ரஷ்ய கடற்படை மீதான தாக்குதல் முக்கிய தானிய ஏற்றுமதியை உறுதி செய்யும் ஒப்பந்தத்தின் பொறிவிற்கு வழிவகுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனிய வான் மற்றும் கடற்படை ட்ரோன்களின் கூட்டம் ஒன்று கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய கருங்கடல் கடற்படை மீது சனிக்கிழமையன்று பாரிய தாக்குதலை நடத்தியது.

தானிய பாதைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு ட்ரோன் ஏவப்பட்டதாக ரஷ்யா கூறியது.

ரஷ்ய கருங்கடல் கடற்படைக் கப்பல்கள் மார்ச் 31, 2014 அன்று கிரிமியாவின் செவாஸ்டோபோல் விரிகுடா ஒன்றில் நங்கூரமிடப்பட்டுள்ளன [AP Photo/AP Photo, File]

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், 'தாக்குதல்கள் மற்றவற்றுடன் குறிப்பிட்ட மனிதாபிமான பாதையின் செயல்பாட்டை உறுதி செய்யும் ரஷ்ய கப்பல்களுக்கு எதிராகவும் இயக்கப்பட்டன' என்று கூறினார். தாக்குதலை தொடர்ந்து, 'கருங்கடல் முன்னெடுப்பில்' பங்கேற்கும் பொது உலர் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ரஷ்ய தரப்பால் உத்தரவாதம் அளிக்க முடியாது' என்று அமைச்சகம் கூறியது.

கருங்கடல் தானிய முன்முயற்சி என்பது ஜூலை மாதம் துருக்கியால் மத்தியஸ்தம் வகிக்கப்ப்பட்டு ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான உருவான ஒப்பந்தமாகும். இது உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள பின்னணியில், உக்ரேனிலிருந்து 9.5 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

கெர்ச் பாலத்தின் மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் ரஷ்ய பாசிச சித்தாந்தவாதியான டாரியா டுகினா படுகொலை செய்யப்பட்டதைப் போலவே, இந்த உக்ரேனிய தாக்குதல் அறிவிப்பும் இதே முறையைப் பின்பற்றியது. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் உக்ரேனியப் படைகள் தாக்குதலை நடத்தியதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டைம்ஸின் உறுதிப்படுத்தல், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் வடிவத்தில் வந்தது. அதில் “மேற்கத்திய ஆயுதங்களுடன், உக்ரேன் ஒரு பீரங்கிப் போரில் திசையைத் திருப்புகிறது,” அது அறிவித்தது, “சனிக்கிழமை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கப்பட்டபோது புதிய தகமைகள் வெளிப்பட்டன. கருங்கடல் கடற்படையின் சொந்த துறைமுகமான செவாஸ்டோபோலில், ஒருமுறை அசைக்க முடியாத கோட்டையாக கருதப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் ஆழமான பகுதியில் ரஷ்ய கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது”.

முந்தைய தாக்குதல்களைப் போலவே, உக்ரேனிய அதிகாரிகள் இதில் ஈடுபடவில்லை என மறுத்து, ரஷ்யா தனது சொந்த கப்பல்களை வெடிக்கச் செய்ததாக அபத்தமாகக் கூறினர். ஏனைய அமெரிக்க அறிக்கைகள் உக்ரேனியப் படைகள் இதில் ஈடுபட்டுள்ளன என்ற கூற்றுக்கள் கிரெம்ளினின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகக் கருதப்பட்டன.

கிரிமியாவில் ரஷ்யப் படைகள் மீதான முந்தைய தாக்குதல்களைப் போலவே, ரஷ்யப் படைகள் மீதான உக்ரேனிய தாக்குதல்களின் அளவையும் தாக்கத்தையும் மறைக்க இரு தரப்பினரும் ஒரு ஊக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கார்டியன், உக்ரேனிய பத்திரிகையாளர்களால் வெளியிடப்பட்ட காட்சிகளை மதிப்பாய்வு செய்து, ரஷ்யாவின் கருங்கடல் முதன்மைக் கப்பலான அட்மிரல் மகரோவ், சம்பவத்தில் சேதமடைந்ததாகக் கூறியது.

கார்டியன், 'சனிக்கிழமை தாக்கப்பட்ட மூன்று ரஷ்ய கப்பல்களில் போர்க்கப்பலும் ஒன்று. ட்ரோன்களின் ஒரு கூட்டம் சில காற்றில் பறந்தது, மற்றவை தண்ணீரில் வேகமாகச் சென்றன. அதிகாலை 4.20 மணிக்கு ரஷ்யாவின் கடற்படையைத் தாக்கியது” என செய்தி வெளியிட்டுள்ளது

செய்தித்தாள் தொடர்ந்தது, “அட்மிரல் மகரோவ் மோசமாக பாதிக்கப்பட்டதா அல்லது இலேசான சேதத்துடன் தப்பியதா என்பது தெளிவாக இல்லை என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதன் மேற்பகுதி உடைக்கப்பட்டதாகவும், ரேடார் அமைப்புகள் நொறுக்கப்பட்டதாகவும் கூறுகின்றன”.

கார்டியன் உக்ரேனிய பத்திரிகையாளர் ஆன்ட்ரி சாப்லியென்கோவை ஆதாரமாக காட்டி, 'பல கப்பல்கள் சேதமடையாமல் மூழ்கடிக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது' என்று கூறி முடித்தது.

1905 க்குப் பின்னர் முதல் முறையாக ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான Moskva கப்பல் ஏப்ரல் மாதத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது. 1945 க்குப் பின்னர் போரில் மூழ்கிய இரண்டாவது பெரிய கப்பல் இதுவாகும்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு 'பேரழிவு விளைவுகள்' பற்றிய நிபுணர்களின் எச்சரிக்கையுடன், தானிய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து திங்களன்று வர்த்தகம் மீண்டும் தொடங்கும் போது, உலகளாவிய தானிய சந்தைகள் உணவு விலையில் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, 'விலைகளில் கணிசமான உயர்வைக் காண்போம்', கருங்கடல் தானிய ஆலோசனை நிறுவனமான SovEcon இன் நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரே சிசோவ் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்.

ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹுசைன், 'டசின் கணக்கான நாடுகள்' உலகளாவிய தானிய விநியோகத்தின் இடையூறுகளால் பாதிக்கப்படும் என்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார். 'நல்ல காலங்களில் [இது] மோசமாக இருக்கும், ஆனால் உலகின் தற்போதைய நிலையில், இது கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று' என அவர் கூறினார்.

ரஷ்யாவின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், “இந்த உடன்பாட்டை இடைநிறுத்துவதன் மூலம், ரஷ்யா மீண்டும் அது தொடங்கிய போரில் உணவை ஆயுதமாக்குகிறது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் உலகளாவிய உணவு விலைகளை நேரடியாகப் பாதித்து, ஏற்கனவே உள்ள மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்கி வருகிறது' என அறிவித்தார்.

எவ்வாறாயினும், உக்ரேனிய தாக்குதலின் முக்கிய நோக்கம், அமெரிக்க/நேட்டோ இராணுவத் தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கான சாக்குப்போக்கை உருவாக்கி, ஒப்பந்தத்தை தகர்ப்பதுதான் என்பது தெளிவாக இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், முன்னாள் நேட்டோ உச்ச நட்பு நாடுகளின் ஐரோப்பிய தளபதியும் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் போன்றவர்கள், தானிய ஏற்றுமதிக்கு 'மனிதாபிமான பாதையை' நிறுவுதல் என்ற பெயரில் ரஷ்ய கருங்கடல் கடற்படை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தனர். கருங்கடலில் இருந்து தானியங்களை அனுப்ப ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அறிவிப்பு தற்காலிகமாக இந்த அழைப்புகளை நிறுத்தியது.

முன்பே உருவகப்படுத்திக்காட்டப்பட்டது போல், தானிய ஒப்பந்தத்தின் முறிவு உடனடியாக அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் கருங்கடலில் நேரடி அமெரிக்க கடற்படைத் தலையீட்டிற்கான கோரிக்கைகளை எதிர்கொண்டது. இது ரஷ்ய மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு இடையே ஒரு நேரடியான துப்பாக்கிச் சூடு போரைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தும்.

'ரஷ்ய அச்சுறுத்தல்களை மீறி தானிய ஏற்றுமதிக்கு சர்வதேச சமூகம் பாதுகாப்பு கொடுப்பதற்கு வழிவகுக்கலாம்' என்று ஸ்டாவ்ரிடிஸ் சனிக்கிழமை ட்விட்டரில் எழுதினார்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு எழுதியது. “ஒடெசாவிலிருந்தும் கருங்கடல் வழியாகவும் தானியங்களை அனுப்புவதற்கு பாதுகாப்பு வழங்கத்தயாராக இருப்பவர்களின் கூட்டணியை அமெரிக்கா ஏற்பாடு செய்வதே சிறந்த பதில். இது ஒரு நேட்டோ நடவடிக்கையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அமெரிக்கா அதை வழிநடத்த வேண்டும்”.

கடந்த வாரம், நியூஸ்வீக் “ரஷ்யாவின் எல்லையில் அணு ஆயுதங்களை வைக்க பின்லாந்து நேட்டோவை அனுமதிக்கும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது பின்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் நேட்டோவில் சேருவதற்கான நாட்டின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நேட்டோ அணு ஆயுதங்களை வைப்பதற்கு நேட்டோவிடம் “கட்டுப்பாடுகள் அல்லது தேசிய இட ஒதுக்கீடுகளை” கோர மாட்டோம் என்று கூறியதாக தெரிவிக்கிறது.

கருங்கடல் தானிய உடன்படிக்கையின் பொறிவு, ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைத்து தோற்கடிப்பதற்கான அமெரிக்க-நேட்டோ முயற்சிக்கு விலையை செலுத்த வைக்கப்பட்டுள்ள முழு உலக உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், உணவு மற்றும் எரிபொருளின் விலை உயர்வு, வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சிக்கு உந்துதலாக உள்ளது. இந்த வர்க்கப் போராட்ட்டம் போரை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதமயமாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Loading