ரஷ்ய ஏவுகணைகள் அதன் எல்லையைத் தாக்கியதாக போலந்து கூறியதை அடுத்து, நேட்டோ 4 ஆவது ஷரத்தின் கீழ் கூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டு போலந்து குடிமக்களைக் கொன்ற உக்ரேனின் எல்லைக்கு அருகே போலந்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து நேட்டோ இராணுவ கூட்டணியின் பிரதிநிதிகள் நேட்டோவின் 4 ஆவது ஷரத்தின் அடிப்படையில் புதன்கிழமை சந்திப்பார்கள்.

போலந்தின் வெளியுறவு அமைச்சகம், வெடிப்பு 'ரஷ்யா தயாரித்த ஏவுகணையால்' ஏற்பட்டதாகக் கூறி, 'ரஷ்ய கூட்டமைப்பின் தூதரை வரவழைத்தது' என்று குறிப்பிட்டது.

'ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் உக்ரேன் முழுப் பகுதியிலும் அதன் முக்கியமான உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட மற்றொரு பாரிய ஷெல் தாக்குதலுக்கு மத்தியில்' இந்ததாக்குதல் நடந்ததாக போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலந்தில் வெடிப்பு நடந்த இடம்

குண்டிவெடிப்புக்கு விடையிறுக்கும் வகையில், போலந்து நேட்டோ உடன்படிக்கையின் 4 ஆவது ஷரத்தை அழைக்கத் தூண்டியது. இது நேட்டோ உறுப்பினர்களை நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமான நேட்டோ 5 ஆவது ஷரத்தை செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசனை விவாதங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது என ரொய்ட்டர்ஸ் அறிவித்தது.

போலந்து, போர் விமானங்களைத் தயார்நிலையில் இருத்த அழைப்புவிட்டு, அதன் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளை அதிக எச்சரிக்கையில் வைத்ததாகக் கூறப்படுகிறது. உக்ரேனுடனான தனது எல்லையில் நிலைகொண்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் போலந்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து, 'உக்ரேனிய-போலந்து அரச எல்லைக்கு அருகில் உள்ள இலக்குகள் மீது எந்த தாக்குதல்களும் ரஷ்யாவின் தாக்குதல் வழிமுறைகளால் செய்யப்படவில்லை' என்று அறிவித்தது. மேலும் வெடிப்புக்கும் 'ரஷ்ய ஆயுதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றும் கூறினார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடென், போலந்தை தாக்கிய ஏவுகணைகள் ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார். ரஷ்யா ஏவுகணையை செலுத்தியதா என்ற கேள்விக்கு, அவர்: “அதற்கு எதிராகவே ஆரம்ப தகவல்கள் உள்ளன. இது வந்த பாதையினை பார்த்தால் ரஷ்யாவிலிருந்து சுடப்பட்டது என்பது சாத்தியமில்லை. ஆனால் நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்” என பதிலளித்தார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக ஜி7 நாடுகளின் (அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா) அவசரக் கூட்டத்தையும் பைடென் நடத்தினார். போலந்து மண்ணில் விழுந்த ஏவுகணைகள் உக்ரேனால் ஏவப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்று பைடென் இந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாக நேட்டோ வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

எவ்வாறாயினும், முன்னதாக, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவை திட்டவட்டமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நடவடிக்கையை 'மிக முக்கியமான ரஷ்ய மோதல் விரிவாக்கம்' மற்றும் 'கூட்டு பாதுகாப்பு மீதான தாக்குதல்' என்று அழைத்தார்.

செலென்ஸ்கி மேலும் பின்வருமாறு கூறினார். “இன்று, ரஷ்ய ஏவுகணைகள் எங்கள் நட்பு நாட்டின் பிரதேசமான போலந்தைத் தாக்கின. மக்கள் இறந்தனர்... ரஷ்ய பயங்கரவாதம் மேலும் முன்னோக்கி செல்வதற்கு முன்பே... நாம் செயல்பட வேண்டும்”.

ஒரு ட்வீட்டில், உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, உக்ரேனுக்கு மேம்பட்ட போர் விமானங்களை அனுப்புவதன் மூலமும், பறக்கும் தடை மண்டலத்தை நிறுவுவதன் மூலமும் அமெரிக்கா பதிலளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

குலேபா நேட்டோ நாடுகளிடம் 'உக்ரேனுக்கு F-15 மற்றும் F-16 போன்ற நவீன விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆயுதம் வழங்குமாறு அழைப்பு விடுத்தார். இதனால் நாங்கள் எந்த ரஷ்ய ஏவுகணைகளையும் இடைமறிக்க முடியும். இன்று, உக்ரேனின் வான்பரப்பைப் பாதுகாப்பது என்பது நேட்டோவைப் பாதுகாப்பதாகும்”.

போரின் தொடக்கத்திலிருந்து உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தனது மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றைத் தொடங்கிய அதே நாளில் இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் வந்தன. மேலும் ரஷ்யா கெர்சன் நகரத்திலிருந்து வெளியேறிய பின்னர் முதல் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

போலந்தில் இன்னும் விளக்கப்படாத வெடிப்பு நடந்த அதே நாளில், உக்ரேனில் ரஷ்யாவுடனான பினாமி போருக்காக மற்றொரு பாரிய இராணுவ செலவினப் பொதியை நிறைவேற்றுமாறு வெள்ளை மாளிகை காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தது.

வெள்ளை மாளிகை போருக்கு 47.7 பில்லியன் டாலர் நிதியுதவி கோரியது. இதில் ஆயுதங்களுக்கான 21 பில்லியன் டாலர்கள் அடங்கும். இந்த எண்ணிக்கை உக்ரேனுக்கான அமெரிக்க ஆயுத ஏற்றுமதிக்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இது இது வரை 18.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஆயுதங்கள் வாங்குவதற்கு கூடுதலாக, உக்ரேனுக்கு இன்னும் 14 பில்லியன் டாலர் நேரடி வரவு-செலவுத் திட்ட மானியங்களை இந்த மசோதா அங்கீகரிக்கும்.

இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சிமாநாட்டில் பேசிய பைடென், அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனாவுடன் 'போட்டி' என்ற அதன் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

'அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல், அமெரிக்கா இதற்குத் தயாராக உள்ளது என்ற வலுவான செய்தியை உலகம் முழுவதும் அனுப்பியுள்ளது' என்று பைடென் கூறினார்.

'வெளியுறவுக் கொள்கையில், உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் இந்த இருதரப்பு அணுகுமுறையை நாங்கள் தொடர்வோம் என்று நம்புகிறேன்' என்று பைடென் இந்த வார தொடக்கத்தில் கூறினார்.

அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களால் உக்ரேனை மூழ்கடித்தாலும், போரில் அமெரிக்காவின் நேரடி தலையீடு எவ்வளவு உள்ளது என்பதை பத்திரிகை அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.

முந்தைய உக்ரேனிய மறுப்புகளுக்கு முரணாக நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது கருங்கடலில் கடந்த மாதம் ரஷ்ய போர்க்கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு உக்ரேன்தான் காரணம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

'உக்ரேனும் அதன் கூட்டாளிகளும் கருங்கடலில் வெடிபொருட்கள் நிரம்பிய தொலைதூரக் கட்டுப்பாட்டினால் இயங்கும் படகுகளைச் பரிசோதித்து வருகின்றனர். இது அக்டோபரில் செவஸ்டோபோல் கடற்கரையில் ரஷ்யாவின் கடற்படைக்கு எதிராக ஒரு துணிச்சலான தாக்குதலில் உச்சக்கட்டத்தை அடைந்தது' என்று கட்டுரை தெரிவித்தது.

அமெரிக்க இராணுவ திட்டமிடுபவர்கள் உக்ரேன் போரை மேம்பட்ட அமெரிக்க இராணுவ வன்பொருளை பரிசோதித்துப்பார்ப்பதற்கான “Beta Test” என்று கருதுகின்றனர் என்று கட்டுரை குறிப்பிட்டது.

ஜூலை மாதம், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், அந்த நாடு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுக்கான 'பரிசோதனை மைதானமாக' பார்க்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். 'புதிய தயாரிப்புகளை இங்கு சோதிக்க ஆயுத உற்பத்தியாளர்களை நாங்கள் அழைக்கிறோம்' என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கத் தூதரகத்தைக் பாதுகாக்கும் படையினர் மற்றும் உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுதங்களை விநியோகிக்கும் பெண்டகன் அதிகாரிகள் உட்பட, உக்ரேனுக்குள் தீவிரமாக பணிபுரியும் அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் செயல்படுவதை பென்டகன் உறுதிப்படுத்தியது.

அக்டோபரில், மூத்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரைசன், உக்ரேனில் அமெரிக்க சிறப்புப் படைகளை இரகசியமாக அனுப்புவதற்கு பைடென் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவித்தார். 'உக்ரேனுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் போரின் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது மிகவும் விரிவானவை' என்று ரைசன் எழுதினார்.

ஜூலை மாதம் நியூ யோர்க் டைம்ஸ், உக்ரேனில் அமெரிக்க முன்னாள் இராணுவத்தினர் டஜன் கணக்கானவர்கள் செயல்பட்டு வருவதாகவும், ஓய்வுபெற்ற மூத்த அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனிய போர் முயற்சியின் சிலவற்றை நாட்டிற்குள் இருந்து இயக்குவதாகவும் செய்தி வெளியிட்டது.

Loading