மொத்த மின் இழப்பு அபாயம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரேனிய அதிகாரிகள் கியேவ் வெளியேற்றம் பற்றி விவாதிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கியேவின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko), ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் தலைநகரம் வேகமாக நெருங்கி வரும் குளிர்காலத்தில் மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறைந்து வருவதால், மொத்த மின் இழப்புக்கான வாய்ப்பை எதிர்நோக்கி, போருக்கு முன் நகரில் இருந்த கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் திட்டங்களை வகுத்துள்ளனர்.

நவம்பர் 6, 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று, உக்ரேனின் கியேவ் நகரில் மின்தடை ஏற்பட்டிருந்தபோது உக்ரேனின் தேசிய வங்கியின் கோபுரம் தெரியும் காட்சி [AP Photo/Andrew Kravchenko]

நியூ யோர்க் டைம்ஸில் இந்த ஏற்பாடுகள் குறித்த செய்திகள் பரவி வருவதால் ஏற்படும் பீதி குறித்து கவலையடைந்த கியேவின் நகராட்சி பாதுகாப்புத் துறையின் தலைவரான ரோமன் டகாச்சுக், வெகுஜன வெளியேற்றம் என்பது நகர நிர்வாகிகள் செயலாற்றும் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்றும், அத்தகைய நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்த எந்த திட்டமும் இல்லை என்றும் இப்போது வரை வலியுறுத்தி வந்துள்ளார். ‘தவறான தகவல்களை’ நம்ப வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், சமீபத்திய telethon நிகழ்ச்சியில், உக்ரேனின் மிகப்பெரிய எரிசக்தி தனியார் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான DTEK இன் நிறைவேற்று இயக்குனர், கியேவில் மொத்தமாக மின்சார இழப்பு ஏற்படுவதற்கு முழு சாத்தியமுள்ளது, இதனால் குறைந்தபட்சம் ‘மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியையாவது’ வெளியேற்றும் தேவை ஏற்படும் என்று கேட்பவர்களிடம் கூறினார். ஒரு வாரத்திற்கு முன் கியேவ் பகுதியின் பிராந்திய தலைவரும் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து விளக்கு எரியாத அல்லது இரயில் போக்குவரத்து நடைபெறாத நிலைமைகளில், உக்ரேனிய அரசாங்கம் கியேவில் இருந்து மில்லியன் கணக்கான மக்களை எப்படி வெளியேற்ற உத்தேசித்துள்ளது என்பது பற்றி மேலும் எதுவும் தெரியவில்லை. மேலும், அவர்களை எங்கு அனுப்ப நினைக்கிறது என்பதும் தெளிவாக இல்லை.

உக்ரேனின் எரிசக்தி விநியோகம் 40 சதவிகித அளவிற்கு சேதமடைந்துள்ளது அல்லது விநியோகப் பாதையில் முடங்கியுள்ளது என்ற நிலையில், நாட்டின் தலைநகரம் மற்ற ஆறு பிராந்தியங்களுடன் இணைந்து தற்போது சுற்றுமுறை மின்சார வெட்டை எதிர்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக மின்சார இழப்பு ஏற்பட்டால், நகரின் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும் செயலிழக்கும்.

தனது சமீபத்திய கருத்துக்களில், மேயர் கிளிட்ச்கோ (Klitschko), தலைநகரில் வசிப்பவர்கள் சூட்டை வைத்திருக்கக்கூடிய ஆடைகள் மற்றும் மின் சேமிப்பான்களை கையிருப்பில் வைக்குமாறு கூறியுள்ளார், அதிலும் பிந்தையது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான டாலர்கள் விலைக்கு விற்கப்படக்கூடும். வலதுசாரி அரசியல்வாதியாக மாறிய முன்னாள் குத்துச்சண்டை வீரரும் கூட, நாட்டின் மின்சார விநியோக அமைப்புகளை சார்ந்திருக்காமல், கிணறுகள் மற்றும் விறகு அடுப்புகளைக் கொண்ட கியேவுக்கு வெளியே உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மக்களை அறிவுறுத்தினார்.

உக்ரேனின் தெற்கில் உள்ள துறைமுக நகரமான கெர்சன், தற்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, வார இறுதியில் அனைத்து பயன்பாடுகளையும் அது இழந்தது. நகரத்தை மீட்பதற்கான தாக்குதலுக்கு தயாராகி வரும் கியேவ் தான், மின் இணைப்புகளையும் அருகிலுள்ள அணையையும் தாக்கியதாக மாஸ்கோ கூறுகிறது. தற்போது சேவை ஓரளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் சண்டை நடக்கும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்நட் நகரம் கூட, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் உள்ளது. போர் மண்டலத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், தங்களை சூடாக வைத்திருக்க தற்காலிக அடுப்புக்களை மேம்படுத்தி, வெடித்துச் சிதிலமடைந்த கட்டிடங்களில் உயிர்வாழ முயற்சிக்கின்றனர். உக்ரேனிய எரிசக்தி விநியோக நிறுவனமான Yasno வின் தலைமை நிறைவேற்று அதிகாரி சேர்ஜி கோவலென்கோ, உக்ரேன் முன்கணிக்கப்பட்ட 32 சதவீத மின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

துணிச்சல் மிக்க மற்றும் அப்பாவியான தோற்றத்தை இப்போது கச்சிதமாக்கியுள்ள, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஞாயிற்றுக்கிழமை தனது இரவு நேர உரையில், மில்லியன் கணக்கான தனது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் ஆற்றொணா சூழ்நிலை வெறுமனே ரஷ்ய “பயங்கரவாதத்தின்” விளைவாகும் என்று வலியுறுத்தினார். மேலும், “நாம் இந்த கடினமான காலத்தை கடந்து, இப்போது இருப்பதை விட வசந்த காலத்தில் இன்னும் வலுவாக இருக்க வேண்டும்,” என்று அவர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், உக்ரேனின் பொது உள்கட்டமைப்பு மீதான மாஸ்கோவின் குற்றகரமான, அவநம்பிக்கையான மற்றும் அதிகரித்தளவிலான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்பது, ரஷ்யாவை வெல்ல முடியாத மற்றும் பேரழிவுகர போருக்குள் இழுக்கும் முயற்சியில் அமெரிக்க-நேட்டோ கூட்டணி உக்ரேனை ஒரு கைக்கூலியாக பயன்படுத்தியதன் தர்க்கரீதியான விளைவு ஆகும். வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் கியேவுக்கு மாற்ற பல பில்லியன் டாலர் இராணுவ நிதி மற்றும் ஆயுதங்களைக் கண்டறிந்தாலும், இதுவரை 17 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டணி நாட்டிற்காக 500 ஜெனரேட்டர்களை மட்டுமே கொண்டு வர முடிந்தது. குளிர்காலத்தின் போது பல மில்லியன் உக்ரேனியர்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான வளங்கள் வெறுமனே, கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஸ்பானிய நாளிதழான El Pais நவம்பர் 6 அன்று, கியேவிற்கு வெளியே 65,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இர்பின் நகரத்தின் நிலைமைகளை விவரிக்கும் ஒரு செய்தியை வெளியிட்டது. மேயர் ஒலெக்சாண்டர் மர்குசின், தனது நகரத்தில் கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள், தண்ணீர் எடுக்கும் வசதிகள் மற்றும் கட்டிட அடித்தளங்களை பழுது பார்ப்பதற்கான அவசர தேவை உள்ளது என்று செய்தித்தாளுக்கு தெரிவித்தார். பள்ளிகளும் மருத்துவ நிலையங்களும் அங்கு செயல்பட முடியவில்லை. கியேவிலிருந்து உதவிக்காக குடியிருப்பாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இரண்டு வாரங்களில், ஒரு தொண்டு நிறுவனம் சில உதவிகளை வழங்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எரிசக்தி நெருக்கடியினால் இந்த குளிர்காலத்தில் மேலும் 800,000 உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் (UNHCR) கணித்துள்ளது. ஏற்கனவே வெளியேறிய 7.6 மில்லியன் மக்களின் வரிசையில் அவர்களும் இணைவார்கள். சமீபத்திய UNHCR கணக்கெடுப்பின்படி, இவர்களில் 68 சதவீதம் பேர் ‘இன்னும் பொருளாதார ரீதியாக செயல்படவில்லை’ மற்றும் 47 சதவீதம் பேர் ‘உதவி திட்டங்களையே தங்கள் முதன்மை வருமான ஆதாரமாக’ நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகள் அகதிகளுக்கான சலுகைகளை குறைக்கின்றன.

போர் வெடித்ததிலிருந்து 1.5 மில்லியன் உக்ரேனியர்களை ஏற்றுக்கொண்ட போலந்து, ஜனவரி 2023 நிலவரப்படி, நாட்டில் அடைக்கலம் தேடுபவர்கள் தங்கள் தங்குமிடச் செலவில் பாதியை செலுத்த வேண்டும் என்று இப்போது அறிவித்துள்ளது, அவை தற்போது அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்றன. மே 2023 இல், அவர்கள் மொத்தத்தில் 75 சதவிகித செலவை செலுத்த வேன்டும்.

கூடுதலாக, உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் PESEL எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும், இது போலந்து அரசாங்கம், அங்கும் இங்குமாக நாட்டின் எல்லைகளை தாண்டும் அவர்களின் நகர்வுகளை மின்னணு முறையில் கண்காணிக்க அனுமதிக்கும். ஒருவர் போலந்திற்குள் நுழையும்போது அவர் பல்வேறு வகையான அரசு நிதியுதவி ஆதரவு பெறுவதுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், வார்சோவில் உள்ள அதிகாரிகள், அவர்கள் முன்பு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்ற அடிப்படையில் அகதிகளின் நன்மைகளுக்கான தகுதியைக் கட்டுப்படுத்த இந்தக் கருவி அனுமதிக்கும்.

மேலும் மேற்கில், அகதிகளின் குடும்பங்களுக்கு இருப்பிட செலவிற்கு மாதத்திற்கு 350 பவுண்டுகள் வழங்கும் பிரிட்டனின் ‘உக்ரேனுக்கான வீடுகள்’ திட்டம், சிதைந்து வருகிறது, மேலும் வலதுசாரி டோரி அரசாங்கத்தால் அது முற்றிலும் அகற்றப்படலாம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் ஆரம்பத்தில் உக்ரேனிய அகதிகளை ஆறு மாதங்களுக்கு ஏற்றுக்கொள்ள கையெழுத்திட்டனர், இந்த காலக்கெடு இப்போது நெருங்குகிறது. எவ்வாறாயினும், பெரும்பாலான மக்களுக்கு வேறு எங்கும் செல்ல முடியாது, ஏனெனில் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளால் புதிய குடும்பங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தெற்கு கேம்பிரிட்ஜ்ஷையரின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் அக்டோபர் 30 அன்று கார்டியன் பத்திரிகையிடம் இவ்வாறு தெரிவித்தார்: “தற்போது வீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டியவர்களின் எனது பட்டியலில் சுமார் 1,600 பேர் உள்ளனர், மேலும் சில இலண்டன் பெருநகரங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.”

பிரித்தானியாவில் உள்ள ஆயிரக்கணக்கான உக்ரேனிய அகதிகள் தற்போது வீடற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, 800 மில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்ட ‘உக்ரேனுக்கான வீடுகள்’ திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவது பற்றி இலண்டனில் விவாதங்கள் நடந்து வருகின்றன, ரிஷி சுனாக் அரசாங்கம் ஒரு பாரிய சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக தயாராகி வருகிறது.

திங்களன்று, உக்ரேனுக்கான ஐரிஷ் தூதர் தெரேஸ் ஹீலி, அயர்லாந்தில் அடைக்கலம் நாடும் உக்ரேனியர்கள் அரசாங்க வரவேற்பை எதிர்பார்க்க முடியாது என்று கூறினார். “அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்குமிடங்கள் இப்போது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் குறித்துக்காட்ட விரும்புகிறேன்,” என்று அவர் எச்சரித்தார். ‘எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளும் விருப்பங்களும் இருந்தாலும்’ நிலைமை அவ்வாறு உள்ளது என்று ஹீலி கூறினார்.

ஜேர்மனியில், கிழக்கு நகரமான கோட்புஸ் இல் உள்ள உள்ளூர் அதிகாரிகள் சமீபத்தில் Deutsche Welle செய்தி ஊடகத்திடம், அதிகபட்ச தேவையுள்ள மக்களுக்கு நீண்ட கால தங்குமிட வசதிகள், கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்பை வழங்குவது தொடர்பான தற்போதைய செலவுகள் எதற்கும் மத்திய அரசு நிதியளிக்கத் தவறிவிட்டது என்று கூறினார். அங்கு போதிய மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. சுகாதார பாதுகாப்பு வசதிகள் திறனைத் தாண்டிவிட்டன.

நியூ யோர்க் டைம்ஸின் கூற்றுப்படி, ஜேர்மனியில் மற்ற இடங்களில், விளையாட்டு அரங்கங்கள் தான் இன்னும் வீட்டு மையங்களாக பயன்படுத்தப்படுகின்றன. அங்கு இன்னும் மற்ற சில தீர்வுகளும் சொற்ப நிதியும் கிடைக்கக்கூடியதாகவுள்ளது. “கொரோனா நோய்தொற்று முடிவடையவில்லை. எங்களுக்கு எரிசக்தி நெருக்கடி உள்ளது. எங்கள் மக்கள் பொருளாதார சிக்கல்களால் திணறடிக்கப்படுகிறார்கள்,” என்று கான்ஸ்டான்ஸின் மாவட்ட நிர்வாகி ஜெனோ டேனர் செய்தியிதழுக்கு தெரிவித்தார், பத்திரிகை இந்த நெருக்கடி ‘எரிச்சல் உண்டாக்கும்’ கேள்விகளை முன்வைப்பதாக விவரித்தது.

நியூசிலாந்தில், உக்ரேனிய அகதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அகதிகளுடன் பணிபுரியும் தொண்டு நிறுவனங்கள், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கே திரும்பிச் செல்வதற்கு பலர் பரிசீலித்து வருவதாகவும், திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளன. எல்லா இடங்களிலும் பரவலாக புகாரளிக்கப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் பார்த்தால், அகதிகள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அத்துடன் மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆங்கில மொழி வகுப்புகளைக் கண்டறியவும் போராடுகிறார்கள். நியூசிலாந்து அரசாங்கம் உக்ரேனியர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த வெறும் 4,000 வதிவிட அனுமதிகளில் (visas) 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, மேலும் 400 பேர் மட்டுமே கரையின் அந்தப் பக்கம் வந்துள்ளனர்.

அமெரிக்கா தனது பங்கிற்கு, உக்ரேனிய அகதிகளுக்கான சிறப்பு வதிவிட அனுமதிகளை 100,000 அளவிற்கு மட்டுப்படுத்தியுள்ளது. தஞ்சம் புகும் தனிநபர்கள் அமெரிக்காவில் ஏற்கனவே வசிக்கும் ஒரு குடும்ப உறுப்பினரைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அவர் அவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருக்கிறார் என்பதும், அரசிற்கு எந்த நிதிச் சுமையையும் அவர்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும்.

Loading