பென்டகன் தேசிய மூலோபாய ஆவணம் சீனாவை குறிவைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை மூன்று மூலோபாய ஆவணங்களை வெளியிட்டு சீனா மற்றும் ரஷ்யாவுடனான மோதலுக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியது.மேலும் அணு ஆயுதங்கள், அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் 'உறுதியான அடித்தளம்' என அறிவித்தது.

பைடென் நிர்வாகம் தனது தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை (National Defense Strategy - NDS) வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குள், தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அணுசக்தி நிலை மறுஆய்வு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு மறுஆய்வு ஆகியவற்றின் வெளியீடு வருகிறது. இது 'தீர்க்கமான தசாப்தம்' என்று அழைத்ததில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதலில் அமெரிக்கா 'வெற்றி பெறும்' என உறுதியளித்தது.

ஜனாதிபதி ஜோ பைடென், 26 அக்டோபர் 2022 புதன்கிழமை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் அரச உணவருந்தும் அறையில், பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், இடது மற்றும் கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களைச் சந்திக்கிறார்

ட்ரம்ப் நிர்வாகத்தின் 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படை வலியுறுத்தல்களை இந்த ஆவணங்கள் இரட்டிப்பாக்குகின்றன. அது 'இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பில் முதன்மையான அக்கறை பயங்கரவாதம் அல்ல, அரசுகளுக்கு இடையேயான மூலோபாய போட்டி' என்று அறிவித்தது.

தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை அறிமுகப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின், சீனா அமெரிக்காவின் 'வேகமான சவால்', அதே நேரத்தில் ரஷ்யா 'உடனடி மற்றும் கடுமையான அச்சுறுத்தல்” எனக் கூறினார்.

'சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் நோக்கத்துடனும், அதைச் செய்வதற்கான அதிக சக்தியுடனும்' சீனா ஒரே எதிரியாக உள்ளது என ஆஸ்டின் கூறினார்.

தேசிய பாதுகாப்பு மூலோபாயம் சீனாவை 'அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் விரிவான மற்றும் கடுமையான சவால்' என்று அழைக்கிறது மற்றும் அணுசக்தி நிலை மதிப்பாய்வு '2030 களில், அமெரிக்கா தனது வரலாற்றில் முதல் முறையாக, மூலோபாய போட்டியாளர்கள் மற்றும் சாத்தியமான விரோதிகள் என இரண்டு முக்கிய அணுசக்தி சக்திகளை எதிர்கொள்ளும்' என்று வலியுறுத்துகிறது.

ஆவணங்களின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த அட்லாண்டிக் குழு, 'மோதல்' பற்றிய ஆவணங்களின் குறிப்புகளை 'தீவிர மோதல்', அதாவது துப்பாக்கி சுடும் போர் பற்றிய குறிப்புகளாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

'பிரச்சாரம்' என்பதன் முக்கியத்துவத்தை தொடர்புபடுத்தி, உலகம் இப்போது தீவிரமாக போட்டியிடுகிறது, மேலும் பாதுகாப்புத் துறை (Department of Defense - DOD) மற்றும் அனைத்து அமெரிக்க அரசாங்கமும் சாத்தியமான தீவிர மோதலுக்குத் தயாராகி வருவது மட்டுமல்லாமல், ஏற்கனவே சீனாவையும், இரண்டாவதாக ரஷ்யாவையும் மையமாகக் கொண்ட தீவிரமான போட்டியில் ஈடுபட்டுள்ளது என்ற வலுவான செய்தியை இது அனுப்புகிறது.

'பிரச்சாரத்தில்' தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கவனம், பாதுகாப்புத் துறை மற்றும் பிற அமெரிக்கத் துறைகள் ஏற்கனவே சீனாவுக்கு பாதகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் சமிக்ஞை செய்கிறது. இது ஒரு புதிய பனிப்போருக்கு சமமானதாகும். கடல்வழி நடவடிக்கைகளின் சுதந்திரம், உளவு விமானங்களை ஈடுபடுத்துவது, பலதரப்பு பயிற்சிகள் என வெறுமனே 'நாங்கள் எப்போதும் செய்த விஷயங்கள்' என்று பாதுகாப்புத்துறை கூறும் செயல்முறைகளின் சகாப்தம் முடிந்துவிட்டது.

மார்ச் 2020 இல், அவர் ஜனாதிபதிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அணு ஆயுதங்களின் 'முதல் பயன்பாட்டை' நிராகரிப்பதாக பைடென் உறுதியளித்தார். 'அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரே நோக்கம் தடுப்பதாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் அணுசக்தி தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஜனாதிபதியாக, அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து, அந்த நம்பிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவர நான் பணியாற்றுவேன்” என்றார்.

பைடெனின் அணுசக்தி மூலோபாய ஆவணம் அந்த முன்னைய கருத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், அணு ஆயுதங்கள் பற்றிய விரிவான பார்வையை அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் 'திடமான அடித்தளமாக' உருவாக்குகிறது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தகவல் பத்திரத்தின் படி, இந்த ஆவணம்:

அணு ஆயுதங்கள் நமது தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பதையும், அணு ஆயுதங்கள் வழங்கும் தனித்துவமான தடுப்பு விளைவுகளை அமெரிக்க இராணுவ சக்தியின் எந்த பிரிவும் பிரதியீடு செய்ய முடியாது என்பதையும் அங்கீகரிக்கிறது. அமெரிக்க அணுவாயுதங்களின் அடிப்படைப் பங்கு அணுவாயுதத் தாக்குதலைத் தடுப்பதுதான் என்றாலும், இன்னும் பரந்த அளவில் அவை அனைத்து வகையான மூலோபாயத் தாக்குதலையும் தடுப்பதுடன், நட்பு நாடுகளுக்கும் கூட்டாளர்களுக்கும் உறுதியளிக்கின்றன. மேலும் தடுத்தல் தோல்வியுற்றால் ஜனாதிபதியின் நோக்கங்களை அடைய அனுமதிக்கின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அணுசக்தி அல்லாத தாக்குதலுக்கு பதிலளிக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது. இது 'வழக்கமான' மோதலுக்கும் அணுசக்தி போருக்கும் இடையிலான எல்லைகளை மங்கலாக்குகிறது.

இந்த விடயம், பாதுகாப்புத் அமைச்சின் மாநாட்டில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அமைச்சக அதிகாரியின் கூற்றுப்படி, NPR, 'அனைத்து வகையான மூலோபாய தாக்குதலையும் தடுக்க அணு ஆயுதங்களை நம்பியிருக்கும் ஒரு மூலோபாயத்தை நிறுவுகிறது. இது எந்த அளவிலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் இது அணுசக்தி அல்லாத வழிகளைப் பயன்படுத்தும் ஒரு மூலோபாய இயல்புடன் கூடிய விளைவுகளுள்ள தாக்குதல்களும் இதில் உள்ளடங்கும்.”

ஆவணத்தின் வெளியீடு ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்களால் விரைவாகக் கண்டனம் செய்யப்பட்டது. 'பைடென் நிர்வாகத்தின் வகைப்படுத்தப்படாத அணு நிலை ஆய்வு (Nuclear Posture Review - NPR), உள்ளடக்கத்தில் ஒரு திகிலூட்டும் ஆவணம்' என சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் ஒன்றியம் (Union of Concerned Scientists - UCS) எழுதியுள்ளது.

'இது உலகை அணுசக்தி அபாயத்தை அதிகரிக்கும் பாதையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல வழிகளில் அது அந்த ஆபத்தை அதிகரிக்கிறது' என UCS வாதிட்டது. 'முழு அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதும், ஆபத்தான பனிப்போர் கால அணுசக்தி கொள்கைகளின் வியூகத்தை பராமரிப்பதும், பல்வேறு சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களின் முதல் பயன்பாட்டை அச்சுறுத்துவதுமே அமெரிக்காவின் ஒரே சாத்தியமான பதில்”.

அமைப்பு தொடர்ந்தது:

உண்மை என்னவென்றால், ஜனாதிபதியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு மற்றும் ஒரு ட்வீட்டை விடக் குறைவான குறியீட்டை வெளியிடுவது ஐந்து நிமிடங்களுக்குள் நூற்றுக்கணக்கான அணு ஆயுத ஏவுகணைகளை ஏவுவதற்கு வழிவகுக்கும். இது ஹிரோஷிமாவை அழித்த குண்டை விட இருபது மடங்கு அழிவுகரமான போர்க்கப்பல்களுடன் அரை மணி நேரத்திற்குள் அதன் இலக்குகளை அடைந்துவிடும்.

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படைத் தொடர்ச்சியாக இருந்தாலும், ஒபாமா நிர்வாகத்தின் 2010 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தால் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சியை இந்த ஆவணம் நிராகரிக்கிறது. நியூ யோர்க் டைம்ஸ் பென்டகனின் அணுசக்தி மூலோபாயம் பற்றி எழுதுவது போல்,

ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியான பராக் ஒபாமாவால் வெளியிடப்பட்ட கடைசி ஆவணத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. திரு. ஒபாமாவின் மூலோபாயம் (2010 இல் அந்த நேரத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த திரு. பைடென் மூலம் வெளியிடப்பட்டது) அமெரிக்க பாதுகாப்பில் அணு ஆயுதங்களின் பங்கை வெகுவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பயங்கரவாத குழுக்கள் அணு ஆயுதங்களை அணுகுவதைத் தடுப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில், வட கொரியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தைக் கட்டுப்படுத்தவும், ஈரானை அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் முயற்சியில் சீனாவும் ரஷ்யாவும் முழு பங்காளிகளாகக் கருதப்பட்டன.

அமெரிக்காவின் 'பொருளாதார செழிப்பு' உட்பட 'அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும் முன்னேற்றுவதிலும்' அமெரிக்க இராணுவம் கவனம் செலுத்தும் என்று தேசிய பாதுகாப்பு மூலோபாயம் அதன் அறிமுகத்தில் வலியுறுத்துகிறது.

இது ட்ரம்பின் 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது, இந்த மூலோபாயம் பெரும்பாலும் எதிர்மறையான வழியில் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது — அவ்வாறு செய்வது சீனாதான் என வலியுறுத்துகிறது. 2018 ஆவணத்தின் தெளிவான உட்குறிப்பாக இது இருந்தபோதிலும், பென்டகனின் 2022 ஆவணத்தின் 'பொருளாதார செழிப்பு' உள்ளடக்கிய 'தேசிய நலன்கள்' என்பதன் வரையறையானது, பொருளாதார நோக்கங்களைப் பாதுகாப்பதற்குப் போர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகும் என்ற கோட்பாட்டை ஆதரிப்பதற்கான இன்னும் திறந்த படியாகும்.

2022 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதி

அமெரிக்க ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படாத இந்த ஆவணங்கள், இந்த ஆண்டு பாரிய அமெரிக்க இராணுவத்தின் கட்டமைப்பானது 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு' ஒரு விடையிறுப்பு என்ற அடிப்படை பொய்யை தெளிவுபடுத்துகிறது. 'உண்மையில், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் போர் திட்டமிடுபவர்களின் சிந்தனையில், இராணுவச் செலவினங்களில் பாரிய அதிகரிப்பு மற்றும் சீனாவுடனான போருக்கான திட்டங்கள் ஆகியவை, 'புவிசார் அரசியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் நமது சூழலில் வியத்தகு மாற்றங்களால்” உருவாக்கப்பட்டன.

இந்த ஆவணங்கள், சீனாவின் பொருளாதார எழுச்சியை, இராணுவ சக்தியின் அச்சுறுத்தலுடன் பதிலளிக்கப்பட வேண்டிய ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக அமெரிக்கா பார்க்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது, ரஷ்யாவை அடிபணிய வைப்பதை, சீனாவுடனான மோதலுக்கு ஒரு இன்றியமையாத படியாக அமெரிக்கா பார்க்கிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த ஆவணங்களை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்க முதலாளித்துவம் தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட எதையும் செய்ய தயாராக உள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்புகளின் கொடூரமான மரபு காட்டியபடி, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்க பிரச்சாரத்தின் பெயரில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லத் தயாராக உள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட அதே ஆண்டில் வளைகுடாப் போருடன் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு மேலும் மேலும் நேரடியாக ரஷ்யாவையும் சீனாவையும் குறிவைக்கிறது, இவற்றை உலகின் தடையற்ற மேலாதிக்கத்திற்கு முக்கிய தடைகளாக அமெரிக்கா காண்கிறது. அமெரிக்க மூலோபாயவாதிகள் யூரேசிய நிலப்பரப்பின் மீதான மேலாதிக்கத்தை, அதன் பரந்த இயற்கை வளங்களுடன், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான திறவுகோலாக நீண்ட காலமாக கருதுகின்றனர்.

ஆனால் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல் முதலாளித்துவத்தின் நெருக்கடியை மட்டுமே தீவிரப்படுத்துகிறது. இது ஒரு பணவீக்க நெருக்கடியைத் தூண்டுகிறது. இதில் மில்லியன் கணக்கான மக்கள் பெருகிய முறையில் உணவு மற்றும் எரிபொருளை வாங்க முடியாதுள்ளனர். இது வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியைத் தூண்டி, சோசலிச முன்னோக்குடன் மேலும் மேலும் ஒன்றிணைகின்றது.

போருக்கான 'தீர்க்கமான தசாப்தத்திற்கான' பென்டகனின் திட்டத்திற்கு, போருக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 'சோசலிசப் புரட்சியின் தசாப்தம்' என்று அழைக்கப்பட்டதற்கு தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்.

Loading