முன்னோக்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும் "சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தின்" திவால்நிலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 20வது மாநாடு கட்சிப் பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றதன் மூலம் கடந்த வார இறுதியில் முடிவடைந்தது. ஜியின் ஆதரவாளர்களுடன் கட்சியின் உயர்மட்ட அமைப்பான ஏழு பேர் கொண்ட பொலிட்பீரோ நிலையானகுழுவும் அங்கு குவிந்திருந்தது. இறுதியாக கட்சியின் அரசியலமைப்பில் 'ஒரு புதிய சகாப்தத்திற்கான சீன குணாதிசயங்களுடன் கூடிய சோசலிசம் பற்றிய ஜி ஜின்பிங் சிந்தனை' இணைக்கப்பட்டுள்ளது.

ஜி இனை கட்சியின் 'மையக்கரு' என்று புகழும் முழு சடங்கு மற்றும் மேடை-அலங்காரங்கள், அதன் மிகப்பெரிய அதிகாரத்துவ எந்திரம் அவருக்குப் பின்னால் ஒன்றுபட்டுள்ளது. இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி ஒவ்வொரு முன்னணியிலும் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடியின் தோற்றத்தை மறைக்கிறது. ஜி ஒரு சிறந்த தலைவராக உயர்த்தப்படுவதும், இடைவிடாமல் ஊக்குவிக்கப்படுவதும் வலிமையின் அடையாளம் அல்ல, மாறாக பலவீனத்தின் அடையாளமாகும்.

அக்டோபர் 16, 2022, ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் தொடக்க விழாவிலிருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளியேறும்போது கை அசைக்கிறார் [AP Photo/Mark Schiefelbein]

மந்தமாகி வரும் சீனப் பொருளாதாரம், ஆழ்ந்த சமூக பதட்டங்கள் மற்றும் பெய்ஜிங்குடனான போரை நோக்கி வாஷிங்டனின் விரைவான உந்துதலின் மத்தியில், கட்சிக்குள் நிறைந்திருக்கும் வேறுபட்டபிரிவுகளுக்கு இடையே ஆபத்தான முறையில் சமநிலைப்படுத்தும் ஒரு போனபார்ட்டிச தலைவரின் தன்மையை ஜி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜி ஒரு நீண்ட இரண்டு மணி நேர அறிக்கையுடன் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அது அவருடைய ஆட்சியை எதிர்கொண்டுள்ள பல ஆழமான பிரச்சனைகளுக்கு அவரால் எந்த தீர்வையும் வழங்க முடியாது என்பதை காட்டியது. 'இந்த காங்கிரஸின் கருப்பொருள் சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தின் பதாகையை உயர்த்தி, சீன குணாதிசயங்களுடன் சோசலிசம் குறித்த சிந்தனையை முழுமையாக செயல்படுத்துகிறது' என்ற பிரகடனத்துடன் தொடங்கியது.

'சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசம்' என்ற மந்திரத்தின் தொடர்ச்சியான மறுபிரவேசத்தின் மத்தியில், ஜி ஒரு தேசிய வளர்ச்சியை பற்றிய தனது கருத்தாக்கத்தை விரிவாக கூறுகிறார். உண்மையில் தேசிய வளர்ச்சி என்பது சீன முதலாளித்துவமாக இருப்பதுடன், அது முற்றிலும் சார்ந்து இருக்கும் உலகப் பொருளாதாரத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

ஜி இன் தேசியவாதம் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற ஸ்ராலினிச தத்துவத்தில் வேரூன்றியுள்ளது. 1917 ரஷ்யப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கைப் பாதுகாத்த லியோன் ட்ரொட்ஸ்கி, 'தனியொரு நாட்டில் சோசலிசம்' ஒரு தேசியவாத கற்பனாவாதம் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.

1925 இல், அவர் சோசலிசத்தை நோக்கி அல்லது முதலாளித்துவத்தை நோக்கி? என்ற தனது துண்டுப்பிரசுரத்தில் எழுதினார் சோவியத் ஒன்றியத்தின் எதிர்கால போக்கை பகுப்பாய்வு செய்தால்: 'சோவியத் ஒன்றியத்தின் எல்லைக்குள் ஒரு மூடப்பட்ட மற்றும் உள்நாட்டில் சீரான சோசலிச பொருளாதாரத்தை ஒருவர் உருவாக்க முடியும் என்று கற்பியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த 'தேசிய' இலட்சியத்திற்கான நீண்ட வரலாற்று பாதையானது பிரம்மாண்டமான பொருளாதார பிறழ்வுகள், சமூகப் பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகள் வழியாக செல்லும்…

'தனியொரு நாட்டில் தன்னிறைவு பெற்ற சோசலிசப் பொருளாதாரத்தை நிர்மாணிப்பது சாத்தியமற்ற தன்மை ஒவ்வொரு புதிய கட்டத்திலும் சோசலிச கட்டுமானத்திற்கான அடிப்படை முரண்பாடுகளை நீட்டிக்கப்பட்ட அளவிலும் அதிக ஆழமான விதத்திலும் புதுப்பிக்கிறது. இந்த அர்த்தத்தில், உலகின் பிற பகுதிகளில் உள்ள முதலாளித்துவ ஆட்சி மற்றொரு நீண்ட வரலாற்று சகாப்தத்திற்குத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டால், சோவியத் ஒன்றியத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் தவிர்க்க முடியாமல் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.”

ட்ரொட்ஸ்கியின் தொலைநோக்கு முன்கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டது. சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991ல் சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவ சூறையாடலுக்கு திறந்து விட்டது. 1949 புரட்சிக்குப் பின்னர் சீனாவில் உருவான ஊனமுற்ற தொழிலாளர் அரசு இன்னும் பலவீனமாகவும், மேலும் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருப்பதை நிரூபித்ததுடன், 1978 முதல் முதலாளித்துவ சந்தை சக்திகளுக்கும் உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீட்டிற்கும் கதவைத் திறந்து விட்டது.

ஜி தனது உரையில், கடந்த மூன்று தசாப்தங்களில் சீன பொருளாதாரத்தின் வியக்கத்தக்க வளர்ச்சி உட்பட சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை சுட்டிக்காட்டினார். இருப்பினும், முற்றிலும் தேசிய பொருளாதார வளர்ச்சியாக இருப்பதற்கு மாறாக, இது 1949 சீனப் புரட்சியால் செய்யப்பட்ட மகத்தான முன்னேற்றங்களின் விளைவாகும். இந்த சீனப் புரட்சிகூட ரஷ்யப் புரட்சி மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களைத் தோற்றுவித்த சர்வதேச நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாகும்.

ஜி தனது முதலாளித்துவ கொள்கைகளை சோசலிச போர்வையால் மூடிமறைக்க வேண்டும் என்ற உண்மையே, சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடையே சீனப் புரட்சியின் உயர் மரியாதையைப் பற்றி பேசுகிறது. எவ்வாறாயினும், இன்று சீனாவின் முதலாளித்துவத் தன்மை ஒரு பின்னிணைப்பாக சுருங்கி, வழமையாக ஆரோக்கியமான சோசலிசத்தில் ஒரு சிறிய களங்கம் ஆகும்!

ஜி தனது உரையில், கோவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அலைகளை அடக்குவதிலும், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அரசாங்கத்தின் கணிசமான சாதனையை சுட்டிக்காட்ட முடிந்தது. அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை, உழைக்கும் மக்களின் நலன்fள் பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு விடையிறுக்கும் வகையில், வைரஸை அகற்ற முடியும் என்பதை நிரூபித்தது. ஆனால் இதுவும் சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்டால் மட்டுமே.

எவ்வாறாயினும், சீனாவின் பொருளாதார எழுச்சியானது, ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் எந்தத் தீர்வையும் காண முடியாத ஆட்சி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மட்டுமே அதிகப்படுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் சமூக துருவமுனைப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இடைவிடாத சுரண்டல் ஆகியவற்றால் தூண்டப்பட்ட சமூக பதட்டங்களின் பாரிய தீவிரத்திற்கு வழிவகுத்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தை பற்றி ட்ரொட்ஸ்கி எழுதுகையில், அது உலகின் வளங்களையும் தொழில்நுட்பத்தையும் அணுக வேண்டும் என்றார். சீனாவைப் பொறுத்தவரை இது நிச்சயமாக உண்மை. அதன் அசாதாரண பொருளாதார வளர்ச்சியானது, உலகளாவிய நிறுவனங்களுக்கான மலிவான தொழிலாளர் தளமாக மாற்றப்படுவதோடு முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளது. அது அதன் பொருட்களை விற்க உலகச் சந்தையை அணுகுவதை நம்பியிருந்தது மற்றும் தொடர்ந்தும் உள்ளது, அதே நேரத்தில் சர்வதேச மூலதனம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கான அணுகல் தேவைப்படுகிறது.

இருப்பினும், சீன பொருளாதாரத்தின் சர்வதேச உயிர்நாடி இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதன் வளர்ச்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பெரும் பதட்டங்களை உருவாக்கியுள்ளது, இது அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு தலைமை அச்சுறுத்தலாக கருதுகிறது. அமெரிக்காவை நேரடியாகக் குறிப்பிடாமல், 'சர்வதேச நிலப்பரப்பில் கடுமையான மாற்றங்கள், குறிப்பாக அச்சுறுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், முற்றுகையிடுவதற்கும், சீனா மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்துவதற்கும் வெளிப்புற முயற்சிகள்” என ஜி குறிப்பிட்டார்.

சீன குணாதிசயங்களைக் கொண்ட முதலாளித்துவம் இப்போது அமெரிக்க குணாதிசயங்களைக் கொண்ட ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்கிறது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளையும் அதன் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் சீனாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் அடிபணியச் செய்வதற்கும் திட்டமிட்டு வருகிறது. ட்ரம்ப்பால் விதிக்கப்பட்ட சீனாவின் மீதான பாரிய வர்த்தகக் கட்டணங்களை பைடென் நிர்வாகம் பராமரித்து வருகிறது மற்றும் அனைத்து நவீன குறைக்கடத்திகள் (semi-conductors) மற்றும் அவற்றின் உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை உள்ளடக்கி அதன் தொழில்நுட்பத் தடைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆயுதங்களால் குவித்திருக்கும் தைவானை மீண்டும் ஒன்றிணைக்க இராணுவ நடவடிக்கை எடுக்க சீனாவை தூண்டிவிட முயல்கின்றன.

உக்ரேனில் உள்ள அமெரிக்க-நேட்டோ போர் சீனாவுடனான போருக்கான முன்னோடி என்பதை ஜியும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நன்கு அறிந்திருக்கின்றன, ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு அவர்களிடம் முற்போக்கான பதில் எதுவும் இல்லை. அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவக் தயாரிப்பிற்கு விடையிறுக்கும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொழில்நுட்ப ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் முன்னேற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் இந்த ஆயுதப் போட்டியின் தர்க்கம், மனிதகுலத்தை அழித்தொழிக்கும் அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான போரில் விரைவாக இறங்குவதாகும்.

ஆட்சியே நெருக்கடியின் ஒன்றாக உள்ளது. அவரது அறிக்கையில், ஜி, மாற்றியமைக்கமுடியாத அதிகாரத்துவ எந்திரத்தின் பேரழிவுகரமான படத்தை வரைந்தார். அது அவரை உயர்மட்ட தலைவராக நிறுவியது. இது 'தெளிவான புரிதல் மற்றும் பயனுள்ள செயல்களின் பற்றாக்குறை, அத்துடன் பலவீனமான, வெற்று மற்றும் நீர்த்துப்போன கட்சித் தலைமை மற்றும் நடைமுறையை நோக்கிய சரிவுள்ள ஒரு கட்சியாகும்... திரும்பத் திரும்ப எச்சரித்தாலும், அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், அதிகாரத்துவம் மற்றும் ஊதாரித்தனம் நீடித்தது... சில ஆழமாக ஊன்றிய பிரச்சனைகள் மற்றும் நிறுவனங்களும் குழுக்களும் தம் நலன்களுக்காக கட்டமைக்கப்பட்ட தடைகள் மேலும் மேலும் வெளிப்படையாகத் தோன்றின... பண வழிபாடு, சுகபோகம், சமூகத்தை விட தனிநபர் மீது அக்கறை மற்றும் வரலாற்று நீலிசம் (nihilism) போன்ற தவறான சிந்தனை முறைகள் பொதுவாக இருந்தன. மேலும் இணையவழி சொற்பொழிவு சீர்குலைவு நிறைந்ததாக இருந்தது. இவை அனைத்தும் மக்களின் சிந்தனையிலும், பொதுக் கருத்துச் சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.”

ஜி ஊழலைப் பற்றிப் பேசும்போது, அது எப்போதும் முதலாளித்துவத்தின் சமூக ஒழுங்காக இல்லாது, ஆனால் மோசமான நபர்களாகவும் அவர்களின் நோக்கங்களாகவும் குறைக்கப்படுகிறது. மேலும், இது 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் அனைத்து அதிகாரமும் அதிகாரத்துவத்தின் கைகளில் இருக்கும் ஒரு ஆட்சியாகும். இது சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகள் குறித்து அவர்களை ஆலோசிக்கக்கூடும்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியவாத பிரதிபலிப்பு, அமெரிக்காவாலும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் ரஷ்ய ஆட்சியாலும் ஏதோ ஒரு வடிவத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த அரசுகளின் தேசிய நலன்களின் மோதலை அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியாது என்பதால், இது தீவிரமடைந்து வரும் இராணுவ மோதலுக்கும், அணு ஆயுத சக்திகளை உள்ளடக்கிய ஒரு உலகப் போருக்கும் தவிர்க்கமுடியாமல் வழிவகுக்கும்.

தனியொரு நாட்டில் சோசலிசத்திற்கும் பொருளாதார தேசியவாதத்திற்கும் எதிராக ட்ரொட்ஸ்கி எழுப்பிய கேள்விகள், தற்போதும் அசாதாரணமான பொருத்தத்தை தக்கவைத்துள்ளதுடன், சீன ஆட்சி எதிர்கொள்ளும் அடிப்படை முரண்பாடுகளை புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகவும் உள்ளது. பொருளாதார தேசியவாதத்திற்கு ஒரே சாத்தியமான மாற்றீடு, 1917 ரஷ்யப் புரட்சி மற்றும் சீனா உட்பட உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை நிறுவிய உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கு மட்டுமே ஆகும். முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட நோய், வறுமை மற்றும் போர் ஆகியவற்றின் கசப்பான அனுபவங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தில், சீனாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த வேலைத்திட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.

Loading