எபோலா நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உகண்டா அதிகாரிகள் இரண்டு மாவட்டங்களில் பூட்டுதல் விதித்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உகண்டாவில் எபோலா நோய்தொற்று வெடித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜனாதிபதி யோவேரி முசெவேனி சனிக்கிழமையன்று மத்திய உகாண்டாவில் அருகருகேயுள்ள முபெண்டே (Mubende) மற்றும் கசாண்டா (Kassanda) ஆகிய இரு மாவட்டங்களில் மூன்று வார கால பூட்டுதலை விதித்துள்ளார், அதற்கு முன்பு நெருக்கடியின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 9, 2022, ஞாயிற்றுக்கிழமை, உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி, உகாண்டாவின் கொலோலோவில் கௌரவ காவல் படையை ஆய்வு செய்கிறார் [AP Photo/Hajarah Nalwadda]

ஒரு தொலைக்காட்சி உரையில், முசெவேனி, “இவை எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கைகள் ஆகும். நாம் அனைவரும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும், அப்போதுதான் இந்த வெடிப்பை மிகக் குறுகிய காலத்தில் நாம் முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என்று கூறினார்.

கம்பாலா அருகே ஒரு பாரம்பரிய மருத்துவரிடம் உதவியை நாடி உறவினர் ஒருவர் இறந்ததன் பின்னர், முபெண்டேவில் உள்ள தனது கிராமத்தை விட்டு வெளியேறிய 45 வயது நபர் சமீபத்தில் இறந்ததால் இந்த நெருக்கடி தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. அக்டோபர் 7 அன்று இந்த நோய்தொற்றால் இறந்து போவதற்கு முன்னர், அவரது உடல்நிலை மோசமடைந்தபோது தலைநகரில் உள்ள Kiruddu National Referral Hospital இல் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். சுகாதார அதிகாரிகள் அவர் தொடர்பு கொண்டிருந்த 42 பேரை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, இறந்தவரின் மனைவி கம்பாலாவில் உள்ள ஒரு சுகாதார மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த உடனேயே அவருக்கு எபோலா நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பிறந்த குழந்தையின் நிலை தெரியவில்லை. இந்த தீவிரமான நிகழ்வுகள் இருந்தபோதிலும், சுகாதார மந்திரி ஜேன் ரூத் அசெங், தலைநகரில் இப்போதுவரை ‘எபோலா இல்லை’ என்று பொதுமக்களிடம் அறிவித்தார், காரணம் தம்பதியினர் பாதிக்கப்பட்டது முபெண்டேவில் என்பதால்.

வியாழக்கிழமை அன்று, அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார், “கம்பாலாவில் எபோலா இல்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். முபெண்டேவில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நோய்தொற்றுக்கள் முபெண்டே நோய்தொற்றுக்களாகவே கணக்கில் உள்ளன. கம்பாலாவில் நோய்தொற்று பரவத் தொடங்கி அதன் சொந்த நோய்தொற்றுக்கள் உருவாகாத வரை, நாம் அவற்றை கம்பாலா நோய்தொற்றுக்கள் என்று அழைக்க முடியாது.” அவர் மேலும், பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளித்த சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தலைநகரில் உள்ள பிரதான மருத்துவமனையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

பூட்டுதல் என்பது கம்பாலாவில் இருந்து தெற்கு உகாண்டாவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களைத் தவிர, இந்த இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளேயும் அல்லது வெளியேயும் எவரும் பயணிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து உணவகங்களையும் மதுபானகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது, மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூட்டுதலின் போது வழிபாட்டு இல்லங்களில் எந்த சபையும் நடத்தப்பட மாட்டாது. நோய்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் அவரை கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவு உள்ளது. பாரம்பரிய மருத்துவர்கள் இந்த நோய்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் சுகாதார அதிகாரிகள் அனைத்து புதைகுழிகளையும் மேற்பார்வையிட வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகெங்கிலும் வெளிப்பட்டு வரும் பல்வேறு நோய்தொற்றுக்களை மதிப்பாய்வு செய்யும் அவர்களின் அக்டோபர் 12 செய்தியாளர் சந்திப்பில், உகாண்டாவில், 39 பேர் இறந்தது மற்றும் 14 பேர் குணமடைந்தது உட்பட, குறைந்தது 54 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் 20 சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்கள் உள்ளன என்று கூறினார். மேலும், பத்து சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் நான்கு பேர் இறந்துவிட்டனர்.

உகண்டா எபோலா வெடிப்பு குறித்த மருத்துவர்களுக்கான பவர்பாயிண்ட் விளக்கக் காட்சியின் ஸ்கிரீன்ஷாட் [Photo: Drs. Trevor Shoemaker and Mary Choi, CDC]

வார இறுதி நிலவரப்படி, ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), எபோலா நோயாளிகளின் 1,100 தொடர்புகளை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறியது. இதுவரை, சூடான் எபோலா வைரஸின் வெடிப்பு மத்திய மற்றும் மேற்கு உகாண்டாவில் உள்ள புன்யான்காபு, காகடி, கசாண்டா, கியெகெக்வா மற்றும் முபெண்டே ஆகிய ஐந்து மாவட்டங்களை பாதித்துள்ளது. இருப்பினும், நாட்டின் எல்லைகள் மிகவும் நுண்துளைகளாகவே உள்ளன. தலைநகரம் மற்றும் அதன் பரந்து விரிந்த சுற்றுப்புறங்களில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் நேரடி விமானங்கள் ஆம்ஸ்டர்டாம் மற்றும் புரூஸ்ஸெல்ஸ், மற்றும் அடிஸ் அபாபா மற்றும் தோஹா உள்ளிட்ட பிராந்திய மையங்கள் வழியாக பயணிக்கின்றன.

அமெரிக்காவின் தொற்றிப் பரவக்கூடிய நோய் குறித்த சங்கம் (Infectious Disease Society of America-IDSA), உகாண்டா அதிகாரிகள் என்டெபேயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் பயணிகளை இதுவரை பரிசோதனை செய்யத் தொடங்கவில்லை என்று கூறுகிறது, ஆனால் இது அமெரிக்க CDC, அவர்களின் அக்டோபர் 12 Clinician Outreach and Communication Activity Hall நிகழ்வு பற்றி கூறியதற்கு முரணானதாக இருந்தது, அதாவது இது விமானப் பயணிகள் வெளியேறும் போது பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறது.

ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இந்த வைரஸ் கண்டறியப்படாமல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர், இது தற்போது தலைநகரில் பரவுவதற்கு அச்சுறுத்துகிறது, மேலும் தொடர்ந்து பிற ஆபிரிக்க நாடுகளுக்கும் பிற கண்டங்களுக்கும் கூட பரவக்கூடும் என்கின்றனர். உதாரணமாக, செப்டம்பர் இறுதியில், கென்யா மற்றும் தெற்கு சூடானில் சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கென்யாவின் சுகாதார மந்திரி, “நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான ஆய்வக சோதனை முடிவுகள் எதிர்மறையாக உள்ளன என்ற நிலையில், எச்சரிக்கை விடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்று பின்னர் உறுதிப்படுத்தினார்.

உகாண்டாவின் சுகாதார அமைச்சகத்தில் உள்ள எபோலா விவகாரத் தலைவர் டாக்டர். கியோப் ஹென்றி பிபோசா Scientific American இதழிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார், “இந்த குறிப்பிட்ட வெடிப்பு பெரும்பாலும் வனவிலங்குகளின் கசிவினால் உருவானதாகும். சமீப காலங்களில் பரவி வரும் எபோலா வைரஸின் இந்த மாறுபாடு வேறுபட்ட வெடிப்பில் இருந்து வந்ததாக சந்தேகிக்க எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. கடைசியாக சூடான் எபோலா வைரஸின் வெடிப்பு… பத்து வருடங்களுக்கும் முன்னர் ஏற்பட்டது, அந்த சமயத்தில் வனவிலங்குகளின் மிகக் குறைந்த கசிவினால் அது நிகழ்ந்தது என்று நாங்கள் கருதுகிறோம். இது தற்போது காடுகளில் இருந்து மனிதர்களிடையே புழக்கத்தில் இருக்கும் புதிய கசிவு என்று நாங்கள் நினைக்கிறோம்.”

மேலும் அவர் இவ்வாறு கூறினார், “புவியியல் பரவலைப் பொறுத்தவரை, வெடிப்பின் முக்கிய மையம் உகாண்டாவின் மையத்திற்கு அருகில் உள்ள முபெண்டே மாவட்டம் ஆகும். ஆனால் அதற்குள் ஐந்து துணை மாவட்டங்கள் உள்ளன [அங்குதான் நோய்தொற்றுக்கள் முக்கியமாக உருவெடுத்தன]. ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை 70 கிலோமீட்டர் தூரத்தை நாங்கள் கண்காணிக்கிறோம். துணை மாவட்டங்களுக்குள் உள்ள நோய்க் குழுக்களைப் பொறுத்தவரை, 30 கிலோமீட்டர் வரை கண்காணிக்கிறோம். நாடு முழுவதும் கண்காணிப்பில் உள்ளது. நோய்தொற்றின் மையமாக உள்ள மாவட்டத்தைச் சுற்றியுள்ள 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பை விரிவுப்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.”

கடந்த வாரம், உகாண்டாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்கள் வழியாக திருப்பியனுப்பப்பட்டு, பரிசோதிக்கப்படுவார்கள் என்று பைடென் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும், ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு மையம் (ECDC) வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘உகண்டாவில் இருந்து திரும்பும் பயணிகளை பரிசோதனை செய்வது மட்டும் ஒரு பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை அல்ல,’ என்று குறிப்பிட்டதுடன், அத்தகைய நடவடிக்கைகளுக்கு ‘நேரமும் வளங்களும் மட்டுமே செலவாகும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவை திறம்பட அடையாளம் காணாது’ என்று தெரிவிக்கிறது.

உகண்டாவில் இருந்து திரும்பியதன் பின்னர் ஒரு இஸ்ரேலியருக்கு சமீபத்தில் நோய்தொற்று ஏற்பட்டது சர்வதேச சமூகம் முழுவதும் நடுக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் ECDC எழுப்பிய கவலைகளை இன்னும் அதிகப்படுத்தியது. சந்தேகத்திற்கிடமான நபருக்கு எடுக்கப்பட்ட முதல் எபோலா பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தது, என்றாலும் அவர் இப்போதுவரை ஷெபா மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO), செயல் இயக்குநர் டாக்டர். மைக் ரியான் தலைமையிலான நிபுணர்கள் குழுவை தணிப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு உதவ அனுப்பியது. தற்போது வரை, நிதி ஒரு முக்கியமான பிரச்சினையாக நீடிக்கிறது. சர்வதேச நிறுவனம் 2 மில்லியன் டாலர் தற்செயல் நிதியை விடுவித்துள்ளது, மேலும் எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் மற்றும் சர்வதேச மீட்புக் குழு போன்ற அமைப்புக்கள் கூடுதல் பொருட்கள் மற்றும் நிபுணர்களை அனுப்பியுள்ளன. ஆனால் உகாண்டா நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு உதவ தேவைப்படும் 18 மில்லியன் டாலர் நிதி கோரிக்கையை விட இது மிக மிகக் குறைவாகும்.

WHO இன் சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில், ரியான் இவ்வாறு தெரிவித்தார், “தயார்நிலையின் அடிப்படையில் இங்குள்ள அரசாங்கத்திற்கும் சுற்றியுள்ள அரசாங்கங்களுக்கும் மிகுந்த சர்வதேச ஆதரவு தேவை. உள்ளூர் அளவில் கண்காணிப்பு அமைப்பை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும். நமக்கு இன்னும் அதிக எச்சரிக்கைகள் தேவை. நமக்கு அதிக சமூக ஈடுபாடும் தேவை. தனியார் மற்றும் பொது சுகாதார வசதிகளில் நமக்கு சிறந்த தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தேவை. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து தேவையான சோதனைகளையும், மற்றும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மற்றும் சில வைரஸ் தடுப்பு மற்றும் மோனோக்ளோனல்கள் தொடர்பாக ஏற்கனவே நடந்து வரும் சோதனைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.”

அவர் மேலும் கூறினார், “எபோலா ஆச்சரியங்களைக் கொண்டுவருகிறது, தொற்றுநோய்கள் ஆச்சரியங்களைக் கொண்டுவருகின்றன, மேலும் அவரும் [அசெங்] அவரது குழுவினரும் இந்த வெடிப்பு குறித்துக்காட்டும் சவாலை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. எனவே, சரியான விஷயங்கள்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்று நான் நம்புகிறேன், என்றாலும் இன்னும் அதிக அளவு நடவடிக்கைகள் தேவை. அந்த அதிகரிப்புக்கு நமக்கு அதிக ஆதரவு தேவை, மேலும் மீண்டும், இது பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்றாக இணைந்து சுற்றி கண்காணிப்பதை உறுதியளிக்கிறது. நாடுகள் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக, வெளிப்படையாக இருக்கும் போதும், மற்றும் ஈடுபடும் போதும், அதற்கான தண்டனையை அது சந்தித்து விடாமல் பார்ப்பது முக்கியம்.”

டாக்டர் ரியான் கவனமாக கருத்துக்களை கூறியிருந்தாலும், உகாண்டா வெடிப்பு என்பது, உக்ரேனில் போர் வெடித்ததில் இருந்து முன்னோடியில்லாத புவிசார் அரசியல் பதட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்திற்கு பதில் இல்லாத மிகவும் குறிப்பிடத்தக்க நெருக்கடியின் ஆரம்பம் என்பது பரிதாபகரமாகத் தெரிகிறது.

வர்த்தக மற்றும் கலாச்சார இணைப்புக்களின் விரிவான வலைப்பின்னல் காரணமாக அனைத்து பிராந்திய பிரதேசங்களையும் அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வரும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவுவதற்கு குறைந்தது ஒன்பது ஆபிரிக்க நாடுகள் WHO உடன் தங்கள் முயற்சிகளை இணைத்துக் கொள்ளும். இதில் புருண்டி, காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) மற்றும் கென்யா ஆகியவை அடங்கும், இது நோய் கண்காணிப்பை அதிகரிக்கவும், மற்றும் அவசரகால நடவடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உதவும்.

அடிப்படையில், எபோலா, அத்துடன் கோவிட்-19, குரங்கம்மை, காலரா, மற்றும் மனிதகுலத்தை தற்போது பாதிப்புக்குள்ளாக்கும் மற்றும் அச்சுறுத்தும் மற்ற அனைத்து தொற்று நோய்களையும் எதிர்த்துப் போராட, உலகப் பொருளாதாரத்தின் மீதான சோசலிச மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போரில் வீணடிக்கப்படும், மற்றும் பெரும் பணக்காரர்களின் கஜானாக்களுக்கு பாய்ச்சப்படும் டிரில்லியன் கணக்கான டாலர்கள், தொற்றுநோய்களை ஒழிப்பது-அழிப்பது, புவி வெப்பமடைதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட, மனித தேவைகளைப் பூர்த்தி செய்ய மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

Loading