வடக்கு ஐரோப்பா முழுவதும் இலையுதிர் கால கோவிட்-19 நோய்தொற்று எழுச்சி தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 நோய்தொற்று குறித்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலின் சில அம்சங்களைத் தொடர்ந்து பராமரிக்கும் பெல்ஜியம் மற்றும் டென்மார்க் உட்பட, வடக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆரம்ப அறிக்கைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸுடன் தொடர்புடைய நோய்த்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகளின் அடுத்த அலை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தொடங்கியுள்ளது.

‘நாம் தெளிவாக குளிர்கால [கோவிட்-19] அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்!’ என்று ஜேர்மனியின் மத்திய சுகாதார மந்திரி கார்ல் லவுட்டர்பாஹ் (Karl Lauterbach) வெள்ளியன்று ஒரு சுருக்கச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். கடந்த 24 மணிநேரத்தில், ஜேர்மனியில் 96,000 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது செப்டம்பர் 29 அன்று 58,000 ஆக இருந்ததில் இருந்து உயர்ந்துள்ளது என்பதுடன், மூன்று வாரங்களுக்கு முன்பிருந்த நோய்தொற்று எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இதே காலகட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியத்திலும் புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இரட்டிப்பாகியுள்ளன.

இதற்கிடையில், கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனை அனுமதிப்பு இங்கிலாந்தில் கடுமையாக அதிகரித்துள்ளது, முந்தைய வாரத்திலிருந்து 48 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பின் பொது சுகாதார திட்டங்களின் இயக்குநர், மேரி ராம்சே, “ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட கோவிட்-19 நோய்தொற்றின் குளிர்கால எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் அதிகரிப்பை நாம் இப்போது காண்கிறோம் என்பது தெளிவாகிறது. நோய்தொற்றுக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன, மேலும் வயோதிபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது” என்று பொலிட்டிகோவிற்கு தெரிவித்தார்.

இந்த குளிர்காலத்தில் வடக்கு அரைக்கோளம் முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படும் H3N2 காய்ச்சல் விகாரத்தால் ஏற்படும் அச்சுறுத்தலுடன் இந்தக் கவலைகளும் அதிகரிக்கின்றன. தொற்று நோய்களின் இந்த இணையான எழுச்சிகளானது, எரிபொருள் மற்றும் உணவு விலைகளின் கடுமையான உயர்வால் உருவான பொருளாதார நெருக்கடியாலும், குளிர், மோசமான வெப்பநிலை ஆகியவற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் உட்புறங்களுக்குள் முடங்குவதாலும் இன்னும் மோசமடையும்.

இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை மருத்துவ ஆலோசகர் சூசன் ஹாப்கின்ஸ், “H3N2 காய்ச்சல் விகாரம் குறிப்பாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்… காய்ச்சலும் கோவிட்-19 நோய்தொற்றும் முன்கணிக்க முடியாதவை, ஆனால் பரவலான புழக்கத்தால் நாம் அச்சுறுத்தப்படலாம் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. கடந்த மூன்று குளிர்காலங்களில் குறைந்த வெளிப்புழக்கம் காரணமாக குறைந்த அளவிலான இயற்கை நோயெதிர்ப்பு சக்தி, மற்றும் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடிய பல வகைகளுடன் சுற்றும் COVID-19 இன் அதிகரிப்பு ஆகியவற்றால் பரந்த சுழற்சியுடன் காய்ச்சலால் அச்சுறுத்தப்படலாம் என்று அனைத்தும் அறிவுறுத்துகிறது' எனக் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும், ஜூலை மாத இறுதியில் இருந்து ஓமிக்ரோனின் BA.5 துணைமாறுபாட்டின் எழுச்சி படிப்படியாக குறைந்ததன் பின்னர், புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மீண்டும் ஒருமுறை மேல்நோக்கி உயர்ந்துள்ளன. நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ உலகளாவிய ஏழு நாள் சராசரி இப்போது 446,625 ஆக உள்ளது, இது புதன்கிழமை எட்டப்பட்ட குறைந்த புள்ளியிலிருந்து சற்று அதிகரித்துள்ளது. உலகளவில் நிலவும் கடுமையான பரிசோதனை பற்றாக்குறையால், உலகளவில் தினசரி புதிய நோய்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கை இப்போது தோராயமாக 17,236,000 ஆக உள்ளது என்றும், மேலும் அதிலிருந்து அதிகரித்து புத்தாண்டு தினத்தில் இந்த எண்ணிக்கை உலகளவில் 45 மில்லியன் அளவிற்கு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) மதிப்பிட்டுள்ளது. மேலும், தினசரி புதிய கோவிட்-19 இறப்புக்களின் உண்மையான எண்ணிக்கை அதற்குள் 5,000 ஐ எட்டும் என்று அவர்களின் கணிப்புகள் கூறுகின்றன.

எதிர்காலத் தலையீடுகள் பொருளாதாரத்தை மீண்டும் சீர்குலைக்காது என்று மக்களை மதி மயக்கவும் மற்றும் நிதிய தன்னலக்குழுவை சமாதானப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட ஒரு முழுமையான அரசியல் முழக்கமான ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது,’ என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் சமீபத்திய அறிவிப்புக்களின்படி, ஆளும் உயரடுக்கின் கொலைகாரக் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவை இது கணக்கிடுகிறது.

2020 ஆம் ஆண்டின் கடைசி ஒன்பது மாதங்களில், உலகளவில் 83 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் 1.9 மில்லியன் இறப்புக்கள் (அல்லது மாதத்திற்கு 210,000 இறப்புக்கள்) ஏற்பட்டதாக உத்தியோகபூர்வ பதிவு உள்ளது. 2021 ஆம் ஆண்டில், கோவிட்-19 தடுப்பூசிகளின் விநியோகத்திற்கு மத்தியில், 206 மில்லியன் மக்கள் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகினர், மற்றும் 3.6 மில்லியன் மக்கள் இறந்தனர் (மாதத்திற்கு 300,000 வீதம்) என்று உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டான 2022 இல், 411 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்களும், மாதத்திற்கு 120,000 வீதம் 1.1 மில்லியன் இறப்புக்களும் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், பைடென் நிர்வாகமும் உலகின் மற்ற அரசாங்கங்களும் ஓமிக்ரோனின் BA.5 துணைமாறுபாட்டிற்கு எதிராக சற்று கூடுதல் பாதுகாப்பை வழங்கும் ஈரிணைத் திறன் தடுப்பூசிகளை விநியோகிக்க அரைமனதுடன் முயற்சிக்கின்றன. இருப்பினும் அதிக தொற்றும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு தவிர்க்கும் திறனுள்ள BQ.1, BA.2.75.2, BA.2.3.20 போன்ற துணைமாறுபாடுகள் வெளிப்படுவது நிபுணர்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில், கோவிட்-19 நோய்தொற்று ஒரு பாரிய பொது சுகாதார சவாலாக இருக்கும் என்பது தெளிவாகிறது, இதற்கு முதலாளித்துவத்திடம் பதில் இல்லை, மற்றும் ஆளும் உயரடுக்குகள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை வேண்டுமென்றே பலிகடா ஆக்குகின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழகத்தின் வைரஸ் பரிணாம நிபுணர் டாக்டர் கொர்னேலியஸ் ரோமர், “ஏதோ ஒன்று வரப்போகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அநேகமாக பல விஷயங்கள் வருகின்றன” என்று சமீபத்தில் Science இதழிடம் கூறினார். மேலும், பேர்ன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். எம்மா ஹாட்கிராஃப்ட், “நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்க வைரஸூக்கு மீண்டும் உதவும் மாற்றங்களை நாம் காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை” என்று கூறினார்.

தொற்றுநோய் நிபுணர் டாக்டர். மைக்கேல் ஓஸ்டர்ஹோல்ம் சமீபத்தில் இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டார், அதில், “இது 2020 ஜனவரியில் நாம் கையாண்ட அதே வைரஸ் அல்ல. ஒவ்வொரு முறையும் நாம் அழுத்தும்போது அது புதிதாக பரிணமிக்கிறது. நாம் மக்களில் அதிக நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறோம், மேலும் அது நோயெதிர்ப்பு சக்தியை தவிர்ப்பதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்து, பின்னர் அது மேலும் தொற்றுநோயாக மாறும்.” என்றார்.

உலகளாவிய உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்கள் 6.54 மில்லியனாக இருக்கும் அதேவேளை, எக்னாமிஸ்ட் பத்திரிகையின் அதிகப்படியான இறப்புக்களின் மைய மதிப்பீடு 22.4 மில்லியனை எட்டியுள்ளது, அல்லது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட 3.4 மடங்கு அதிகம்.

செயின்ட் லூயிஸில் உள்ள மருத்துவத்திற்கான வாஷிங்டன் பல்கலைக்கழக பள்ளியின் சிறுநீரக மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர். ஜியாத் அல்-அலி, உத்தியோகபூர்வ மற்றும் அதிகப்படியான இறப்புக்களுக்கு இடையிலான இடைவெளி மட்டுமே தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக சுகாதார வலையமைப்பால் நடத்தப்பட்ட நெடுங்கோவிட் குறித்த இணையவழி கூட்டத்தில் சமீபத்தில் கூறினார், ஏனென்றால் நெடுங்கோவிட், தொற்றுநோய் சிக்கல்களின் விளைவாக அதிகமான மக்களைக் கொல்கிறது, இத்தகைய இறப்புக்கள் கோவிட்-19 இறப்புக்களாக பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய இறப்புக்களைக் கண்காணிப்பதில் உள்ள சிரமம் மற்றும் கோவிட்-19 நோய்தொற்றுக்களுடன் ஒத்த தொடர்புகளை உருவாக்குவது என்பது, ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக தரவுகளை சேகரிக்கும் பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே துல்லியமான புள்ளிவிபரங்கள் தெரியவரும் என்பதாகும்.

ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 17 மில்லியன் மக்கள் ஏற்கனவே நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 145 மில்லியனை எட்டுகிறது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் நெடுங்கோவிட் நோய்தொற்றுக்கள் 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டது, இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் குற்றத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அதாவது அவற்றின் கொள்கைகள், ‘இயல்புநிலைக்குத் திரும்ப’ கோவிட்-19 தடுப்பூசிகளை அனுமதிப்பது போதுமானது என்று கூறின. ‘இலேசான’ நோய்தொற்றுக்கள் கூட நெடுங்கோவிட் மற்றும் ஒருவரின் உடலில் நீண்டகால பாதிப்புக்கு வழிவகுக்கும் என்றாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் தீவிர நோய்தொற்று பாதிப்பாளர்களிடையே ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர், டாக்டர். ஹான்ஸ் க்ளூஜ் இவ்வாறு கூறினார், “நெடுங்கோவிட் பற்றி, குறிப்பாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத மக்களிடையே அது எவ்வாறு வெளிப்படுகிறது, மற்றும் அது மீண்டும் எவ்வாறு தொற்றுகிறது என்றெல்லாம் நாம் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலும், இந்த நிலைமைக்கு ஆளானவர்கள் குறித்த கூடுதல் பகுப்பாய்வு, அதிக முதலீடு, அதிக ஆதரவு மற்றும் அதிக ஒற்றுமை ஆகியவற்றின் அவசரத் தேவை இருப்பதை இந்தத் தரவு எடுத்துக்காட்டுகிறது.” அத்தகைய பரிசீலனைகள் செவிடன் காதில் ஓதப்பட்டதாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.

இந்த நாள்பட்ட மற்றும் பலவீனப்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மேலும் கீழ்ப்படுத்தும் மற்றும் சீரழிக்கும். கோவிட்-19 தொற்றுநோய்க்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கடுமையான வைரஸ் நோயறிகுறிகளின் பிந்தைய தன்மை மற்றும் மக்கள்தொகை மீதான அவற்றின் சமூக தாக்கம் பற்றி விஞ்ஞான சமூகத்தில் அறியப்பட்டிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய தசாப்தங்களில் விஞ்ஞானிகள் நூற்றுக்கணக்கான எச்சரிக்கைகள் விடுத்துள்ள போதிலும், அது தொடர்பான தயார்நிலைக்கு எதுவும் செய்யப்படவில்லை, மேலும் இன்றும் கூட தவிர்க்க முடியாமல் வெளிப்படும் அடுத்த பயங்கரமான தொற்றுநோயை எதிர்கொள்ள முதலாளித்துவ சமூகம் முற்றிலும் தயாராக இல்லை.

சான் டியாகோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள வைராலஜிஸ்ட் டாக்டர் கிறிஸ்டியன் ஆண்டர்சன், “எனக்கு நோய்தொற்று வெடிப்புக்கான பதில் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலை என்ன என்பது பற்றி நன்றாகத் தெரியும், ஆனால் எதுவும் அப்படி இல்லை. தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது நாம் மோசமான தயார்நிலையில் இருக்கிறோம்” என்று நியூயோர்க் டைம்ஸூக்கு சமீபத்தில் தெரிவித்தார். இதற்கிடையில், நைஜீரியாவில் குரங்கம்மை மற்றும் உகாண்டாவில் எபோலா போன்ற விலங்கியல் சார்ந்த நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டதை முந்தைய தசாப்தத்துடன் ஒப்பிடும்போது கடந்த பத்தாண்டுகளில் நோய்தொற்றுக்கள் 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஜூலை 2022 இல் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.

பொது சுகாதாரத்திற்கான பிரவுன் பல்கலைக்கழக பள்ளியின் தொற்றுநோய் மையத்தின் இயக்குநர் ஜெனிஃபர் நுஸோ, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஆயத்தமின்மை பற்றி நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார், அதாவது “மக்கள் மனதில், ஒருவேளை, இந்த கோவிட் விஷயம் ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வாக, ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் நெருக்கடியாக, மற்றும் அடுத்த 99 ஆண்டுகளுக்கு நாம் நன்றாக இருக்கிறோம் என்பது போன்ற எண்ணங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது, [ஆனால்] இது புதிய இயல்பு…” என்கிறார்.

பொது சுகாதாரத்திற்கு, குறிப்பாக அமெரிக்காவில், நீண்டகாலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. முரண்பாடு என்னவென்றால், கோவிட்-19 தொற்றுநோய் பொது சுகாதார உள்கட்டமைப்பின் உள்வெடிப்பை துரிதப்படுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே, தொற்றுநோயியல் நிபுணர்களும் பொது சுகாதார நிபுணர்களும் இடைப்பட்ட மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அவர்கள் எதிர்கொண்ட நாள்பட்ட சோர்வு மற்றும் மனக் கஷ்டங்கள் காரணமாக தங்கள் தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள்.

தொற்றுநோய் முன்னோடியில்லாத சமூக நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டுள்ளது - உக்ரேனில் உள்ள போரைப் போலவே, அது எந்த நேரத்திலும் அணுசக்தி மோதலாக அதிகரித்து மனித நாகரிகத்தை அழிக்கக்கூடும். தொற்றுநோய்களும் காலநிலை மாற்றமும் அவற்றின் பேரழிவுகரமான எழுச்சிக்கு ஒரு பரந்த பாதையை விட்டுச்செல்கின்றன, இந்நிலையில் வாழ்க்கை நிலைமைகள் இன்னும் சகிக்க முடியாததாக மோசமடைகின்றன. வறுமையும் நோய்களும் உலகளாவிய மக்களின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை பெரிதும் பாதிக்கின்றன, ஐரோப்பிய சுகாதார மன்றம் காஸ்டைன் இதை ‘நிரந்தர நெருக்கடி’ அல்லது நெருக்கடி நிரந்தரமானது என்று பொருத்தமாக விவரிக்கிறது.

முதலாளித்துவம், பெருந்திரளான மக்களின் அடிப்படை சமூகத் தேவைகள் மற்றும் ஆரோக்கியத்துடன் பொருந்தாது என நிரூபித்துள்ளது, மேலும் அது திட்டமிடப்பட்ட, உலக சோசலிச சமூகத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

Loading