முன்னோக்கு

உக்ரேன் போலாந்தை தாக்குகிறது: வேண்டுமென்றே ஓர் ஆத்திரமூட்டல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு போலந்து விவசாயக் கிராமம் மீது தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர், உக்ரேன் தான் குறைந்தது ஒரு ஏவுகணையைப் போலந்துக்குள் வீசியது என்பது தெளிவாகி உள்ளது, அதில் இரண்டு போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலை கியேவ் தான் நடத்தியது என்பதை உக்ரேனின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் ஒப்புக் கொண்ட அதேவேளையில், உக்ரேனிய வான் பாதுகாப்பு தளவாடங்கள் தற்செயலாக தவறான திசையில் டஜன் கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒரு துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தி விட்டதாக, ஒரு சிறிய ஆதாரமோ அல்லது நம்பகத்தன்மையோ இல்லாமல், கூறியுள்ளனர்.

கிழக்கிலிருந்து வந்த ரஷ்ய ஏவுகணைகளை உக்ரேனிய விமானப்படை இடைமறிக்க முயன்றது என்றால், அதன் ஏவுகணைகள் ஏன் மேற்கு நோக்கி, போலந்தில் வீசப்பட்டன? மக்கள் நிறைந்த கிராமப் பகுதியில் மக்கள் வசிக்கும் ஒரு கட்டிடத்தை ஏன் அவர்கள் துல்லியமாக குறி வைத்தார்கள்? அந்தத் தாக்குதல் பற்றிய விவரங்களைப் போலந்து அதிகாரிகள் பகிரங்கமாக உறுதிப்படுத்துவதற்கு முன்னரே, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி ரெஸ்னிகோவ் மற்றும் பெயர் வெளியிடாத ஒரு 'மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி' ஏன் அந்தத் தாக்குதலுக்காக ரஷ்யா மீது பொய்யாக பழி சுமத்தினார்கள்?

அந்த ஏவுகணை ஒரு 'தற்காப்பு' ஆயுத அமைப்பில் இருந்து ஏவப்பட்டது என்ற கூற்றுகளை நம்புவதற்கில்லை, ஏனென்றால் S-300 ஏவுகணை அமைப்பு தரை இலக்குகளைத் தாக்கும் நன்கறியப்பட்ட திறனைக் கொண்டது.

யதார்த்தத்தில் அந்த ஏவுகணைத் தாக்குதல் உக்ரேனின் ஒரு கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டலாகும், அந்த மோதலில் நேரடியாக நேட்டோ தலையீட்டை விரைவுபடுத்தவும் மற்றும் ஒரு போர் நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் அந்தப் போருக்குத் தீர்வு காண்பதற்கான எந்த விவாதத்தையும் தடுக்கும் உத்தேசத்துடனும், அமெரிக்க அரசுக்குள் உள்ள கன்னைகளின் உதவியோடு கூட அனேகமாக அது நடத்தப்பட்டு இருக்கலாம்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்ற நாடுகளை முடுக்கி விட முனைந்து வருகின்ற நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 நாடுகள் ஒன்றுகூடி உள்ள வேளையில் போலந்து மீதான உக்ரேன் தாக்குதல் நடத்தப்பட்டது. போரில் அமெரிக்க தலையீட்டின் அளவையும் வேகத்தையும் குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்குள் மோதல்கள் இருப்பதாகவும், இந்த குளிர்காலத்திற்குள் அமெரிக்கா ஒரு போர்நிறுத்தத்தை அல்லது சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் கூடும் என்று இராணுவத் தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லியிடம் இருந்து அறிவுறுத்தல் வந்துள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்ற நிலையில் இது நடந்துள்ளது.

அந்தத் தாக்குதல் ரஷ்யாவில் இருந்து வந்தது என்று உக்ரேன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், முக்கியமாக, ஒட்டுமொத்த நேட்டோவும் மற்றும் தனிப்பட்ட நேட்டோ உறுப்பு நாடுகளும் போலந்தைத் தாக்கியது ரஷ்யா அல்ல, உக்ரேன் தான் தாக்கியது என்பதை இப்போது ஒப்புக் கொண்டுள்ளன.

ஒரு நேட்டோ நாட்டைச் சேர்ந்த இராஜாங்க அதிகாரி ஒருவர் கியேவில் பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், “இது பைத்தியகாரத்தனமாக ஆகி வருகிறது. உக்ரேனியர்கள் அவர்கள் மீதான [எங்கள்] நம்பிக்கையைக் கெடுத்து கொள்கிறார்கள். உக்ரேனை யாரும் பழி சொல்லவில்லை, அவர்கள் வெளிப்படையாக பொய் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது அந்த ஏவுகணைத் தாக்குதலை விட மிகவும் அழிவுகரமானது,” என்றார்.

புதன்கிழமை காலை நேட்டோ ஓர் அறிக்கை வெளியிட்டது, இந்த 'சம்பவம் ரஷ்ய கடற்படை ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிராக உக்ரேனிய பிரதேசத்தைப் பாதுகாக்க உக்ரேனிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புமுறையால் ஏவப்பட்டு இருக்கலாம்' என்று அறிவித்தது. “இது உக்ரேனின் தவறு இல்லை. உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா அதன் சட்டவிரோதப் போரைத் தொடர்வதால் இதற்கு ரஷ்யாவே இறுதிப் பொறுப்பாகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

நேட்டோவின் அறிக்கையையே எதிரொலித்த வெள்ளை மாளிகை தொடர்ந்து குறிப்பிடுகையில், “இறுதி முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த சோகமான சம்பவத்திற்கு இறுதியில் பொறுப்பாபவர் ரஷ்யா தான் என்பது தெளிவாகிறது, அது உக்ரேன் மீது குறிப்பாக பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறி வைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. உக்ரேனுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள எல்லா உரிமையும் இருந்தது—இருக்கிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

ஒரு நேட்டோ உறுப்பு நாடு மீது உக்ரேன் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுவதில், அமெரிக்கா தொடர்ச்சியான ஒட்டுமொத்த ஆத்திரமூட்டல்களிலும், அதாவது பாசிசவாத ரஷ்ய பிரமுகர் டாரியா டுகினாவைப் படுகொலை செய்ததில் இருந்து, நோர்ட் ஸ்டீர்ம் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் கெர்ச் பாலம் மீது குண்டுவீசியது வரை, அவற்றில் அமைத்த அதே வடிவத்தைப் பின்தொடர்கிறது. உக்ரேனியப் படைகள் மற்றும் அமெரிக்க அரசுக்குள் உள்ள கன்னைகளின் கூட்டு மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், இந்த உக்ரேன் போரில் அமெரிக்கத் தலையீட்டைத் தீவிரப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. அனைத்தும், தெளிவாக தெரிந்தாலும், இறுதியில் அமெரிக்கா மற்றும் அதன் ஊடகங்களால் பாதுகாக்கப்பட்டன.

இந்த முறை, கியேவ் பரப்பி வரும் பொய்க் கதையை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை என்று அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இது ஏனென்றால் அவ்வாறு செய்வது அமெரிக்காவை ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போருக்குள் இழுக்கும், அதற்கு இன்னும் அது தயாராக இல்லை என்பதால் ஆகும். ஆனால் பைடென் நிர்வாகம் அத்தகைய ஒரு மோதலுக்கு வெகுவாகத் தயாரிப்புகள் செய்து வருவதுடன், உக்ரேனுக்கு பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பில் ஆயுதங்களைப் பாய்ச்சி வருகிறது மற்றும் ரஷ்யாவை ஒட்டி உள்ள ஒட்டுமொத்த ஐரோப்பிய எல்லையிலும் நேட்டோ போர்முகப்பை கட்டமைத்து வருகிறது.

அந்தத் தாக்குதல்கள் நடந்த அதே நாளில், வெள்ளை மாளிகை காங்கிரஸிடம் 21 பில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுதங்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு கோரியது. இந்த தொகை, உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுத ஏற்றுமதிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இதுவரை இது 18.2 பில்லியன் டாலராக உள்ளது.

புதன்கிழமை கூறிய கருத்துக்களில், பாதுகாப்புத் துறைச் செயலர் லாயிட் ஆஸ்டினும் மற்றும் இராணுவத் தலைமை தளபதிகளின் தலைவர் மில்லியும் இந்த குளிர்காலத்திற்குள் ஒரு போர்நிறுத்தத்திற்கான எந்த விவாதத்தையும் உதறித் தள்ளினர், இது கடந்த பல வாரங்களாக பத்திரிகைகளில் முன்வைக்கப்பட்டு இருந்தது.

'நீங்கள் ரஷ்யர்களுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை காண்கிறீர்கள், [மில்லி] கடந்த வாரத்தில் இருந்து உங்கள் கருத்துகளில் இருந்து பின்வாங்குகிறாரா' என்று கேட்கப்பட்ட போது, மில்லி மற்றும் ஆஸ்டின் இருவருமே, போர் தொடர்வதைக் காண்பதாகக் கூறியதுடன், குளிர்காலம் நெடுகிலும் தீவிரமடையும் என்றும் கூட தெரிவித்தனர். “குளிர்கால சண்டை உக்ரேனியர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆஸ்டின் தொடர்ந்து கூறுகையில், 'அவர்கள் இந்தக் குளிர்காலத்திலும் சண்டையை தொடரப் போகிறார்கள் என்பதை எங்களால் கூற முடியும், நாம், அதாவது அமெரிக்கா, ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலரின் வழிகாட்டுதலில், அவர்கள் சுதந்திரமாக, இறையாண்மையோடு, அவர்களின் பிரதேச எல்லைக்குள் தற்சார்புடன் இருக்கும் வரையில் உக்ரேனுக்குத் தொடர்ந்து உதவுவோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க இராணுவக் கொள்கையின் தந்திரோபாய நெளிவு சுளிவுகள் என்னவாக இருந்தாலும், அமெரிக்கா மொத்தத்தில் 'தீர்க்கமான தசாப்தம்' என்று அது குறிப்பிட்ட இராணுவ தீவிரப்பாட்டை நோக்கிய ஒரு தெளிவான சர்ச்சைக்கிடமற்ற திசையில் சென்று கொண்டிருக்கிறது.

1930 களில் ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கல் குறித்து லியோன் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், “அமைதிவாத ஹிட்லர்' (Hitler the Pacifist) என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை எழுதினார், ஜேர்மன் ஏகாதிபத்தியம் சமாதானத்தை நாடுகிறது என்ற அதன் பிரகடனங்கள், ஓர் உலகப் போருக்கான தயாரிப்புகளை நோக்கமாக கொண்ட முறையான மீள்ஆயுதமயப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்திற்கான வெறும் ஒரு மூடிமறைப்பு தான் என்று விளக்கிறார்:

[ஹிட்லர்] இராணுவப் படைகளின் உறவில் ஒரு தீவிர மாற்றத்தை நோக்கிய திசையில் அவர் பணியை மேற்கொள்கிறார். இந்தப் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது ஆனால் இன்னும் தீர்க்கமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், துல்லியமாக இப்போது தான், ஹிட்லர் ஐரோப்பிய அரங்கில் மிகவும் எச்சரிக்கையை கையாள வேண்டி இருக்கும். யாரையும் பயமுறுத்தாமல், யாரையும் எரிச்சலூட்டாமல்; மாறாக, கரங்களை விரித்து வைத்திருக்க வேண்டும். ஹிட்லர், போர் தொழிற்சாலைகளின் சுவர்களை பாசிச உரைகளையும், ஆக்கிரமிப்பு-நிறுத்த உடன்படிக்கைகளையும் கொண்டு மூடிமறைக்கத் தயாராக உள்ளார். பாரீஸ் பெரிதும் மதிப்புடையது! (Paris vaut bien une messe!) இந்தப் பாசிச தாக்குதலுக்கு ஒரு தெளிவான, எளிய, இராஜாங்க அணுகுமுறை அல்லாத சூத்திரம் தேவைப்பட்டால், அது பின்வருவதாக இருக்கும்: அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஹிட்லர் அவர் எதிர்ப்பாளர்கள் தரப்பின் மீது எப்பாடுபட்டாவது ஒரு தற்காப்புப் போரைத் தவிர்க்க வேண்டும். இந்த வரம்புகளுக்குள் அவருடைய பாசிசவாதம் முற்றிலும் நேர்மையோடு செயல்படும். ஆனால் இந்த வரம்புகளுக்குள் மட்டுமே.

இன்று, ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ அது போர் நாடவில்லை என்ற அமெரிக்காவின் அறிவிப்புகள் ஒரு தந்திரம் என்பதோடு, அவ்விரு நாடுகள் மீதும் மற்றும் அவற்றின் எல்லைகளில் உள்ள பெருந்திரளான துருப்புகள் மீதும் அது இராணுவ மற்றும் இராஜாங்க சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள கால அவகாசம் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத் திட்ட வல்லுனர்கள், உக்ரேனில் வெடித்துள்ள இந்தப் போரை இன்னும் பரந்த உலகளாவிய போருக்கான ஓர் ஆரம்ப சலசலப்பாகப் பார்க்கிறார்கள்.

இப்போது இந்தப் போர் போலாந்துக்கு விரிவாக்கப்பட்டுள்ளது என்ற உண்மை ஓர் எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும்: இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும்! “உக்ரேன் போரை நிறுத்த இளைஞர் மற்றும் மாணவர்களின் ஒரு மாபெரும் இயக்கத்திற்காக!” என்ற தலைப்பில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு டிசம்பர் 10 இல் ஓர் இணையவழி கூட்டம் நடத்த உள்ளது. இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், இதைப் பிரச்சாரம் செய்யுமாறும் நாங்கள் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

Loading