உக்ரேனில் வறுமை அதிகரித்து வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக வங்கியின் (WB) சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்கா/நேட்டோ கூட்டணிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் வெடித்ததிலிருந்து உக்ரேனில் வறுமை பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வமாக, பிப்ரவரி 2022 க்கு முன்பு இருந்த இரண்டு சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இப்போது மக்கள்தொகையில் கால் பகுதியினர் ஏழைகளாகக் கருதப்படுகிறார்கள். ரஷ்யப் படையெடுப்பிற்கு முன்னதாக உக்ரேன் ஏற்கனவே எந்தவொரு ஐரோப்பிய நாட்டையும் விட குறைந்த அல்லது மிகக் குறைந்த தனிநபர் வாரியான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருப்பதால், இந்த இரண்டு புள்ளிவிபரங்களுமே பெரிதும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அதன் அரசாங்கம் வறுமையுடன் போராடும் மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் முயற்சியில் அபத்தமாக குறைந்த வறுமைக் கோட்டை உருவாக்கியுள்ளது.

அக்டோபர் 24, 2022, திங்கட்கிழமை, மிக்கோலைவ் நகரின் மையத்தில் உள்ள உலக மத்திய சமையல்கூட அமைப்பில் இருந்து கிடைக்கும் அளவு உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். [AP Photo/Emilio Morenatti]

வறுமை விகிதம் அடுத்த ஆண்டில் 60 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக உயரக்கூடும் என்று அதிகாரிகள் முன்கணித்துள்ள நிலையில், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பிய கண்டத்தில் கண்டிராத பற்றாக்குறை நிலைகள் உக்ரேனில் உருவாகி வருகிறது.

வேலையின்மை விகிதம் தற்போது 35 சதவீதமாக உள்ளது மற்றும் சில தொழில்களில் ஊதியங்கள் வசந்த மற்றும் கோடை காலத்தில் இருந்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளன. தொழிலாளர்களின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் பிரிவுகள், மாணவர்கள் மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள், சுமார் 291 டாலர் மாத ஊதியத்துடன் வாழ்வாதாரத்தின் விளிம்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, உக்ரேனிய பொருளாதாரம் இந்த ஆண்டு 35 சதவீதம் சுருங்கும். பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

செப்டம்பரில் 24.4 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களைத் தின்றுவிட்டதால், அடிப்படைப் பொருட்கள் மற்றும் சேவைகள் கூட மில்லியன் கணக்கான மக்களுக்கு கிடைக்காமல், கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பும் உக்ரேனின் சுகாதார அமைச்சகமும் இணைந்து நடத்திய சமீபத்திய கூட்டாய்வின் அறிக்கை, உக்ரேனில் 22 சதவீத மக்கள் அத்தியாவசிய மருந்துகளை அணுக முடியவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 6.9 மில்லியன் மக்களைப் பொறுத்தவரை, அந்த விகிதம் 33 சதவீதமாக உயர்கிறது.

கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 84 சதவீதம் பேர் விலைகள் மிக அதிகம் என்றும், மற்றும் 46 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான பொருட்கள் கடைகளில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள் மற்றும் வலிக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், அத்துடன் மயக்க மருந்துகள் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகள் (antibiotics) போன்றவற்றை மக்கள் வாங்குவது கடினமாக உள்ளது. பல தசாப்தங்களாக மக்கள் வறுமை தொடர்பான நோய்கள் மற்றும் போரின் உடல் மற்றும் உளவியல் அதிர்ச்சிகளுடன் போராடி வருவதை இது காட்டுகிறது.

அமெரிக்காவும் நேட்டோவும் சில வாரங்களில் உக்ரேனிய முன்னணிக்கு பாரிய அளவிலான ஆயுதங்களை கொண்டு வர முடிந்தாலும், உயிர் காக்கும் மனிதாபிமான பொருட்களை அங்கு அனுப்புவது மட்டும் தளவாட ரீதியாக சமாளிக்க முடியாத சவாலாகத் தோன்றுகிறது.

இதற்கிடையில், அங்கு கோவிட்-19 நோய்தொற்று பரவி வருகிறது, அக்டோபர் 10 மற்றும் 16 தேதிகளுக்கு இடையில் 23,000 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. உக்ரேனின் கொரோனா வைரஸ் தடுப்பூசி விகிதம் 45 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது, மேலும் மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே முதல் அல்லது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். போர் வெடிப்பதற்கு முன்பே, உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கியின் கூற்றுப்படி, வெளிநாட்டு கடன் வழங்குநர்களால் பல ஆண்டுகளாக சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக உக்ரேனில் ‘மருத்துவத்திற்கு முற்றிலும் வழியில்லாத’ நிலை ஏற்பட்டிருந்தது.

நாட்டின் 7 சதவிகிதத்திற்கும் அதிகமான வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன, மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வெப்பம், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை அணுக முடியாத நிலையில் உள்ளனர். கடந்த வாரம், நாட்டின் 30 சதவீத மின் நிலையங்கள் இயங்காமல் முடங்கின. செய்தி அறிக்கைகளின்படி, குளிர்காலத்திற்கு ஏற்பாடு செய்யும் வகையில், இன்னும் கூரைகள் உள்ள கைவிடப்பட்ட கட்டிடங்களில் விறகுகளை சேகரித்து தற்காலிக அடுப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலைமைகளின் கீழ், கியேவில் உள்ள அரசாங்கம், தொடர்ந்து நிகழவிருக்கும் இருட்டடிப்புக்களை எதிர்பார்த்து, மக்கள் அனைவரும் தங்கள் மின்சாதனங்களில் மின்சக்தி ஏற்றி வைக்குமாறும், பேட்டரிகள் மற்றும் ஃப்ளாஷ்லைட்களை இருப்பில் வைக்குமாறும் பயனுள்ள ஆலோசனை வழங்கியுள்ளது.

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் வயோதிபர்கள், இயங்க முடியாதவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் உள்ளனர். போருக்கு முந்தைய உக்ரேனின் மக்கள்தொகை 44.13 மில்லியனில், 2.7 மில்லியன் பேர் ஊனமுற்றவர்கள் என உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் மொத்தத்தில் நிதியுதவி இல்லாத மற்றும் பெரும்பாலும் கொடூரமாக இருக்கும் அனாதை இல்லங்கள் மற்றும் வயோதிபர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் போரின் அழிவுகளால் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் மற்றும் பிற இலாப நோக்கமற்ற குழுக்களும் இணைந்து ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கைகள், இந்த அமைப்புக்களில் நிறுவனமயமாக்கப்பட்ட பலவற்றை அதிகாரிகள் தங்கள் வெளியேற்றத் திட்டங்களில் கவனிக்காமல் போன நிலையில், அங்கிருந்த மக்கள் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றன. மனநலம் குன்றியவர்கள் படுக்கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தங்கள் சொந்த கழிவுகளில் புரள்வதாகவும் அறிக்கைகள் வெளிவந்தன. செப்டம்பரில், மேற்கத்திய ஊடகங்கள், ரஷ்யப் படைகள் இந்த மக்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதாகக் கூறி செய்திகள் வெளியிட்டன, ஆனால் உக்ரேனிய அரசாங்கத்தால் அவர்கள் நீண்ட காலமாக மனிதக் குப்பைகளாக பார்க்கப்படுகின்றனர் என்ற உண்மையைக் குறிப்பிட அவை தவறிவிட்டன.

கியேவில் உள்ள அரசாங்கம், அதன் உள்நாட்டு வரவு-செலவுத் திட்டத்தின் பெரும்பகுதி இராணுவச் செலவினங்கள் மற்றும் கடன் அடைப்புக்கள், அத்துடன் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவற்றிற்கு செலவு செய்யப்படுவதால், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெரியளவிலான நிதியுதவிகளைக் கோருகிறது. பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹாலின் கூற்றுப்படி, உக்ரேனின் வரவு-செலவுத் திட்டத்தில் 60 சதவீதம் இப்போது பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவுக்கான உலக வங்கியின் பிராந்திய நாடுகளின் இயக்குநர் அருப் பானர்ஜி, உக்ரேனுக்கு அதிக நிதியுதவி கிடைக்கவில்லை என்றால், அது தனது சமூக செலவினங்களை மேலும் குறைக்க நேரிடும் அல்லது வெறுமனே பணத்தை அச்சிட வேண்டியிருக்கும், அதன் மூலம் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி சர்வதேச சமூகத்திடம் மேலும் 55 பில்லியன் டாலர் நிதியுதவி கோரினார், அதாவது அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட 38 பில்லியன் டாலரும், மற்றும் உள்கட்டமைப்புக்காக 17 பில்லியன் டாலரும் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், உக்ரேனின் ஒட்டுமொத்த புனரமைப்பு செலவுக்கு அதிலிருந்து ஆறு மடங்கு அதிகமாக 349 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

ஆனால் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பது போல் தாராளமாக தங்கள் பணப்பையை எங்கும் காட்டுவதில்லை. மார்ஷல்-திட்டம் போன்ற நிதித் திட்டங்களின் கீழ் உக்ரேனுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நிதியாளர்களும் அரசியல்வாதிகளும் பலமுறை பேசிக் கொண்டாலும், உக்ரேனுக்கு தற்போது நிதி வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலானவை கடன்களாக வழங்கப்படுகின்றன அல்லது வழங்கப்படுவதே இல்லை.

அக்டோபர் 12 அன்று South China Morning Post செய்தியிதழில் வெளியிடப்பட்ட கருத்தில், வலதுசாரி பொருளாதார நிபுணர் ஆண்டர்ஸ் அஸ்லண்ட், சர்வதேச நாணய நிதியம், உக்ரேன் அதன் அரசாங்கத்தை நடத்துவதற்கும், பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிலையங்களை திறந்து வைப்பதற்கும் உதவ அதற்கு 35 பில்லியன் டாலர் நிதி வழங்குவதாக உறுதியளித்திருந்தது, ஆனால் வெறும் 20 பில்லியன் டாலரை மட்டுமே அது விடுவித்துள்ளது என்பதை குறிப்பிட்டார். அதேபோல், மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஒப்புக்கொண்டதில், வெறும் 1 பில்லியன் யூரோவை மட்டும் அனுப்பியுள்ளது.

அக்டோபர் நடுப்பகுதியில், உக்ரேனின் ‘மிகப்பெரிய அளவு’ நிதித் தேவைகள் பற்றி சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா பேசுகையில், “உக்ரேனின் வரவு-செலவுத் திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு புதிய கண்காணிப்பு கருவி பற்றி உக்ரேனிய அதிகாரிகளுடன் விவாதிக்க அவரது நிறுவனம் தயாராகி வருகிறது என்றும், இந்த கருவி, நிபந்தனைகள் அனுமதித்தவுடன் முழு அளவிலான சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு வழிவகுக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனில் ஏதேனும் எஞ்சியிருந்தால், அரசாங்கம் மற்றும் பொருளாதாரம் மீதான அதன் கண்காணிப்பை அதிகரிக்கவும், தனியார்மயமாக்கல் மற்றும் பாரிய செலவின வெட்டுக்களைச் சுமத்தவும், நாட்டின் இருப்புரீதியான அழிவைப் பயன்படுத்த IMF விரும்புகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுநர்கள் குழுவின் சுழற்சிமுறை தலைவராக உக்ரேனின் நிதி மந்திரி ஷெர்ஹி மார்சென்கோ சமீபத்தில் நியமிக்கப்பட்டது, இந்த நீண்டகால திட்டத்திற்கான உக்ரேனிய முதலாளித்துவத்தின் முழு அர்ப்பணிப்பை காட்டுகிறது. சர்வதேச கடன் வழங்குநர்கள் பல தசாப்தங்களாக உக்ரேனை உலர வைத்து வருகின்றனர்

மேலும் நாடு வெறும் கடன்களைப் பெறாமல் மானியங்களைப் பெற்றாலும், அது இன்னும் குறுகிய காலத்திற்கே வைக்கப்படும். சர்வதேச நிதி மேலாண்மை அமைப்பின் இணையவழி வெளியீடான Deloitte Insights செய்த சமீபத்திய பகுப்பாய்வு, உக்ரேனுடன் நடைபெற்று வரும் அனைத்து நிதி ஒப்பந்தங்களிலும் ‘ஊழல் எதிர்ப்பு’ மற்றும் ‘மோசடி தடுப்பு’ ஆகியவற்றின் முக்கியத்துவத்தை முதன்முறையாக வலியுறுத்தியது. அது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்போது, சர்வதேச சமூகம், கியேவின் ‘சுதந்திரப் போராளிகள்’ திருடர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கண்டுபிடிக்கும்.

கோடைக் காலத்தில் உக்ரேனிய அரசாங்கம் அதன் மேற்கத்திய நாடுகளின் தீவிர ஆதரவுடன், அது எதற்கு தயாராகி வருகிறது என்பதற்கான வெளிப்பாடாக, நாட்டில் இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றும் 'சீர்திருத்தங்களை' தொடர்ந்தது. ‘பூஜ்ஜிய நேர’ ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுவது இப்போது சட்டபூர்வமானவை. கூடுதலாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும், சுமார் 70 சதவீத தொழிலாளர்களுக்கு, தேசிய தொழிலாளர் குறியீட்டில் வழங்கப்பட்ட பணியிட பாதுகாப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, இது அவர்களின் வேலை வகைக்கு இனி பொருந்தாது. இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்று கூறப்பட்டாலும், அதை காலவரையின்றி தொடர்வதற்கே அரசாங்கம் தெளிவாக உத்தேசித்துள்ளது.

'மக்களின் சேவகன்' என்ற தவறான பெயரைக் கொண்ட செலென்ஸ்கியின் கட்சி, உக்ரேன் 'தொழிலாளர் சந்தையின் தீவிர கட்டுப்பாடுகளால்' பாதிக்கப்படும் புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கான நியாயத்தை விளக்கியது, இது 'அதிகாரத்துவ தடைகள் (...) முதலாளிகளுக்கான படைப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க தடைகளை உருவாக்குகிறது'. 'சுதந்திரமான, ஐரோப்பிய மற்றும் சந்தை சார்ந்த' ஒரு நாட்டிற்கு தொழிலாளர் விதிமுறைகள் பொருத்தமானவை அல்ல என்று பாராளுமன்ற மந்திரி டேனிலோ ஹெட்மன்ட்ஸே விமர்சித்தார்.

Loading