COP27 காலநிலை உச்சிமாநாடு உக்ரேனில் போரால் மறைக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் ஐ.நா. காலநிலை உச்சிமாநாடு COP27 இன் ஆரம்பம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரினால் மறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு, அமெரிக்காவும் ஐரோப்பாவும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. போர் தொடங்கியதில் இருந்து, பைடென் நிர்வாகம் பல்லாயிரக்கணக்கான கன அடி இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. இது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பது, அவரது அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் உரிமைகோரல்களை பாசாங்குத்தனமாக அம்பலப்படுத்துகிறது.

பல தசாப்தங்களாக அறியப்படுவதும், காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு கடைசியாக கூறியதும் போல, புவி வெப்பமடைவதை நிறுத்தவும், மாற்றியமைக்கவும் வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. உலகெங்கிலும், குறிப்பாக ஏழ்மையான பிராந்தியங்களில், கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கட்டுப்பாடற்ற முறையில் வளிமண்டலத்தில் வெளியிடப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் இறக்கின்றனர், மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்கின்றனர், அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள பெருநிறுவனங்களும் தேசங்களும் உலக மேலாதிக்கத்திற்காக ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன.

நவம்பர் 7, 2022, திங்களன்று, எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் COP27 ஐக்கிய நாடுகள் காலநிலை உச்சிமாநாட்டின் போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பேசுகிறார் [AP Photo/Nariman El-Mofty]

பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பெரு வெள்ளம், காலநிலை நெருக்கடியின் விளைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இமயமலையில் பனிப்பாறை உருகியதால் மற்றும் வழக்கத்திற்கு மாறான கனமழையால் உருவான வெள்ளப் பெருக்குகளால் குறைந்தது 1,700 பேர் இறந்தனர், 12,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், மற்றும் குறைந்தது 33,000,000 (33 மில்லியன்) பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போதைய வெப்பமயமாதல் போக்கு தொடர்ந்தால், இத்தகைய பேரழிவுகள் பெருகிய முறையில் வழமையானதாக மாறும் என்று காலநிலை மாதிரிகள் முன்கணித்துள்ளன. மேலும், வெள்ளம், சூறாவளி, காட்டுத்தீ, துருவச் சூழல்கள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் கூட கொடிய காலநிலை தொடர்பான பேரழிவுகளின் முன்னோடிகளாக அறியப்படுகின்றன.

இருப்பினும், இந்த பிரச்சினைகள் எதுவும் COP27 மாநாட்டில் தீவிரமாக கவனிக்கப்படவில்லை. வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியுதவியை அதிகரிக்கும் வகையில் சட்டத் தொகுப்பான ‘காலநிலை நீதிக்கு,’ அழைப்பு விடுத்து, அரசு தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்களால் பல உரைகள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரேஸ், உலகம் ‘நமது கால்களால் முடுக்கிவிடப்பட்ட காலநிலை நரகத்திற்கான நெடுஞ்சாலையில்’ உள்ளது என்று எச்சரித்தார்.

ஆனால், அனைத்து முந்தைய காலநிலை உச்சிமாநாடுகளைப் போலவே, கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாடு முதல் 2015 பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் 1997 கியோட்டோ நெறிமுறை வரை, பல்வேறு பேச்சுக்கள் மற்றும் ஒப்பந்தங்கள் எதுவும், முதலாளித்துவம் மற்றும் தனியார் இலாபத்திற்கான உந்துதல் போன்ற காலநிலை நெருக்கடிக்கான அடிப்படைக் காரணத்தை கணக்கில் கொள்ளவில்லை.

உக்ரேனில் நடந்து வரும் போர் இந்த செயல்முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது படையெடுப்பதற்கு தூண்டப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர், LNG Allies எனப்படும் அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பரப்புரை குழு பைடென் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியது, அதில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 'நடைமுறையில் அட்லாண்டிக் கடந்த எரிவாயு குழாய்களை' நிறுவ புதிய உள்கட்டமைப்புக்கு குறைந்தபட்சம் 300 மில்லியன் டாலர்களைக் கோரியது.

ஐரோப்பாவில் ‘எரிசக்தி பாதுகாப்பின்மையை’ தடுக்க உதவுவது என்ற போர்வையில், LNG ஐ மேலும் ஏற்றுமதி செய்வதற்கான விண்ணப்பங்களை ‘உடனடியாக அங்கீகரிக்க’ செய்ய எரிசக்தி துறைக்கு கடிதம் அழைப்பு விடுத்துள்ளது. நிர்வாகம் வேகமாக நகர்ந்து, மார்ச் மாதத்தில் இரண்டு விண்ணப்பங்களையும், ஏப்ரல் மாதத்தில் மேலும் இரண்டு விண்ணப்பங்களையும் அனுமதித்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரிக்கும் என்று அது எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது.

‘ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களை [ஐரோப்பிய ஒன்றியம்] சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர’, 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா கூடுதலாக 15 பில்லியன் கன மீட்டர் LNG ஐ வழங்கும் என்று பைடெனுக்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனுக்கும் இடையேயான அறிவிப்புக்கு ஒருங்கே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. அணு விஞ்ஞானிகளின் கால அறிவிப்பு வெளியீட்டின் (Bulletin of Atomic Scientists) ஒரு கட்டுரையின்படி, தற்போதைய புதைபடிவ எரிபொருள் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பூர்த்தியாகும்போது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவில் பாதி ஏற்றுமதி செய்யப்படும்.

இது எரிவாயு நிறுவனங்களுக்கு நிதி குவிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸின் ஹூஸ்டனைத் தளமாகக் கொண்ட Cheniere இயற்கை எரிவாயு நிறுவனம், இந்த ஆண்டு அதன் இலாபத்தை இதுவரை 3.8 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் மெக்சிகோவில் உள்ள கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்களுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் Sempra எரிவாயு நிறுவனம், போர் தொடங்கிய சில வாரங்களில் அதன் பங்கு மதிப்பு 25 சதவீதத்திற்கு அதிகமாக உயர்வதைக் கண்டது.

கிரீன்ஹவுஸ் வாயுக்களை இராணுவப் படைகளும் அபரிமிதமாக வெளியிடுகின்றன. 2019 ஆம் ஆண்டில் போஸ்டன் பல்கலைக்கழகம் பிரசுரித்ததான, போர் செலவுகள் திட்டத்தின் இணை இயக்குநர் நேட்டா க்ராஃபோர்ட் எழுதிய ‘பென்டகனின் எரிபொருள் பயன்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் போரின் செலவுகள்’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை, சுவீடன் மற்றும் டென்மார்க் உட்பட ஒட்டுமொத்த நாடுகளையும் விட பெருமளவு கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய மாசுபடுத்துபவர்களாக அமெரிக்க இராணுவம் உள்ளதை கண்டறிந்தது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த போர்கள் குறைந்தபட்சம் 400 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியேற்றியுள்ளன, இது 2001 முதல் பென்டகனால் வெளியேற்றப்பட்ட மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

ஆனால் COP27 இல் இந்த உண்மைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யாவின் 'வேண்டுமென்றே எடுத்த நடவடிக்கைகள் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிவிட்டதால், டஜன் கணக்கான நாடுகள் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது' என்று கூறி ரஷ்யாவிற்கு எதிராக ஒரு துவேஷத்தை முன்வைத்தார். அவர் ரஷ்யாவை மீண்டும் குறிப்பிட்டு, “இன்னும் பலரைப் பொறுத்தவரை காலநிலை மாற்றம் என்பது வெறும் சொல்லாட்சி அல்லது சந்தைப்படுத்துதல் மட்டுமே, அது உண்மையான செயல் அல்ல” என்று தொடர்ந்து கூறினார்.

உண்மையில், ரஷ்யா முதல், உக்ரேன், அமெரிக்கா வரை எந்த அரசாங்கமும் காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண ‘உண்மையான நடவடிக்கை’ திட்டம் எதையும் இதுவரை வகுக்கவில்லை. புவி வெப்பமடைதலை மாற்றியமைக்க ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, இந்த எண்ணிக்கை ஒருபோதும் எட்டப்படவில்லை. ஆயினும்கூட, ரஷ்யாவிற்கு எதிராக போரிடத் தேவையான அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து உக்ரேனிய இராணுவம் வாங்குவதற்கு பல பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும், 2008 இல் இருந்து அமெரிக்க வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் பிணையெடுப்பதற்குப் பாய்ச்சப்பட்ட டிரில்லியன்களைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை.

போர் மற்றும் பிணையெடுப்புகளுக்காக செலவிடப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் தொகைகள், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பைடெனின் கீழ் பணியாற்றும் காலநிலைக்கான தற்போதைய சிறப்பு ஜனாதிபதித் தூதருமான ஜோன் கெர்ரி, “உலகில் எந்த அரசாங்கத்திடமும் மாற்றத்திற்கு தீர்வு காணும் அளவுக்குப் பணம் இல்லை” என்று செவ்வாயன்று கூறுவதைத் தடுக்கவில்லை. மேலும் அவர், “இதற்கு உதவக்கூடிய அமைப்பு எதுவென்றால் சரியான கட்டமைப்பைக் கொண்ட தனியார்துறை தான்” என்று தொடர்ந்து கூறினார்.

கெர்ரி, இரண்டு வாக்கியங்களில், முழு முதலாளித்துவ சமூக ஒழுங்கின் நோக்குநிலையை வெளிப்படுத்துகிறார். காலநிலை மாற்றம், சமூக சமத்துவமின்மை, கோவிட்-19 தொற்றுநோய் போன்ற பரந்த அழுத்தம் கொடுக்கும் இன்றைய சமூக பிரச்சினைகளை சமாளிக்க பணம் இல்லை, ஆனால் போர்களுக்கும் நிதிய தன்னலக் குழுக்களை வளப்படுத்துவதற்கும் இடையறாது தொகைகள் பாய்ச்சப்படுகின்றன. மேலும் இந்தப் பிரச்சினைகளை வெளித்தோற்றமாகத் தீர்ப்பதற்கான எந்த முயற்சிகளும் தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படிந்ததாக வேண்டும்.

Loading