சீன கம்யூனிஸ்ட் கட்சி பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கத் தொடங்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), பூஜ்ஜிய கோவிட் கொள்கை என்று அறியப்படும் அதன் நீண்டகால ‘சக்திவாய்ந்த பூஜ்ஜிய’ கொள்கையிலிருந்து தெளிவாக மாறத் தொடங்கியுள்ளது, இது SARS-CoV-2 இன் பாரிய பரவலை இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக தடுத்துள்ளது.

Our World in Data இணைய தள தரவின்படி, கடந்த மூன்று வாரங்களில், தினசரி புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி பத்து மடங்கு உயர்ந்துள்ளது, அதாவது, CCP இன் 20வது காங்கிரஸின் முடிவில், அக்டோபர் 23 அன்று தினசரி புதிய நோய்தொற்றுக்களின் சராசரி 950 ஆக இருந்தது, நவம்பர் 14 அன்று கிட்டத்தட்ட 11,000 ஆக உயர்ந்துள்ளது. இதைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால், ஓமிக்ரோன் BA.2 துணைமாறுபாட்டின் வசந்தகால எழுச்சியின் போது, ஏப்ரல் 14 அன்று ஏழு நாள் சராசரி 26,469 ஆக உயர்ந்திருந்தது, இது வரும் நாட்களிலும் எட்டப்படக்கூடும்.

[Photo by Our World In Data / CC BY 4.0]

தற்போதைய நோய்தொற்று எழுச்சிக்கு சீன அதிகாரிகள் எடுக்கும் பதில் நடவடிக்கைகள், முந்தைய எழுச்சிகளின் போது நோய்தொற்றுக்களைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்த பாரிய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளன, மிக சமீபத்தில் ஷாங்காய் நகரில் ஓமிக்ரோன் BA.2 துணைமாறுபாட்டை அகற்றுவதற்கு அத்தகைய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடுமையாக பாதிக்கப்பட்ட குவாங்சோவில் நவம்பர் 5 முதல் பூட்டுதல் நடைமுறையில் உள்ளது, ஆயினும், பெருகிவரும் நோய்தொற்று வெடிப்புகளை எதிர்கொள்ளும் பல நகரங்கள் வைரஸ் பரவுவதை தடுக்க நிரூபிக்கப்பட்டதான இந்த பயனுள்ள நடவடிக்கையை செயல்படுத்த மறுத்துவிட்டன.

கடந்த வியாழன் அன்று, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது புதிய பொலிட்பீரோ நிலைக்குழுவை கோவிட்-19 குறித்த கூட்டத்தில் வழிநடத்தினார். இதைத் தொடர்ந்து சீன தேசிய சுகாதார ஆணையம் (NHC) 20 நடவடிக்கைகளை அறிவித்தது, இது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் பல்வேறு அம்சங்களைக் குறைக்கிறது, அல்லது வைரஸின் எழுச்சிக்கான தயாரிப்புகளைக் குறிக்கிறது.

20 நடவடிக்கைகளில், உள்வரும் பயணிகளுக்கான மற்றும் சீனாவின் பிரதான பகுதியில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் நேரத்தைக் குறைத்தல், சீனாவிற்கான மற்றும் சீனாவிற்குள்ளான பயண கட்டுப்பாடுகளை தளர்த்துதல், இரண்டாம் நிலை தொடர்புகளை கண்காணித்துக் கண்டறிவதை முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் பிற தணிப்பு நடவடிக்கைகளையும் குறைத்தல் ஆகியவை அடங்கும். வயோதிபருக்கான தடுப்பூசி திட்டங்களை விரைவுபடுத்துதல், சுகாதார பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் வரவிருக்கும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் எழுச்சியை எதிர்கொள்ள எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல சீன நகரங்கள் வழமையான சமூக பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டுவர தொடங்கியுள்ளன, முதன்மையாக மத்திய அரசாங்க நிதி ஒதுக்கீடு இனி இருக்காது என்ற நிலையில் பெருகிவரும் நிதிச் சுமை தான் அதற்கு காரணம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. பல இடங்களில், குடியிருப்பாளர்கள் பரிசோதனைக்கு ஒரு சிறிய கட்டணத்தை இப்போது செலுத்த வேண்டியுள்ளது.

20 நடவடிக்கைகளின் அறிவிப்பு செவ்வாயன்று ஜி20 உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, அப்போது ஜி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை சந்தித்தார். 2020 ஆம் ஆண்டு முதல், விநியோக சங்கிலிகளின் இயக்கத்தையும் மற்றும் உலகளாவிய நிதி மூலதனத்திற்கு இலாபம் பெருகுவதையும் எளிதாக்கும் வகையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்க வைக்க அமெரிக்கா சீனாவின் மீது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை செலுத்தி வந்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் செய்தியால் சீனா மற்றும் ஹாங்காங் பங்கு குறியீடுகள் உயர்ந்தன. ட்ரிவியம் ஆலோசனை நிறுவனத்தின் சீன ஆய்வாளர் டெய்லர் லோப், “இது ஒரு முக்கியமான சொல்லாட்சி மாற்றம் என்பதில் சந்தேகமில்லை, மேலும் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அடித்தளம் அமைக்கப்படலாம், ஆனால் சந்தை வழமை போல் செயல்படும் என்பது, பூஜ்ஜிய-கோவிட் கொள்கை முடிவை நெருங்குவது போன்று தான் உள்ளது. அது தான் தவறு. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடைமுறையில் இருந்த ஒரு உயர்மட்ட தேசிய கொள்கையை ஒரே இரவில் நீங்கள் நீக்கிவிட முடியாது” என்று நியூ யோர்க்டைம்ஸூக்கு தெரிவித்தார்.

இந்த மீளுறுதிகள் ஒருபுறமிருந்தாலும், நாடு முழுவதுமான கோவிட்-19 இன் பெரும் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, CCP ஆட்சி வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் கடுமையான அணுகுமுறையைக் குறைத்துள்ளது என்பது தெளிவாகிறது. அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்துக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இந்த நடவடிக்கைக்கு எந்த விஞ்ஞானபூர்வ நியாயமும் இல்லை.

வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்கள் உள்ள பகுதிகளில் நிலைமை விரைவாக கட்டுப்பாட்டை மீறக்கூடும். ஷாங்காயில், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களில் 71 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இது சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தின் முக்கியமான நெருக்கடியைக் குறிக்கிறது.

மே மாதத்தில், Nature இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, ஓமிக்ரோன் சீனாவில் சுதந்திரமாக பரவ அனுமதிக்கப்பட்டிருந்தால், ஆறு மாதங்களில் 112 மில்லியன் அறிகுறியுள்ள நோயாளிகளையும், 5.1 மில்லியன் மருத்துவமனை அனுமதிப்புகளையும், 2.7 மில்லியன் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) அனுமதிப்புகளையும், 1.6 மில்லியன் இறப்புகளையும், அத்துடன் அதன் சுகாதார அமைப்பின் பேரழிவுகரமான சரிவையும் நாடு எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது. வைரஸ் பரவலின் திறன்மிக்க போக்கை முன்கணிப்பது கடினமாகும், அதிலும் சீனா முழுவதும் உள்ள அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகரங்களைக் கருத்தில் கொண்டு கணிப்பது கடினம், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதால் உருவாகும் உண்மையான உலக பேரழிவு என்பது இந்த ஆய்வின் முடிவுகளை விட மோசமாக இருக்கலாம்.

சீனத் தொழிலாள வர்க்கம் இந்த அவலத்தைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்பதுடன், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கடந்த மூன்று வருடங்கள், பொருளாதாரம் உட்பட சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக்கூடிய கோவிட்-19 இன் காரணமான பேரழிவை எடுத்துக் காட்டியுள்ளன.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா கிட்டத்தட்ட 100 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்களையும், 1.1 மில்லியனை நெருங்கும் கூட்டு இறப்பு எண்ணிக்கையையும் உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளது. மதிப்பீட்டின்படி, தற்போது 20 மில்லியன் அமெரிக்கர்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4 மில்லியன் பேர் இனிமேல் வேலை செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில், 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 நோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறந்துள்ளனர் என்று எக்னாமிஸ்ட் பத்திரிகையின் அதிகப்படி இறப்புக்களின் கண்காணிப்புப் பிரிவு கூறுகிறது.

மறுபுறம், சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 1.12 மில்லியன் அளவிற்கும், இறப்பு எண்ணிக்கையை 5,226 அளவிற்கும் மட்டுப்படுத்தியுள்ளது. கடுமையான பூட்டுதல்கள், பாரிய பரிசோதனை, தொடர்பு தடமறிதல், மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் ஷாங்காய் நகரில் வைரஸ் ஒழிக்கப்பட்டு சிறிது காலத்தில் மே 26 அன்று கடைசி கோவிட் இறப்பு நிகழ்ந்தது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் கொண்டு வரப்பட்ட சமீபத்திய மாற்றங்கள், அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் பதட்டங்கள் மற்றும் சீனா முழுவதும் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடக்கின்றன.

ஜி தனது தொடக்க உரையில், ‘சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசம்’ பற்றி மீண்டும் மீண்டும் வெற்று கருத்துக்களை வழங்கினார், இது ஸ்ராலினின் ‘தனியொரு நாட்டில் சோசலிசம்’ என்ற சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு தேசியவாத கருத்தாக்கமாகும், மற்றும் சீன முதலாளித்துவத்தின் உற்பத்தித் திறனால் அது உற்சாகப்படுத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்தியல் ரீதியாக உலகப் பொருளாதாரத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்வதை இலக்காக கொண்ட அளவுக்கு, இறுதிப் பகுப்பாய்வில் அதன் பொருளாதார அபிலாஷைகள் மீள முடியாமல் உலக முதலாளித்துவம் மற்றும் அதன் அடிப்படை முரண்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன.

அதேபோல், கோவிட்-19 தொற்றுநோய்க்கான பதில் நடவடிக்கைகளில் சீனாவின் வெற்றி என்பது சர்வதேச சூழ்நிலையால் வடிவமைக்கப்பட்டது. சீன குணாதிசயங்களைக் கொண்ட பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது இறுதியில் உலகளாவிய முதலாளித்துவம் அதன் மீது சுமத்திய சவால்களுக்கு கீழ்ப்படிந்துவிட்டது. பாரிய பூட்டுதல்கள், கடுமையான பரிசோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகள் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த முயற்சிகளின் மீதான ஏகாதிபத்திய நாடுகளின் தொடர்ச்சியான தாக்குதல்களானது வைரஸ் பொது மக்களிடையே பரந்தளவில் பரவுவதற்கு வழிவகுப்பதாகத் தெரிகிறது.

ஷெங்ஷோவு (Zhengzhou) இல் உள்ள Foxconn இன் ஐபோன் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் (உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை) கடந்த மாதம் கோவிட்-19 நோய்தொற்று வெடித்தது, அது சீன சுகாதார அதிகாரிகளுக்கு ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியது, மற்றும் சமீபத்திய கொள்கை மாற்ற விவகாரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு, 200,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பரந்த வளாகத்திற்குள் ‘மூடிய வளைய’ நிர்வாகத்தின் கீழ் பூட்டுதலில் வைக்கப்பட்டிருந்தனர், அதே நேரம் உச்ச பருவத்தில் ஐபோன் உற்பத்தி தடையின்றி நடந்தது என்ற நிலையில், அங்கு பயங்கரமான நிலைமைகள் உருவாகின. அக்டோபர் பிற்பகுதியில், வளாகத்தில் கோவிட்-19 தொடர்ந்து பரவியதால், 60,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிர் தப்பினால் போதும் என்று பாரியளவில் வெளியேறினர், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகங்கள் தளர்வுக் கட்டத்தை நெருங்கின, மற்றும் தங்குமிடங்கள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படாத காரணத்தால், தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பிரிவுகளுக்கு அருகில் உள்ள தொழிற்சாலை தளங்களில் தூங்க நேரிட்டது.

பைனான்சியல்டைம்ஸின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில், ஃபாக்ஸ்கான் ஆலை 32 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியது, சீனாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நிறுவனமாக அது இருந்தது. இப்போது ஷெங்ஷோவு நிறுவனம் அவர்களின் தொழிலாளர்கள் குறைந்தது ஒன்பது மாதங்களுக்கு பதிவு செய்தால், மாதாந்திரம் 70 டாலர் ஊக்க ஊதியம் வழங்கி அவர்களை திரும்பப் பெற முயற்சிக்கிறது, அத்துடன் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 60 டாலர் அளவிற்கு தினசரி ஊக்கத் தொகையை நான்கு மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த மாதத்தில் ஐபோன்களின் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என்று உள்நாட்டு வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த வாரத்தின் நிகழ்வுகளுக்கு முன்னதாக, உலகின் பல மிகப்பெரிய நிறுவனங்கள் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளைத் தவிர்ப்பதற்காக தங்கள் விநியோகத் தளங்களை சீனாவில் இருந்து மாற்றுவதற்கு நோக்கம் கொண்டிருந்தன. ஷாங்காய் பூட்டுதலின் போது, அந்த காலாண்டில் ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தின் விற்பனை 40 சதவீதம் சரிந்தது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், டெஸ்லா (Tesla) நிறுவனம் இடையூறுகள் காரணமாக, 17.9 சதவீத அளவிற்கு குறைவாக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வழங்கியது. இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஐபாட்கள் (iPads) மற்றும் மேக்களின் (Macs) விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 4 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாக NYT தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதியும் செயல்திறனும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரியளவில் தொழிலாளர் சக்தியையும் மிகப்பெரிய சந்தை வாய்ப்பையும் பயன்படுத்தி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அவர்களின் உற்பத்தித் தளங்களை அமைக்க முயற்சி செய்து வருகிறார்.

TF International Securities நிறுவனத்தின் ஒரு ஆய்வாளரான மிங்-சீ குவோ, ஷெங்ஷோவு சம்பவம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி திறன் விரிவடைவதற்கு துரிதப்படுத்தும் என்று கூறினார். நவம்பர் 4 அன்று தனது ட்வீட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார், “இதன் விளைவாக, இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்த ஐபோன்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 2023 இல் குறைந்தது 150 சதவீதம் உயர்ந்திருக்கும், மற்றும் தற்போதைய 2-4 சதவீதத்திற்கு எதிர்மாறாக இந்தியாவில் இருந்து 40-45 சதவீத அளவிற்கு ஐபோன்களை அனுப்புவதே நடுத்தர/நீண்டகால இலக்காகும், இதன் பொருள், அடுத்த சில ஆண்டுகளில் ஃபாக்ஸ்கானின் ஐபோன் உற்பத்தி திறன் இந்தியாவில் பெரிதும் அதிகரிக்கும் என்பதே.

கடந்த செப்டம்பரில் உலக வங்கி, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2021 இல் 8.1 சதவீதமாக இருந்தது 2022 இல் 2.8 சதவீதமாக கடுமையாக சரியும் என்று முன்கணித்ததை எதிர்கொள்கையில் இந்த முன்னேற்றங்கள் நடக்கின்றன. முதல் ஒன்பது மாதங்களில், நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில், அதே காலகட்டத்தில் பொது சுகாதார செலவுகள் கிட்டத்தட்ட 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

உலக வங்கி, “பரந்தளவிலான ஓமிக்ரோன் நோய்தொற்று வெடிப்புகளும் மற்றும் தீவிர வானிலையும் பொருளாதார வளர்ச்சியை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. உலக வளர்ச்சி குறையும், பணவீக்கம் அதிகரித்து வரும், மற்றும் நிதி நிலைமைகள் நெருக்கடிக்குள்ளாகும் நிலைமைகளுடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து வெளிப்புறச் சூழலும் கூட கணிசமாக மோசமடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கான சீனாவின் நகர்வுகளானது, அந்நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார சூழ்நிலை மற்றும் உலகளாவிய நிதி மூலதனத்தின் இடையறாத அழுத்தங்களுக்கு மத்தியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் பொறுப்பற்ற மற்றும் நடைமுறை சார்ந்த நடவடிக்கையாகும். இந்நிலையில், சீனத் தொழிலாள வர்க்கம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு, இந்த சூழ்ச்சியை எதிர்க்க வேண்டும் என்பதுடன், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை தக்கவைக்கவும், உலகளவில் அதை விரிவுபடுத்தவும் உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Loading