காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள COP27 உச்சிமாநாடு ஒன்றும் செய்யவில்லை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தாண்டு காலநிலை மாற்றத்திற்கான செயல்வடிவ மாநாடு (COP27) நிறைவடைந்து உள்ளது, எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் கூடிய உலகின் முக்கிய முதலாளித்துவ சக்திகள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள், தற்போது நிலவும் காலநிலை நெருக்கடியை நிறுத்துவதற்கும் மாற்றி அமைப்பதற்கும் அடிப்படையில் எதுவும் செய்வதில்லை என்று மீண்டும் உறுதி எடுத்துள்ளன.

அந்தப் பிரதிநிதிகள் உருவாக்கிய உடன்படிக்கை, கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் செய்யப்பட்ட உடன்படிக்கையுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. படிம எரிபொருள்கள் பயன்பாட்டை நிறுத்துவது மற்றும் பூமியின் வளிமண்டலத்தில் பசுமையைப் பாதிக்கும் கார்பன் டைஆக்சைடு வாயு வெளியீட்டை நிறுத்துவது என மிகவும் அவசியமான இந்த நடவடிக்கையானது, நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறைப்பதற்கும் மற்றும் 'செயல்திறனைப் பாதிக்கும் படிம எரிபொருள் மானியங்களைப் படிப்படியாக … அகற்றுவதற்கும்' விடுக்கப்பட்ட அழைப்புகளோடு புறக்கணிக்கப்பட்டது, இந்த இரண்டாவதாக கூறப்பட்ட வாசகத்தைப் பல வழிகளில் விளக்கலாம் என்பதோடு அவ்விதத்தில் அது நடைமுறையளவில் அர்த்தமற்றதாகிறது.

சட்டக் கட்டுபாடற்ற உடன்படிக்கைகளை உருவாக்குவதில் முன்னர் முக்கிய பங்கு வகித்த நாடுகள் கூட, COP27 இல் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை மீது எதிர்மறையாக கருத்துரைக்க நிர்பந்திக்கப்பட்டன. இறுதியில் எந்தவித தாக்கத்தையும் கொண்டிராத 2015 பாரீஸ் உடன்படிக்கைகளுக்காக பாராட்டப்பட்ட அதன் பிரதான வடிவமைப்பாளர்களில் ஒருவரான லாரன்ஸ் டூபியானா கூறுகையில், “எங்கு பார்த்தாலும் படிம எரிபொருள் தொழில்துறையின் மேலாளுமை காணப்பட்டது,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “எகிப்திய ஜனாதிபதி தலைமை, எண்ணெய் மற்றும் எரிவாயு பெட்ரோலிய அரசுகளையும் படிம எரிபொருள் தொழில்துறையையும் தெளிவாக பாதுகாக்கும் விதமான வார்த்தைகளை உருவாக்கி உள்ளது,” என்றார்.

From the left, US Special Presidential Envoy for Climate John Kerry, British Prime Minister Rishi Sunak, French President Emmanuel Macron, President of the European Commission Ursula von der Leyen, South African President Cyril Ramaphosa and German Chancellor Olaf Scholz applaud on the sidelines of the COP27 climate summit in Sharm el-Sheikh, Egypt, Monday, Nov. 7, 2022 [AP Photo/Ludovic Marin]

உலகின் எண்ணெய் இருப்புகளில் 10 சதவீதமும், உலகின் இயற்கை எரிவாயு இருப்புக்களில் 20 சதவீதமும் வைத்திருப்பதாக மதிப்பிடப்படும் நாடும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து பெறும் நாடுமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ள அடுத்தாண்டு COP28 என்ன பலனைத் தரும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்.

தொழில்துறைக்கு முந்தைய காலகட்ட அளவுகளை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழைப்பும் கூட கிட்டத்தட்ட கைவிடப்பட்டு இருந்தது. இந்த அளவைத் தாண்டும் போது அதீத வானிலை ஏற்படுத்தும் சேதங்கள், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள், கடல்மட்ட உயர்வு, வாழ்விடங்கள் அழிக்கப்படுவது மற்றும் பிற எண்ணற்ற ஆபத்துக்களைத் தடுப்பது என்பது அவற்றின் தன்மை அடிப்படையில் மிகவும் கடினம் என்பதைக் கருத்தில் கொண்டு, காலநிலை விஞ்ஞானிகளால் பரவலாக இந்த வரம்பு 'திரும்பவியலாத புள்ளி' என்று குறிப்பிடப்படுகிறது.

CNN கட்டாயமாக ஆமோதிக்க நிர்பந்திக்கப்பட்டவாறு, வெளிநடப்பு செய்ய அச்சுறுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் 'கவனமாக வடிவமைக்கப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தின்' விளைவாக மட்டுமே அந்த அழைப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய ஒன்றிய காலநிலை மாற்றத் துறையின் தலைவர் பிரான்ஸ் திம்மர்மன்ஸ் கூறுகையில், “இங்கே, இன்று, இந்த 1.5 டிகிரி செல்சியசால் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் அதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாது,” என்றார்.

யதார்த்தத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு ஐரோப்பிய சக்திகளிடம் ஒன்றும் இல்லை. இந்த மாநாடு ஒட்டுமொத்தமாக, ஒருபுறம் அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கும் மறுபுறம் ரஷ்யாவுக்கும் இடையே உக்ரேனில் நடந்து வரும் போரால் சூழப்பட்டு இருந்தது. ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஐரோப்பா, குறிப்பாக ஜேர்மனி சார்ந்திருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டுமென அமெரிக்கா அதற்கு அழுத்தம் அளித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், மிகவும் பகிரங்கமாக 2018 இல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய-ஜேர்மனி இயற்கை எரிவாயு குழாய் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ மூடுமாறு ஜேர்மனிக்குக் கட்டளையிட்டார்.

இந்த அழுத்தம் செப்டம்பரில் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்பாதைகள் மீதான குண்டுவீச்சால் அதிகரிக்கப்பட்டது. பத்து பில்லியன் கணக்கான மதிப்பு வாய்ந்த உள்கட்டமைப்பு குற்றகரமாக நாசமாக்கப்பட்டதால், ஐரோப்பா இன்னும் அதிகமாக அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதிகளைச் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கமும் பெருநிறுவனங்களும் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கான திரவ இயற்கை எரிவாயு (liquefied natural gas) ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான உள்கட்டமைப்பை, குறைந்தபட்சம் பெப்ரவரியில் உக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து வேகமாக முன்னெடுத்து வருவதாக அமெரிக்க இயற்கை எரிவாயு வணிக மத்தியஸ்தர்களும் மற்றும் எரிசக்தித் துறையின் ஆவணங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

ஜேர்மனி, அதன் பங்கிற்கு, அதன் நிலக்கரித் தொழில்துறையைப் புத்துயிரூட்ட திரும்பியுள்ளது. சான்றாக ஏப்ரலில், துணை சான்சிலர் பசுமைக் கட்சியின் ராபர்ட் ஹாபெக், 280 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க RWE நிறுவனத்தை அனுமதிக்கும் வகையில், Lützerath நகரத்தை அழித்து, அதன் குடிமக்களை இடம்பெயர்த்த அனுமதி அளித்தார். “புட்டினின் ஆக்ரோஷ போர் நம்மை தற்காலிகமாக லிக்னைட்டை அதிகமாக பயன்படுத்த நிர்பந்திக்கிறது, இவ்விதத்தில் நாம் மின் உற்பத்தியில் எரிவாயுவைச் சேமிக்க முடியும். இது வேதனையானது தான் என்றாலும் அவசியமானது,” என்று கூறி ஹேபெக் அதை நியாயப்படுத்தினார்.

ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நிதிகள் வழங்க 'இழப்பு மற்றும் சேதத்திற்கான' நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதே COP27 இன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. சிறு தீவு அரசுகளின் கூட்டணி அமைப்பின் தலைவரான மோல்வின் ஜோசப் இதை, 'நம் ஒட்டுமொத்த உலகத்திற்குமான ஒரு வெற்றி' என்றும், சிறிய நாடுகளுக்கு 'மதிப்பு' அளிப்பதாகவும் பாராட்டினார்.

இந்தப் புதிய நிதி ஆகமட்டும் காட்டப்படும் ஓர் அடையாள தோரணையாகும். இது பேரிடர்களுக்குப் பிந்தைய மறுகட்டுமானங்களோடு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதுடன், பசுமையை பாதிக்கும் வாயுக்களை அதிகமாக வெளியிடும் நாடுகளை, அதிகளவில் மாசு உருவாக்கும் நாடுகளில் அமெரிக்காவும் உள்ளடங்கி உள்ள நிலையில், அவற்றைத் தவறாக சுட்டிக்காட்டாத வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் எவ்வாறு விநியோகிக்கப்படும் அல்லது அது தேவைப்படுபவர்களைச் சென்றடையுமா என்பது பற்றியும் அங்கே தெளிவான புரிதல் இல்லை.

வேறு விதமாக கூறுவதானால், அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 35,000 பேரில், படிம எரிபொருள் தொழில்துறையைச் சேர்ந்த 600 க்கும் அதிகமான வணிக மத்தியஸ்தர்கள் இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன, இது கடந்தாண்டை விட 25 சதவீதம் அதிகம் என்பதோடு, ஒட்டுமொத்தமாக எல்லா பசிபிக் தீவு நாடுகளின் பிரதிநிதிகளை விட அதிகமாகும். மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவாக இருந்தாலும் அவை அனைத்தும் கவனமாக முதலாளித்துவ நலன்களுக்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதுடன், பூமியைத் தொடர்ந்து எரியூட்டி விஷமாக்குவதில் இருந்து இலாப அதிகரிப்பை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அனைத்திற்கும் மேலாக, 'இழப்பு மற்றும் சேதத்திற்கான' நிதிக்கு போதுமான ஆதாரவளங்கள் வழங்கப்பட்டாலும் கூட மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்க சரியான மேலாண்மை இருந்தாலும் கூட, அது உண்மையில் நெருக்கடியை தீர்க்காது. காலநிலை மாற்றம் ஏற்படுத்திய பேரழிவின் விளைவாக தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு சில சில்லறைகளை வீசுவதன் மூலம் காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று COP27 இல் பல உலகத் தலைவர்கள் முன்வைத்த மாயையை அது ஊக்குவிக்கிறது.

அதே நேரத்தில் அதிகரித்தளவில் பேரழிவுகரமான சம்பவங்களை இதே வழியில் சமாளிக்க முடியும் என்று அது பாசாங்குத்தனம் செய்கிறது. புவி வெப்பமடைதலின் மிகவும் மோசமான விளைவுகள் தோன்றி, உலகின் கடற்கரைகளை மூழ்கடித்து, வாழ்விடங்களை அழித்து, இறுதியில் பில்லியன் கணக்கான மக்களைக் கொன்றாலும் கூட, அதிக பணம் தான் தீர்வு என்பதே தர்க்கமாக இருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால், ஒரு கட்டத்தில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது, அனேகமாக அதற்குப் பின்னரோ, அல்லது அனேகமாக அதற்கு முன்னரோ, பூமியின் காலநிலை மனித தொழில்துறை நடவடிக்கைகளால் இரண்டு மடங்குத் தூண்டிவிடப்பட்டு, தற்போதைய தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு, மனித நாகரீகத்தையே அழித்துவிடும் அளவுக்கு ஒரு வேக அதிகரிப்பு நடைமுறைக்குள் பரிணமித்து விடக்கூடும். ஆனால் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வைத்து பணம் சம்பாதிப்பதில் அங்கே என்ன அர்த்தம் இருக்கிறது?

COP27 இன் உண்மையான படிப்பினை என்னவென்றால், எதிர்விரோத தேசிய-அரசுகளாக பிளவுபட்ட முதலாளித்துவ வர்க்கத்திடம் புவி வெப்பமடைதலுக்கு எந்தத் தீர்வும் இல்லை. வளிமண்டலத்தில் தொடர்ந்து கார்பன் மாசுபாடு வெளியீடு இருந்தால் அது தவிர்க்கவியலாமல், அனேகமாக எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக, மனிதர்களின் உயிர் வாழ்வையே அச்சுறுத்தும் பெரும் பிரளயமான கொந்தளிப்புகளை உருவாக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக அரசாங்கங்களையும் பெருநிறுவனங்களையும் எச்சரித்துள்ளனர்.

அந்த நேரத்தில், இத்தகைய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் மோசமான சூறாவளிகள், பருவ காலங்கள், காட்டுத்தீ, துருவச் சுழல்கள், பயிர் சேதங்கள் மற்றும் இன்னும் பல பேரழிவுகளைக் காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கமே பாதிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும், ஓர் விஞ்ஞானபூர்வ, உலகளாவிய சோசலிச அடிப்படையில் உற்பத்தியை நிறுவுவதற்கும், உள்ளார்ந்து ஒரு சர்வதேச வர்க்கமாக விளங்கும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டமே இதற்கு ஒரே தீர்வாகும்.

Loading