மந்தமடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 20வது மாநாடு நேற்று பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் உரையுடன் தொடங்கியது. மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிந்தைய இரண்டு கால நெறிமுறையை தகர்த்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக ஜி நியமிக்கப்பட்டு மாநாடு முடிவடைய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16, 2022, ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் தொடக்க விழாவிலிருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளியேறும் போது கையசைக்கிறார் [AP Photo/Mark Schiefelbein]

இந்த மாநாடு, மிக விரைவாக அதிகரித்து வரும் அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் கட்டமைப்பு மற்றும் சீனாவுடனான ஆக்கிரோஷமான மோதல், அத்துடன் பொருளாதார மந்தநிலை மற்றும் பெருகிவரும் உள்நாட்டு சமூக பதட்டங்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரால் சுரண்டப்படக்கூடிய உள் பிளவுகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என இந்தக் கூட்டம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

ஜி இன் பேச்சு, சர்வதேச சூழ்நிலையில் நிகழும் ‘திடீர் மாற்றங்கள்’ மற்றும் ‘சூறைக் காற்று மற்றும் ஆபத்தான புயல்களை’ உருவாக்கும் வானிலை ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான கட்சியின் தேவை குறித்து மிகவும் பொதுவானதாக இருந்தது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் பற்றியோ அல்லது உண்மையில், அமெரிக்காவைப் பற்றியோ அவர் நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை, அது சமீபத்தில் மேம்பட்ட கணினி சில்லுகள் மற்றும் சில்லுகள் தயாரிக்கும் உபகரணங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

இருப்பினும், மறைமுகமாக சுட்டிக்காட்டி ஜி இவ்வாறு அறிவித்தார்: “சீனா… அனைத்து வகையான மேலாதிக்கத்தையும் அதிகார அரசியலையும் உறுதியாக எதிர்க்கிறது, பனிப்போர் மனநிலையை எதிர்க்கிறது, மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை எதிர்க்கிறது, இரட்டை நிலைப்பாட்டை எதிர்க்கிறது.” அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கு சீனா சவால் செய்வதைத் தடுக்க இராணுவம் உட்பட அனைத்து வழிகளையும் பயன்படுத்த அமெரிக்கா உறுதியாக உள்ளது என்பதை CCP தலைமை அங்கீகரிப்பதையே இந்தக் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா ரஷ்யாவைத் தூண்டியது போலவே, தைவானை சீனப் பெருநிலப்பரப்புடன் ஒருங்கிணைக்க இராணுவ பலத்தைப் பிரயோகிக்க சீனாவைத் தூண்டுவதற்கு வாஷிங்டன் முயல்கிறது. ட்ரம்பைத் தொடர்ந்து பைடென் நிர்வாகமும், ஒரே சீனா கொள்கையை மேலும் கீழறுத்துள்ளது, இதன் கீழ் தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவிற்கும் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக பெய்ஜிங்கை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

தைபேயுடனான அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவிற்கு மூலோபாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இன்றியமையாததாக இருக்கும் தீவை வாஷிங்டனின் செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர பைடென் அச்சுறுத்துகிறார். யுரேசிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் அதன் பரந்த இலட்சியத்தின் ஒரு பகுதியாக, உக்ரேனில் ரஷ்யாவுடன் வாஷிங்டன் நடந்துகொள்வதைப் போல, சீனாவை பலவீனப்படுத்தவும், அதை நிலைகுலையச் செய்யவும் தைவானுடனான போரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா கணக்கிடுகிறது.

சீனா தைவானுடனான ‘அமைதியான மறுஒருங்கிணைப்பை’ விரும்புகிறது, ஆனால் ‘கடைசி முயற்சியாக பலத்தை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக’ இருக்கும் என்று ஜி கூறினார். அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்து, அவர் மேலும் கூறினார்: “தைவான் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சீனர்களுக்குரிய விஷயம், அது சீனர்களால் தீர்க்கப்பட வேண்டிய விஷயம்.” அமெரிக்க ஊடகங்கள் இந்தக் கருத்துக்களை ‘ஆக்கிரமிப்பு’ என்று விவரித்தாலும், தைவான் குறித்து அமெரிக்காவின் தொடரும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு முகங்கொடுத்து சீனாவின் நீண்டகால நிலைப்பாட்டின் சாதுவான மறுபரிசீலனையாக இந்தக் கருத்துக்கள் இருந்தன.

உள்நாட்டு விவகாரங்களில், கோவிட்-19 தொற்றுநோயை அடக்குவதில் சீனாவின் சாதனையை ஜி ஆதரித்தார். பெய்ஜிங் அதன் பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து, மற்ற அரசாங்கங்கள் பின்பற்றும் தொற்றுநோய் ‘தடையின்றி பரவட்டும்’ என்ற கொலைகாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளிலிருந்து அதற்கு கணிசமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

‘வைரஸூக்கு எதிரான மக்கள் போரின்’ வெற்றியை ஜி பாராட்டினார், இது ‘மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முடிந்தவரை பாதுகாத்தது.’ கட்டுப்பாடுகளுக்கு விரோதமான வணிகப் பிரிவுகள் மற்றும் நடுத்தர வர்க்க அடுக்குகளின் விரக்தியை பிரதிபலிக்கும் சமூக ஊடக வர்ணனைகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ‘பூஜ்ஜிய கோவிட்’ கொள்கையை அரசாங்கம் தளர்த்த விரும்புவதற்கான எந்த குறிப்பையும் அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம், ஒரு அரிதான பொது ஆர்ப்பாட்டத்தில், பெய்ஜிங்கில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த இரண்டு பெரிய பதாகைகள் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை எதிர்த்து ‘சர்வாதிகாரி மற்றும் தேச துரோகி ஜி ஜின்பிங்’ அகற்றப்படுவதற்கு அழைப்பு விடுத்தன. அதில் ஒரு பதாகை இவ்வாறு அறிவித்தது: “கோவிட் பரிசோதனை வேண்டாம், உணவுக்கு ஆம் என்று சொல்லுங்கள். பூட்டுதல் வேண்டாம், சுதந்திரம் வேண்டும்.”

இருப்பினும், பரவலான பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல், தடுப்பூசி, இலக்கு வைக்கப்பட்ட பூட்டுதல்கள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் கோவிட் கொள்கை, அசௌகரியங்கள் மற்றும் அதிகாரத்துவ அத்துமீறல்கள் இருந்தபோதிலும் சீனாவில் பரவலாக ஆதரிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்டால் வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதை அது நிரூபித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் குற்றவியல் தன்மை குறித்து ஜி எந்த விமர்சனமும் செய்யவில்லை. சர்வதேச அரங்கில் அது சூழ்ச்சி செய்யும் நிலையில், ஒரு சரவதேச ஒழிப்பு மூலோபாயம் குறித்து பிரச்சாரம் செய்ய சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எண்ணம் இல்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான அதன் ஆக்கிரோஷமான மோதலை தீவிரப்படுத்தினாலும், வாஷிங்டனுடன் இன்னும் சமரசம் செய்துகொள்ளவே பெய்ஜிங் முயன்று வருகிறது.

முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தலைமை தாங்கியதன் பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் சந்தை சார்பு திட்டத்தை ‘சீன குணாதிசயங்கள் கொண்ட சோசலிசம்’ என்ற மோசடி பதாகையின் கீழ் தொடர்ந்து பூசி மெழுக முயற்சிக்கிறது. 1949 சீனப் புரட்சியின் பாரம்பரியத்தை உரிமை கொண்டாடுவதற்கு அது அவ்வாறு செய்கிறது, அது இன்றுவரை பரந்த அளவிலான உழைக்கும் மக்கள் கண்ட ஒரு பெரிய முற்போக்கான அடியெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் சோசலிசத்தைக் கைவிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நலனைக் கவனித்துக்கொள்வதாகவும், கோவிட்-19 நோயால் மில்லியன் கணக்கானவர்கள் அழிந்து போவதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் கூறுவதில் அது தங்கியுள்ளது.

பல தசாப்தங்களாக நீடித்த உயர் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான சீனர்களை வறுமையிலிருந்து முழுமையாக விடுவித்துள்ளது, அதேவேளை பணகாரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஒரு பெரும் சமூகப் பிளவைத் திறந்துள்ளது. கோவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் அதிகரித்துள்ள முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் சீனாவின் வளர்ச்சி இப்போது சரிவு கண்டுள்ளது. ட்ரம்பின் கீழ் சுமத்தப்பட்டு பின்னர் பைடெனின் கீழ் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் சீனப் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சிக்கான சமீபத்திய உலக வங்கி கணிப்பு வெறும் 2.8 சதவிகிதம் மட்டுமே—இது பல தசாப்தங்களில் மிகக் குறைவானது மற்றும் குறைந்த வேலையின்மை மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு அவசியம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதும் 8 சதவீத அளவிற்குக் கீழே உள்ளது. ஜூலையில், நகர்ப்புறங்களை மட்டுமே உள்ளடக்கிய உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 5.4 சதவிகிதமாக இருந்தது, ஆனால் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 19.9 சதவிகிதத்தை எட்டியது. பெருகிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளும் சமூக நெருக்கடியும் வளர்ந்து வரும் சமூகப் பதட்டங்களுக்கு வழிவகுக்கின்றன, அவை வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் வெடிக்கும்.

கட்சி ஒற்றுமையின் முகப்புக்குப் பின்னால், சமூகப் பதட்டங்கள் கூட சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் உட்பூசல்களிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. கட்சி மற்றும் அரசாங்கத்தின் இன்றியமையாத ‘மையமாக’ ஜி உயர்த்தப்பட்டதும், மற்றும் கடந்த மாநாட்டில் கட்சி அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்ட ‘ஜி ஜின்பிங் சிந்தனை’யின் முடிவில்லாத ஊக்குவிப்பும் கட்சியின் பலவீனத்தை அடையாளப்படுத்துகிறதே தவிர, வலிமையை அல்ல. வெளிநாடுகளில் போர், மற்றும் உள்நாட்டில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டினாலும் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களை கட்சி எதிர்கொண்டுள்ள நிலையில், அதை ஐக்கியப்படுத்தி வைத்திருக்கும் முயற்சியில் ஆட்சி ஒரு அரசியல் பலசாலியை நம்பியுள்ளது.

ஜி தனது பங்கிற்கு, மில்லியன் கணக்கான அதிகாரிகளை விசாரித்து, முக்கிய போட்டியாளர்கள் மற்றும் அச்சுறுத்தல்களை அகற்றிய அல்லது ஓரங்கட்டிய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயன்றார். கடந்த தசாப்தத்தில், அரசாங்கக் கொள்கையின் அனைத்துப் பகுதிகளையும் மேற்பார்வையிட சக்திவாய்ந்த முன்னணி சிறிய குழுக்களை நியமிப்பதன் மூலம் ஜி அரசாங்கத்தின் மீதான தனது பிடியை பலப்படுத்தியுள்ளார். சக்திவாய்ந்த மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். அதன் விளைவாக, சில ஆச்சரியங்கள் ஏற்படக்கூடும். பெரும்பாலும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றதான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார கால மாநாட்டிற்குப் பின்னர், ஜி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் அடுத்த மார்ச் மாதம் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக் கொள்வார்.

Loading