முன்னோக்கு

மீண்டும் அழிவின் விளிம்பில்: கியூப ஏவுகணை நெருக்கடியின் 60 ஆண்டுகளுக்கு பின்னர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வார இறுதி ஒரு முக்கியமான ஆண்டு நிறைவைக் குறித்தது. அக்டோபர் 22, 1962 அன்று, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி, புளோரிடா கீஸிலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளை சோவியத் ஒன்றியம் நிலைநிறுத்தியதாக அறிவித்து நாடு தழுவிய தொலைக்காட்சி உரையை நிகழ்த்தினார்.

அதன் அடுத்து வந்த வாரத்தில், உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்றது. அக்டோபர் 22-28, 1962 நிகழ்வுகளைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் உலகம் ஒரு நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பேரழிவிற்கு எவ்வளவு நெருக்கமாக வந்தது என்பது சிலருக்குத்தான் தெரியும்.

ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி அக்டோபர் 22, 1962 அன்று வாஷிங்டனில் இருந்து தேசிய தொலைக்காட்சி உரையை நிகழ்த்துகிறார் [AP Photo]

ரோபேர்ட் கென்னடி அவதானித்தபடி, கென்னடியும், சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ்வும் 'நிகழ்வுகளின் போக்கைத் தொடங்கியிருந்தாலும்,' 'இனி அவற்றின் மீது தாங்கள் கட்டுப்பாட்டு கொண்டிருக்கவில்லை' என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அக்டோபர் 27 அன்று, கென்னடியின் உரைக்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க கடற்படை நாசகாரிகள் கியூபாவுக்கு அருகிலுள்ள சோவியத் நீர்மூழ்கிக் கப்பலான B-59 மீது நீர்க்குண்டுகளை வீசி மேற்பரப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்த முயன்றன. அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு தெரியாமல் இருந்தது என்னவெனில், B-59 ஒரு அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியிலான ஏவுகணையால் ஆயுதம் ஏந்தியது என்பதுதான். நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஒரு அதிகாரி அதை பின்வருமாறு விவரித்தார்:

அவர்கள் எங்களை சுற்றி வளைத்து வட்டத்தை இறுக்கத் தொடங்கினர், தாக்குதல்களை பயிற்சி செய்து, நீர்க்குண்டுகளை வீசத்தொடங்கினர். அவை கப்பலின் மேற்பரப்பிற்கு அருகே விழுந்து வெடித்தன. அது யாரோ ஒரு கனமான சுத்தியால் அடிக்கும் ஒரு உலோக பீப்பாயில் உட்கார்ந்திருப்பதைப் போல இருந்தது.

கப்பலின் உயரதிகாரி வலண்டைன் கிரிகோரிவிச் சாவிட்ஸ்கி, கப்பலின் அணுசக்தி நீருக்கடியிலான ஏவுகணையை தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். 'நாங்கள் இப்போது அவற்றை வெடிக்கப் போகிறோம்! நாங்கள் இறந்துவிடுவோம், ஆனால் அவர்கள் அனைவரையும் மூழ்கடிப்போம் — நாங்கள் எங்கள் கடற்படையை அவமானப்படுத்த மாட்டோம்' என்று சாவிட்ஸ்கி கத்தினார்.

அணுசக்தி நீருக்கடியிலான ஏவுகணையின் வெடிப்பு தற்செயலாக மட்டுமே தவிர்க்கப்பட்டது. இருப்பினும், படைப்பிரிவின் தலைமைத் தளபதி வாசிலி ஆர்க்கிபோவ் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்ததால், அந்த உத்தரவை எதிர்த்தார். The Doomsday Machine என்பதில் டானியல் எல்ஸ்பேர்க் பின்வருமாறு கவனித்தார்:

ஆர்க்கிபோவ் மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றில் இருந்திருந்தால், USS Randolph உடன் இணைந்த அழிப்பான்கள் பல உட்பட அனைத்தும் சாவிட்ஸ்கியுடனான [அவரது இரண்டாவது கட்டளை அதிகாரி] உடன்பாட்டின் படி சில நிமிடங்களில், ஒருவேளை ஒரு அணு வெடிப்பால் அழிக்கப்படும் என்று நம்புவதற்கு ஒவ்வொரு காரணமும் உள்ளது…

இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு வேட்டையாடும்-கொலைக் குழுவின் மீதான அணுசக்தி அழிவு எங்கிருந்து ஏவிவிடப்பட்டது என்பது தெரியாத கியூபாவிலிருந்து வந்த ஒரு நடுத்தர தூர ஏவுகணையால் நிகழ்ந்திருக்கும். அக்டோபர் 22 அன்று ஜனாதிபதி கென்னடி அறிவித்திருந்த இந்த நிகழ்வு, சோவியத் ஒன்றியத்தின் மீது முழு அளவிலான அணுசக்தி தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கும்.

மனிதகுலம் 60 ஆண்டுகளுக்கு முன்பு மயிரிழையில் பேரழிவைத் தவிர்த்தது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்பின் கொடூரமான நினைவும், குருஷேவ் மற்றும் கென்னடி இருவருக்கும் அணுசக்தி போர் மனித நாகரிகத்தின் அழிவை அச்சுறுத்தியது என்பதில் சந்தேகமில்லாமல் இருந்ததுமே அந்த விளைவுக்கு காரணமாக இருந்தது.

60 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அழிவின் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதைய போரின் வெளிச்சத்தில் பார்க்கும்போது கென்னடி மற்றும் குருஷ்சேவின் நடவடிக்கைகள் பின்னடிப்புடன் காட்டப்படுகின்றன.

படையெடுப்பைத் தொடங்குவதில் நேட்டோவின் போருக்கான தயாரிப்பின் அளவைப் பெருமளவில் தவறாகக் கணக்கிட்ட புட்டின், ஒரு மூலையில் தள்ளப்பட்டு, ரஷ்ய தோல்வியைத் தடுக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார்.

அமெரிக்க பத்திரிகைகளை நம்புவோமானால், தீவிர வலதுசாரி சக்திகளைக் கொண்ட உக்ரேனிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அதன் அமெரிக்க ஊதியம் வழங்குபவர்களின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை. இது மாஸ்கோவிற்கு வெளியே ஆகஸ்ட் 20 இல் டாரியா டுகினா கொலையைவிட எந்த நேரத்திலும் பெரிய அளவில் ஆத்திரமூட்டலைத் தொடங்கலாம்.

மேலும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையில், அவற்றிக்குத் தீர்வு இல்லாத நேட்டோ சக்திகள், மோதலில் தங்கள் ஈடுபாட்டை வேகமாக அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள சக்திவாய்ந்த பிரிவினர் ஒரு நேரடி நேட்டோ தலையீட்டிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. மேலும் தலையிட உண்மையான அல்லது சதித்திட்டமான சில சாக்குப்போக்குகளைத் தேடுகின்றன. பிரெஞ்சு செய்தித்தாள் L'expresse க்கு அளித்த பேட்டியில், முன்னாள் CIA இயக்குனர் டேவிட் பெட்ரேயஸ் இடம், 'நேட்டோ மோதலில் அதிக ஈடுபாடு கொள்ள கடக்கவேண்டிய சிவப்புக் கோடு என்ன?' என்று கேட்கப்பட்டது”.

இதற்கு பெட்ரேயஸ், 'ரஷ்யா உக்ரேனில் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் மிகவும் கொடூரமான ஒரு நடவடிக்கை ஒன்றை எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது அமெரிக்காவும் பிற நாடுகளும் ஒரு பன்னாட்டு சக்தியாக பிரதிபலிப்பை காட்டவைக்கும்' என பதிலளித்தார்

பெட்ரேயஸ் என்ன நடவடிக்கையைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஒரு அதுபற்றிய குறிப்பை வழங்கினார். அவர் உக்ரேனிய தலைமையின் மீது ரஷ்யாவின் எந்தத் தாக்குதலும் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் ரஷ்யா மீது தாக்குதலைத் தூண்ட வேண்டும் என்று கூறினார்.

'கவனியுங்கள், நீங்கள் பாங்கோவாவைத் தாக்கினால் [ஜனாதிபதி அலுவலகம் அமைந்துள்ள கியேவ் தெரு] நீங்கள் இருக்கும் இடத்தில் தாக்குதல் நடக்கும்' என்று செலென்ஸ்கி கூறினார். 'நீங்கள் இதைச் செய்தால், ஒரு நொடியில், உங்கள் தாக்குதலின் விளைவைப் பொருட்படுத்தாமல், உங்கள் நாட்டில் முடிவெடுக்கும் மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும்.'

இந்த மாத தொடக்கத்தில், 'ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை' தடுக்க ரஷ்யா மீது முன்கூட்டிய தாக்குதல்களை நடத்த நேட்டோவிற்கு செலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

வெள்ளியன்று, CBS அமெரிக்க இராணுவத்தின் 101வது வான்வழிப் பிரிவை உக்ரேனின் எல்லையில் நிலைநிறுத்துவதை ஆவணப்படுத்தியது. 'மோதல் அதிகரித்தால் அல்லது நேட்டோ மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அவர்கள் உக்ரேனுக்குள் எல்லையை கடக்க முழுவதுமாக தயாராக உள்ளனர்' என்று முடித்தது.

நேட்டோ போரில் தனது ஈடுபாட்டை பாரியளவில் அதிகரிக்காத ஒரு சூழ்நிலையிலும் கூட, இந்த குளிர்காலம் போரில் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்தை எதிர்கொண்டுள்ள முழு உலக தொழிலாள வர்க்கமும் குளிர், பசி மற்றும் பட்டினியால் அச்சுறுத்தப்படுகின்கிறது.

ஆனால் மேலும் மேலும், தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இந்த நெருக்கடியில் தீர்க்கமான காரணியாக மாறும். 'பணவீக்கம் ஐரோப்பாவை பின்தொடரும்போது, தலைவர்கள் நடுங்குகிறார்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எச்சரித்தது. 'பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் வீழ்ச்சிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் சரி வாழ்க்கைத்தரங்களில் அரிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி காத்திருக்கும் அனைவருக்கும் அரசியல் ஆபத்தான ஒரு எச்சரிக்கையாக செயல்பட்டது'.

'வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும் பெருகி, குறைந்தபட்சம் 1970களில் இருந்து காணப்படாத சமூக மற்றும் தொழிலாளர் அமைதியின்மையின் காலகட்டத்தை உருவாக்குகிறது' என்று அது எச்சரித்தது.

வாஷிங்டனில் உள்ள அரசியல்வாதிகளும், மாஸ்கோவில் உள்ள தன்னலக்குழுக்களும் விரிவடைந்துகொண்டிருக்கும் பேரழிவைத் தவிர்ப்பதில் தங்களை முற்றிலும் அக்கறையற்றவர்களாகக் காட்டிக் கொண்டுள்ளனர். ஏற்கனவே 20 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு தொற்றுநோய்க்கு, அவர்கள் ஒரு போரைச் சேர்த்துள்ளனர். இது மனிதகுலம் அனைவருக்கும் மிக நீண்டகால விளைவுகளை அச்சுறுத்துகிறது. தற்போதைய போரின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சமூகப் பேரழிவில் இருந்து வெளியேற தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைத் தவிர எந்த வழியிலும் சாத்தியமில்லை.

அக்டோபர் 9 அன்று நடைபெற்ற கூட்டத்தில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்தை வளர்க்க அழைப்பு விடுத்தனர். உலகெங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கும் சோசலிசத்திற்கான முன்னோக்கிற்கும் இடையிலான அதிகரித்துவரும் இடைத்தொடர்பு அதிகரித்து வருகிறது. இந்த சக்திவாய்ந்த இயக்கம் போருக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் வளர்ச்சிக்கான சமூக சக்தியை வழங்குகிறது.

Loading