சீனாவுடன் பொருளாதாரப் போரை "மேற்பார்வையிடுவதாக" பைடென் உறுதியளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவியேற்றதற்கு பின்னர் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்திருந்தார். அதன்போது அவர் 'போட்டி' என்று அழைத்த அமெரிக்க-சீனா வர்த்தகப் போரை 'மேற்பார்வையிடுவதாக' உறுதியளித்தார்.

இந்தக் கலந்துரையாடல் பற்றிய வெள்ளை மாளிகையின் சுருக்கமான உத்தியோகபூர்வ வார்த்தைகளில், பைடென், 'இந்தப் போட்டி மோதலாக அதிகரிக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார். மேலும் அமெரிக்காவும் சீனாவும் போட்டியை பொறுப்புடன் நிர்வகித்து, திறந்த தொடர்பு வழிகளை பராமரிக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.'

அந்த சுருக்கமான ஆவணம் தொடர்ந்து, 'இதில், உள்நாட்டில் சொந்தப்பலத்தில் முதலீடு செய்வதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடன் கூட்டுமுயற்சிகள் மூலமும், அமெரிக்கா [சீனாவுடன்] தொடர்ந்து தீவிரமாக போட்டியிடும் என ஜனாதிபதி பைடென் விளக்கினார்' எனக் குறிப்பிட்டது.

ஜி உடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய பைடென், “நாங்கள் மிகத் தீவிரமாக போட்டியிடப் போகிறோம். ஆனால் நான் மோதலைத் தேடவில்லை. இந்தப் போட்டியை நான் பொறுப்புடன் சமாளிக்கவுள்ளேன்” என்றார்.

பதட்டங்களை 'மேற்பார்வையிடுதல்' மற்றும் பகிரங்க தொடர்பாடல் வழிகளை வைத்திருப்பது தொடர்பான பைடெனின் வலியுறுத்தல் வாஷிங்டனின் தந்திரோபாய மாற்றத்தையும் பெய்ஜிங்குடனான கூர்மையான பதட்டங்களை தற்காலிகமாக விலக்குவதையும் குறிக்கலாம்.

கடந்த பல மாதங்களாக, பைடென் நிர்வாகம் பெய்ஜிங்கின் மீதான அழுத்தத்தை இடைவிடாமல் அதிகரித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, பெய்ஜிங்கின் இறையாண்மை உரிமைகோரல்களுக்கு எதிராக வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில் தைவானுக்கு விஜயம் செய்தார். சீனாவின் பிரதான நிலப்பகுதியினால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா துருப்புக்களை ஈடுபடுத்தும் என்று பைடென் அறிவித்தார்.

வாஷிங்டன் சீனாவுடன் அதிநவீன மைக்ரோசிப்களில் வர்த்தகம் செய்வதைத் தடை செய்தது. இது சீனாவின் முக்கிய நலன்களைக் குறிவைக்கும் பொருளாதாரப் போரின் ஒரு நடவடிக்கையாகும். வாஷிங்டன் தலைமையிலான மற்ற ஒவ்வொரு நாடுகளும் தொற்றுநோயை கையாள்வதற்கான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் கைவிடப்பட்ட ஒரு உலகில் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் அதன் போர் பயிற்சிகள் மற்றும் இராணுவ நிலைநிறுத்தங்களுடன், சீனாவின் சொந்த நலன்களுக்கு இன்றியமையாத கொரிய தீபகற்பத்தை, ஆயுத மோதலை மீண்டும் தொடங்குவதற்கான விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. பைடென் பலமுறை சீனாவை 'இனப்படுகொலைக்காக' மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன் போர், யூரேசிய நிலப்பரப்பை ஆழமாக ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கி, பிராந்தியம் முழுவதும் சீனாவின் வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகளை சிதைத்துள்ளது. மேலும் இவை அனைத்தும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நிகழ்ந்துள்ளன.

G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பைடெனுக்கும் ஜிக்கும் இடையிலான சந்திப்பு, இந்த ஆண்டு இடைவிடாத மோதலைத் தூண்டும் வாய்வீச்சு மற்றும் இராணுவ ஆத்திரமூட்டலில் இருந்து வாஷிங்டன் பின்வாங்குவதைக் கண்டது. ஜி உடனான மூன்றரை மணி நேர சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த கருத்துக்களில், ஜி 'நேரடியானவர் மற்றும் நியாயமானவர்' மற்றும் 'சமரசம் செய்யத் தயாராக உள்ளவர்' என்று பைடென் வகைப்படுத்தினார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் 'புதிய பனிப்போர்' இருக்காது என்று பைடென் அறிவித்தார். மேலும் தைவானை ஆக்கிரமிக்க சீனாவுக்கு உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என்று தான் நம்புவதாகவும் கூறினார். இது பைடென் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் பென்டகன் ஆகியவற்றால் வெளியிட்ட பல முந்தைய போர்வெறி அறிக்கைகளின் தலைகீழ் மாற்றமாகும்.

'புதிய பனிப்போர்' என்ற வார்த்தை, 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தின் 'உயர்மட்டங்களை சீனா கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார 'துண்டிப்புக்கான' வாய்ப்பை எழுப்பிய துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் 2018 உரையை விவரிக்க பயன்படுத்தப்பட்டது.' பைடென் அத்தகைய 'புதிய பனிப்போரை' நாடுகிறார் என்பதை மறுக்கும் அதே வேளையில், அவர் உண்மையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்னோடியாக இருந்த சீனாவுடன் 'மூலோபாய போட்டி' என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.

“இரு தரப்பிலும்” பிரதான நிலப்பரப்பு சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகளின் “நிலையில் ஒருதலைப்பட்ச மாற்றத்தை வாஷிங்டன் எதிர்க்கும்' என்று பைடென் கூறினார். ஒரு வளர்ந்து வரும் தைவானிய பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி பேசியது இதுவே முதல் முறையாகும். இப்போது வரை அவர் அதற்கு வெளிப்படையாக ஊக்கம் அளித்து வந்தார்.

'போட்டியை' 'நிர்வகிப்பதற்கான' வழிமுறையாக, வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் சீனாவுக்குச் சென்று தனது சமதரப்பை சந்திப்பார் என்றும், மேலும் பல்வேறு அமெரிக்க, சீன அணிகள் கூடி கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான கூட்டங்களுக்கான வழிமுறைகளை அமைக்கும் என்றும் பைடென் அறிவித்தார்.

'இருதரப்பு உறவுகளை ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியின் பாதையில் மீண்டும் கொண்டு செல்ல அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்' என்று ஜி பதிலளித்ததாக குளோபல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

சீனாவுடனான போருக்கு தவிர்க்க முடியாத வகையில் வழிவகுக்கும் ஒரு மூலோபாய போக்கிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க மேலாதிக்கத்தை நேரடியாக அச்சுறுத்துகிறது. வாஷிங்டன் அதன் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்க, வர்த்தக போர் நடவடிக்கைகளையும் வெளிப்படையான இராணுவ மோதல்களையும் பயன்படுத்தும்.

பாலியில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்பட்ட மாற்றம், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் வாஷிங்டனின் முயற்சியாக இருக்கலாம். ரஷ்யாவை, ஏகாதிபத்தியத்தால் உடைப்பதே உக்ரேன் போரில் இருந்து வெளிவரும் முடிவாக இருக்கவேண்டும் என்று அதன் முனைப்பு இருக்கிறது. பெய்ஜிங்கிற்கு எதிரான வெளிப்படையான போருக்கான அதன் உந்துதலின் வேகத்தை தந்திரோபாயரீதியாக குறைப்பது, சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட அதன் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை 'போட்டியாக' காட்டி நிறுவனமயமாக்கல் மற்றும் இயல்பாக்குதலுடன் இணைந்துள்ளது.

இந்த வர்த்தகப் போர்க் கொள்கைகள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் தொடங்கப்பட்டன. மேலும் அவை ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார 'துண்டிப்பு' மற்றும் பூகோளமயமாக்கலை இல்லாதொழிக்கும் கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பைனான்சியல் டைம்ஸின் தலையங்கம் சீனாவுடனான அதன் 'போட்டியை' 'மேற்பார்வையிடுவதற்கான' பைடெனின் முயற்சிகளின் அர்த்தத்தை விளக்கியது:

உலகின் முன்னணி இராணுவ மற்றும் பொருளாதார சக்தியாக இருக்கும் அதை விஞ்சும் பெய்ஜிங்கின் அபிலாஷைகளை கட்டுப்படுத்துவதற்கான வாஷிங்டனின் உறுதிப்பாடானது, சீனாவிலிருந்து மேலும் துண்டிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்பதாகும். ஆனால் வாஷிங்டன் அதே நேரத்தில் பெய்ஜிங்குடனான உறவுகளை எச்சரிக்கையுடன் நிர்வகிக்க வேண்டும். இது மூன்று கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும்: அந்த துண்டித்தல் உலகப் பொருளாதாரத்தை செயலிழக்கச் செய்யக்கூடாது; அந்த போர் தவிர்க்கப்பட வேண்டும்; மேலும் பல உலகளாவிய பிரச்சினைகளில் சீனாவின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது.

செய்தித்தாள் தொடர்ந்தது:

மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை பெய்ஜிங் கையகப்படுத்துவதை மெதுவாக்குவதற்கான வாஷிங்டனின் உந்துதல், பரஸ்பர அக்கறை உள்ள துறைகளில் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட வேண்டும். இவை சுற்றுச்சூழல் மாற்றம் மட்டுமல்லாமல், அணுசக்தி பெருக்கம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கும் நீண்டுள்ளன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளின் செழிப்பானது 'அனைத்து படகுகளையும் உயர்த்தும்' என்ற சுதந்திர வர்த்தகத்திற்கானதும் பூகோளமயமாக்கலுக்குமான பொருளாதார கோட்பாடுகள் அரசியல் ஸ்தாபகத்தால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பலத்தைப் பயன்படுத்தாமல் இராணுவ மேலாதிக்கத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட வணிகரீதியான வர்த்தகப் போர், அல்லது திறந்த இராணுவ மோதல் என்ற இரண்டு மாற்று வழிகள் மூலம் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள கோடு முற்றிலும் நிலையற்றது. அவர் வெறும் வர்த்தகப் போரைத் தேடுகிறாரே தவிர இராணுவ மோதலை அல்ல என்ற பைடெனின் அனைத்து அறிவிப்புகளும், அவரது அறிக்கைகள் அவரது சொந்த கொள்கை ஆவணங்களுடனேயே வெளிப்படையாக முரண்படுகின்றன. அதன் தந்திரோபாயங்கள் மாறக்கூடும் என்றாலும், வாஷிங்டனின் வெளிப்படையாகக் கூறப்பட்ட மூலோபாயம் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்பு ஆகும்.

பைடென் மற்றும் ஜி சந்திப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், பைடென் புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு ஒரு அறிமுகத்தை எழுதினார். அதில் அவர் 'அமெரிக்காவின் முக்கிய நலன்களை முன்னேற்றுவதற்காக இந்த தீர்க்கமான தசாப்தத்தை கைப்பற்றும்' மற்றும் 'நமது புவிசார் அரசியல் போட்டியாளர்களை விஞ்சக்கூடிய நிலையில் அமெரிக்காவை இருத்தும்” என்று அறிவித்தார்.

பைடென் அறிவித்தார், 'சர்வதேச ஒழுங்கின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு மூலோபாய போட்டியின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.'

அவர் மேலும் கூறுகையில், “நமது உலகின் எதிர்காலத்திற்கான போட்டியில், இந்த சவாலின் நோக்கம் மற்றும் தீவிரத்தன்மை குறித்து எனது நிர்வாகம் புத்திசாலித்தனமான புரிதலைக் கொண்டுள்ளது. நமது நாடுகளுக்கிடையேயான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கு அமெரிக்கா உறுதியுடன் இருந்தாலும் கூட, உலகளாவிய விளையாட்டு மைதானத்தை அதன் நலனுக்காக சாய்க்கும் வகையில் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் நோக்கத்தையும், பெருகிய முறையில் அதற்கான திறனையும் சீன மக்கள் குடியரசு கொண்டுள்ளது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனாவுடனான அதன் பொருளாதாரப் போரை 'மேற்பார்வையிடுதல்' பற்றிய பைடெனின் அறிவிப்புகள், 'தீர்மானமான தசாப்தம்' என்று அவர் அழைத்த சீனாவுடனான இராணுவ மோதலுக்கான அவரது நிர்வாகத்தின் திட்டங்களுடன் அடிப்படையில் ஒத்துப்போகின்றன.

அமெரிக்காவுடனான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் பாரிய நோய்தொற்று கோவிட்-19 கொள்கைகளை பின்பற்றுவதற்கான நகர்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

ஒரு தலையங்கத்தில்,எகனாமிஸ்ட் சீன 'அதிகாரிகள் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைகளை திருத்திக்கொள்ளும் 20 நடவடிக்கைகளை வெளியிட்டனர். அவற்றை கொஞ்சம் குறைவான கடுமையான மற்றும் நிர்வகிப்பதற்கு செலவுகூடியதாக மாற்றினர்.' இது இந்த நகர்வுகளை 'கோவிட் பரவத் தொடங்கியதிலிருந்து நாட்டின் தொற்றுநோய் நிலைப்பாட்டின் மிகப்பெரிய தளர்வு' என்று அழைத்தது. அதே சமயம் நிலம்-சொத்து ஊக வணிகங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கைவிடுவதையும் பாராட்டியது.

உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா, அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்கும் நிகழ்ச்சிப்போக்கில் பல்லாயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு ஈடாக சீன அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கான திறமையும் புத்திசாலித்தனமும் உள்ளது என்பதில் எந்த சந்தேகம் இருக்க முடியாது. இதேவேளையில் சீனாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அடிபணியச் செய்வதற்கான அதன் நீண்டகால திட்டங்கள் தொடர்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான பினாமி போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள சீனாவின் அமைதியான நகர்வுகளும் இருப்பதாகத் தோன்றுகிறது.

ராய்ட்டர்ஸ் பின்வருமாறு எழுதியது, 'கம்போடியாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது சீனப் பிரதமர் லீ கெகியாங் அணுசக்தி அச்சுறுத்தல்களின் 'பொறுப்பற்ற தன்மையை' வலியுறுத்தினார். பெய்ஜிங் அதன் மூலோபாய பங்காளியான ரஷ்யாவின் அணுசக்தி வாய்வீச்சால் அசௌகரியமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று கூறினார்.'

இந்த அறிக்கைகளைப் பாராட்டிய அமெரிக்க பினாமியும் உக்ரேனிய ஜனாதிபதியுமான வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்தார், 'குறிப்பாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக எடுத்துரைப்பது முக்கியம். இந்த வார்த்தைகள் யாரைக் குறிக்கின்றன என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்.”

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் பாரிய சமூக மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. 'துண்டித்தல்' மற்றும் 'பூகோளமயமாக்கலை இல்லாதொழிப்பது' பற்றிய பேச்சுக்கள் இருந்தபோதிலும், பணவீக்க எழுச்சி மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை உலகின் ஒவ்வொரு நாட்டையும் அச்சுறுத்துகின்றன. அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மீள்எழுச்சி, ஒரு அச்சுறுத்தலான இரயில் வேலைநிறுத்தத்தால் எடுத்துக்காட்டப்பட்டது. இது வெள்ளை மாளிகையின் திட்டங்களில் பெரிதும் ஆதிக்கம்செலுத்தும்.

இந்த நிலைமைகளின் கீழ், அதிகரித்து வரும் விலைகளை தற்காலிகமாக ஸ்திரப்படுத்தி, பொருளாதார சரிவைத் தடுக்கவும் சீனா அல்லது ரஷ்யாவிடம் இருந்தும் கூட சலுகைகளை ஏற்றுக்கொள்வது உட்பட அமெரிக்கா தந்திரோபாய மறுசீரமைப்புகளை செய்ய முயலக்கூடும்.

எவ்வாறாயினும், ஒட்டுமொத்த அமெரிக்க கொள்கையானது, கடந்த மாத தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் வெளிப்படுத்தப்பட்ட இராணுவவாத மற்றும் போரைத் தூண்டும் மூலோபாயமாகவே உள்ளது, வர்த்தகப் போர், இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ செலவினங்களின் பாரிய அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் '21 ஆம் நூற்றாண்டுக்கான போட்டியை வெல்வோம்' என இது உறுதியளிக்கிறது.

Loading