உக்ரேனிய ஆயுதப் படைகளால் ரஷ்ய போர்க் கைதிகள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தும் காணொளிகள் தோன்றுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு உக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கின் மக்கேய்வ்கா கிராமத்தில் சரணடைந்த 11 ரஷ்ய சிப்பாயகளை சுட்டுக்கொன்றதை அப்பட்டமாகக் காட்டும் காணொளின் நம்பகத்தன்மையை நியூ யோர்க் டைம்ஸ் சரிபார்த்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, வலதுபுறம், கியேவ், சனிக்கிழமை, நவம்பர் 19, 2022. [AP Photo/Ukrainian Presidential Press Office]

ஒரு காணொளி, அநாமதேய உக்ரேனிய சிப்பாய் ஒருவரால் அவரது கைத்தெலைபேசியில் படமாக்கப்பட்டது, மற்ற காட்சிகள் ட்ரோன் காணொளிகளிலிருந்து வருகிறது, அவை பெரும்பாலும் தாக்குதலைக் கண்காணிக்கும் உக்ரேனியப் படைகளால் படமாக்கப்பட்டிருக்கலாம். டைம்ஸ் அந்த காணொளிகளை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டு, அவை கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் படமாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

காணொளிகளில் ஒன்று, கடந்த வாரம் உக்ரேனிய சார்பு சமூக ஊடகங்களில் முதன்முதலில் பரப்பப்பட்டது. காணொளியில், ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய படைகளிடம் சரணடைவதைத் தெளிவாகக் காணலாம், அப்போது ஒரு ரஷ்ய சிப்பாய் பின்னணியில் இருந்து தோன்றி துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். பதிலுக்கு உக்ரேனியப் படைகள் திரும்ப துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

காணொளி பதிவுகள் அதே ரஷ்ய சிப்பாய்கள் தரையில் இறந்து கிடப்பதாகக் காட்டியுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் அவர்கள் சரணடைந்தபோது இருந்த நிலையிலேயே இருந்தனர், துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய சிப்பாயும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் அப்படியே விழுந்து கிடப்பதாக தெரிகிறது.

இந்த காணொளிகள் குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்களின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரோஹினி ஹார், நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார், “அவர்களில் பெரும்பாலோர் தலையில் சுடப்பட்டது போல் தெரிகிறது. அங்கு இரத்தக் குளங்கள் உள்ளன. இது, அவர்கள் அங்கேயே இறந்து கிடந்தார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்களை எடுத்துச் செல்லவோ அல்லது அவர்களுக்கு உதவவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.”

டாக்டர் ஹார் மேலும் கூறுகையில், ரஷ்ய சிப்பாய்கள் நிராயுதபாணியாக, கைகளை நீட்டியோ அல்லது முதுகுப் பக்கமாக வீழ்ந்து கிடந்தனர் என்பதால், 'அவர்கள் போர்க் கைதிகளாகவோ அல்லது போர் செய்யாதவர்களாகவோ கருதப்படுகிறார்கள்' என்றார்.

ரஷ்யா இந்தக் கொலைகளை 'வேண்டுமென்ற மற்றும் முறையான கொலை' என்று கண்டித்துள்ளது.

டைம்ஸ் கட்டுரை ஒப்புக்கொள்வது போல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய சர்வதேச உடன்படிக்கையான ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சட்டம் உட்பட சர்வதேச ஆயுத மோதலின் சட்டங்களின் கீழ் ரஷ்ய போர்க் கைதிகளை சட்டத்திற்கு புறம்பாக கொன்றதற்காக உக்ரேனிய சிப்பாய்கள் மீது வழக்கு தொடரப்படலாம். ஜெனீவா ஒப்பந்தங்களின்படி, போர்க் கைதிகள் “எல்லா நேரங்களிலும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும். தடுப்புக் காவலில் உள்ள ஒரு போர்க் கைதியின் மரணத்தை ஏற்படுத்தும் அல்லது அவரது உடல்நிலைக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் சட்டத்திற்குப் புறம்பான செயல் அல்லது புறக்கணிப்பு தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த மாநாட்டின் கடுமையான மீறலாகக் கருதப்படும். ... போர்க் கைதிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இதேபோல், ரோம் சட்டத்தின்படி, “தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அல்லது இனி தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வழியின்றி தானாக சரணடைந்துவிட்ட ஒரு போராளியைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது” என்பது சர்வதேச ஆயுத மோதல் சட்டத்தை மீறுவதாகும் என்று கூறுகிறது.

உக்ரேனிய சார்பு சமூக ஊடகங்களில் இந்த காணொளி முதன்முதலில் தோன்றியது என்பது, கியேவ் ஏற்கனவே நீதிக்கு புறம்பான மரணதண்டனை பற்றி அறிந்திருந்தது, 11 சிப்பாய்களின் மரணத்திற்காக உக்ரேனிய துருப்புக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரே ரஷ்ய சிப்பாயை குற்றம் சாட்டுவதற்கான ஒரு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே காணொளியை கசியவிட்டது. டைம்ஸ் கூட ஒப்புக்கொண்டது போல், 'உக்ரேனிய செய்திகளும் சமூக ஊடகங்களும் ... அவர்களின் ஆயுதப் படைகளின் இராணுவ வலிமையைப் பாராட்டவும், போரின் ஆரம்பத்தில் ரஷ்யாவிடம் இழந்த பிரதேசத்தை அவர்கள் வீரமாக மீட்டெடுத்ததை விளம்பரப்படுத்தவும் அவற்றைப் பயன்படுத்தின.'

உக்ரேனிய சிப்பாய்களின் நடத்தை பற்றிய பரவலான விமர்சனத்திற்கு விடையிறுக்கும் வகையில், உக்ரேனிய அரசாங்கம் அறியாமைக்கு மன்றாடி ஒரு விசாரணைக்கு உறுதியளித்துள்ளது, இது அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களிடமிருந்து பெறும் ஆதரவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்திருக்கிறது. கனடாவில் பாதுகாப்பு மன்றத்தில் பேசிய உக்ரேனின் துணைப் பிரதம மந்திரி ஓல்ஹா ஸ்டெபானிஷினா, 'நிச்சயமாக உக்ரேனிய அதிகாரிகள் இந்த காணொளியை விசாரிப்பார்கள்' ஆனால் ரஷ்ய போர்க் கைதிகளின் மரணதண்டனையை காணொளி துல்லியமாக சித்தரித்தது 'மிகவும் சாத்தியமற்றது' என்று கூறினார்.

போர்க் கைதிகளைக் கொல்வதில் உக்ரேன் ஈடுபடாது என்று ஸ்டெஃபனிஷினா உறுதியளித்த போதிலும், மார்ச் மாதம் மற்றொரு காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது, உக்ரேனியப் படைகள் கைப்பற்றப்பட்ட ரஷ்ய சிப்பாய்களின் கால்களில் தெளிவாக குறிவைத்து சுடுவதைக் காட்டுகிறது. போரின் ஆரம்ப வாரங்களில், உக்ரேனின் ஆயுதப்படைகளின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளும், இறந்த ரஷ்ய சிப்பாய்களின் கோரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டன. அசோவ் படையணி மற்றும் ரைட் செக்டர் போன்ற நவ-பாசிச அமைப்புகளை உள்ளடக்கிய உக்ரேனின் ஆயுதப்படைகளுக்குள் இத்தகைய நடத்தை தெளிவாக ஊக்குவிக்கப்படுகிறது.

ரஷ்ய போர்க் கைதிகள் கொல்லப்பட்டதை உக்ரேனிய செய்தி ஊடகம் மிக விரைவாகக் கொண்டாடியது, குளிர்காலம் நெருங்கி வருவதால் மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வாஷிங்டன் D.C. அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், போரைத் தொடர கியேவ் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவது காணொளியின் பரவலான வெளியீடாகும். இதுவரை, செலென்ஸ்கி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டது என்பதுடன், விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரை பேச்சுவார்த்தைகளைத் தடைசெய்யும் ஒரு சட்டத்தை கூட நிறைவேற்றியுள்ளது.

பெரும் இழப்புக்களையும் மீறி உக்ரேனில் அதன் பிற்போக்குத்தனமான மற்றும் பேரழிவுகரமான போரை விரிவுபடுத்துவதற்கு மாஸ்கோவை தள்ளி வரும் ரஷ்யாவிற்குள் உள்ள போர்-சார்பு தேசியவாத கூறுகளை கோபப்படுத்துவதன் கணிக்கக்கூடிய விளைவை இந்த வீடியோ வெளியீடு கொண்டுள்ளது. டைம்ஸ் அறிவித்தபடி, பிரபல ரஷ்ய இராணுவ பதிவர் விளாட்லன் டாடர்ஸ்கி (Vladlen Tatarsky) ஒரு டெலிகிராம் பதிவில், ஒவ்வொரு ரஷ்யனும் 'நாங்கள் யாருக்கு எதிராக போராடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இதை பல முறை பார்க்க வேண்டும்' என்றும் 'ஒரு ரஷ்யன் கூட அமைதியாக வாழவும் தூங்கவும் முடியாது ... குற்றவாளிகள் உயிருடன் இருக்கும் வரை.” என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய உக்ரேனிய இராணுவ வெற்றிகள் —கார்கோவ் மற்றும் கெர்சன் மாகாணங்களின் பெரும் பகுதிகளை மீட்டெடுத்தல்— உக்ரேனிய மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய ஊடகங்கள் இரண்டிலும் கொண்டாடப்பட்டாலும், போர் எந்த வகையிலும் இரு நாட்டு மக்களுக்கும் ஒரு வரலாற்று பேரழிவாகும். கடந்த வாரம், அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் ஏ. மில்லி, 100,000க்கும் மேற்பட்ட ரஷ்ய சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், 'அநேகமாக' ரஷ்ய சிப்பாய்களுக்கு இணையான எண்ணிக்கையிலான உக்ரேனிய சிப்பாய்களும் இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளார். இது நடந்து கொண்டிருக்கும் போரில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை 200,000 க்கும் அதிகமாகக் காட்டுகிறது.

Loading