நோர்த் ஸ்ட்ரீம் குழாய்களை பிரித்தானியா தகர்த்ததாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 26 அன்று நோர்த் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்த் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்களை தகர்த்ததில் பிரிட்டன் பெரும் பங்கு வகித்ததாக ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நீருக்கடியில் சக்திவாய்ந்த வெடிப்புகள் நோர்த்ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்ககளில் துளைகளை உருவாக்கின. இக் குழாய்கள் ரஷ்ய இயற்கை எரிவாயுவை பால்டிக் கடலுக்கு அடியில் 760 மைல்கள் ஜேர்மனிக்கு கொண்டு செல்கின்றன. இக் குழாய்கள் 110 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை வழங்குவதற்கான கூட்டு வருடாந்திர திறனைக் கொண்டுள்ளன. இது ரஷ்யாவின் சாதாரண எரிவாயு ஏற்றுமதி அளவுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

நோர்த் ஸ்ட்ரீம் குழாய்களின் வரைபடம் [Photo by FactsWithoutBias1 / CC BY-SA 4.0]

சனிக்கிழமையன்று, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்: “கிடைத்த தகவல்களின்படி, பிரிட்டிஷ் கடற்படையின் இந்த பிரிவின் பிரதிநிதிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று பால்டிக் கடலில் நோர்த் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்த் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்கள் மீது ஒரு பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுதல், வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளனர். செய்தித் தொடர்பாளர் பின்னர் விவரித்தபடி, 'பிரிட்டிஷ் கடற்படையின் பிரிவு' 'உக்ரேனின் மைகோலாய்வ் பிராந்தியத்தில் உள்ள ஒச்சாகிவ் நகரில்' பிரிட்டிஷ் கையாட்களாவர்” என தெரிவித்தார்.

இந்த வெடிப்புகள் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு நிதியளிப்பதற்கும், ஐரோப்பிய தொழிற்துறைக்கும் வீடுகளுக்கும் எரிசக்தியை வழங்குவதற்கும், வெப்பமூட்டுவதற்குமான முக்கியமான உள்கட்டமைப்பில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை அழித்தன. ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் குழாய்களின் முக்கிய உரிமையாளராக உள்ளது. கசிவுகள் சர்வதேச கடல் பகுதியில் நடந்தன. ஆனால் நான்கு வெடிப்புகளில் இரண்டு டென்மார்க் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும், இரண்டு பால்டிக் கடல் தீவான போர்ன்ஹோமுக்கு அருகிலுள்ள சுவீடன் பிராந்தியத்திலும் நடந்துள்ளன.

நோர்த் ஸ்ட்ரீம் 1 கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் நோர்த் ஸ்ட்ரீம் 2 உம் எரிவாயுவைக் கொண்டிருந்தது. ஆனால் ஜேர்மனி, பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது வாஷிங்டனின் அழுத்தம் காரணமாக இன்னும் வணிக நடவடிக்கைக்கு கொண்டு வரப்படவில்லை.

கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பிரிட்டன் தொடர்பு இருப்பதாகவும் இந்த செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார். அவர் “இன்று அதிகாலை 4.20 மணியளவில், கியேவ் ஆட்சி கருங்கடல் கடற்படைக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது எனக் கூறினார்.

'பயங்கரவாத செயலுக்கான தயாரிப்பு மற்றும் உக்ரேனிய 73 வது சிறப்பு செயல்பாட்டு மைய கடல் பிரிவின் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதும் உக்ரேனின் மைகோலேவ் பிராந்தியத்தில் உள்ள ஒச்சாகிவ் நகரில் இருந்த பிரிட்டிஷ் நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

'பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான கருங்கடல் கடற்படை கப்பல்கள் உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக தானிய பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈடுபட்டுள்ளன என்பதை வலியுறுத்த வேண்டும்' என்றார்.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டுகளை மறுத்தது. 'உக்ரேன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை ரஷ்யா பேரழிவுகரமாக கையாள்வதில்' இருந்து திசைதிருப்ப செய்யப்பட்டதாகக் கூறியது.

பிரிட்டனும், பிற நேட்டோ நட்பு நாடுகளும் பல வாரங்களாக அதன் சொந்த குழாய்வழியை வெடிக்கச் செய்வது ரஷ்யாவின் நாசவேலை செயல் என்று வலியுறுத்தியதன் சில வாரங்களின் பின்னர் ரஷ்யாவின் அறிக்கை வந்துள்ளது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பகைமையை மேலும் அதிகரிக்க இந்த சம்பவம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேட்டோவின் பிரிவு 5 கூட்டுப் பாதுகாப்பு விதி மேற்கோள் காட்டப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், வெடிப்புகள் நடந்த சில நாட்களுக்குப் பின்னர், விதி 5 பயன்படுத்தப்படுவதை நிராகரிக்க முடியாது என்று கூறினார். 'நோர்த் ஸ்ட்ரீம் குழாய்களின் வெளிப்படையான நாசவேலை குறித்து எங்கள் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்தோம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இதை விசாரிப்பதற்கான ஐரோப்பிய முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.

இந்த மாத தொடக்கத்தில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்திற்கு முன், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டனபேர்க், 'நேச நாடுகளின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான எந்தவொரு வேண்டுமென்றே தாக்குதலும் ஒன்றுபட்ட மற்றும் உறுதியான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும்... பால்டிக் மற்றும் வட கடல்களில் எங்களின் பிரசன்னத்தை இரட்டிப்பாக்கினோம். இது 30 கப்பல்கள், கடல் ரோந்து விமானங்கள் மற்றும் கடலுக்கடியில் திறன்களால் ஆதரிக்கப்படுகின்றன. மேற்கத்திய உள்கட்டமைப்பைப் பாதுகாக்க 'மேலும் நடவடிக்கைகள்' எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும் குறிப்பிடுவதற்கு முன்பு, 'பிரிவு 5 பயன்படுத்துவதற்கான எல்லை எங்கு இருக்கின்றது என்பதை வரையறுக்கும் சலுகையை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். இது துல்லியமான சூழலைக் கருத்தில் கொண்டு கூட்டாளிகளாக நாங்கள் எடுக்கும் முடிவாக இருக்கும்” என்றார்.

நேட்டோவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு ரஷ்யா உடனடி ஆபத்தாக உள்ளது என்ற பிரச்சாரம், அக்டோபர் 8 அன்று வடக்கு ஜேர்மனி முழுவதும் இரயில் சேவைகளை நிறுத்திய ஜேர்மன் இரயில் வலையமைப்பை 'வெளிநாட்டு சக்தி' நாசப்படுத்தியிருக்கலாம் என்பதில் சென்றுமுடிகின்றது. இதில் வெளிநாட்டு சக்தி எனக் குறிப்பிடப்படுவது ரஷ்யா என்பது அனைவருக்கும் தெரியும். இரயில் வலைப்பின்னலின் இயக்கத்திற்கு முக்கியமான இரண்டு மின்கடத்திகள் இரண்டு இடங்களில் வெட்டப்பட்டதை அடுத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், லித்துவேனியாவில் ஜேர்மன் துருப்புக்களை பார்வையிடும் போது, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரினார். 'உண்மை என்னவென்றால், நாங்கள், நேட்டோ, நமது பொதுவான பாதுகாப்பிற்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் புட்டினின் பேராசைகள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நாம் அறிய முடியாது' என்று அவர் அறிவித்தார்.

யார் இதிலிருந்து இலாபமடைகின்றார்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது, நோர்த் ஸ்ட்ரீம் குண்டுவீச்சில் பிரிட்டனின் பொறுப்பு அல்லது முக்கிய பங்கு வகித்தது என்ற குற்றச்சாட்டானது, 1997 முதல் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அபிவிருத்திசெய்த பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்பை ரஷ்யா செயலிழக்கச் செய்தது என்பதைக் காட்டிலும் மிகவும் நம்பகரமானது. மேலும், இராணுவ, உளவுத்துறை நடவடிக்கைகளில் அமெரிக்காவுடனான ஐக்கிய இராச்சியத்தின் நெருங்கிய உறவைக் கருத்தில் கொண்டு, வாஷிங்டனின் நேரடி ஒப்புதல் இல்லாமல் பிரிட்டன் நோர்ட் ஸ்ட்ரீமை வெடிக்கச் செய்வதை கற்பனை செய்வதும் சாத்தியமில்லை.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக, கருங்கடலில் ரஷ்யாவிற்கு எதிரான பெரும் ஆத்திரமூட்டல்களில் பிரிட்டிஷ் கப்பல்கள் ஈடுபட்டன. ஜூன் 2021 இல், கருங்கடலில் உள்ள ஒரு தீபகற்பமான கிரிமியாவிற்கு அருகே ரஷ்யாவால் உரிமை கோரப்பட்ட கடற்பகுதியில் பிரிட்டிஷ் போர்க்கப்பல் நுழைந்தது. பதிலுக்கு, ஒரு ரஷ்ய எல்லை ரோந்து படகு பல எச்சரிக்கை சூடுகளை சுட்டு மற்றும் ஒரு ரஷ்ய போர் விமானம் பிரிட்டிஷ் நாசகார கப்பலான HMS Defender இன் பாதையில் குண்டு வீசியது.

நேட்டோவின் UK தலைமையிலான விமானம்தாங்கி தாக்குதல் பிரிவு 21 இன் ஒரு பகுதியாக மத்தியதரைக் கடல், கருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன், 45 ரக நாசகாரி HMS Defender போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்திலிருந்து மே 1, 2021 அன்று ஸ்காட்லாந்தில் பயிற்சிக்காகப் புறப்படுகிறது. பின்னர், ஜூன் 23, 2021 அன்று, கருங்கடலில் ரஷ்ய ஆயுதப் படைகளுடன் HMS Defender ஒரு பெரிய ஆத்திரமூட்டலில் ஈடுபட்டது

2019 முதல், ரோயல் கடற்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான பிற நேட்டோ நாடுகளின் படைகள் பால்டிக் கடல் பகுதியில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஜூன் 25, 2019 அன்று ரோயல் கடற்கடை, “பால்டிக் நாடுகளை உள்ளடக்கிய பிரிட்டிஷ் தலைமையிலான பயணக் குழு வடக்கு ஐரோப்பாவின் பகுதி முழுவதும் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது என அறிவித்தது. பால்டிக் கடல் நடவடிக்கைகளில் பிரிட்டனின் நிபுணத்துவம், அதன் படைகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீமை முடக்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பதை காட்டுகின்றது. ரோயல் கடற்படை அறிக்கை தொடர்ந்தது, 'மறைவான நிலத்திலும்நீரிலுமான தேடுதல்கள், நகர்ப்புற பதுங்கியிருந்து தாக்குதல்கள் மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி ஆகியவை Baltic Protector நடவடிக்கையின் மூன்றாவது கட்டத்தை குறிக்கும். இதில் 3,000 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் 16 கடற்படை கப்பல்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.'

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து, லாத்வியா, லித்துவேனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் உள்ளிட்ட பிரிட்டிஷ் தலைமையிலான கூட்டு நாடுகடந்த படைகள் (JEF) உடனான உச்சிமாநாட்டிற்குப் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் பின்வருமாறு அறிவித்தார். ... வடக்கு ஐரோப்பாவின் எங்கள் பகுதி முழுவதும், கடலிலும், தரையிலும் மற்றும் வானிலும் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் ஒப்புக்கொண்டோம். அவர் மேலும் கூறினார், 'உதாரணமாக, JEF நாடுகளின் பயண சுதந்திரத்தை நிரூபிக்கும் ஒரு பயிற்சியை விரைவில் நடத்துவோம்”.

ஜூன் மாதம், நோர்த் ஸ்ட்ரீம் வெடிப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, நேட்டோ பிரிட்டன் ஒரு முக்கிய பங்கு வகித்த அதன் BALTOPS 22 பயிற்சியை நடத்தியது. 'பதினான்கு நேட்டோ நேசநாடுகள், இரண்டு நேட்டோ கூட்டாளி நாடுகள், 45 க்கும் மேற்பட்ட கப்பல்கள், 75 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் அண்ணளவாக 7,000 பணியாளர்கள்' பங்கேற்றது என நேட்டோ பட்டியலிட்டது. ரோயல் கடற்படை கூறியது, “நாசகாரியான HMS Defender மேம்பட்ட சுடுதிறன் தொழில்நுட்பத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் ரோயல் கடற்படையின் கையிருப்பான ஆறு சிறிய Archer, Charger, Explorer, Exploit, Ranger, Smiter ஆகியவை Baltops 22 இல் பங்கேற்பாளர்களைச் சுற்றிவளைப்பதற்கான வேகம், சுறுசுறுப்பு மற்றும் எண்ணிக்கையை வழங்குகின்றன'. கிரிமியாவிற்கு அருகே ஜூன் 2021 மோதலில் ஈடுபட்டது நாசகாரிக்கப்பலான HMS Defender ஆகும்.

ரஷ்யா குழாய்களை அழித்தது என்ற கூற்றுக்கள், மாஸ்கோவிற்கு எதிரான நேட்டோவின் பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான இரண்டாவது அடித்தளமாகும். ரஷ்ய அணுவாயுதத் தாக்குதல் உலகிற்கு முக்கிய அச்சுறுத்தல் என்ற கூற்றுக்களை வலியுறுத்தி இது கடற்படை அரங்கில் போர் தீவிரமடைய அனுமதிக்கிறது. இதில் பிரித்தானியா ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கிறது.

அக்டோபர் 3 அன்று, நோர்ட் ஸ்ட்ரீம் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குப் பின்னர், ரோயல் கடற்படை ஒரு போர்க்கப்பலை வட கடலுக்கு அனுப்பியது. இந்த கப்பல் நோர்வே கடற்படையுடன் இணைந்து 'எரிவாயு குழாய்களுக்கு அருகில் பணிபுரிபவர்களை அமைதிப்படுத்த உதவும்' எனக் கூறப்பட்டது. வாலஸ் JEF உடன் மீண்டும் சந்தித்த பின்னர், இந்த நடவடிக்கையின் போது 'இக்குழு பொதுமக்கள் உள்கட்டமைப்புக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல்களை கண்டனம் செய்தது' எனக் கூறினார்.

கடலுக்கடியில் உள்ள மின்கடத்திகள் மற்றும் குழாய்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டன் இரண்டு சிறப்புக் கப்பல்களை வாங்கும் என்றும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் “கடலுக்கு அடியிலான போருக்கான பன்முக பயன்பாட்டுக்கப்பல்” செயல்படும் என்றும் அவர் கூறினார்.

Loading