முன்னோக்கு

ஏகாதிபத்திய சக்திகள் காலநிலை மாற்றம் மீதான COP 27 உச்சி மாநாட்டு உறுதிமொழிகளைக் கைவிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் இந்த வார தொடக்கத்தில் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் 27வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 27) 200 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு நாடுகளது தலைவர்களும் 45,000 பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இது சமீபத்தில் நடந்த மிகப்பெரிய சர்வதேச சந்திப்புகளில் ஒன்றாகும்.

ஆனால் முந்தைய காலநிலை மாற்ற உச்சி மாநாடுகளைப் போலல்லாமல், இதில் பங்கேற்றவர்கள் காலநிலை மாற்றப் பேரழிவு சம்பந்தமாக அவர்கள் ஏதேனும் செய்து வருவதாகத் தோற்றத்தைக் கொடுக்கக் கூட முயலவில்லை. அங்கே வந்திருந்த ஏகாதிபத்திய அரசாங்கங்களின் தலைவர்கள் டெலிபிராம்டர் கருவி இல்லாமலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சில வெற்று வாசகங்களைக் கூறிய பின்னர், ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதல்களில் அவர்கள் தலையீடு குறித்து திட்டமிடுவதற்கும் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் பின்னறைகளுக்குச் சென்று மறைந்தார்கள்.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமி போரும் மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்பும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் உலகின் ஒரு புதிய மறுபங்கீட்டைத் தொடங்கி வைத்துள்ளன, துருவப் பகுதிகள் உட்பட அனைத்து கண்டங்களிலும் கையிலிருக்கும் அனைத்து பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வழிவகைகளைக் கொண்டும் இதற்காகப் போராடப்பட்டு வருகிறது. “காலநிலை மாற்றப் பாதுகாப்பு' இத்தகைய ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் சேவையில் கொண்டு வரப்பட்டு—அதற்கு நேரெதிராக மாற்றப்படுகிறது.

அந்த மாநாட்டை நடத்தும் எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் ஃபதாஹ் அல்-சிசி, இந்த ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் தொந்தரவின்றி நடப்பதை உறுதி செய்கிறார். சினாய் தீபகற்பத்தின் உயர்ந்த இடத்தில் ஷர்ம் எல்-ஷேக்கின் அந்த ஆடம்பரமான சுற்றுலா விடுதிக்கு, விமானத்தில் தவிர, சென்றடைவதே கடினம். எந்தவொரு போராட்டத்தையும் அடக்கும் விதத்தில் கனரக ஆயுதம் ஏந்திய இராணுவத்தால் அது பாதுகாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எப்படியோ அம்மாநாட்டு இடத்திற்குச் சென்றடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்காக, மக்களிடம் இருந்து வெகுதூரத்தில் பாதுகாப்புப் படையினரின் கடும் கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது அங்கே இருந்து அவர்கள் போராடலாம்.

President Joe Biden speaks as Egyptian dictator Abdel Fattah el-Sisi laughs during a meeting at the COP27 U.N. Climate Summit, Friday, Nov. 11, 2022, at Sharm el-Sheikh, Egypt [AP Photo/Alex Brandon]

2013 இல் ஓர் இரத்தக்களரியான ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதிகாரத்திற்கு வந்த அல்-சிசி, எகிப்தை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்கிறார். எந்தவொரு தீவிரமான அரசியல் எதிர்ப்பையோ, அல்லது கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தையோ அவர் அனுமதிப்பதில்லை. அவரது ஆட்சியின் சிறைக்கூடங்களில் 60,000 அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. அம்மாநாடு தொடங்குவதற்குச் சற்று முன்னர், எகிப்தின் பல நகரங்களில் அரசியல் காரணங்களுக்காக சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சீனா அல்லது மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக 'மனித உரிமைகளை' வலியுறுத்துவதில் ஒருபோதும் சோர்வடையாத ஏகாதிபத்திய சக்திகள், அதேவேளையில் மத்திய கிழக்கில் அல்-சிசி அவர்களின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒருவராக இருக்கிறார் என்பதால், எகிப்தில் இந்தக் கொள்கையை அவை கைத்துறந்து விடுகின்றன.

“காலநிலை மாற்றம் எனும் நரகத்திற்கான நெடுஞ்சாலை'

ஒரு நேர்மையான அரிய குறிப்பில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் காலநிலை மாநாட்டைத் தொடங்கி வைக்கையில், உலகம் 'காலநிலை மாற்றம் எனும் நரகத்திற்கான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறது — நாம் வேகத்தை விரைவுபடுத்தும் கருவியை அழுத்திக் கொண்டிருக்கிறோம்,” என்று எச்சரித்தார். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை, மாறாக சர்ச்சைக்கு இடமின்றி ஓர் உண்மை கருத்தாகும்.

புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான புவியின் பசுமையைப் பாதிக்கும் புகை வெளியீடுகள், ரியோ டி ஜெனிரோவில் நடந்த முதல் உலக காலநிலை மாற்ற மாநாட்டுக்குப் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், தொடர்ந்து அதிகரித்து வருவதாக கிடைத்திருக்கும் எல்லா விஞ்ஞானத் தரவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. வளிமண்டலத்தில் CO2 இன் செறிவு, 1850 மற்றும் 1960 க்கு இடையில், ஒரு மில்லியனுக்கு 285 இல் இருந்து 320 சதவீதம் வரை ஒரேசீராக அதிகரித்தது, அதற்குப் பின்னர் இருந்து அது அதிவேகமாக 418 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த புள்ளிவிபர வளைவுக்கோடு இப்போதும் மேல் நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

முந்தைய தொழில்துறை மட்டங்களுடன் ஒப்பிட்டு புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக மட்டுப்படுத்துவதற்கான இலக்கு, 2015 இல் பாரிஸில் நடந்த உலக காலநிலை மாற்ற மாநாட்டில் அமைக்கப்பட்ட இந்த வரம்பு, நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டு விட்டது. தேசிய மாசு குறைப்பு திட்டங்களை (NDC) சமர்பித்துள்ள எல்லா நாடுகளும் அவற்றைக் கடைபிடித்தாலும் கூட, 2030 க்குள் மாசு உமிழ்வு கூடுதலாக 10.6 சதவீதம் அதிகரிக்கும் என்று UNFCCC கணக்கிட்டுள்ளது. ஆனால் 1.5 டிகிரி இலக்கை அடைய, மாசு உமிழ்வில் 43 சதவீதம் குறைப்பு அவசியம். UNFCC இன் தகவல்படி, தற்போதைய திட்டங்கள் அதிகபட்சம் புவி வெப்பமயமாதலை 2.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தும். இதுவரை, ஏறக்குறைய 200 நாடுகளில் 26 நாடுகள் மட்டுமே தேசிய மாசு குறைப்புத் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளன.

நெருங்கி வரும் பேரழிவு ஏற்கனவே கண்கூடாகத் தெரிகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, பூமி 1.15 டிகிரி மட்டுமே வெப்பமடைந்திருந்தாலும், வெப்ப அலைகள், கனமழை மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றன. பனிப்பாறைகள் மற்றும் துருவ முனைகள் உருகுவதன் விளைவாக கடல் மட்டங்கள் உயர்வது இன்னும் மிகப் பெரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும்.

Passengers wait by a damaged road next to floodwaters, in Bahrain, Pakistan, Tuesday, Aug. 30, 2022 [AP Photo/Naveed Ali]

இந்த கோடையில் பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 1,700 பேர் கொல்லப்பட்டனர், 12,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது 33 மில்லியன் பேர் இடம் பெயர்த்தப்பட்டனர், இது வரவிருக்கும் காட்சிகளுக்கு முன்மாதிரியை வழங்குகிறது. இதற்கிடையே அந்த சீரழிக்கப்பட்ட நாட்டில் மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் கட்டுப்பாடின்றி பரவி வருவதுடன், உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோன்ற பேரழிவுகள் ஆபிரிக்காவிலும் நடந்து வருகின்றன, இவை பெரும்பாலும் சர்வதேச ஊடகங்களால் புறக்கணிக்கப்படுகின்றன. மத்திய சஹேலின் பரந்த பகுதிகள் தற்போது தண்ணீரில் மிதக்கின்றன. பல ஆண்டு கால வறட்சிக்குப் பின்னர், எஞ்சியிருந்த வளமான மண்ணையும் வெள்ளப்பெருக்குகள் அடித்துச் சென்று ஒட்டுமொத்த நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டது. சாட், நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் சூடானில் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், எத்தியோப்பியா, சோமாலியா, கென்யாவின் சில பகுதிகள் மற்றும் தெற்கு மடகாஸ்கரில் பல ஆண்டுகளாக வறட்சி தொடர்கிறது, இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் பட்டினி மற்றும் மரணத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், குறிப்பிடத்தக்களவில் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத் தீ, வெள்ளப்பெருக்குகள் மற்றும் சூறாவளிகளின் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்துள்ளன.

ஆனால் ஏகாதிபத்திய சக்திகளோ படுகுழியை நோக்கி விரைகின்றன. இந்தத் திசையை மாற்ற ஷர்ம் எல்-ஷேக் உச்சி மாநாட்டுக்கு முன்னர் அங்கே எந்த முன்மொழிவுகளும் வைக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, முந்தைய உலக காலநிலை மாற்ற மாநாடுகளில் எடுக்கப்பட்ட முற்றிலும் போதுமானதாக இல்லாத முடிவுகளே கூட, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து பெரிதும் கைவிடப்பட்டுள்ளன.

போரும் காலநிலை மாற்றமும்

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான ஏகாதிபத்திய தாக்குதல், இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய்க்கு எதிரான பொருளாதாரத் தடைகள், எரிபொருள் விலைகளில் வெடிப்பார்ந்த அதிகரிப்புக்கு வழி வகுத்துள்ளன. எனவே பல நாடுகள் நிலக்கரியையும் அதிக மாசு உமிழும் பிற எரிசக்தி வளங்களையும் மீண்டும் எரிக்கவும் மற்றும் நிலக்கரியை படிப்படியாக அகற்றுவதென ஏற்கனவே ஏற்றுக் கொண்ட வேலைத்திட்டங்களை ஓரங்கட்டவும் முடிவெடுத்துள்ளன. குறிப்பாக, அதிக எரிபொருள் விலைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன் வட்டி விகிதங்கள் காரணமாக, வறிய நாடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கு மாறுவதற்கு நிதி ஒதுக்க முடியாத நிலையில் உள்ளன.

காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்களின் ஒரு சர்வதேச குழுவான காலநிலை மாற்ற நடவடிக்கை கண்காணிப்புக் குழு ஷர்ம் எல்-ஷேக்கில் வழங்கிய அதன் சமீபத்திய அறிக்கையில் கூறுவது போல, ரஷ்ய எரிவாயு பற்றாக்குறை திரவ இயற்கை எரிவாயு அளவை 'ஆக்ரோஷமாக விரிவாக்க' இட்டுச் சென்றுள்ளது. எல்லா கண்டங்களையும் இணைத்து பார்த்தால், 2030 வாக்கில் திரவ இயற்கை எரிவாயு (LNG) அளவு 235 சதவீதம் அதிகரிக்கும், அவ்விதத்தில் அந்த தசாப்த இறுதியில், மொத்த அளவும் பயன்பாட்டில் இருக்கும் என்ற நிலையில், திரவ இயற்கை எரிவாயுவின் நுகர்வு கடந்தாண்டு ரஷ்யா ஏற்றுமதி செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். அவ்விதத்தில் காலநிலை மாற்றத்தைப் பாதிக்கும் கார்பன் டைஆக்சைடு உமிழ்வுகள் இரண்டு பில்லியன் டன்களுக்கும் சற்று குறைவாக அதிகரிக்கும், இது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்குப் 'பொருந்தாது'.

அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகளே இந்த வளர்ச்சியின் முக்கியப் பயனாளிகளான உள்ளன, திரவ இயற்கை எரிவாயு (LNG) தொழில்நுட்பத்தின் மூலம் தொலைதூரத்திற்கும் அவற்றால் எரிவாயு உபரிகளை விற்க முடிகிறது.

சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்பாக, ஏகாதிபத்திய சக்திகள் சீனச் சந்தையையும் அதன் தயாரிப்புகள் மற்றும் மூலப்பொருட்களையும் சார்ந்திருப்பதைக் குறைக்க முயலும் முயற்சிகள் மாற்றீடுகளுக்கான கடும் போராட்டத்தைத் தூண்டியுள்ளன, இந்த சண்டை ஷார்ம் எல்-ஷேக்கில் ஓரளவு வெளிப்படையாகவும், ஓரளவு மறைமுகமாகவும் வெளிப்பட்டது.

ஜேர்மன் அரசாங்கம் குறிப்பாக காலநிலை மாற்றத்திற்கான பாதுகாப்பு என்ற பொய்யான பதாகையின் கீழ் வெட்கமின்றி அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பின்தொடர்ந்தவாறு, ஓர் ஆணவமான அணுகுமுறையை எடுத்தது. வெளியுறவுத்துறை, நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்குத் தலைமை கொடுக்கும் பசுமைக் கட்சியினர் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஃபெடரல் சான்ஸ்லர் ஓலஃப் ஷோல்ஸ், எகிப்தின் நவீன வரலாற்றிலேயே மிகப் பெரிய கட்டுமானத் திட்டமான பல கோடி டாலர் மதிப்பிலான ஒரு திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற, ஷர்ம் எல்-ஷேக்கிற்கான அவரது இரண்டு நாள் பயணத்தைப் பயன்படுத்தினார். சீமன்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தைச் சார்ந்த ஒரு கூட்டமைப்பு 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக இரயில் வலையமைப்பை உருவாக்கும் என்பதோடு, அதற்கான பயணியர் இரயில்கள் மற்றும் சரக்கு இன்ஜின்களையும் வழங்கும். ஜேர்மனியின் தேசிய இரயில்வே நிறுவனமான Deutsche Bahn இன் துணை நிறுவனத்தால் இந்த வலையமைப்பு இயக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் சான்சிலர் அவரின் சொந்த அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ காலநிலை மாற்ற கொள்கைகளுக்கு வெளிப்படையாகவே முரண்பட்ட விதத்தில், செனகலுடன் புதிய எரிவாயு வயல்களை உருவாக்க ஒப்புக் கொண்டார். ஜேர்மனி காங்கோ மீதும் ஒரு கண் வைத்துள்ளது. 'வைரம், தங்கம், தாமிரம், கோபால்ட், டின் மற்றும் லித்தியம் போன்ற மூலப்பொருட்களோடு அந்நாடு வளமாக' உள்ளது என்று ஜேர்மன் பழமைவாத FAZ நாளிதழ் அந்த காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கெடுத்த காங்கோலிய நடவடிக்கையாளர் நீமா நமதாமுயைப் பாராட்டிய ஒரு கட்டுரையில் எழுதுகிறது. 'சமீபத்தில், புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் பெரும் வேட்கையோடு ரஷ்யாவுக்கு மாற்றீடான வினியோகிப்பாளர்களை எதிர்பார்க்கின்றன.'

அதில் கலந்து கொண்ட எல்லா அரசுத் தலைவர்களும் ஷோல்ஸை போல இந்தளவுக்கு வெளிப்படையாக அவர்களின் ஏகாதிபத்திய வேட்கைளை காட்டவில்லை என்றாலும், இமானுவல் மக்ரோன், ரிஷி சுனாக், ஜியார்ஜியோ மெலோனி, ஊர்சுலா வொன் டெர் லெயெனும் மற்றும் பாலி ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் வழியில் வெள்ளிக்கிழமை கடைசியாக வந்து இந்தக் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜோ பைடெனும் ஷர்ம் எல்-ஷேக்கில் 'மறுக்கவியலாத சலுகைகளோடு' மற்ற பிரதிநிதிகள் மீது இதேபோன்ற அழுத்தத்தளைக் கொடுத்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காலநிலை மாற்றத்திற்கு ஒரு சோசலிசத் தீர்வு தேவை

முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் அளிப்பதன் மூலம் காலநிலை மாற்ற பேரழிவைத் தடுத்து விட முடியாது என்பதற்கு இன்னும் யாருக்காவது ஆதாரம் தேவையானால், ஷர்ம் எல்-ஷேக் உச்சிமாநாடே அதை வழங்கியது. Fridays for Future அமைப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் இயக்கங்கள் அறிவுறுத்தும் இந்த முன்னோக்கு திவாலாகி இருப்பதற்கான காரணம், வெறுமனே தனிப்பட்ட அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகளின் தீங்கான நோக்கங்கள் அல்ல, மாறாக அவர்கள் பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் தன்மையாகும்.

இந்த காலநிலை மாற்ற நெருக்கடியை உலகளவில் மட்டுமே தீர்க்க முடியும். புவி மாசுபடுத்தும் வாயுக்கள் தேசிய எல்லைகளோடு நின்று விடுவதில்லை, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான எரிபொருள் வினியோக ஒழுங்கமைப்பை உலகளாவிய அளவில் மட்டுமே செய்ய முடியும். அத்தகைய ஒரு தீர்வுக்கான விஞ்ஞான அறிவும், தொழில்நுட்ப கருவிகளும், மூல ஆதாரப் பொருட்களும் இருக்கின்றன என்பதோடு, சமீபத்திய தசாப்தங்களில் இந்த விஷயங்களில் மிகப் பெரியளவிலான முன்னேற்றமும் உள்ளது.

ஆனால் உலகளாவிய மேலாதிக்கத்திற்காக கடுமையாகச் சண்டையிடும் தேசிய-அரசுகள் அடிப்படையிலான ஒரு சமூக அமைப்புமுறையில், பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் இலாபத்திற்கும் ஒரு சிறிய சிறுபான்மையினரை வளப்படுத்துவதற்கும் அடிபணிய செய்யும் இந்த சமூக அமைப்புமுறையில் இத்தகைய உலகளாவிய தீர்வு சாத்தியமில்லை.

ஆக்ஸ்ஃபாமின் ஒரு புதிய ஆய்வின்படி, அதிகளவில் இந்த புவி மாசுபடுத்தும் வாயு உமிழ்வுகளுக்குப் பிரான்ஸ், எகிப்து அல்லது அர்ஜென்டினா போன்ற நாடுகளை விட 125 பில்லியனர்கள் மற்றும் அவர்களின் முதலீடுகளே பொறுப்பாகும். இந்த பில்லியனர்களில் ஒருவர் ஓராண்டுக்கு 393 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியாவதற்குக் காரணமாகிறார், இது சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள 90 சதவீதத்தினரை விட ஒரு மில்லியன் மடங்கு அதிகமாகும்.

From the left, US Special Presidential Envoy for Climate John Kerry, British Prime Minister Rishi Sunak, French President Emmanuel Macron, President of the European Commission Ursula von der Leyen, South African President Cyril Ramaphosa and German Chancellor Olaf Scholz applaud on the sidelines of the COP27 climate summit in Sharm el-Sheikh, Egypt, Monday, Nov. 7, 2022. [AP Photo/Ludovic Marin]

அவர்களின் செல்வ வளம் மற்றும் தனிச்சலுகைகளைப் பாதுகாக்க, முதலாளித்துவவாதிகளும் அவர்களின் அரசாங்கங்களும் எதையும் செய்யக் கூடியவர்கள். இந்தப் பெருந்தொற்றின் போது மனித உயிர்களை விட இலாபங்களை முன்னிலைப்படுத்திய அவர்கள் மனித உயிர்கள் மீதான அவர்களின் அலட்சியத்தைக் காட்டினர். இதனால் தான், அதிக எண்ணிக்கையிலான பதிவாகாத நோயாளிகளைச் சேர்க்காமலேயே, உலகளவில் உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 7 மில்லியன் பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். மேலும் இந்தப் பெருந்தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் மனித நாகரீகத்தையே அச்சுறுத்தும் அணுஆயுதப் போர் ஆபத்தை அவர்கள் எடுக்கும் போதும் மற்றும் காலநிலை மாற்ற ஆபத்தை தொடர்ந்து எரியூட்டும் போதும் அவர்கள் இதே ஈவிரக்கமற்றத்தன்மையே காட்டுகிறார்கள்.

Nature இதழ் வெளியிட்ட ஓர் ஆய்வின்படி, இந்தப் பெருந்தொற்றுக்கும் காலநிலை மாற்ற நெருக்கடிக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏற்கனவே SARS-CoV-2, HIV மற்றும் Ebola போன்றவற்றில் இருந்ததைப் போலவே, காலநிலை மாற்ற நெருக்கடி அதிகரிக்கையில் விலங்குகளில் ஏற்கனவே இருக்கக் கூடிய வைரஸ்கள் மனிதர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியக்கூறும் வேகமாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு முடிவு செய்கிறது.

காலநிலை மாற்ற நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வு தேவை. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதற்குப் பின்னர், அவர் காலத்தின் முன்னணி சோசலிசவாதியும் மற்றும் மார்க்சிசவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

'தற்போதைய தொழில்நுட்ப அளவையும் தொழிலாளர்களின் திறமையும் வைத்துப் பார்த்தால், மொத்த மனிதகுலத்தின் சடரீதியான மற்றும் ஆன்ம ரீதியான வளர்ச்சிக்கு போதுமான நிலைமைகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் நமது ஒட்டுமொத்த இந்த புவியிலும், பொருளாதார வாழ்வை ஒரு பொதுவான திட்டத்தின்படி சரியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் ஒழுங்கமைப்பது மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் சமூகத்தின் முக்கிய உற்பத்தி சக்திகள் அறக்கட்டளைகள் வசம், அதாவது தனித்த முதலாளித்துவக் குழுக்கள் வசம் இருக்கும் வரையில், மற்றும் இந்தத் தேசிய அரசு இந்தக் குழுக்களின் கைகளில் ஒரு இணக்கமான கருவியாக இருக்கும் வரை, சந்தைகளுக்கான, மூலப்பொருட்களின் ஆதார வளங்களுக்கான, உலக மேலாதிக்கத்திற்கான போராட்டம், தவிர்க்கவியலாமல் மேலும் மேலும் அழிவுகரமான தன்மையை ஏற்றே ஆக வேண்டும். இந்த வெறித்தனமான ஏகாதிபத்திய கும்பல்களின் கரங்களில் இருந்து அரசு அதிகாரத்தையும் பொருளாதாரம் மீதான மேலாதிக்கத்தையும் புரட்சிகர தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே பறிக்க முடியும்.”

அன்று போலவே இன்றும் இது உண்மையே. காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பது, அத்துடன் போர் மற்றும் சமூக சீரழிவுகளுக்கு எதிரான போராட்டமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச இயக்கத்தை கட்டமைத்து முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

Loading