உக்ரேன் “ஒத்துழைப்பாளர்களை” வேட்டையாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனிய அரசாங்கம் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான சொந்த குடிமக்களுக்கு எதிராக, குறிப்பாக சமீபத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் திரும்பிய பகுதிகளில் புகார்களை பதிவு செய்வதன் மூலம் ரஷ்ய சார்பு 'ஒத்துழைப்பாளர்களை' தேடுவதை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறைத்தண்டனை, கடுமையான அபராதம், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் அவர்களின் உரிமைகளை இழக்க நேரிடும். பொது வழக்குரைஞர் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தேசத் துரோகம், நாசவேலை, 'ஆக்கிரமிப்பு அரசுக்கு உதவி' மற்றும் 'உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மீற முடியாத தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல்' போன்ற 'தேசிய பாதுகாப்பு குற்றங்கள்' தொடர்பான 18,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை அரசாங்கம் பதிவு செய்துள்ளது.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான உருவகமாக மேற்கு நாடுகள் முழுவதும் புகழப்படும் உக்ரேனிய அரசாங்கம், ஒரு வெளிநாட்டு சக்திக்கு எதிராக மட்டுமல்ல, அதன் சொந்த மக்கள்தொகையின் ஒரு பகுதிக்கும் எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது.

அக்டோபர் பிற்பகுதியில், கார்கிவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் இயக்குனர் எதிரியுடன் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார், காரணம் அவர் ஆசிரியர்களிடம், அவர்கள் நிறுவனத்தை மீண்டும் திறப்பார்கள், ரஷ்ய மொழியில் வகுப்புகளை நடத்துவார்கள், ரஷ்ய பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துவார்கள் மற்றும் ரஷ்ய கல்வித் தரங்களைப் பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார், ஏனெனில் அவர் பாலக்லியாவில் உள்ள ஒரு நகராட்சி சாலை பழுதுபார்க்கும் கடையின் மேலாளர் என்ற முறையில், அவர் அரசுக்கு சொந்தமான உபகரணங்களை ரஷ்ய படைகளுக்கு கிடைக்கச் செய்தார். அந்த நேரத்தில் கார்கிவ் ஆக்கிரமிப்பில் இருந்தது.

மிக பெரும்பாலும், ரஷ்யாவிற்கு எந்தவிதமான அரசியல் ஆதரவையும் வெளிப்படுத்துவதற்காக மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அக்டோபர் 8 மற்றும் 25 தேதிகளுக்கிடையில் RBK-Ukraine இல் வெளியிடப்பட்ட கட்டுரைகள் பின்வரும் நபர்கள் அனைவரும் சில வகையான ஒத்துழைப்பு தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றன: உக்ரேனிய பிரதேசத்திற்கு ரஷ்ய இறையாண்மையை விரிவுபடுத்துவது நியாயமானது என்று தெரிந்தவர்களை நம்ப வைக்க முயன்ற ஒரு யுஷ்னி நகர (Yuzhnye) குடியிருப்பாளர்; உக்ரேனின் சுதந்திரமான இருப்பு தவறானது என்ற தனது கருத்தை ஒரு குழுவினருடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை விவாதித்த ஒரு பெண்; மாஸ்கோவின் படையெடுப்பு நியாயமானது என்ற ரஷ்ய ‘பிரச்சாரத்தை’ திரும்பத் திரும்ப கூறிய கார்கிவ் குடியிருப்பாளர். ரஷ்ய சார்பு ஊடக சேவையான லுஹான்ஸ்க் 24 இன் செய்தி தொகுப்பாளர், அவரது ஒத்துழைப்பு குறித்து விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மேலும் பல வழக்குகள் வரவுள்ளன. “கிரெம்ளின் கொள்கையின் ஆதரவாளர்களாக இருக்கும் உக்ரேனிய குடிமக்களை அம்பலப்படுத்த சட்ட அமலாக்கத் துறை தனது பணியைத் தொடர்கிறது” என்று Ukr.net அக்டோபர் 15 அன்று குறிப்பிட்டது.

'எதிரிக்கு உதவுதல்' என்ற குற்றச்சாட்டுகளும் போர் காலங்களில் தங்கள் சமூகத்தை உயிருடன் வைத்திருக்க முயற்சிக்கும் மக்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன. கார்கிவ் நகரைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது, காரணம் நகரம் ஆக்கிரமிப்பில் இருந்தபோது மனிதாபிமான பொருட்களை வைத்திருக்கும் ஒரு மருந்தகம் மற்றும் பண்டகசாலையை பாதுகாக்க அவர் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறிய கிராமமான வலென்கோவின் தலைவர் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார், ஏனெனில் அவர் 'ரஷ்ய கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் அறிவுறுத்தல்களில் செயல்படுகிறார். இந்த பெண் நிறுவன மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை தீர்க்க உள்ளூர்வாசிகளிடமிருந்து தரவுகளையும் கோரிக்கைகளையும் சேகரித்தார்'.

பின்வரும் செயல்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளும் வழங்கப்படுகின்றன: உக்ரேனிய எதிர்ப்பு பிரிவினைவாத படைகளில் சேருதல்; உக்ரேனிய படைகளின் இருப்பிடத்தை ரஷ்ய இராணுவத்திடம் கூறுதல்; 'தேசபக்தி' உக்ரேனியர்கள் குறித்து அவர்களுக்கு அறிக்கை செய்தல் மற்றும் ரஷ்ய முகாமுக்கு பொருளாதார மற்றும் பிற வளங்களை வழங்குதல். “ஆக்கிரமிப்பாளர்களின் மக்கள் போராளிகளால்” “பணியமர்த்தப்பட்டார்” என்ற குற்றச்சாட்டின் பேரில் கைப்பற்றப்பட்ட ஒரு கைதி, தப்பியோட முயன்று, ரஷ்ய சுரங்கத்தில் நுழைந்து தன்னைத்தானே வெடிக்கச் செய்து இறந்தார் என கூறப்படுகிறது.

பெருமளவு ரஷ்ய மக்கள்தொகை கொண்ட உக்ரேனின் பகுதிகள் ஒத்துழைப்பாளர்களைத் வேட்டையாடும் முயற்சியில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. Pressorg.25 இன் செய்தியின்படி, சமீபத்தில் உருவாக்கப்பட்ட “புலனாய்வு அலுவலகங்களில் பெரும்பாலானவை லுஹான்ஸ்க், ஸாபோரோஜியே, டொனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் திறக்கப்பட்டுள்ளன.” ஆகஸ்ட் மாதம், நியூ யோர்க் டைம்ஸ், எதிரிகளின் பின்னால் வேலைசெய்யும் உக்ரேனிய சார்பு போராளிகளின் வேலை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டது. செய்தித்தாளின்படி, சந்தேகத்திற்குரிய ஒத்துழைப்பாளர்களைக் கொல்வதோடு மட்டுமல்லாமல், ரஷ்ய சார்பு நிலைப்பாட்டை ஊக்குவிப்பதாக நம்பப்படும் கல்வியாளர்களைக் கண்காணிப்பதும் அவர்களின் பணிகளில் ஒன்றாகும். இருப்பினும் “ஆதரவாளர்கள்,” “ஆசிரியர்களை தாக்கவில்லை,” என்று அவர்கள் எழுதுகிறார்கள். மாறாக, அவர்கள் ‘தங்கள் உளவியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒத்துழைப்பாளர்களுக்கு மோசமான எச்சரிக்கைகளுடன் மின்சார கம்பங்களில் அடிக்கடி வெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் மூலம் அவர்களை அவமானப்படுத்த முயன்றனர்.”

உக்ரேனின் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழைப்பு தொடர்பான சட்டங்கள் மிகவும் பரந்தளவிலானவை. அதில் “உக்ரேன் பிரதேசத்தின் ஒரு பகுதியை தற்காலிக ஆக்கிரமிப்பு செய்தல் மற்றும் அங்கீகரித்தல் போன்ற உக்ரேனுக்கு எதிராக ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை செயல்படுத்துவதற்கு எதிரான பொது மறுப்பு,” “ஆக்கிரமிப்பு அரசின் முடிவுகள் மற்றும்/அல்லது நடவடிக்கைகள், ஆயுதமேந்திய அமைப்புகள், ஆக்கிரமிப்பு அரசின் ஆக்கிரமிப்பு நிர்வாகம் ஆகியவற்றை ஆதரிக்கும் பொது முறையீடுகள்,” “கல்வி நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு அரசின் பிரச்சாரத்தை செயல்படுத்துதல்,” “தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் நிறுவப்பட்ட சட்டவிரோத அதிகாரங்களில் முன்னணியில் இல்லாத பதவியை (நிறுவன, நிர்வாக அல்லது பொருளாதார செயல்பாடுகளின் செயல்திறன் தொடர்பானது அல்ல) தன்னிச்சையாக ஆக்கிரமித்தல்,” மற்றும் “பங்கேற்றல்” அல்லது “அரசியல் தன்மையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல், உக்ரேனுக்கு எதிரான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கு ஆக்கிரமிப்பு அரசை ஆதரிப்பது மற்றும்/அல்லது அதன் பொறுப்பைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு ஆக்கிரமிப்பு அரசு மற்றும்/அல்லது அதன் ஆக்கிரமிப்பு நிர்வாகத்துடன் இணைந்து தகவல் நடவடிக்கைகளை செயல்படுத்துதல்” போன்ற விஷயங்கள் அடங்கும்.

குறிப்பாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு, ரஷ்ய இராணுவம் அல்லது அரசியல் அதிகாரிகளுடன் எந்தவிதமான உறவையும் தடைசெய்யும் சட்டங்களை மீறுவது எளிது, இது கியேவ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நெறிமுறைக்கு முரணான அரசியல் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

தண்டனைகளில், 15 ஆண்டுகள் வரை பல்வேறு அலுவலகங்கள் அல்லது பிற பதவிகளில் வகிக்கும் உரிமையை பறித்தல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், ஆறு மாதங்கள் வரை கைது செய்தல், 3 முதல் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்தல், மற்றும் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்பு தண்டனை ஆகியவை அடங்கும்.

குற்றச்சாட்டுகள், விசாரணைகள் மற்றும் தண்டனைகள் என அனைத்தும் விரைவான வேகத்தில் நடந்து வருகின்றன. உக்ரேனின் அரசு வழக்கறிஞர் மற்றும் பிற அரசு அலுவலகங்களின் டெலிகிராம் சேனல்கள் புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களால் தினமும் நிரப்பப்படுகின்றன. இராணுவச் சட்டம், உள்கட்டமைப்பின் அழிவு, மற்றும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வெளியேற்றம் போன்ற நிலைமைகளின் கீழ் —சந்தேகத்திற்கு இடமின்றி பல வழக்கறிஞர்கள் உட்பட— இந்த பெருஞ்சுழலில் சிக்கிய எவரும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்படுவது சாத்தியமில்லை. குற்றவியல் தீர்ப்புகளும் தண்டனைகளும் குற்றச்சாட்டுகளின் அடியொற்றி விரைந்து பின்பற்றப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் வயோதிபர்களும் பெண்களும் இருப்பதாக இணையவழி படங்கள் காட்டுகின்றன, அதிலும் அவர்களில் பலர் ஏழைகளாகத் தோன்றுகின்றனர்.

அரசால் வெளியிடப்பட்ட பிரதிவாதிகளின் படங்கள் மங்கலாக உள்ளன, ஆனால் அவை இன்னும் அடையாளம் காணக்கூடியவை. உக்ரேனிய இராணுவம் தற்போது, அதன் சொந்த மக்களை கண்காணிக்கவும் மற்றும் இறந்த ரஷ்ய சிப்பாய்களின் குடும்ப விபரங்களை இணையத்தில் உள்ள அவர்களின் சமூக ஊடக கணக்குகளின் மூலம் கண்டுபிடித்து, அவர்களின் உறவினர்களை துன்புறுத்தவும், மற்றும் இறந்த சிப்பாய்களின் சடலங்களின் படங்களை அவர்களுக்கு அனுப்பவும் அமெரிக்கா வழங்கிய முக-அங்கீகார-தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து அவர்களையும் கூட்டுத் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய நிலைமைகளை உருவாக்குகின்றனர்.

அதே நேரத்தில், ஜனாதிபதி செலென்ஸ்கியால் மே மாதம் தடைசெய்யப்பட்ட எதிர்க் கட்சி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தனர், எனவே, ஒத்துழைப்பாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பறிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Loading