ரஷ்ய எல்லைக்கு அருகே அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னத்தை விரிவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த மாதம், அமெரிக்க இராணுவத்தின் 101வது வான்வழிப் பிரிவு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக ஐரோப்பாவிற்கு உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் போர்முனைகளுக்கு நேட்டோவின் பெரிய இராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அனுப்பியது.

நேட்டோ உறுப்பினர்கள் 'வடக்கில் பால்டிக் கடலில் இருந்து தெற்கே கருங்கடல் வரையிலான நேட்டோவின் கிழக்குப் பகுதிக்கு அதிகமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் துருப்புக்களை அனுப்புகின்றனர்' என்று நேட்டோ இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் கூறியது.

'அமெரிக்க இராணுவத்தின் 101வது வான்வழிப் போர் உக்ரேனின் எல்லையில் இருந்து மைல் தொலைவில் ரஷ்யாவுடன் போருக்குப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது' என CBS தனது கட்டுரைக்கு தலைப்பிட்டது.

பிரிகேடியர் ஜெனரல் ஜோன் லூபாஸ், 101வது வான்வழி பிரிவிலிருந்து கிட்டத்தட்ட 5,000 துருப்புக்கள் ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட படையினருடன் இணைந்துள்ளனர் என்று CBS இடம் கூறினார். 'இது ஒரு பயிற்சி தயாரிப்பு அல்ல, இது எங்களுக்கு ஒரு போர்த் தயாரிப்பு. இன்றிரவே சண்டையிட நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்”.

நேட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம், இராணுவக் கூட்டணியின் 'கிழக்கு பக்கத்தை' காட்டுகிறது [Photo: NATO]

CBS இன் 'படையுடன் இணைந்துள்ள' நிருபர், 'சண்டை அதிகரித்தால் அல்லது நேட்டோ மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அவர்கள் உக்ரேனுக்குள் எல்லையை கடக்க முழுவதுமாக தயாராக உள்ளனர்' என்றார்.

இரண்டாம் உலகப் போரின் போது டி-டேயின் புயலில் கடைசியாக இப்பிரிவு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டது. 'இரண்டாம் உலகப் போரின் முடிவில் 101வது பிரிவு ஐரோப்பாவிற்கு திரும்பவில்லை' என்று 2வது லெப்டினன்ட் பேட்ரிக் தபோர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “இப்போது நாங்கள் மீண்டும் 1வது காலாட்படை பிரிவின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளோம். இது மிகவும் தனித்துவமான சந்தர்ப்பம்'.

மே மாதம் அமைக்கப்பட்ட நேட்டோ போர்க் குழுவின் ஒரு பகுதியாக 101வது வான்வழி பிரிவு ருமேனியாவில் நிலைநிறுத்தப்படுகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

புதனன்று ருமேனியப் பிரதம மந்திரி Nicolae Ciucă யிடம் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் அப்பகுதியில் நேட்டோவின் கட்டமைப்பின் அளவை விவரித்தார்: “நீங்கள் கருங்கடல் பகுதியில் நேட்டோவின் புதிய போர்க்குழுக்களில் ஒன்றை வைத்திருக்கிறீர்கள். கருங்கடலிலிருந்து பால்டிக் கடல் வரை நேட்டோவின் இருப்பை நாங்கள் வலுப்படுத்துகிறோம். கனடாவிலிருந்து வரும் போர் விமானங்கள் உங்கள் வானத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன. ஆக்கிரமிப்பைத் தடுக்க ஆயிரக்கணக்கான பிரெஞ்சு, டச்சு, பெல்ஜிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் ருமேனியாவில் உள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் 'ஆபத்தான அணுசக்தி வாயடிப்பு' என்பதற்கு பதிலளித்த ஸ்டோல்டன்பேர்க், 'நேட்டோ தன்னை பயமுறுத்தப்படவிடாது அல்லது உக்ரேனின் தற்காப்பு உரிமையை ஆதரிப்பதில் இருந்து தடுக்கப்படாது' என்றார்.

உக்ரேன் போர் வெடித்ததைத் தொடர்ந்து, நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் தற்போதுள்ள நான்கு போர் குழுக்களை வலுப்படுத்தியதுடன் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் நான்கு கூடுதல் தாக்குதல் குழுக்களை உருவாக்க உறுதியளித்தது.

'இது மொத்த பன்னாட்டுப் போர்க்குழுக்களின் எண்ணிக்கையை எட்டாகக் கொண்டுவந்து தரையிலுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது. மேலும் நேட்டோவின் முன்னோக்கிய பிரசன்னத்தை கூட்டணியின் கிழக்குப் பகுதியில் வடக்கில் பால்டிக் கடலில் இருந்து தெற்கே கருங்கடல் வரை நீட்டித்தது' என நேட்டோ கடந்த வாரம் ஒரு அறிக்கையில் கூறியது.

இந்த விரிவாக்கம் மேலும் தொடர்கிறது. நேட்டோ கூட்டாளிகள் ஜூன் மாதம் மாட்ரிட்டில் நடந்த உச்சிமாநாட்டில் 'பன்னாட்டு போர்க்குழுக்களை காலாட்படை பிரிவுகள் முதல் படைப்பிரிவு அளவுவரை மேம்படுத்த' உறுதியளித்தனர். “ரஷ்யாவுடன் போரில் ஈடுபட அமெரிக்க துருப்புக்கள் தயாராகிவிட்டன' என்ற தலைப்பில் ஒரு ஆத்திரமூட்டும் கட்டுரையில், 'ரஷ்யா உக்ரேன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை அதிகரித்தால், ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் சர்வதேச குற்றத்திற்கு தலைமை தாங்க தயாராக உள்ளது' என்று நியூஸ்வீக் தெரிவித்துள்ளது.

நியூஸ்வீக் குறிப்பிட்டது, “USS George H.W. Bush … Neptune Strike 2022 பயிற்சியின்போது தலைமைதாங்கி அட்ரியாடிக் கடலில் இருக்கின்றது. இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) யூரோ-அட்லாண்டிக் பகுதியில் தடுப்பு மற்றும் பாதுகாப்பை தொடர்பாக பரிசோதிக்கிறது.

'Neptune நடவடிக்கைத் தொடர் அனைத்துத் துறை நடவடிக்கைகளிலும் நேட்டோ கூட்டணியின் சக்தி மற்றும் திறன் ஆகியவற்றின் உறுதியான நிரூபணமாகும்' என்று அமெரிக்க ஆறாவது கடற்படை மற்றும் கடற்படை தாக்குதல் மற்றும் துணைப் படைகளுக்கான நேட்டோவின் தளபதி வைஸ் அட்மிரல் தாமஸ் இஷீ, இப்பயிற்சியை பற்றி அறிவித்தார்.

'Neptune Strike 2022 என்பது நேட்டோவின் மேம்பட்ட கடல்சார் போர் திறன்களை ஒருங்கிணைக்கும் திறனுக்கு ஒரு முக்கிய உதாரணம் ஆகும், இது எங்கள் கூட்டுத் திறனைத் தடுக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது.'

இந்த பயிற்சியில் 80 விமானங்கள், 14 கப்பல்கள் மற்றும் சுமார் 6,000 பணியாளர்கள் உள்ளடங்கியுள்ளன.

புதனன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பாதுகாப்புத் துறையின் தலைவர்களைச் சந்தித்து, அமெரிக்க இராணுவத்தின் அளவு மற்றும் நிதியுதவியை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தார்.

'எங்கள் இராணுவத்தை நவீனமயமாக்குவதும் பலப்படுத்துவதும் நமது தேசிய வலிமையின் முக்கிய ஆதாரம் என்றும், இது எனக்கும் எனது நிர்வாகத்திற்கும் முன்னுரிமை என்றும் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தியில் நாங்கள் தெளிவுபடுத்தினோம்' என்று பைடென் கூறினார்.

'நாங்கள் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் தெளிவுபடுத்தியது போல், இது ஒரு தீர்க்கமான தசாப்தம், எங்களில் தனித்து எவருக்கும் அல்ல - உலகம் மாறிக்கொண்டிருப்பதால் முக்கியமானது' என்றார்.

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி சேர்ஜி ஷோய்குவின் வார்த்தைகளில், 'எதிரியின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பாரிய அணுசக்தி தாக்குதலை நடத்த ரஷ்யாவின் மூலோபாய தாக்குதல் படைகளின் தயார்நிலையை' நிரூபிக்கும் வகையில், ரஷ்யா தொடர்ச்சியான அணுசக்தி பரிசோதனைகளை நடத்தியது.

உக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து 'பாரிய அணு ஆயுதத் தாக்குதலை' உருவகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட முதன்முறையாக நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனை என ஷோய்கு கூறினார்.

ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையைச் செலுத்தியது. மேலும் இரண்டு Tu-95 நீண்ட தூர மூலோபாய அணு குண்டுவீச்சு விமானங்களுடன் பரிசோதனைகளை நடத்தியது.

நேட்டோவின் 'steadfast noon' அணுவாயுத பரிசோதனைகள் நடந்த அதே நேரத்தில் ரஷ்யாவின் பயிற்சிகளும் நடந்தன. இதில் அமெரிக்க B-52s ஐரோப்பாவில் அணு குண்டுகளை வீசுவதை உருவகப்படுத்தியது. இந்தப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அக்டோபர் 30 வரை தொடரும்.

புதனன்று, அமெரிக்கா வேர்ஜீனியாவில் உள்ள வாலோப்ஸ் விமானப் படைத்தளத்தில் இருந்து ஏவுகணை ஏவியது. அணு ஆயுதங்களை தாங்கிச்செல்ல பயன்படும் புதிய ஒலியைவிட வேகமான ஏவுகணைகளை உருவாக்குவதற்கான அவசரத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் ஒலியைவிட வேகமான ஆயுத சோதனைகளை நடத்தியது.

அமெரிக்காவும் நேட்டோவும் தினமும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் இந்த சூடேற்றப்பட்ட நிலைமைகளின் கீழ், ஒரு தவறான கணக்கீடு அல்லது ஆத்திரமூட்டல் மோதலை பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Loading