழக்கக்கூடாது என்று மேர்க்கெல் கூறினார். 'தற்போது கற்பனைக்கு எட்டாத ஒன்றான அதாவது, ரஷ்யாவை நோக்கிய மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் போன்றவற்றை மீண்டும் எவ்வாறு உருவாக்க முடியும்' என்பதைப் பற்றி சிந்திக்க அவர் அழைப்பு விடுத்தார்.

நோர்ட் ஸ்ட்ரீம் தாக்குதலை ரஷ்யாவின் பொருளாதார மற்றும் அரசியல் தற்கொலைச் செயலாக அல்ல, மாறாக வாஷிங்டன் அதன் ஐரோப்பிய ஒன்றிய 'நட்பு நாடுகளுக்கு' அனுப்பிய ஒரு சமிக்ஞையாக விளக்கிங்கொள்வது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது: 'ஆம், நீங்கள் மீண்டும் இராணுவமயமாக்கலாம். ஆனால் உங்கள் எரிசக்தி மற்றும் இராணுவக் கொள்கை எங்கள் விதிமுறைகளின்படி அமைக்கப்படும்” என்பதையே இது அர்த்தப்படுத்துகின்றது.

நேட்டோவும் ரஷ்யாவும் ஒரு முழுமையான உலகளாவிய மோதலின் விளிம்பில் இருப்பதால், இந்த மோதல்கள் பாரியளவிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களை இன்னும் தெளிவாக்குகின்றன.

Loading