முன்னோக்கு

துருக்கி சுரங்க விபத்தும், சோசலிசத்திற்கான தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, கருங்கடலை ஒட்டிய பார்டினில் உள்ள அரசுக்குச் சொந்தமான துருக்கிய ஹார்ட் கோல் நிறுவனத்தின் (TTK) அமாஸ்ரா ஆலை இயக்குனரக சுரங்கத்தில் ஏற்பட்ட நெருப்புக் குழம்பு வெடிப்பில் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்தனர். தடுத்திருக்கக் கூடிய இந்த துயரம், முதலாளித்துவ அமைப்புமுறை, ஆளும் வர்க்கம் மற்றும் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தலைமையிலான அரசாங்கம் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக உள்ளது.

நிலத்திற்கு அடியில் 300 மீட்டரில் ஏற்பட்ட அந்த வெடிப்புக்குப் பின்னர் அதைச் சமாளிக்க சுரங்கத் தொழிலாளர்கள் காட்டிய விடையிறுப்புக்கும் அரசாங்க அதிகாரிகள் காட்டிய விடையிறுப்புக்கும் இடையே உள்ள கூர்மையான முரண்பாடு, வாழ்வா சாவா என்ற ஒரு தருணத்தில் சமூகத்தின் இரண்டு முக்கிய மற்றும் சமரசத்திற்கு இடமில்லாத வர்க்கங்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

நிலத்துக்கு அடியில் சிக்கி இருந்த தங்கள் தோழர்களை மீட்க சுரங்கத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து கீழே இறங்கிய அதேவேளையில் — மீட்கும் முயற்சியில் ஒரு சுரங்கத் தொழிலாளர் உயிரிழந்தார் என்ற நிலையில் — ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான அரசு அதிகாரிகளோ தடுத்திருக்கக் கூடிய அந்த விபத்தை 'தலைவிதி' என்று சித்தரித்து மக்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒருமுனைப்பட்டு இருந்தார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் துருக்கியின் சுரங்கங்களில் குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் துருக்கியின் தொழிலாளர் நலச் சுகாதார மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பு (Health and Safety Labour Watch - OHS) தொகுத்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதை 'சமூகப் படுகொலை' என்று மட்டுமே வகைப்படுத்த முடியும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் எந்தவொரு தொழிலாளருக்கும் பாதுகாப்பாக ஆபத்தில்லாமல் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தற்போதைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டம் அனுமதித்தாலும், முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் இலாபத்திற்காகத் தேவையில்லாமல் பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகிறார்கள்.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சுரங்கத் துறைத் தொழிலாளர்கள் ஒரு முக்கிய இடத்தில் உள்ளனர், இருந்தும் அவர்கள் மிகவும் ஆபத்தான தொழில்துறைகளில் ஒன்றில் வேலை செய்கிறார்கள். 'தி வேர்ல்ட் கவுண்ட்ஸ்' வலைத் தள தகவல்கள்படி, உத்தியோகபூர்வ தரவுகளின் அடிப்படையில் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15,000 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள்.

துருக்கியில், இந்த ஆண்டு இதுவரை 90க்கும் அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், அதேவேளையில் சீனாவில் 2022 இன் முதல் ஏழு மாதங்களில் 129 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2021 இல், அமெரிக்காவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் விளைவாக ஏற்பட்ட எரிவாயு நெருக்கடி காரணமாக நிலக்கரிக்கான தேவை அதிகரித்து வருகிறது என்பது, இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

சமூக ஊடகங்களில் பத்தாயிரக் கணக்கானவர்கள் அமாஸ்ரா சுரங்கத்தில் ஏற்பட்ட இறப்புகளுக்கு அரசாங்கத்தின் அலட்சியம் மீது பழி சுமத்திய நிலையில், “சீண்டிவிடும் நோக்கில்' பரப்பப்படும் “ஆத்திரமூட்டும் பதிவுகள் மற்றும் தவறான தகவல்களை' புறக்கணிக்குமாறு மக்களுக்குக் கூறியதே ட்வீட்டரில் எர்டோகன் மேற்கொண்ட முதல் எதிர்வினையாக இருந்தது. “பொதுமக்களிடையே வெறுப்பு மற்றும் பகைமையைத் தூண்டுவது, ஆத்திரமூட்டும் கருத்துக்களுடன் பதிவிடுவது' ஆகியவற்றுக்காக 12 சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உள்துறை அமைச்சகம் வெகுஜன கோபத்தை மிரட்ட முயன்றது.

அரசுக்குச் சொந்தமான அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த அந்த மரணங்களுக்கு எர்டோகன் அரசாங்கம் தான் பொறுப்பு என்கின்ற நிலையில், சனிக்கிழமை அமாஸ்ராவுக்குச் சென்ற எர்டோகன் புதிதாக தெரிவிக்க ஒன்றைக் கண்டுபிடித்தார். அவர் கூறினார், “இறைவனுக்கு நன்றி. நேற்று மாலையில் இருந்து, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், நாங்கள் [அதாவது, எல்லா மரணங்கள் குறித்து] ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் என்ற உண்மை, எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது… ஏனென்றால் சோமாவில், உங்களுக்கே தெரியும், அதற்கு நீண்ட காலம் ஆனது.”

2014 இல், எர்டோகன் அரசாங்கத்திற்கு நெருக்கமான சோமா ஹோல்டிங்கிற்குச் சொந்தமான ஒரு தனியார் சுரங்கத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், மாநில அதிகாரிகள் மற்றும் பெருநிறுவனத் தொழிற்சங்கமும் கண்டுங்காணாமல் இருந்ததாலும், ஒரே நேரத்தில் 301 பேர் கொல்லப்பட்டார்கள்.

துருக்கியின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சுரங்கப் பேரிடராக இருந்த இதற்குப் பின்னர் அந்நாடு முழுவதும் வெகுஜன எதிர்ப்புகள் வெடித்தன. ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர், கேன் குர்கன், 2019 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதோடு, அந்த பேரிடருக்காக தற்போது யாருமே தண்டனையில் இல்லை. அனைத்திற்கும் மேலாக, எந்த உயர்மட்ட அரசு அதிகாரியும் அதற்குப் பொறுப்பாக்கப்படவில்லை.

சோமா விபத்துக்குப் பின்னர், எர்டோகன் கூறுகையில் 'இவை சாதாரண விஷயங்கள் தான். இது இந்த தொழிலின் இயல்பு,” என்று கூறி அந்த இறப்புகளை இயல்பாக்க முயன்றார்.

ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் உயிர்கள் மற்றும் நல்வாழ்வு மீது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அலட்சியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அமாஸ்ரா விபத்துக்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க வகையில் எர்டோகன் இதையே தான் கூறினார். “நாங்கள் விதியின் திட்டத்தை நம்புபவர்கள்,” என்று அறிவித்த அவர், “இந்த [மரணங்கள்] எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், இது நமக்கு தெரிய வேண்டும்,” என்றார்.

ஆனால் 'விதி' பற்றிப் பேசி அரசாங்க அதிகாரிகள் அவர்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயன்றாலும், கிடைக்கும் கொஞ்சநஞ்ச புள்ளிவிபரங்கள் என்ன காட்டுகின்றன என்றால், சோமா விபத்து மற்றும் இன்னும் பல சுரங்க விபத்துக்களைப் போலவே, அமாஸ்ராவிலும் இலாப நோக்கத்திற்காகவே தொழிலாளர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவையான மற்றும் நன்கு அறியப்பட்ட முன்னெச்சரிக்கைகள் கைவிடப்பட்டு இருந்தன.

2019 இல் வெளியிடப்பட்ட நீதிமன்றக் கணக்கு அறிக்கையில், கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:

2019 இல், அந்த ஆலையின் உறுதிப்படுத்தப்பட்ட உற்பத்தி ஆழம் 300 மீட்டராக இருந்தது. இந்த ஆழம், திடீர் எரிவாயு மற்றும் நிலக்கரி வெடிப்பு அல்லது நெருப்புக் குழம்பு வெடிப்பு போன்ற கடுமையான விபத்துகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கு வழி வகுக்கிறது.

சுரங்கப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அய்ஹான் யுக்செல் ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறினார்:

அலட்சியத்தால் இங்கே விபத்து ஏற்படுகிறது… அலட்சியம் சம்பந்தமாக இரண்டு சிக்கல்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும்: 1) எரிவாயு மட்டம் உயரும், 2) அந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தும். இந்த வகையான அலட்சியங்கள் இல்லையென்றால், அங்கே இதுபோன்ற விபத்து நடக்காது.

உயிரிழந்த சுரங்கத் தொழிலாளிகளில் ஒருவரான ரஹ்மான் ஓஸெலிக்கின் இறுதிச் சடங்கில், ஓஸெலிக்கின் சகோதரி எர்டோகனுக்குக் கேள்வி எழுப்பினார்: “பத்து-பதினைந்து நாட்களுக்கு முன்னர் என் சகோதரர் என்னிடம் இங்கே [சுரங்கத்தில்] எரிவாயு கசிவு இருப்பதாக கூறினார். ‘விரைவில் அவை வெடித்து எங்களைச் சிதறடிக்கும்’ என்றார். இது எப்படி புறக்கணிக்கப்பட்டது?'

அவருக்குப் பதில் கிடைக்கவில்லை.

[AP Photo/Nilay Meryem Comlek/Depo Photos]

பத்திரிகை செய்திகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுக்கு சொந்தமான துருக்கிஷ் ஹார்ட் கோல் நிறுவனத்திற்கு (TTK) ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் பாதிப் பணம் வழங்கப்படவே இல்லை, மேலும் சுரங்கங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. 1970 களின் பிற்பகுதியில் 5,000 தொழிலாளர்கள் பணியாற்றிய அமாஸ்ரா ஆலையில் இப்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை 720 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக TTK இல் பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 40,000 இல் இருந்து 8,600 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.

இது உற்பத்தியை வேகப்படுத்தி வெகு குறைவான தொழிலாளர்களிடம் இருந்து அதிக உற்பத்தியைப் பெறுவதற்காக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் 20 இல், எரிசக்தித் துறை அமைச்சர் Fatih Dönmez, அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படும் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் அதிகாரத்துவவாதிகளுடன் சேர்ந்து அமாஸ்ராவுக்கு விஜயம் செய்ததுடன், “உற்பத்தி இலக்கு அதிகரிப்பை' அறிவித்தார்.

தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் மற்றும் நெறிமுறை தளர்த்தும் கொள்கைகள் மூலம் தனியார் மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் மீதான அதிகரித்த சுரண்டல், பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் மையத்தில் உள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் பிரிட்டனில் பிரதமர் மார்கரெட் தாட்சர் தலைமையின் கீழ், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கம் வர்க்கப் போர் நடவடிக்கைகளைத் திணித்த அதேவேளையில், 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் சீரழிவில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. 1980 இல் துருக்கியில் நேட்டோ ஆதரவு நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் துருக்கியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில், அதிகரித்தளவில் வேகம் பிடிக்கத் தொடங்கி உள்ளன.

ஒரு சுரங்கத் தொழிலாளியின் இறுதிச் சடங்கில் மத உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்த பின்னர், “நாம் ஒருபோதும் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை இழந்துவிடக் கூடாது” என்ற எர்டோகனின் அழைப்பு, அவரது அரசாங்கத்தின் மற்றும் அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் வர்க்கத்தின் முக்கியக் கவலையைப் பிரதிபலிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, எர்டோகன் அரசாங்கம், பாரியளவிலான செல்வ வளம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து நிதி மூலதனத்திற்குக் கை மாற்றுவதை மேற்பார்வையிட்டுள்ளது. அது வெடிக்கத் தயாராக உள்ள ஒரு சமூக வெடி உலையின் மீது அமர்ந்துள்ளது.

உத்தியோகபூர்வ பணவீக்கம் ஆண்டுக்கு 80 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில், துருக்கி உலகளாவிய பணவீக்க அதிகரிப்பின் மையப்பகுதிகளில் ஒன்றாக உள்ளது. மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக சமீபத்திய கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது.

முதலாளித்துவத்தின் கீழ் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் சகிக்கவியலாத வேலையிட மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச இயக்கத்தின் பாகமாக, 2022 இல், துருக்கி பல வேலைநிறுத்தங்களை கண்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பல தேசிய வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளனர், தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்த நடவடிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. நல்ல சம்பளங்கள் மற்றும் சலுகைகள் கோரி Divriği இரும்பு சுரங்கத் தொழிலாளர்கள் ஜனவரியில் நடத்திய வேலை முடக்கங்களும் இதில் உள்ளடங்கும்.

சுரங்கத் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் செய்வது போல துருக்கியிலும் சுரங்கத் தொழிலாளர் போராட்டங்களின் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. அமாஸ்ரா உட்பட மேற்கு கருங்கடல் படுகை, இத்தகைய போராட்டங்களின் குவிமையமாக இருந்துள்ளது. 1965 இல், சோங்குல்டாக்கில் கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த கூலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திடீர் தன்னிச்சையான வேலைநிறுத்தம் அப்பிராந்தியம் முழுவதுமான சுரங்கங்களுக்குப் பரவியது. அந்தப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியும் மற்றும் இரண்டு சுரங்கத் தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றதன் மூலமாக மட்டுமே, அரசாங்கத்தால் இந்த பாரிய இயக்கத்தை ஒடுக்க முடிந்தது.

1990-91 இல் சுரங்கத் தொழிலாளர்களின் மாபெரும் அணிவகுப்பு, துருக்கிய தொழிலாள வர்க்க போராட்டங்களின் மைல்கற்களில் ஒன்றாகும். நவம்பர் 1990 இல் தொடங்கிய அந்த வேலைநிறுத்தம், 1991 இன் முதல் நாட்களில் 80,000 க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க, தலைநகர் அங்காராவை நோக்கி ஒரு பாரிய வெகுஜன அணிவகுப்பாக மாறியது.

வளைகுடாப் போருக்கு எதிராகவும், தங்கள் சமூக நிலைமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிய, சுரங்கத் தொழிலாளர்களால், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அணி திரட்ட முடியும் என்று பயந்து, அரசாங்கம் அவர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க, இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளை அனுப்பியது.

GMİS மற்றும் Türk-İş தொழிற்சங்கக் கூட்டமைப்பு அதிகாரத்துவம் செய்த காட்டிக்கொடுப்பின் விளைவாக, சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தினது தோல்வி, சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கம் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்த வழிவகுத்தது, இந்த தொழிற்சங்கங்கள் அமாஸ்ரா சுரங்கத் தொழிலாளர்களை 'பிரதிநிதித்துவம்' செய்வதையும் தொடர்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முதலாளித்துவம் விரோதமானது என்ற உண்மையை அமாஸ்ராவில் நடந்த இந்தச் சுரங்க விபத்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இலாபம், தனியார் செல்வ வளம் மற்றும் ஆளும் வர்க்கங்களின் புவிசார்அரசியல் நலன்களுக்காக முதலாளித்துவத்தின் இதே புறநிலை தூண்டுதல் தான், உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தவிர்த்திருக்கக்கூடிய மரணங்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றால் எண்ணற்றவர்களுக்கு நிரந்தர உடல்நலக் குறைபாடுக்கும் ஆணைகளைப் பிறப்பித்தது. தெரிந்த அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள், நிதியச் சந்தைகளுடனும் மற்றும் வேலையில் உள்ள தொழிலாளர்கள் மீதான சுரண்டல் உடனும் பிணைந்துள்ள திட்டவட்டமான பொருளாதார மற்றும் நிதி நலன்களை பாதிக்கும் என்பதால், அவை செயல்படுத்தப்படவில்லை.

தொழிலாளர்களின் உயிர் மற்றும் ஆரோக்கியம் தேவையில்லாமல் தொடர்ந்து தியாகம் செய்யப்பட்டு வருகிறது. இது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பொறுப்பற்ற விரிவாக்கத்தில் அதன் மிகவும் தீவிர வெளிப்பாட்டைக் காண்கிறது, இது தலைமை போர்வெறியர் ஜோ பைடெனின் வார்த்தைகளில் கூறினால், 'அணுஆயுதப் பேரழிவு' ஆபத்தில் ஆழ்த்துகிறது.

முதலாளித்துவத்தை அணுஆயுத அழிவை நோக்கி உந்தும் அதே அமைப்பு ரீதியான நெருக்கடி, உலக சோசலிசப் புரட்சியின் மூலம் போர், தொழில்துறை கொலைகள் மற்றும் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான நிலைமைகளையும் உருவாக்குகிறது. இதன் அர்த்தம், உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் சுரங்கங்கள் மற்றும் அனைத்து முக்கிய தொழில்துறைகளையும் தேசியமயமாக்க தொழிலாளர்களின் அரசாங்கங்களை நிறுவுவதாகும்.

இந்த அவசரப் பணியைச் செய்ய உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட, சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் இணையுங்கள்! இழக்க நேரமில்லை!

Loading