உகண்டாவில் எபோலா நெருக்கடி: உலக சுகாதார அமைப்பின் ஒரு புதிய பொது சுகாதார எச்சரிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உகண்டாவில் சூடான் வைரஸ் வெடித்து நாற்பத்தாறு நாட்கள் கடந்துவிட்டன, முபெண்டேவில் ஒரு இளைஞருக்கு அரிதான எபோலா நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 130 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் 21 சாத்தியமுள்ள நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 43 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் 21 சாத்தியமுள்ள இறப்புக்களுடன் எபோலா இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் இறப்பு விகிதம் 33 சதவிகிதமாக உள்ளது, மேலும் ஒட்டுமொத்த உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சாத்தியமுள்ள நோய்தொற்றுக்களின் இறப்பு விகிதம் 42 சதவிகிதமாகும். குறிப்பாக, 15 சுகாதாரப் பணியாளர்கள் எபோலா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர்.

அக்டோபர் 28 முதல் நாளது தேதி வரையிலான உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவின்படி, விக்டோரியா ஏரியின் கரையில், மில்லியன் கணக்கில் அதிக மக்கள் அடர்த்தியுடன் அமைந்துள்ள நாட்டின் தலைநகரம் கம்பாலாவின் வாகிசோ மாவட்டம் உட்பட, 147 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் எபோலா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த வார செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார், “[கம்பாலாவில்] உள்ள இந்த தொற்றுக்கள் அறியப்பட்ட பிரிவினருடன் தொடர்புபட்டிருந்தாலும், அடர்த்தியான மக்கள் தொகை உள்ள நகரத்தில் நோய்தொற்றுக்கள் பரவியுள்ள நிலையில், அது மேலும் பரவுவதற்கான உண்மையான ஆபத்தைக் கொண்டிருப்பதுடன், மாவட்டங்களும் சுற்றியுள்ள நாடுகளும் தயார்நிலையில் இருப்பதற்கான மிக அவசர தேவை இருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதே அப்பட்டமான உண்மை.”

சுமார் 1,844 தொடர்புகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளன, அதே நேரத்தில் 1,194 நோய்தொற்றுக்களின் 21 நாள் கண்காணிப்பு காலம் முடிந்துள்ளது, அதாவது உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சாத்தியமுள்ள நோய்தொற்றாளர்களுடன் முன்னர் தொடர்பில் இருந்த ஒருவருக்கு எபோலா வெளிப்படுவதற்கான அடைகாக்கும் காலத்தை இது குறிக்கிறது.

20 செப்டம்பர் – 26 அக்டோபர் 2022 காலகட்டத்தில், நோய் தொடங்கி பின்னர் முடிவு விளைவு (இறப்பு/உயிர் பிழைத்திருத்தல்) அறியப்பட்ட தேதி அடிப்படையில் உகண்டாவில் எபோலாவின் சூடான் மாறுபாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சாத்தியமுள்ள நோய்தொற்றுக்களை குறிப்பிடும் வரைபடம் [Photo: Graph by World Health Organization]

இந்த பிராந்தியத்தின் எபோலா வெடிப்பு நெருக்கடிக்கு உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பு அதன் அவசரநிலைகளுக்கான தற்செயல் நிதியிலிருந்து ஏற்கனவே அது விடுவித்த 5 மில்லியன் டாலர் அதிகபட்ச நிதியை அடுத்து, மற்றொரு 5.7 மில்லியன் டாலர் நிதியை இப்போது விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உகண்டாவில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை அன்று, உகண்டாவின் அரசாங்கம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பதிலுக்கு ஆதரவாக அமெரிக்கா ‘செயல்படுத்தும் பங்காளிகள் மூலம்’ 22.3 மில்லயன் டாலர் நிதியை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது. இந்த முயற்சிகளில் 51 நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஊழியர்கள் நேரடி தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறார்கள், மேலும் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பணிக்குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு தணிப்பு மூலோபாயங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

சூடான் வைரஸ் தடுப்பூசி சோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், உகண்டாவின் சுகாதார அமைச்சகத்தில் உள்ள எபோலா நோய்தொற்றுக்கான தேசிய நிகழ்வு மேலாளர் டாக்டர். ஹென்றி கியோப் போஸா, நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கருத்துப் பதிவில், அமெரிக்க ஆதரவில் சோதனை மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள், MBP-134 (MappBio உரிமம்) மற்றும் ரெம்டெசிவர் வைரஸ் எதிர்ப்பி ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளார்.

ரெம்டெசிவர், Gilead Sciences நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பரந்த-புழக்கத்தில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும், இது இலேசானது முதல் கடுமையான கோவிட்-19 நோய்தொற்றுக்களின் சிகிச்சைக்கான ஆரம்பகால மருந்துகளில் ஒன்றாக அதிகளவு ஊடக கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட சர்வதேச ஆய்வின் சோதனை முடிவுகள், அதன் பயனற்ற தன்மை காரணமாக, அதன் பயன்பாட்டிற்கு எதிராக பரிந்துரைத்தது.

பார்வையாளர்களை தேடி அலையும் ஒரு வகை பாடகரைப் போன்ற, ரெம்டெசிவர் மருந்தானது, ஹெபடைடிஸ் சி மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus-RSV) நோய்தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க 2009 இல் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது, ஆனால் இந்த இரண்டு நோய்க்கிருமிகளுக்கு எதிராக அது பயனற்றது என கண்டறியப்பட்டது. பின்னர், அக்டோபர் 2015 இல், தொற்றுநோய்களுக்கான அமெரிக்க இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (United States Army Medical Research Institute of Infectious Diseases-USAMRIID), அவர்கள் Rhesus குரங்குகளுக்கு எபோலா வைரஸ் தடுப்பு மருந்து கொடுத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் ரெம்டெசிவர் மருந்து சிகிச்சையளித்து அவற்றை எபோலா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாத்ததாக தெரிவித்தனர்.

2013 முதல் 2016 வரை மேற்கு ஆபிரிக்காவில் ஜைர் எபோலா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் ரெம்டெசிவர் வேகமாக கண்காணிக்கப்பட்டது. மேலும், இது 2018 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மத்திய ஆபிரிக்காவில் காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் பரவிய கிவு எபோலா உள்ளூர் நோய்தொற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. அங்கு அப்போது மொத்தம் 3,470 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சாத்தியமான நோய்தொற்றுக்கள் இருந்தன, அதில் 2,266 பேர் இறந்தனர். இதில் கால் பகுதி நோய்தொற்றுக்கள் உகண்டாவில் பரவியிருந்தன. இருப்பினும், பல்வேறு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைக் காட்டிலும் ரெம்டெசிவர் மருந்தின் செயல்திறன் குறைவாக உள்ளது என தீர்மானித்ததன் பின்னர் காங்கோ சுகாதார அதிகாரிகள் அதன் பயன்பாட்டை நிறுத்தினர்.

மிக சமீபத்தில், மே 23, 2022 அன்று JCI Insight இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் துணை மருந்துகளுடன் சேர்த்து ரெம்டெசிவர் மருந்தும் வழங்கப்பட்டு மேம்பட்ட சூடான் வைரஸ் நோய்க்கு எதிராக மக்காக் குரங்குகளும், கொடிய விலங்குகளும் பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்தது. தற்போது, எபோலாவின் ஜைர் விகாரத்திற்கு எதிராக கிடைக்கும் தடுப்பூசிகள் சூடான் விகாரத்திற்கு எதிராக செயல்படவில்லை, ஏனென்றால் வைரஸ்கள் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன. சூடான் வைரஸுக்கு எதிராக, உரிமம் பெற்ற சிகிச்சைகள் எதுவும் சந்தைகளில் இல்லை.

உகண்டாவில் உள்ள எபோலா நோயாளி [Photo: @DanielLutaaya]

சூடான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் கூட்டு சிகிச்சையைப் பெற்ற 80 சதவீத மக்காக் குரங்குகள் உயிர் பிழைத்ததாக ஆய்வு முடிவுகள் குறிப்பாக தெரிவித்தன. இருப்பினும், இந்த காலகட்டத்திற்குப் பின்னர், தொடர்ந்து உயிர்வாழ்வது 20 சதவீதமாகக் குறைந்தது, அதாவது சாத்தியமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றாளர்களுக்கு இந்த சிகிச்சைகளை வழங்க உடனடி கவனிப்பு தேவை என்பதாகும்.

அக்டோபர் தொடக்கத்தில், உகண்டாவில் MBP-134 மற்றும் ரெம்டெசிவர் ஆகியவற்றின் கூட்டு சிகிச்சையைப் பயன்படுத்தி அமெரிக்கா ஒரு மருத்துவ பரிசோதனையைத் தொடங்கியது. ஆபத்தான நிலையில் உள்ள ஏழு நோயாளிகள் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த முயற்சிகளுக்கு மூலோபாய தயார்நிலை மற்றும் நடவடிக்கை நிர்வாகத்தால் (Administration for Strategic Preparedness and Response-ASPR) நிதி ரீதியான உதவி வழங்கப்படுகிறது, கடந்த மாதம் உகண்டாவில் மருத்துவ சோதனை தொடங்கப்பட்டபோது, சான் டியாகோவை தளமாகக் கொண்ட Mapp Biopharmaceuticals ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 110 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக அறிவித்தது.

தயார்நிலை மற்றும் நடவடிக்கைக்கான உதவிச் செயலாளர் டான் ஓ’கொன்னெல் அக்டோபர் 4, 2022 தேதியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார், “சுகாதார அவசரநிலைகளுக்கான நாட்டின் தயார்நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வணிகச் சந்தைகளில் அல்லாமல், மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் நிதி முதலீடு செய்வதாகும். BARDA [Biomedical Advanced Research and Development Authority] ஆல் வழங்கப்படும் நிதி இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கும். இந்த சிகிச்சை அங்கீகரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எபோலா வைரஸ் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராகவும் அதற்கு பதில் நடவடிக்கை எடுக்கவும் ஏற்ற வகையில் அமெரிக்காவை சிறந்த நிலையில் வைக்கும். உகண்டாவில் எபோலா சூடான் வைரஸின் வெடிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த வேலை இப்போது இன்னும் முக்கியமானது.”

செய்திக்குறிப்பில் உள்ள சொல்லாட்சிகள் வெட்கமின்றி தேசியவாதமானது மற்றும் அத்தகைய ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதற்கு பதிலாக, எபோலா மற்றும் பிற தொற்று நோய்கள் தினசரி இருத்தலை அச்சுறுத்தும் இந்த பிராந்தியங்களில் சிறந்த மையங்கள் மற்றும் சமூக சிகிச்சை நிலையங்களை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

டாக்டர். போஸா அவதானித்தபடி, “நம்மிடம் உள்ள தணிப்பு நடவடிக்கைகள் இந்த நோயின் ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்பட்டால் அவை சிறப்பாக வேலை செய்யும் என்பது நமக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைக் கொண்ட நோயாளிகள் தங்கள் நோயினால் தாமதமாக இறந்தனர். ஆனால் பெரும்பாலான எபோலா நோயாளிகள் பொது சுகாதார நிலையங்களுக்கு மிகவும் தாமதமாக செல்கிறார்கள். பலர் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு சென்றுள்ளனர் அல்லது மாற்று முறைகளை முதலில் முயற்சித்துள்ளனர். நாம் நோயின் ஆரம்பத்தில் பார்க்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு அதிக சிகிச்சைகள் தேவை.”

நோயின் ஆரம்ப கட்டத்திலேயே நரம்புவழி நீரேற்றம் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் வழங்குதல் ஆகியவற்றை செய்வதன் மூலம் எபோலா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நோயின் பின்விளைவை முன்கணிக்க முடியும் என்பதை சுகாதார வழங்குநர்களுக்கு கற்பித்துள்ளது. அதற்கு பொது சுகாதார உள்கட்டமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் தங்கள் சொந்த வாழ்க்கையை பணயம் வைக்கும் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களுக்கு உதவி மற்றும் ஆதரவளித்தல் ஆகிய இரண்டும் தேவை.

வளர்ந்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் மருத்துவ விஞ்ஞானமும் பொது சுகாதாரமும் தோல்வியுற்றதானது, மிகுந்த அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகளால் கூட முதலாளித்துவ சமூகத்தில் உள்ள சமூக துருவமுனைப்பைக் கடக்க முடியாது என்பதை நிரூபிக்கிறது. சமூக சமத்துவத்தின் அடிப்படையில் பொது சுகாதார வளங்களை அணிதிரட்டுவதை, இலாப முறைக்கு எதிரான போராட்டத்தில், சர்வதேச அடிப்படையில் தொழிலாள வர்க்கம் தலையிடுவதன் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெடிப்புற்று வரும் கோவிட் தொற்றுநோய், உலகம் முழுவதும் உள்ள சமூகங்களில் மிகப்பெரிய பிளவுகளை வெளிப்படுத்தி மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு நோய்தொற்று வெடித்த ஆரம்ப கட்டத்திலேயே வைரஸை அகற்றுவதற்கு உணவு, மருந்து, வருமானம், இணைய அணுகல் மற்றும் இணையவழி கல்விச் சாதனங்கள் போன்ற பொருள் வளங்களை வழங்கி மக்களை ஆதரித்து ஒரு சர்வதேச அளவிலான பதில் நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே தொற்றுநோய் முறியடிக்கப்பட்டிருக்கக்கூடும். முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த நடவடிக்கையை நிராகரித்ததற்கு ஒரு முக்கிய காரணம், சமூக சமத்துவத்தின் நனவை ஊக்குவிக்கும் விளைவையும் அது ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான்.

உகண்டாவில் எபோலா வெடித்துள்ள நிலையில், புருண்டி, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், தான்சானியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய அதன் அண்டை நாடுகள் அவற்றின் எல்லைகளில் சூடான் வைரஸ் பரவுவதற்கான சாத்தியத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இது தொடர்பாக, இந்த நாடுகளிடம் சமூகக் கண்காணிப்புத் தயார்நிலை, ஆய்வகப் பயிற்சி, சுகாதார அமைப்பு தயார்நிலை மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் ஆகியவை உள்ளிட்ட பதிலளிப்பு வழிமுறைகளின் வகைப்படுத்தலைச் செயல்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. சூடான் எபோலா வைரஸ் மக்கள் அடர்த்தி மிக்க நகர்ப்புற அமைப்பில் பரவியிருப்பதைக் கருத்தில் கொண்டால், தற்போதைய ஆபத்து மதிப்பீடு, தேசிய அளவில் (உகண்டா அளவில்) மிக அதிகமாகவும், பிராந்திய அளவில் அதிகமாகவும் இருக்கும்.

Loading