உக்ரேனில் நேரடியாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பென்டகன் உறுதிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க விமானப்படை பிரிகேடியர். ஜெனரல் பாட் ரைடர் நேற்று ஒரு உத்தியோகபூர்வ செய்தி மாநாட்டில், அமெரிக்க இராணுவத்தினர் உக்ரேனுக்குள் நிலைகொண்டிருப்பது மட்டுமல்லாமல், கியேவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வெகு தொலைவில் செயல்படுகின்றனர் என்று ஒப்புக்கொண்டார்.

முந்தைய நாள், பெயரிடப்படாத அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பின்னணி மாநாட்டில், “அமெரிக்கப் பணியாளர்கள்' உக்ரேனில் 'ஆயுத இருப்புகளை மதிப்பிடுவதற்கு களத்தில் ஆய்வுகளை' மீண்டும் தொடங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

பென்டகன் தகவல்துறை செயலாளர் விமானப்படை பிரிகேடியர். ஜெனரல் பாட் ரைடர் ஒரு செய்தி மாநாட்டில்

இந்த அறிவிப்பைப் பற்றி NBC நியூஸ் 'உக்ரேனில் உள்ள இந்த ஆய்வாளர்கள், அமெரிக்க தூதரகத்தில் கடமையிலுள்ள இராணுவ காவலர்களை தவிர, போர் தொடங்கியதிலிருந்து கிழக்கு ஐரோப்பிய நாட்டில் கால் பதித்த அமெரிக்க இராணுவத்தின் முதல் உறுப்பினர்களில் சிலராகத் தெரிகிறது. …” எனக் குறிப்பிட்டது.

செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, military.com இன் டிராவிஸ் ட்ரிட்டன் பின்வருமாறு கேட்டார். 'உக்ரேனுக்குள் இராணுவத்தில் பணியாளர்கள் உள்ளனர், அவர்கள் இப்போது ஆயுத ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யர்களால் சுடப்பட்டாலோ அல்லது அவர்கள் ரஷ்யர்களால் குறிவைக்கப்பட்டாலோ அவர்களுக்கு என்ன நடத்தை விதிகள் பொருந்தும் என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்”.

ரைடர் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார். 'எங்களிடம் சிறிய குழுக்கள் உள்ளன, அவை தூதரக பணியாளர்களைக் கொண்டிருக்கின்றன, அவை பல்வேறு இடங்களில் பாதுகாப்பு உதவி வழங்குவதற்கான சில ஆய்வுகளை நடத்தி வருகின்றன.'

'எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் எந்த வகையான போர்முனை நடவடிக்கைகளிலிருந்தும் வெகு தொலைவில் இருப்பார்கள். அதைச் செய்ய நாங்கள் உக்ரேனியர்களை நம்பியுள்ளோம். அதைச் செய்ய நாங்கள் மற்ற கூட்டாளர்களை நம்பியுள்ளோம்…. அவர்கள் போர்முனைகளில் செயல்படப் போவதில்லை.'

அவர் தொடர்ந்தார், 'உக்ரேனில் போரிடும் படைகள் இல்லை, உக்ரேனில் போர் நடவடிக்கைகளை நடத்தும் அமெரிக்கப் படைகள் இல்லை, இவர்கள் பாதுகாப்பு இணைப்பு அலுவலகத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட பணியாளர்கள் என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்'.

இதற்கு, டிரிட்டன் “ஆனால் இது வேறுபட்டதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தூதரகத்திற்கு வெளியே வேலை செய்வார்கள். மக்கள் இதை ஒரு மோதல் விரிவாக்கமாக பார்க்க வேண்டுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என பதிலளித்தார்,

ரைடர் அமெரிக்க நடவடிக்கை தீவிரமடைய செய்யவில்லை என்று கூறினார். மேலும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா என்ன செய்யும் என்ற ட்ரிட்டனின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

குறிப்பாக கடந்த வாரங்களில், ஆயுதக் கிடங்குகள் முக்கிய இலக்காக இருப்பதால் ரஷ்யா உக்ரேன் முழுவதும் தளவாட தளங்களின் மீதான இலக்கை விரிவுபடுத்தியுள்ளது. தளவாடங்கள் மற்றும் ஆயுதக் கப்பல்களை ஒருங்கிணைக்கும் இணைப்பாகச் செயல்படும் இந்த அமெரிக்கத் துருப்புக்கள் கவனக்குறைவாக ரஷ்யாவால் குறிவைக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் உக்ரேனுக்குள் பாரிய ஆயுதங்களை அனுப்புவதற்கு இப்போது உக்ரேனில் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டும் என்ற உண்மை, அமெரிக்கா நேரடியாக மோதலில் ஈடுபடவில்லை என்ற கற்பனையை வெடிக்கச் செய்கிறது. மேலும் அமெரிக்கா எந்த சக்திகளுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இன்றுவரை, அமெரிக்கா உக்ரேனுக்கு 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அனுப்பியுள்ளது. போருக்கு நிதியுதவி மற்றும் விநியோகம் செய்த பின்னர், ஆயுதங்கள் எங்கு சென்றடைகின்றது மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் அமெரிக்கா நேரடி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. இது இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க இராணுவமும் வெளியுறவுத்துறையும், அதிநவீன ஆயுதங்கள் உக்ரேனுக்குள் இருக்கும் கூறுகளின் கைகளில் வந்து சேரக்கூடும் என்றும், அவர்கள் வாஷிங்டன் இதற்கு முன் அங்கீகரிக்காத வழிகளில் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என்றும் கவலை கொண்டுள்ளனர்.

இந்த பென்டகனின் அறிக்கைகள், 'கிழக்கு ஐரோப்பாவில் சில மேம்பட்ட மரபுவழி ஆயுதங்களை சட்டவிரோதமாக திசைதிருப்பப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான' திட்டங்கள் பற்றி வெளியுறவுத்துறை அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து வெளிவந்தது.

'1990களில் பால்கன் போர்களுக்குப் பின்னர் நடந்த மோதலின் போது அல்லது அதைத் தொடர்ந்து நிகழ்ந்ததுபோல், உக்ரேனில் உள்ள ஆதாரங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற முயற்சிக்கும் பல்வேறு குற்றவியல் மற்றும் அரசுதொடர்பற்ற அமைப்புகள்' பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும், 'குற்றவியல்' நபர்கள் குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான போரில் முன்னணி பாத்திரத்தை வகிக்கும் பாசிச அசோவ் பட்டாலியன் வடிவில் உக்ரேனிய இராணுவத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் தலைவர்கள் வாஷிங்டனுக்கு கொண்டு வரப்பட்டு, காங்கிரஸ், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் கொண்டாடப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று பென்டகன் ஒப்புக்கொண்டதை விட உக்ரேனில் உண்மையான அமெரிக்கப் படையின் இருப்பு மிக அதிகமாக உள்ளது என்பது வெளிப்படையான ஒன்றாகும்.

அக்டோபரில், மூத்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் ரைசென், உக்ரேனில் அமெரிக்க சிறப்புப் படைகளை இரகசியமாக நிலைநிறுத்த பைடென் நிர்வாகம் அங்கீகாரம் அளித்ததாகத் தெரிவித்தார். 'உக்ரேனுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் போரின் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது மிகவும் விரிவானவை' என்று ரைசன் பின்வருமாறு எழுதினார்.

உக்ரேனுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் ஜனாதிபதியின் மறைமுகமான நடவடிக்கையின் கீழ் நடத்தப்படுகின்றன என தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டிற்குள் இரகசிய நடவடிக்கைகளின் பரந்த திட்டத்தை நடத்துவதற்கான நிர்வாகத்தின் முடிவைப் பற்றி ஜனாதிபதி சில காங்கிரஸ் தலைவர்களுக்கு முன்னரே அறிவித்துள்ளார் என்று கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுகிறது. முன்னாள் சிறப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒபாமா நிர்வாகத்தின் போது முதலில் அங்கீகரிக்கப்பட்ட, ஏற்கனவே இருந்த ஒரு கண்டுபிடிப்பை பைடென் திருத்தியுள்ளார். இது மோசமான வெளிநாட்டு செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், நியூ யோர்க் டைம்ஸ், உக்ரேனில் டஜன் கணக்கான அமெரிக்க முன்னாள் இராணுவத்தினர் செயல்பட்டு வருவதாகவும், ஓய்வுபெற்ற மூத்த அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனிய போர் முயற்சியின் சில பகுதிகளை நாட்டிற்குள் இருந்து இயக்குவதாகவும் தெரிவித்தது.

உக்ரேனிய இராணுவ நடவடிக்கைகளின் அனைத்து விடயங்களிலும் அமெரிக்கப் படைகள் நெருக்கமாக ஈடுபட்டுள்ளன. ஏப்ரலில் ரஷ்ய முதன்மை கருங்கடல் கடற்படை கப்பலான மொஸ்க்வாவை மூழ்கடித்த தாக்குதல் மற்றும் ரஷ்ய தளபதிகளைக் கொன்ற உக்ரேனிய தாக்குதல்களுக்கு உளவுத்துறையை தகவல்களை வழங்கி உதவியது.

கடந்த ஒரு மாதமாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு உக்ரேனிலான இராணுவப் பின்னடைவைத் தொடர்ந்து, ரஷ்யா நூறாயிரக்கணக்கான சேமப்படையினரைத் திரட்டி, உக்ரேனின் நான்கு பகுதிகளை இணைத்து, அவர்களை பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியது.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் மீது குண்டுவீச்சு உள்ளிட்ட ரஷ்யாவை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான பெரிய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் பதட்டங்களை அதிகரித்துள்ளன. இதற்காக ரஷ்யா இங்கிலாந்தை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் ரஷ்ய தீவிர வலதுசாரி சித்தாந்தவாதியான டாரியா டுகினாவின் படுகொலை மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உக்ரேனியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது என அறிவித்த கெர்ச் பாலம் மீதான குண்டுவீச்சு ஆகியவை அடங்கும்.

வார இறுதியில், உக்ரேன் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது தாக்குதலை நடத்தியது என டைம்ஸ் அறிவித்தது. இது ரஷ்யாவை உக்ரேனுடனான தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகத் தூண்டியதால் உலகளாவிய உணவு நெருக்கடியை அதிகரிக்க அச்சுறுத்தியது.

இந்த நிலைமைகளின் கீழ், அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் உட்பட அமெரிக்காவிற்குள் இருக்கும் சக்திகள் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது உட்பட, இன்னும் நேரடியான அமெரிக்க தலையீட்டிற்கான அழைப்புகளை புதுப்பித்துள்ளன.

Loading