"நான் அவரை 100 சதவீதம் ஆதரிப்பேன்": UAW தேர்தலில் வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கையில், சாமானிய தொழிலாளர்களின் வேட்பாளர் வில் லெஹ்மனுக்கு ஆதரவு பெருகுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் UAW தலைவர் பதவிக்கான லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் தகவலுக்கு, WillForUAWPresident.orgஐப் பார்வையிடவும்.

UAW இன் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில், பென்சில்வேனியாயின் மாக்கன்கி இல் உள்ள மாக் ட்ரக் ஆலையின் ஒரு சோசலிச மற்றும் இரண்டாம் அடுக்கு தொழிலாளி வில் லெஹ்மனின் பிரச்சாரம் சமீபத்திய நாட்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சென்றடைந்துள்ளது. லெஹ்மன் தனது பிரச்சாரத்தின் மத்தியில் சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை வைத்துள்ளார்.

UAW சர்வதேச அதிகாரிகளின் முதல் நேரடித் தேர்தலுக்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியது.

UAW ஐ மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களால் கண்காணிக்கப்படும் வாக்களிப்பு, தொழிற்சங்கத்தின் தற்போது செயலில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற 900,000 உறுப்பினர்களுக்கு திறந்திருக்கும். நவம்பர் 28 இறுதிக் காலக்கெடுவிற்கு முன்னாதாக நவம்பர் 18 ஆம் தேதிக்குள் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட வேண்டும்.

டெட்ராய்ட் மற்றும் சிகாகோ உள்ளிட்ட பல ஆலைகளில் அதிகபட்ச வாக்குகளைப் பெறுவதற்காக, சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்கி லெஹ்மானுக்கான பிரச்சாரம் கடந்த பல வாரங்களாக வேகத்தை அதிகரித்து வருகிறது.

லெஹ்மனுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், பல தொழிலாளர்கள் இன்னும் தேர்தல் பற்றியோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை. அதன் பங்கிற்கு, UAW அதிகாரத்துவம் வாக்குப்பதிவைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை மிகக் குறைவாகவே பரப்புகின்றது. இதன் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்யலாம் என நம்புகிறது.

டெட்ராய்டின் வடக்கே உள்ள வாரன் ட்ரக் பொருத்தும் ஆலையில் ஸ்டெல்லாண்டிஸ் மூன்றாவது ஷிப்டை நீக்குவதாக அறிவித்தது போதே வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது. ஆலையை மூடலாம் என்று ஸ்டெல்லாண்டிஸ் எச்சரித்து, உற்பத்தி குறைபாடுகள் மற்றும் தொழிலாளர்களை மிருகத்தனமாக தவறாக நடத்துவதன் காரணமாக தொடர்ச்சியான வருகை குறைந்த நிலைமைகளின் கீழ் தொழிலாளர்களை குற்றம் சாட்டுகிறது. வாரன் ட்ரக்கில் உள்ள தொழிலாளர்களில் கணிசமான சதவீதம் பேர் 'துணை பணியாளர்களாவர்'. அவர்கள் பல துரித உணவு உணவகங்களில் வழங்கப்படும் ஊதியமான ஒரு மணி நேரத்திற்கு $16க்கும் குறைவாகவே ஆரம்பத்தில் பெறுகின்றனர்.

டெட்ராய்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸில் வில் லெஹ்மனின் ஆதரவாளர் அவர் ஏன் பிரச்சாரத்தை ஆதரித்தார் என்பதை விளக்கினார். 'வில்லின் பிரச்சாரத்தில் உண்மையான ஆர்வம் உள்ளது. நாங்கள் இன்னும் பெறுவதற்கு தகுதியானவர்கள். பெருநிறுவனப் பேராசை மற்றும் செல்வத்திற்கான சிலரின் சுயநல நோக்கமுள்ள ஆசைகளால் மக்கள் தங்கள் வேலையை இழக்க முடியாது; அது வெறுப்பானது' என்றார்.

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள Volvo Trucks New River Valley ஆலையில், ஒரு பிரச்சாரக் குழு திங்களன்று லெஹ்மனுக்கு வலுவான ஆதரவைப் பெற்றது. ஆலையில் உள்ள தொழிலாளர்கள் கடந்த ஆண்டு கசப்பான வேலைநிறுத்தத்தை நடத்தினர். UAW தலைவர் ரே கேர்ரி தலைமையிலான UAW அதிகாரத்துவம் தங்கள் மீது காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை பலமுறை வலுக்கட்டாயமாக திணிக்க பல முறை முயன்றதற்கு எதிராக அவர்கள் வாக்களித்தனர்.

வோல்வோ டிரக்ஸ் நியூ ரிவர் வலி ஆலை

சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களின் உலகளாவிய வலையமைப்பைக் கட்டியெழுப்புவதன் மூலம் அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், தொழிற்சாலைகளுக்கு அதிகாரத்தை மாற்றவும் என்ற லெஹ்மனின் கோரிக்கைக்கு பிரச்சாரக் குழு பலத்த ஆதரவைக் பெற்றது. அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும் ஒரு உள்ளூர் தேர்தல் குழுவில் சேர டஜன் கணக்கான தொழிலாளர்கள் கையெழுத்திட்டனர்.

மார்க் 40 ஆண்டுகளாக ஆலையில் பணிபுரிந்தார். அது White Motors க்கு சொந்தமானது. 'தொழிற்சங்கம் மோசமானது,' என்று அவர் கூறினார். 'அவர்கள் செய்வது எல்லாம் அனைத்தையும் விட்டுக்கொடுப்பதுதான். நான் லெஹ்மனுக்கு 100 சதவீதம் ஆதரவளிப்பேன். கேர்ரியை வெளியேற்றி, சாமானியத் தொழிலாளர்களை உள்ளே கொண்டு வரும் எவருக்கும் ஆதரவளிப்பேன். அதுதான் எங்களுக்குத் தேவை' என்றார்.

மார்க், வோல்வோ ட்ரக்ஸ் தொழிலாளி

2021 இல் வோல்வோ வேலைநிறுத்தம் பற்றி கேட்டபோது, “அவர்கள் உண்மையில் எங்களைத் ஏமாற்றினார்கள். அதில் தொழிற்சங்கமும் நிறுவனங்களும் ஒன்றாக, ஆனால் குறிப்பாக தொழிற்சங்கம் ஏமாற்றியது. தொழிற்சங்கம் எங்களுக்காக நிற்கவில்லை. நான் அவர்களிடம் சொன்னேன், ‘உங்கள் போலியான மறியல் பாதையில் நில்லுங்கள். நான் நிலக்கரி வயல்களில் வளர்ந்தேன், உண்மையான மறியல் போராட்டம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நாங்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தோம்! ஒரு உண்மையான மறியல் போராட்டப்பாதை அந்த சாலையின் குறுக்கே செல்கிறது. போக்குவரத்தை நிறுத்தி, நீங்கள் கருங்காலிகளை நிறுத்துகிறீர்கள். அதுதான் உண்மையான மறியல் போராட்டம்.

'வேலைநிறுத்தத்தின் போது, அவர்கள் நிறைய விஷயங்களைச் செய்து கொண்டிருந்தனர் ... ட்ரக்குகளை விநியோகஸ்தர்களிடம் பொருத்துவதற்காக லாரிகளை நிறுத்தும் இடங்களில் இருந்து எடுத்துச் சென்றனர்.

'நிறுவனம் என்ன கொண்டு வந்தாலும் பரவாயில்லை, தொழிற்சங்கம் அதை அனுமதிக்கிறது. எங்களுக்கு இனி ஒரு தொழிற்சங்கம் இருப்பதாக நான் உணரவில்லை. இனி வேலைநிறுத்தம் செய்ய எங்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் எங்களை ஒரே ஒப்பந்தத்திற்கு இரண்டு முறை வாக்களிக்க வைத்தனர், ஏனெனில் அவர்கள் முன்னர் வெளிவந்த முடிவை விரும்பவில்லை.

“இந்தப் பகுதியில் உள்ள யாரும் இங்கு வர விரும்பாத அளவுக்கு அவர்களின் மதிப்பு [வோல்வோ] பல ஆண்டுகளாக மோசமாகிவிட்டது. ஒரு காலத்தில் இங்கு வேலை மிகவும் மதிப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இங்கு வேலை செய்பவர்கள் அதை நரகம் என்று அழைக்கிறார்கள்”.

சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, மார்க் பின்வருமாறு பதிலளித்தார். “எங்களுக்கு ஏதாவது தேவை. எங்களிடம் இப்போது எதுவும் இல்லை. தொழிற்சங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும் யோசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்து வெளியேறியவர்கள் ஏராளம். அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை'.

2004 இல் இருந்து வேலைசெய்யும் மற்றொரு வோல்வோ ட்ரக்ஸ் பணியாளரான டானா, சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்: 'குழுக்கள் ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன். தொழிற்சாலையில் உள்ளவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற, ஏனென்றால் அங்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்; என்ன நடக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இது அவர்களின் எதிர்காலம், அது எனது குடும்பத்தின் எதிர்காலம். நான் இங்கே வேலை செய்கிறேன், என் கணவர் இங்கே வேலை செய்கிறார், என் மகனும் இங்கே வேலை செய்கிறார்”.

டானா, வால்வோ டிரக்ஸ் தொழிலாளி

அனைத்து ஊதிய அடுக்கு முறைகளையும் ஒழிப்பதற்கான லெஹ்மனின் அழைப்பைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, 'நாங்கள் அனைவரும் இங்கு ஒரே மணித்தியாலம் வேலை செய்கிறோம், ஒரே நேரத்தில் எங்கள் உற்பத்தியை செய்கிறோம், எங்களுக்கும் அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும்' என்று கூறினார்.

மத்திய மேற்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் பிரச்சாரக் குழு திங்களன்று சிகாகோ பகுதியில் உள்ள இரண்டு போர்டு ஆலைகளுக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் போர்டின் Chicago Stamping ஆலையை பார்வையிட்டனர். பின்னர் அருகிலுள்ள சிகாகோ பொருத்தும் ஆலைக்கு (CAP) பயணம் செய்து, பிற்பகல் பணிமுறை மாற்றத்தின் போது தொழிலாளர்களிடம் பேசினார்கள். கடுமையான வேலை நிலைமைகள், உதிரிபாகங்கள் பற்றாக்குறை காரணமாக இடையிடையே பணிநீக்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது UAW அமைப்பால் காட்டப்படும் முழுமையான அலட்சியம் ஆகியவற்றால் ஆலைகளில் பரவலான கோபம் உள்ளது.

சிகாகோ Heights stamping ஆலையில் 26 வயதான ஒரு தொழிலாளி கூறுகையில், 'இரண்டு அடுக்கு அமைப்பை யாரும் விரும்புவதில்லை. மேலும் இது ஆலைகளுக்குள் அழிவை ஏற்படுத்துகிறது. 'UAW அதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது, நாம் அதிலிருந்து விடுபட வேண்டும்' என்றார்.

லெஹ்மனின் ஆதரவாளர்கள் Chicago Stamping ஆலைக்கு வெளியே பிரச்சாரம் செய்கிறார்கள்

'ஆலைக்கு வெளியே உள்ள எனது நண்பர்கள் என்னை விட அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்' என்று ஒரு இளம் தொழிலாளி கூறினார். புதிய பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் சலுகைகள் இல்லாமை பற்றி கூறினார்.

மற்றொரு மூத்த தொழிலாளி, “புதிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை அவர்கள் பறித்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உண்மையில் இளைஞர்களை ஏமாற்றுகிறார்கள். அடுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு எங்கள் சுகாதாரப் பாதுகாப்பின் மீது அவர்கள் கைவைக்கப் போகிறார்கள் என்று நான் பயப்படுகிறேன். மேலும் UAW அதற்கு இணைந்து செயல்படும்”.

பல தொழிலாளர்கள் ஆலையில் வரவிருக்கும் பணிநீக்கங்கள் பற்றி பேசினர். ரோபோக்கள் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்கள் வேலைகளை அகற்ற பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், மரபுரீதியான தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக நிலையான ஊதியத்தில் பாதிக்கும் குறைவாக பெறும் துணைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

'புதிய மின்சார வாகனத் தயாரிப்பின் மூலம், அவர்கள் வேலைகளைக் குறைப்பதாக அச்சுறுத்துகிறார்கள். மேலும் பணிநீக்கங்கள் வருவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம்,' என்று 27 வயது தொழிலாளி கூறினார். லெஹ்மன் அனைத்து வேலை வெட்டுக்களையும் எதிர்க்கிறார் என்றும், வேலைகளை குறைப்பதற்குப் பதிலாக ஊதியத்தில் இழப்பு இல்லாமல் வேலை வாரத்தை குறைப்பதன் மூலம் உழைப்பு-சேமிப்பு தொழில்நுட்பத்தை தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பிரச்சாரகர் விளக்கினார். 'நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்,' என்று தொழிலாளி பதிலளித்தார். 'அவர் அதற்காக நின்றால், நான் அவருக்கு வாக்களிப்பேன்' என்றார்.

போர்டு சிகாகோ பொருத்தும் ஆலையில் (CAP), போர்டு தொழிலாளர்கள் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கான தேர்தல் அறிக்கைகளை விநியோகிக்க ஆலை வாயிலில் பிரச்சாரகர்களுடன் சேர்ந்தனர்.

லெஹ்மன் UAW தலைவர் ரே கேர்ரி மற்றும் பிற வேட்பாளர்களுடன் விவாதித்ததை கேட்டதாக பிரச்சாரத்தை அவதானித்த இன்னுமொரு தொழிலாளி தெரிவித்தார். UAW எந்திரத்துடன் எப்படிப் பணிபுரிவார் என்று லெஹ்மானிடம் நிகழ்ச்சி மத்தியஸ்தர் கேட்டபோது தான் 'அவர்களில் எவருடனும் அவர் வேலை செய்ய மாட்டார் என்று அவர் கூறியது எனக்கு பிடித்திருந்தது' என்று அவர் பிரச்சாரகர்களிடம் கூறினார்.

சிகாகோ பொருத்தும் தொழிலாளர்கள் வில் லெஹ்மனுக்கு ஆதரவைக் காட்டுகின்றனர்

UAW எந்திரத்திலிருந்து தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்ற ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை லெஹ்மன் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குழுக்கள், தொழிலாளர்களை அவர்களின் நிலைமைகளைப் பாதுகாக்க அணிதிரட்ட வேண்டும் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களை துஷ்பிரயோகம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர, அடுக்குமுறைகளை ஒழிக்க மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக ஊதியங்களில் கணிசமான அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு-பாதுகாப்புக்காக போராடுவதற்கான கூட்டு நடவடிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

12 வருடம் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி பிரச்சாரகர்களிடம், “எங்களுக்கு இங்கு தொழிற்சங்கம் இல்லை, நிர்வாகத்திடம் ஒன்று உள்ளது. தொழிற்சங்க கிளை நிர்வாகிகள் ஒவ்வொரு மாதமும் எங்களிடமிருந்து அரை மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம். கடந்த கூட்டத்தில், தொழிற்சங்க கிளை 551 அதிகாரிகளுக்கு தங்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் பிற விஷயங்களுக்கான செலவுக் கணக்குகளை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும்படி எங்களிடம் கேட்க துணிவு இருந்தது.

'நாங்கள் தற்காலிக பணிநீக்கத்தில் இருந்து வந்தோம், நாங்கள் மீண்டும் கீழே போகப் போகிறோம். தொழிற்சங்கம் நம்மை முற்றிலும் இருளில் தள்ளுகிறது. எனது எல்லா வருடங்களிலும், நான் ஒருபோதும் இவ்வளவு பணிநீக்கங்களை கண்டதில்லை. இந்த ஆண்டு குறைந்தது ஆறு முறை நிகழ்ந்துள்ளது. இது நடக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் கட்டணங்களை பின்நகர்த்த வேண்டும். எங்களுக்கு குடும்பங்கள் உள்ளன.

'UAW எங்களைப் பாதுகாக்கவில்லை. பல தொழிலாளர்கள் தொழிற்துறையில் இருந்து வெளியேற நினைக்கிறார்கள். எனக்கு வயது 51. நான் வெளியேறி வால்மார்ட்டில் வேலை தேடப்போகிறேனா?

“நாங்கள் தியாகம் செய்து, தொற்றுநோய் காலம் முழுவதும் வேலை செய்தோம். எப்படியாவது வேலைக்கு வா என்றார்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை என்கின்றார்கள். ஆனால் நாங்கள் வேலை செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும். இரவில் எங்கள் குடும்பங்களிடம் வீட்டிற்கு வர விரும்புகிறோம் என்றார்”.

மேலும் தகவலுக்கு,WillForUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

Loading